எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ ஆனந்த், உன் பர்த்டேக்கு உனக்கு என்ன வேணும் கேள் ‘
‘ அம்மா எனக்கு அப்பா வேணும் ‘
பட்டென பதில் சொன்ன ஆனந்தைப் பார்த்து திடுக்கிட்டாள் சீத்தா.
‘ மொபைல் கேள், கம்ப்யூட்டர் கேள், ஸ்டடி டேபிள் கேள்.. வங்கித் தர்றேன். அத விட்டுட்டு என்னால எது முடியாதோ அதை ஏன்டா கேட்கறே… ‘ என்றாள் எரிச்சலுடன்.
‘ ஏன்மா உன்னால் முடியாது. இதோ பக்கத்துல திருச்சியிலேதானே இருக்கார் அப்பா… நீ மட்டும் உன்னோட அப்பாவோட இருக்கியே, எனக்கு மட்டும் என்னோட அப்பாவோட இருக்கணும்னு ஆசை இருக்காதா…என் பிரண்ட்ஸ் எல்லாரும் ஸ்கூலுக்கு அவங்கவங்க அப்பாவோட வர்றாங்க. பர்த்டேல அப்பாவுக்கு கேக் ஊட்டிக்கிட்டு வாட்ஷப்ல போட்டோலாம் போடறாங்க. எனக்கு அப்பா வேணும்… ’ என்றான்.
சீத்தாவைப் பெற்றவர்களும் அதைக்கேட்டு திகைத்தனர். ஆனந்த் வளர்ந்து பெரியவனாகி விட்டான். விவரம் தெரிய ஆரம்பித்து விட்டது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர்.
அன்றிரவே அவனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. பரிசோதித்த டாக்டரோ வியாதி ஒன்றுமில்லை என்று விட்டார்கள். ஆனாலும் காய்ச்சல் விடவில்லை. மூன்று நாள், நான்கு நாள்.
சீத்தாவின் பெற்றோர்கள் உட்கார்ந்து யோசித்தனர். அவர்களுக்கு மகளை விட பேரம் மேல் பிரியம் அதிகம். ஆனால் அவனது மனதுக்குள் எப்படியோ அப்பாவைப் பற்றின ஏக்கம் புகுந்துவிட்டது. அதுதான் அவனுக்கு காய்ச்சலாக உருமாறியிருக்கிறது.
காய்ச்சல் குறையவேண்டுமென்றால், அவனை அவனது அப்பாவிடம் கூட்டிக்கொண்டு போய் காட்டிவிடவேண்டும். இல்லையென்றால் நாம் பேரனை இழக்கும் நிலைமையும் வந்துவிடலாம் என்று பயந்தனர். மகளிடம் மெல்ல வந்து நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.
‘ இல்லைமா… நான் அந்தாளை திரும்பவும் போய் பார்க்க மாட்டேன்… .’
‘ சீத்தா, நீ பார்க்க வேண்டாம். ஆனா ஆனந்துக்குத் தேவை. அவன் இன்னும் குழந்தை இல்லை. விவரம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. ஆனந்த்துக்காக நீ இதை செஞ்சே தீரனும் ‘
சீத்தா யோசிக்க ஆரம்பித்தாள். அம்மா அப்பா சொல்வதும் சரிதானோ. மகனுக்காக நாம் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கவேண்டுமோ.
சுவற்றில் ஆனந்தின் போட்டோவுக்கும் அவளது போட்டோவுக்கும் இடையில் அந்த வெற்றிடம் இன்னும் அப்படியே இருந்தது. போனதடவை, ராமச்சந்திரன் கடைசியாக வந்திருந்தபோது அவள்தான் அந்தப் போட்டோவை அங்கேயிருந்து கழட்டி ஸ்டோர் ரூமில் விட்டெறிந்தாள். ஒருவயதே ஆன ஆனந்த்தை மார்போடு அணைத்துகொண்டு மூவருமாக சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ அது.
யோசித்து யோசித்து கடைசியில் திருச்சிக்கு கிளம்பிவிட்டாள்.
XXXXXX
‘ போதும்… இனிமே என்னால உங்களோட குப்பைக் கொட்ட முடியாது. நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன்…’ என்று கையில் கிடைத்தவைகளை அள்ளி சூட்கேசுக்குள் திணித்தாள். இது முதல் முறை அல்ல.
ஒருமுறை கோபத்தில் அவளை அறைந்து விட்டான். அவள் உடனே எகிறிக்கொண்டாள். ‘எனக்கும் கை இருக்கு, பார்த்துக்கங்க ‘ என்றாள். அதற்குப் பிறகு ராமச்சந்திரன் கையை ஓங்குவதே இல்லை.
