2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அம்மா இரண்டு மாதமாக படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். அவர்களால் கண்களைக் கூட திறக்க முடியவில்லை. வாய்ப்பேச்சும் நின்றுவிட்டது. திடீரென்று வந்த காய்ச்சலில் அவளது பார்வையும் பேச்சும் சுத்தமாய் போய்விட்டது. எழுப்பி உட்கார வைத்து இட்லியோ தோசையோ ஒரு வாய் ஊட்டும்போதே போதும் என்று சைகை செய்துவிட்டு தண்ணீர் கேட்டு கொஞ்சமாய் குடித்துவிட்டு படுத்துக் கொள்கிறார்கள். அதும் கைத்தாங்கலாக படுக்க வைக்கவேண்டும்.
மூன்று வேளை உணவெல்லாம் கிடையாது. காலையில் ஒரு வாயோ, இரண்டு வாயோ… அதே போல ராத்திரியும். சரிவர சாப்பாடு இறங்காததால் உடம்பும் இளைத்துவிட்டது. பேச்சும் குறைந்துவிட்டது. பார்வையும் இல்லை. எல்லாம் செய்கையில்தான். அதிகப் பட்சம் முனகுவாள். அது அப்பாவுக்கு மட்டுமே புரியும்.
டாக்டர் இனி மருத்துவம் பார்த்து ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அப்பா கூப்பிட்டார், ‘ மணி… அம்மா ஏதோ முனகறமாதிரி தெரியுது, போய் பாரு… ‘
அவருக்குத்தான் அம்மா முனகுவது புரியும்…. ஆனாலும் அவர் வேறு ஏதோ வேலை செய்துகொண்டே என்னைப் போய் பார்க்கச் சொல்கிறார் என்று புரிந்து, புத்தகத்தை கவிழ்த்து வைத்துவிட்டு எழுந்து ஓடினேன்…
அம்மா அமைதியாக படுத்திருந்தார்கள். அவர்களது தோற்றம் அவர்கள் உறங்குகிறார்களா, கண்மூடி சும்மா படுத்திருக்கிறார்களா என்று புரியாது. அவர்களது தோளை மெல்லத் தொட்டு, ‘ அம்மா… என்னம்மா வேணும்… ‘ என்றேன்.
ஏதோ முனகினார்கள். கொஞ்சம் குனிந்து உற்றுக் கேட்கவும் ‘ காசு… ‘ என்பது போலக் கேட்டது. படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு காசு எதற்கு என்று எனக்குப் புரியவில்லை.
‘ காசு வாங்கி என்னம்மா பண்ணப் போறே… ‘ என்றேன்.
திரும்பவும் அப்படியேச் சொன்னார்கள். அங்கிருந்தே அப்பாவைக் கூப்பிட்டேன். அவரும் ஓடிவந்தார். ‘ காசு வேனுமாம்ப்பா… ‘ என்றேன். புருவங்களைச் சுழித்தபடி குனிந்து, ‘செல்லம்மா… காசு வாங்கி என்ன பண்ணப் போறே… ‘ என்றார்.
அம்மாவின் கை லேசாக ஆடியது… திரும்பவும் அதேதான் சொன்னார்கள். புன்னகைத்தார் அப்பா. என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னார், ‘ காசு இல்லைப்பா… ராசு… அம்மாவுக்கு ராசு வேணுமாம்… ‘ என்றார்.
எனக்குத் திக்கென்றது. அவர்கள் கேட்பது எனது அண்ணனை. அப்பா தவிப்புடன் என்னைப் பார்க்க… நான் அவரைப் பார்க்க…
அம்மா இதுவரை எதுவும் கேட்டதில்லை. படுத்த படுக்கையாகிப் போன இந்த ஏழெட்டு மாதங்களில் எல்லாமே நாங்களாகப் பார்த்து கொடுப்பதுதான். சாப்பாடாகட்டும், மாத்திரையாகட்டும், தண்ணீராகட்டும்… துணியைக்கூட நாங்களாகவே மாற்றிவிடுவோம். கைத்தாங்கலாக கக்கூஸ் போய் உட்கார்ந்ததெல்லாம் பழையக்கதை. இரண்டு மூன்று மாதங்களாக எல்லாம் படுக்கையிலேயே. முகம் சுழிக்காமல் அப்பாத்தான் அத்தனையும் செய்வார். நானும் ஒத்தாசை செய்வேன்.
டாக்டர் சொன்னது போல, இன்னும் எத்தனை காலம் இப்படியே படுக்கையில் கிடப்பார்களோ தெரியவில்லை. இதுதான் அவர்களாக கேட்ட முதல் ஆசை என்பதால் அதை எப்படி பூர்த்தி செய்வது என்ற கவலை இருவருக்கும். ‘ என்னடா பண்ண இப்போ… ‘ என்றபடி அப்பா கைகளை பிசைந்தார்.
அங்கிருந்தே சுவரில் மாட்டியிருந்த அண்ணனின் போட்டோவைப் பார்த்தேன். அண்ணன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தான். அந்தக் கம்பெனி வட இந்தியாவில் பாலம் கட்டும் காண்ட்ராக்ட் எடுத்திருந்ததால் அவனை அங்கே கூட்டிப் போய்விட்டது. போனவன் போனவன்தான்.
‘ அவ ஆசைப் பட்டுக் கேட்கறாளே… ராசைப் பத்தி இதுவரை அவள் கேட்டதே இல்லையே… இப்போ என்ன செய்யறது… ‘ என்று முனகினார் அப்பா.
அவர்கள் கண்திறந்து பார்க்க முடியுமானால், ராசுவின் போட்டோவையாவது கொண்டு வந்து காட்டலாம். அதுவும் முடியாதே. இல்லை, அவனைத்தான் திடீரென்று எப்படி கொண்டுவந்து நிறுத்த முடியும். நடக்கிற காரியம் அல்லவே.
அன்று இரவு இருவரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அப்போதே ஃபோனை போட்டு அப்பா பேசினார்.
xxxxxx
மறுநாள் மதியம் ஒரு டாக்ஸி வந்து நின்றது.
அப்பா காரைப் பார்த்ததும் ஓடினார். ‘ வாப்பா தம்பி… ‘ என்று அழைத்து வந்தார். நான் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றேன். அப்பா அவனை அம்மாவிடம் கூட்டி வந்தார். அம்மாவின் தோள்பட்டையில் கைவைத்தார்.
‘ செல்லம்மா… ராசு வேணும்னியே… வந்திருக்கான் பார்… ‘ என்றார். அவர்களது உதடுகள் துடிப்பது தெரிந்தது. கையை மெல்ல உயர்த்த முற்பட்டார்கள். ஆனால் முடியவில்ல. ஒழுங்கான சாப்பாடே இல்லாமல் மாதக் கணக்கில் கிடந்தால் உடம்பில் சத்து எப்படி வரும்.
‘ அம்மா… நான்தான் ராசு வந்திருக்கேன்… நீ கேட்டதும் நான் ஏரோப்ளேன் பிடிச்சு ஓடிவந்திருட்டேன்… ‘ என்றான் அவன். அவனது கையை எடுத்து முத்தம் கொடுத்தார்கள். அவர்களது கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது. அப்பாவின் கண்களும் லேசாய் கலங்கின. உடனே அவர், ‘ செல்லம்மா… செல்லம்மா…‘ என்றார். நான் மெல்ல அம்மாவின் கைகளைப் பற்றினேன்.
என் கை அவர்களது மணிக்கட்டில் எதேச்சையாய் பட்டது. நாடியை கவனித்து அதிர்ந்தேன். ‘ அம்மா… அம்மா… ‘ என்று கத்தினேன். அப்பாவும் அம்மாவின் நெஞ்சில் கைவைத்துப் பார்த்துவிட்டு, மணிக்கட்டையும் பிடித்துப் பார்த்து விட்டு துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
உள்ளே ஓடினேன், சுவரில் சந்தன மாலைக்கு நடுவில் சிரிக்கும் அண்ணனைப் பார்த்து அழுதேன். ‘ அம்மா செத்துட்டாங்கண்ணா… அம்மா செத்துட்டாங்க… முதல்ல நீ போனே… இப்போ அவங்களும் போய்ட்டாங்க… நாங்க அனாதையாயிட்டோம்… ‘ அழுதேன் நான்.
பாலம் கட்ட போன இடத்தில் ராட்சத கிரேன் ஒடிந்து விழுந்து அந்த இடத்திலேயே சுத்தமாய் நசுங்கி செத்துப் போக, பக்கெட்டில் அள்ளி ஐஸ் பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். அவனது ஆறாவது விரலை வைத்துமட்டும்தான் அவனை அடையாளம் காட்ட முடிந்தது. அதைக்கொண்டு வந்து ஆகப் போவதோன்றுமில்லை என்று அங்கேயே எரித்துவிட்டுத்தான் ஊர் திரும்பியிருந்தோம். அது நடந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. அம்மாவுக்கு எதுவும் தெரியாது… தெரியவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் அப்பா. ஊரே அழுததும் அம்மாவுக்கு தெரியாது.
இப்போது அவர்கள் ஆசைப்பட்டுவிட்டார்கள் என்பதற்காக பக்கத்து ஊரிலிருந்து பலகுரலில் பேசும் பாண்டியை கூட்டிவந்து அவர்களது கடைசி ஆசையை பூர்த்தி செய்தாகிவிட்டது. கண்டிப்பாய் அவர்களது ஆத்மா சாந்தியடையும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings