in

அம்மாவின் அருமை (சிறுகதை) – ✍ சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“பாட்டி, புது அம்மா எப்ப வருவா?” நூறாவது தடவையாக கமலிக்குட்டி கேட்டாள். 

 “இன்னும் ஒரு வாரம் தான்!” எட்டு வயது பேத்திக்கு தலையை வாரிப் பின்னி விட்டுக்கொண்டே பதில் கூறினாள் வசந்தா. 

“அப்புறம் நான் புது அம்மாட்ட தான் தலைப்பின்னிப்பேன்” 

தாய் முகம் அறியாத கமலிக்குட்டி புது அம்மாவின் வரவை எதிர்பார்த்து இருந்தாள்.

ராஜேஸ்வரியின் முகம் கடுகடுவென்று இருந்தது. தந்தையின் வறுமை அவள் படிப்பை பிளஸ்டூ’வோடு நிறுத்தி வைத்திருந்தது. மேற்கொண்டு படிக்க அவளுக்கும் விருப்பமில்லை.

“இவளை ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுத்துட்டா, அப்புறம் எனக்கு நிம்மதி” என்று எப்போது பார்த்தாலும் அம்மா கூறியதால் ராஜேஸ்வரிக்கு 17 வயதிலிருந்தே பணக்காரத் தனமான கல்யாண கனவுகள் தான் அதிகமாக இருந்தன.

வசதிகளே இல்லாத வீட்டில் பிறந்து இருந்தாலும் ராஜேஸ்வரி தன்னை ஓர் மகாராணியாக கற்பனை செய்து கொண்டு கனவுலகில் உல்லாச ஊஞ்சலில் எப்பொழுதும் ஆடிக் கொண்டிருப்பாள்.  ஆனால் 23 வயதில் அவளுடைய  கனவுகள் ஆட்டம் கண்டன.

ராஜேஸ்வரியின் ஏழை பெற்றோரால் அவளுடைய கனவுகளுக்கு உயிர் கொடுக்க முடியவில்லை.  ரகுராமனுக்கு இரண்டாம் தாரமாக அவள் வாழ்க்கைப்பட நேர்ந்தது.

“மாப்பிள்ளைக்கு 33, 34  வயசுதான். நாலு வயசுல பெண் குழந்தை. ஒண்ணுமே செய்ய வேண்டாம். கட்டின புடவையோட வந்தா போதும்” என்று தரகர் கூறியதைக் கேட்டு ராஜேஸ்வரியின் பெற்றோர் அவள் திருமணத்தை நிச்சயம் செய்து விட்டனர்.

மணமேடைக்கு வந்த பிறகே முன் மண்டையில் வழுக்கையுடனிருந்த மாப்பிள்ளைக்கு 38 வயது என்றும், எட்டு வயது பெண் குழந்தைக்கு தகப்பன் என்றும் தெரிந்தது. 

 ராஜேஸ்வரியின் கோபமெல்லாம் கமலியின் மீதுதான் பாய்ந்தது. “அம்மா” என்று ஆசையுடன் வந்த கமலியை நிர்தாட்சண்யமாக  நிராகரித்தாள். புது அம்மாவிடம் அழகாக தலை பின்னிக் கொள்ள ஆசைப்பட்ட கமலியின் முடி “யாரால இருக்கு?  தினம் தினம் தலை வாரிப் பின்னி விட நேரம் எங்க இருக்கு?” என்ற ராஜேஸ்வரியால் மிகக் குட்டையாக வெட்டப்பட்டது. 

பேத்தி மாற்றாந்தாய் கொடுமைக்கு ஆளாக போகிறாள் என்று வசந்தா பாட்டி நன்றாக புரிந்து கொண்டாள்.  மனம் வெதும்பி மருமகள் வந்த ஒரே மாதத்தில் உயிர் நீத்தாள். சூட்டிகையான கமலிக்குட்டி ராஜேஸ்வரியின் போக்கை ஒரே வாரத்தில் புரிந்து கொண்டாள்.

முதன்முதலில் கமலி  அம்மா என்று ராஜேஸ்வரியை அழைத்தவுடன், “23 வயசுல எனக்கு எட்டு வயசு பொண்ணா? நீ ஒண்ணும் என்ன அம்மான்னு கூப்பிட வேண்டாம்” என்று கடிந்து கொண்டவுடன் கமலி  அசாதாரணமான பொறுமை காத்தாள். அதன் பிறகு கமலி அம்மா என்றும் அழைக்கவில்லை.

சித்தி, சின்னம்மா என்றும் அழைக்கவில்லை. தந்தையிடம் சென்று எந்த வித புகாரும் அளிக்கவில்லை. தன் வேலைகளை தானே பார்த்துக் கொண்டு தன்னிறைவு பெற்றவளாக கமலி விளங்கினாள். 

ராஜேஸ்வரிக்கு பிறந்த இரண்டு மகன்களும் கமலியிடம் மிகவும் ஒட்டுதலாக  இருந்தனர். அக்கா அக்கா என்று இருவரும் கமலியிடம் உயிரையே வைத்திருந்தனர்.

ராஜேஸ்வரிக்கும் ரகுராமனுக்கும் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் கழித்து தான் அவர்களுடைய முதல் மகன் பிரவீன் பிறந்தான். பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து ராம் பிறந்தான். அப்பொழுது கமலிக்கு 13 வயது ஆகி விட்டது. அதனால் தம்பிகள் இருவரையும் தாய் பாசத்துடன் வளர்த்தாள். 

ராஜேஸ்வரி கமலியிடம்  அன்பை அதிகம் காட்டவில்லை என்றாலும், கணவருக்கு பயந்து அவள் மேல்  வெறுப்பை காண்பிக்காமல் இருந்தாள். தம்பிகளின் மீது கமலி வைத்திருந்த பாசமும் அதற்கு ஒரு காரணம்.

கமலியின் பொறுப்பில் குழந்தைகளை விட்டு விட்டு ராஜேஸ்வரி சினிமாவிற்கும் மற்ற இடங்களுக்கும் செல்வாள்.   ஆனாலும், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து வாழ்க்கை தானே நமக்கு அமைந்தது என்ற என்ற ஆத்திரமும் ஆதங்கமும் அவள் மனதில் தீக்கங்கு போல்  கனன்று கொண்டே இருந்தது.

கமலி படிப்பில் புத்திசாலியாய் விளங்குவது மேலும் அவள் மனத்தீயை விசிறி விட்டது. ரகுராமன் மனைவியை அலட்சியமும் செய்யவில்லை, அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடவும் இல்லை. எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருந்தது 

கமலி பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் சேர்ந்தாள். சொந்தமாக நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் இருந்தது. ஆனால் சிற்றன்னையின் எண்ணம் வேறாக இருந்தது.

கணவரிடம் கூறினாள். “இப்ப எதுக்குங்க அவளுக்கு படிப்பு? கல்யாணம் பண்ணிட்டு போறவ படிச்சு என்ன ஆகணும்? படிப்புக்கு செலவழிக்கிறத கல்யாணத்துக்கு சீரா செஞ்சுடலாம்” ரகுராமன் ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்தார்.

பிறகு மெல்ல கூறினார். “ராஜி, நீ கல்யாணம் ஆகி வந்த புதுசுல உன்னையே படிக்க விருப்பம் இருந்தா படின்னு சொன்னேன். நீ ஆசைப்படலை. பொண்ணு ஆசைப்படறா படிக்கட்டும்”

ராஜேஸ்வரி அப்போதைக்கு எதுவும் பேசவில்லை. இரண்டு மூன்று இடங்களில் “நல்ல வரன் இருந்தால் சொல்லுங்கள்” என்று சொல்லி வைத்தாள். மூன்றாம் நாளே அதற்கு பதில் கிடைத்தது. ராஜேஸ்வரியின் தூரத்து சொந்தத்தில் ஒரு வரன் இருப்பதாக தகவல் வந்தது. 25 வயதில் திருமணமாகி 30 வயதில் மனைவியை இழந்தவன். 4 வயதில் பெண் குழந்தை.

ரகுராமனுக்கு ஆத்திரமும் கோபமும் வந்தது. “நீ பெத்த மகளா இருந்தா  இப்படி இரண்டாம் தாரமாக குடுப்பியா?” 

“ஏன் எங்க அம்மா என்னை  ரெண்டாம் தாரமா தானே உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா? நான் ஏதாவது சொன்னேனா?  ரெண்டாம் தாரமா இருந்தாலும் அவனுக்கு 30 வயசுதான் ஆகுது. நான் எல்லாம் நல்லா விசாரிச்சுட்டு அப்புறம் தான் இந்த முடிவுக்கு வந்தேன். பேங்க்ல ஆபீஸரா இருக்கான். முதல் வைஃப்  ஆக்ஸிடெண்ட்ல போன வருஷம் போயிட்டா. கல்யாண ஏற்பாடு பண்றதே அந்த பொண்ணோட அம்மா அப்பாதான். இந்தக் குழந்தைக்கு ஒரு அம்மா வேண்டும், அந்தப் பையனோட அம்மாவும் முடியாம இருக்கா அதனால தான். நான் ஒண்ணும் ஏனோதானோன்னு வரன் பார்க்கலை கமலிக்கு”

வாயடைத்துப் போன ரகுராமன், அதற்குப் பிறகு ஒன்றும் பேசவில்லை. “கமலி படிப்ப முடிக்கட்டும் டிகிரியை வாங்கட்டும்” என்று மட்டும் கூறினார். கமலியிடம் பேசவே ரொம்ப தயக்கமாக இருந்தது அவருக்கு.

முதல் மனைவி போன பிறகு அம்மாவின் நச்சரிப்பு தாளாமல் ராஜேஸ்வரியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டவர் ரகுராமன்.  கமலி மகிழ்ச்சியாக இருக்கிறாளா என்று அவர் விசாரித்ததே இல்லை.

ரகுராமனின் மனதில் இருந்த குற்ற உணர்ச்சியும் தயக்கமுமே இதற்குக் காரணம்.  ஸ்கூல் பீஸ் காலேஜ் பீஸ் கேட்டால் மட்டும்  மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்து விடுவார். கமலியும் தந்தையிடம் என்றுமே எந்த குற்றமும் குறையும் சொன்னதே இல்லை.

ராஜேஸ்வரியின் குரல் மீண்டும் ஒலித்தது, “இங்க பாருங்க, இருக்கிற நகை நட்டு வைத்து கமலிய  கட்டி கொடுத்துட்டா அப்புறம் நம்ம பசங்களுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்? இங்க என்ன?  பரம்பரைச் சொத்தா பாழாப் போகுது? இப்பவே அவளுக்கு 20 வயசு ஆகப் போகுது. நீங்க இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல ரிட்டையர் ஆயிடுவீங்க. நிறைய சீர் செனத்தி செஞ்சி கல்யாணம் கட்டிக் கொடுக்க நமக்கு வசதி பத்தாது” 

செலவில்லாமல் மூத்தாள் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினாள் ராஜேஸ்வரி. ஆனால், அவள் சொல்வதில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டார் ரகுராமன்.

கமலியின் விவசாய கனவுகள் அத்தோடு கலைந்து போயின. சிற்றன்னையின் சொல்லுக்கு தலையாட்டி பொம்மையாய் மாறிப் போன தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டாள் கமலி. 

ஓவியமாய் ரவியின் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள். 4 வயது அபர்ணா கமலியை முறைத்து முறைத்துப் பார்த்தது. ரவி கமலியின் கரம் பற்றி கண்களாலேயே நன்றி கூறினான்.

அபர்ணாவை வாரி அணைத்துக் கொள்ள விழைந்தாள் கமலி. “அம்மா கிட்டே வா” என்று அன்புடன் விளித்தாள். 

“நீ ஒன்னும் என்னோட அம்மா இல்ல, வர மாட்டேன்” என்றது அபர்ணா அழுத்தந்திருத்தமாக. அதிர்ந்து போனாள் கமலி.

ரவி அவள் அருகில் வந்து மெல்ல சமாதானம் செய்தான். “சாரி கமலி, குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவாள்” என்றான்.

இயலாமையும் வேதனையும் ஒரு மெல்லிய புன்சிரிப்பாக வெளிப்பட்டது கமலியின் முகத்தில். “குழந்தைதானே, தானே புரிந்து கொள்வாள்” என்று சமாதானமாக கூறினாள்.

நாட்கள் நகர்ந்தன. கமலி ரவியிடம் திட்டவட்டமாகக் கூறினாள். “அபர்ணா மட்டும்தான் நம் குழந்தை” ரவி  கமலியின் மனஉறுதியைக் கண்டு பிரமித்து மயங்கி போனான்.

பெரிய வீடு,  நிறைய நகை, பீரோ நிறைய புடவைகள், ஆனால் கமலியின் மனம் மட்டும் வெற்றிடமாக  இருந்தது. அபர்ணா அவளை அம்மா என்று அழைக்கவே இல்லை. நான்கு வயதில் இருந்தே அப்படி ஒரு வைராக்கியம்.

விதியின் இந்த கேலிக் கூத்தை பார்த்து வியப்பும் வருத்தமும் ஒன்றாக வந்தது. தனக்கும் மாற்றாந்தாய், தானும் மாற்றாந்தாய். அவளிடம் அந்த அன்னை ஒட்டவில்லை, இப்போது இந்த மகளும் ஒட்டவில்லை. இது விதியா இல்லை வரமா? 

ஆனால் ரவி கமலியிடம்  அபரிமிதமான அன்பை பொழிந்தான். அபர்ணாவின் மனதில் கமலி இடம்பெற வேண்டுமென்று ரவி எடுத்த முயற்சிகள் யாவுமே வீணாகிப் போயின. ஓர் தவமாய் கமலியின் நாட்கள் கழிந்தன. பலவிதமான சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் கமலி. 

அழகோவியமாய் வளர்ந்து நின்றாள் அபர்ணா. அவள் எழில் பார்ப்போர் மனதை கொள்ளை கொண்டது. ராஜேஸ்வரிக்கு கூட ஒரு சின்ன நப்பாசை.  அபர்ணாவை தனக்கு மருமகள் ஆக்கிக் கொள்ளலாம் என்று, ஆனால் கமலி சிற்றன்னையின் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி விட்டாள்.

அபர்ணாவின் அழகிற்கும் அந்தஸ்துக்கும் வரன்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. ரவியும் கமலியும்  வந்த ஜாதகங்களை அலசி ஆராய்ந்து பிரபல தொழிலதிபர் வீட்டு வரனை தேர்ந்தெடுத்தனர். ஜாதகப் பொருத்தம், மனப்பொருத்தம், ஜோடிப் பொருத்தம், எல்லாமே பிரமாதமாக அமைந்தது. அபர்ணா அசோக் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

வெற்றிடமாக இருந்த கமலியின் மனதிலும்  மகிழ்ச்சிப் பூக்கள் மலர்ந்தன. அபர்ணா புக்ககம் சென்றுவிட்டாள். கமலி வழக்கம்போல் சமூக சேவைகளில் தன் பொழுதை நல்லவிதமாக கழித்துக் கொண்டிருந்தாள்.

அபர்ணா தாய்மை அடைந்த செய்தி ரவிக்கும் கமலிக்கும் தேனாய் இனித்தது. அபர்ணாவின் மாமியார் வீட்டில்  மருமகளை தானே பார்த்துக் கொள்வதாக வாக்களித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் கமலியின் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்தது. 

“அப்பா, கமலிக்கு குழந்தை பிறக்காததுனால பிள்ளைத்தாச்சியையும் அப்புறமும் நல்லா பார்த்துக்க தெரியாதுன்னு அவங்க நினைக்கிறாங்க” என்று அபர்ணா தந்தையிடம் கூறியதை எதேச்சையாக கேட்டுவிட்டு கல்லாகி நின்றாள் கமலி.

மரத்துப்போன மனதில் விழுந்த அடி தானே! வலிக்கவில்லை அவளுக்கு. அபர்ணாவின் மாமியார் சொன்னதை எல்லாம் தட்டாமல் செய்தாள். அழகான கண்ணன் பிறந்தான். எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நான்கு மாதங்கள், எந்தவிதமான ஈகோவும் இன்றி, அபர்ணாவின் வீட்டுக்கே சென்று தாய்க்கும் குழந்தைக்கும் வேண்டிய பணிகளை செய்து கொடுத்தாள் கமலி.

அபர்ணாவின் மாமியாருக்கு உறுத்தியதோ என்னவோ? கமலியின் கையைப் பிடித்துக் கொண்டு பலமுறை நன்றி கூறினாள். தினங்கள் வேகமாய் கடந்தன. குட்டி அருணுக்கு நான்கு வயது ஆகிவிட்டது. பள்ளிக்கூடத்தில் எல்கேஜி சேர்க்க வேண்டும். ஆனால் இன்னும் பேச்சு வரவில்லை குழந்தைக்கு. 

“அவனுக்கு ஸ்பீச் தெரபி ஏற்பாடு பண்ணுங்க” என்று அட்வைஸ் செய்தனர் பள்ளிக்கூடத்தில். ரவியும் கமலியும் கவலையில் ஆழ்ந்தனர்.

அபர்ணாவும் அசோக்கும் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் பார்த்துவிட்டு வந்தனர். அவர் கூறிய முறைகளை இனிமேல் தான் பின்பற்ற வேண்டும். அருண் கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பான். தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் ஜாடையிலேயே கேட்டு பெற்றுக் கொள்வான். அவனுக்கு காது கேட்பதில் பிரச்சினை இல்லை என்று தெரிந்தது.

அன்று குழந்தை மதியத்தில் இருந்து சோர்ந்து சோர்ந்து படுத்தான். ஜுரத்தில் இருந்த அருணை மடியில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள் அபர்ணா. இனம்தெரியாத வேதனை அவளை வாட்டியது.

அவளுக்கு உடல் நலமில்லாத போது, வயதுக்கு வந்த போது, குழந்தை பிறந்த போது கமலி ஓடி ஓடி  செய்த சிசுருஷைகள்  ஞாபகத்திற்கு வந்தது. பாட்டியையும் எப்படி பார்த்துக் கொண்டாள் கமலி? 

ஏனோ கமலியின் தோள் மீது சாய்ந்து கொண்டு கண்ணீர் வடிக்க வேண்டும் போல் தோன்றியது  அபர்ணாவிற்கு. அருண் அபர்ணாவின் மடியில் இருந்து புரண்டு கீழே விழுந்தான்.

“அம்மா” என்ற வார்த்தை  அருணின் வாயிலிருந்து புறப்பட்டு அபர்ணாவின் காதில் அமிர்தமாய் பாய்ந்தது. கீழே விழுந்த குழந்தையை தூக்கிக்கொண்டு “அசோக் அசோக்” என்று அலறினாள் அபர்ணா.

“குழந்தை அம்மான்னு சொன்னான் அசோக்” விம்மிக் கொண்டே கூறினாள் அபர்ணா. 

“அசோக் நீ குழந்தையை பிடி. நான் ஒரு போன் பேசிட்டு வரேன்”

கமலி நம்பருக்கு அடித்தாள். “என்ன அபர்ணா?”

கமலியின் ஆதுரமான குரலைக் கேட்டவுடன்  அபர்ணா “அம்மா அம்மா” என்று தேம்பினாள்.

கமலிக்கு பிரமிப்பாக இருந்தது. தான் கேட்பது பொய்யா உண்மையா? நம்ப முடியவில்லை.

“எதுவானாலும் நிதானமா சொல்லு அபர்ணா”

“அம்மா, இன்னிக்கு தான் அம்மா என்கிற வார்த்தை யோட அர்த்தமே தெரிஞ்சுது எனக்கு. அருண் மொதமொதல்ல என்ன அம்மான்னு கூப்பிட்டான். நீ என்னை எத்தனை தடவை அம்மான்னு கூப்பிட சொல்லுவ. ஆனா நான் ஒரு தடவை கூட உன்னை கூப்பிட்டது இல்லை. உன் மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் அது இன்னிக்கி தான் அம்மா எனக்கு புரிஞ்சுது” விசித்து கொண்டே கூறினாள் அபர்ணா.

“அழாதே அபர்ணா, நீ கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் நான் உனக்கு என்னிக்கும் அம்மாதான்”

“அம்மா நீயும் அப்பாவும் இங்கேயே வந்துடுங்க அம்மா. நான் ஒன்ன அம்மா அம்மான்னு ஒரு நாளைக்கு நூறு வாட்டி கூப்பிடனும்” சிரித்தாள் கமலி.

“இப்ப   அது சாத்தியமே இல்லை. அதுவுமில்லாம இங்க  பக்கத்தில ஒரு அனாதை இல்லத்தில் போய் நான் முழுநேரமும் சேவை செய்கிறேன்.  நிறைய   வயசானவங்க அங்க  இருக்காங்க. நான் அவங்களுக்கு எல்லாம் பத்திய சாப்பாடு செஞ்சு  தரேன். அங்க ஒரு குழந்தைகள் காப்பகமும் இருக்கு. அந்தக் குழந்தைகள் எல்லாமே என்னை அம்மா அம்மா என்று தான் கூப்பிடுதுங்க. மற்றபடி யார் என்ன கேட்டாலும் கேட்கிறவங்களுக்கெல்லாம் என்னால முடிஞ்சத செஞ்சு கொடுக்கிறேன். இந்த வேலையெல்லாம் விட்டுட்டு நான் உங்க வீட்டுக்கு வர முடியாது செல்லம்” அன்பொழுக கூறினாள் கமலி.

“அப்போ நான் ஒன்னு பண்றேன்.  நான் அங்க வந்துடறேன். உனக்கு ஒத்தாசையா இருப்பேன். அருணுக்கும் நீயே ஸ்பீச் தெரபி கொடுக்கலாம். அசோக்கும் அத்தையும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”. அபர்ணாவின் வார்த்தைகளில் இருந்த ஆர்வம் கமலியின் மனதைக் கரைத்தது.

“சரி வந்துடு. ஆனா கொஞ்ச நாளைக்கு தான். ஒரு பொண்ணுக்கு அவளுடைய புகுந்த வீடு தான் சொர்க்கமா இருக்கணும். பிறந்த வீட்டுக்கு அவ்வப்போது சீராடறதுக்கும் விடுமுறைக்கும்தான் வரலாம் ” என்றாள் சிரித்துக் கொண்டே. 

“ரொம்ப சாரி அம்மா. உன்னை இத்தனை நாள் நான் புரிஞ்சுக்கவே இல்ல. என்னை மன்னிப்பாயா?” என்றாள் அபர்ணா விம்மிக் கொண்டே   கெஞ்சுதலாக. தாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த திரை அறுந்து விழுந்தது. 

மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓட கமலி அபர்ணாவுடன் பேசுவது போல்  தனக்குத்தானே கூறிக் கொண்டாள். ‘அபர்ணா, என் கண்ணே! நீயும் நானும்  சூழ்நிலைகளாலும் சிந்தனைகளாலும் மாறுபட்டு இருந்தாலும் காலம் உன் போக்கை மாற்றிய அம்மா எனும் அரும் சொல் மிகவும் பவித்திரமானது. அந்தப் புனிதத்திற்கு ஈடு இணை உண்டோ?’

காலம் என்றேனும் ஒரு நாள் நல்லவைகளை கண்டிப்பாக உணர்த்தும். இதை உணர்ந்த அபர்ணா ஆழ்ந்த நிம்மதியில் அமைதியை கண்டாள். தாய் வீட்டு பயணத்திற்காக பொறுமையுடன் காத்திருந்தாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதல் என்பது எது வரை? (சிறுகதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை

    பிரிவு (சிறுகதை)- ✍ இரா.அனிதா ராஜேந்திரன்