சத்தம் கேட்டு மெத்தையில் படுத்திருந்த குழந்தை திடீரென்று அழ ஆரம்பித்தான். திகைத்தாள் சீத்தா. அதுவரை ஆனந்தைப்பற்றி அவள் நினைக்கவே இல்லை. அவனை விட்டுவிட்டுப் போவதெப்படி. அவனையும் தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று ஓடிப்போய் அவனைத் தூக்கினாள்.
அதுவரை பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்த ராமச்சந்திரன் ஓடிவந்து ஆனனந்த்தைப் பிடுங்கினான். ‘அவனை ஏன் தூக்கறே… உனக்குத்தானே இங்கே இருக்கப் பிடிக்கலை. அவன் என்னோடவே இருப்பான்….’ என்றான்.
இருவரும் மாற்றி மாற்றி இழுக்க அவர்களது இழுப்பு தாங்காமல் வீரிட்டழுதான் ஆனந்த்.
ஒரு கணம் யோசித்தான் ராமச்சந்திரன். குழந்தைக்கு அப்பாவை விட அம்மா முக்கியமல்லவா. அவன் கொஞ்சம் பிடியை தளர்த்தியதும் ஆனந்தை அணைத்துக் கொண்டு வந்து நின்ற கால்டாக்ஸியில் ஏறிவிட்டாள்.
‘சீத்தா… நீ பின்னாடி ரொம்ப வருத்தப் படுவே…’ காதில் வாங்கிக்கொள்ளாமல் போயேவிட்டாள் அவள்.
இப்படித்தான் நேராக தஞ்சாவூர் போவாள். ஓரிரு நாட்களில் திரும்பி வந்து நிற்பாள் என்று விட்டுவிட்டான்.
நாட்கள் நகர்ந்தன. ஆனால் அவள் திரும்பவே இல்லை. பத்துப்பதினைந்து நாட்கள் கழித்து தஞ்சாவூருக்கு வந்தான். மாமனார், மாமியார் எதுவும் பேசவில்லை. பூப்பொட்டலத்தையும், ஸ்வீட் பாக்ஸையும் மேஜை மேல் வைத்துவிட்டு, குழந்தையைப் போய் தூக்கினான். கொஞ்சினான். மெல்ல அவளிடம் வந்தான். பேச முயன்றான். அவளோ சிலுப்பி கொண்டு மாடிக்குப் போய்விட்டாள். மாடிப் படிகளில் ஏறினான். ஆனால் மாடிக்கதவை வெளிப்பக்கம் தாழ் போட்டிருந்தாள்.
‘பழிகாரி….’ திட்டிக்கொண்டே இறங்கிவிட்டான். மொபைலில் அவளுக்கு ரிங் விட்டான். அது படுக்கையறையில் அலறியது.
காத்திருந்து பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான். அப்போதுதான் மெல்ல வெளியே வந்தாள் மாமியார். எங்கோ பார்த்தபடி, ‘ இனிமே நீங்க இங்கே வரவேண்டாம்… சீத்தாவுக்கு அதுல இஷ்டமில்ல… ’ என்றாள். போயேவிட்டான்.
ரொம்ப நேரம் கழித்து கீழே இறங்கியவள் போட்டோவைப் பார்த்தாள். அதில் அவன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். கோபம் உச்சந்தலைக்கு ஏற, உடனே ஸ்டூல் போட்டு ஏறி, அதைக் கழற்றி ஸ்டோர் ரூமில் வீசினாள்.
XXXXXX
கார் சாலைரோடில் ஏறும்போது, ஒரு தியேட்டர் கண்ணில் பட்டது. அங்கே படம்பார்க்க வந்தபோது ஒருவன் அவளை விமரிசிக்க அவனைப் போட்டு மிதிமிதியென்று ராமச்சந்திரன் மிதித்தது, ஒரு கடையைப் பார்த்தபோது, அங்கே ஒரே நாளில் ராமச்சந்திரன் மூன்று பட்டுப்புடவைகள் வாங்கிக் கொடுத்தது ஒரு திருப்பத்தில் கார் திரும்பும்போது, அந்த இடத்தில் விதி படத்தில் வருவதுபோல ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டுக்கொண்டு குடித்ததெல்லாம் நினைவுக்கு வந்தன.
புல்லட்டில் பின்னால் உட்கார்ந்துகொண்டு திருச்சியின் ரோடுகளில் வளையவந்தது. காம்ப்ளெக்சில் படங்கள் பார்த்தது, கடைகளுக்கும் கோவில்களுக்கும் போய் வந்ததெல்லாம் நினைவில் வந்து சென்றன.
கார் கிரீச்சிட்டு நின்றது. ‘ நீங்க சொன்ன வீடு இதாம்மா… ‘
வீட்டைப் பார்த்தாள். இதே இடத்தில் டாக்ஸியில் ஏறியதை நினைத்துக் கொண்டாள். ஆனந்த்தை தட்டி எழுப்பினாள்.
‘ஆனந்த்… உங்கப்பாவோட வீடு வந்தாச்சு… போய் பார்த்து பேசிட்டு உடனே வந்துடனும். மணி இப்போ பன்னிரண்டு. பண்ணிரெண்டரைக்கு நீ கார்லே இருக்கணும். ஞாபகம் வச்சிக்க. கலாட்டா எதுவும் பண்ணக்கூடாது. நீதான் என் உசிரு… நீ இல்லைனா நான் செத்தே போய்டுவேன். ஞாபகம் இருக்கட்டும்… ’ கண்கள் கலங்கின அவளுக்கு.
கொஞ்ச நேரம் கழித்து கடிகாரத்தைப் பார்த்தாள்.
‘என்ன இவனுக்கு அரைமணி நேரம்தானே கொடுத்தோம். ஐந்து நிமிடம் கூடவே ஓடிவிட்டதே… என்ன செய்ய… எழுந்துபோய் பெல்லை அடிக்கலாமா. ஒருவேளை, உள்ளே வா என்று ராமச்சந்திரன் சொல்லிவிட்டால். நோ நோ… நாம் ஏன் போகவேண்டும்… ராமச்சந்திரனின் மொபைல் நம்பர் தெரியும். கூப்பிடலாமா…நோ நோ… நாம் ஏன் அவனுடன் பேசவேண்டும்… ‘
திடீரென்று ஆனந்த் வெளியே வந்தான். கையில் ஒரு பாக்ஸ் வைத்திருந்தான். பின்னால் வந்த ராமச்சந்திரன் இவளை பார்த்தான். இவள் பார்வையை வலுக்கட்டாயாமக திருப்பிக் கொண்டாள்.
கார் தஞ்சாவூரை நோக்கிப் பறந்தது.
‘அம்மா நம்ம வீட்டுல ஸ்டோர் ரூமுல கிடந்த நம்ம போட்டோ மாதிரியே பெரிய சைஸ்ல ஒன்னு ஹால்ல தொங்கிட்டிருந்துச்சும்மா… ‘
‘ பேசாம வா…’
‘ அப்பா டீ போட்டுக் கொடுத்தார். லெமன் டீயாம். நல்லாயிருந்துச்சுமா… ‘
‘ பேசாம வான்னேன்…’
அவன் தூங்க ஆரம்பித்துவிட்டான். அவனை இன்னும் பேசவிட்டிருக்கலாமோ… யோசித்தபடியே அவளும் தூங்கிவிட்டாள்.
சட்டென முழிப்பு தட்டியது. அவளது கையில் அந்த பாக்ஸ் பட்டது. அதைத் திறந்து பார்க்க ஆவல் வந்தது. கையை வைத்துவிட்டு எடுத்துக் கொண்டாள். ஆனாலும் உள்ளே என்ன வைத்திருக்கிறானோ என்ற பேராவல் எழுந்தது. திடீரென்று ஒரு உத்வேகத்தில் பாக்ஸைத் திறந்தே விட்டாள். உள்ளே அவர்களது கல்யாண ஆல்பம்
ஒவ்வொரு பிரேமாக பார்க்க பார்க்க அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.
வீட்டுக்கு வந்ததும் போய்ப் படுக்கையில் சரிந்தாள். நாமும் உள்ளே போயிருக்கலாமோ… பெரிய சைஸில் அந்த போட்டோவை ஹாலில் மாட்டியிருப்பதாய் ஆனந்த் சொன்னானே.
ஒரே உந்துதல். ஓடிப்போய் ஸ்டோர் ரூமைத் திறந்து அந்த போட்டோவை எடுத்து முந்தானையால் துடைத்தாள். தூசி போகவில்லை. ‘ ப்பூ ‘ என்று ஊதினாள். அவளது உதடுகள் ராமச்சந்திரனின் உதடுகளுக்கு நேரே போவது போல இருந்தது. வெட்கத்துடன் அவனை ஏறிட்டாள். அவனும் சிரிப்பது போவது போல பிரமை தட்டியது. வெட்கம் பிடுங்கித் தின்றது.
‘ ராமூ… ‘ என்றபடி போட்டோவை அப்படியே அனைத்துக் கொண்டாள். பிறகு பழைய இடத்திலேயே அதை மாட்டிவிட்டு கண்களைத் துடைத்த்துக்கொண்டு இறங்கினாள்.
தூரத்தில் நின்றபடி அதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அவளது அம்மாவும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings