in ,

அம்மன் வாசலில் ஒரு கொலை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ருக்கு வெளியே இருந்தது அந்த அரசமரம். அதற்கு கீழே ஒரு பெரிய அம்மன் சிலை. அதன் நாலாபுறமும் கருங்கற்களை வைத்து திண்ணை அமைத்திருந்தார்கள். பக்கத்திலேயே ஒரு ஏரி. மழை நன்றாக பெய்து அந்த ஏரி நிரம்பிவிட்டால், அந்த பகுதியே அல்லோலகல்லோலப் படும்.

சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிணறுகளிலெல்லாம் தண்ணீர் ஊறி, விவசாயம் செழித்தோங்கும். ஊரைச் சுற்றிலும் பச்சை பசேல் என்று காட்சி கொடுக்கும். ஊருக்குள் இருப்பவர்கள் எல்லாம் அந்த ஏரியில் வந்து குளிப்பதும், துணி துவைப்பதும், அவர்களது ஆடுமாடுகளை குளிப்பாட்டுவதுமாக குதூகலிப்பார்கள். குளித்துவிட்டு துணிமணிகளை வேலிகளில் காயப் போட்டுவிட்டு அரசமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள், குறிப்பாக குழந்தைகள்.

ஆனால், இரண்டு வருடங்களாக சரியான மழை இல்லாததால், ஏரியில் தண்ணீரும் இல்லை. எங்காவது கொஞ்சம் தண்ணீர் குட்டையாய் தேங்கிக் கிடந்தன. சேரும் சகதியும் அதிகம் என்பதால் குளிக்கும் எண்ணத்துடன் யாரும் அந்தப் பக்கம் போவதுமில்லை. ஆனால், ஏரிக்குள் புல் பூண்டுகள் மண்டிக் கிடப்பதால் ஆடுமாடுகள், அவைகளைக் கொண்டுவந்து மேயவிடுவார்கள்.

அரசமரத்தடியில் நல்ல நிழல் கிடைப்பதால் சிறுவர்கள் மட்டுமல்லாமல் சிலசமயம் வாலிபர்களும் விளையாடுவதுண்டு. அப்படி அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும்போதும் ஊஞ்சல் கட்டியிருந்த மரக் கிளை ஒடிந்து விழுந்து மூன்று பேருக்கு சரியான அடி. மூன்று ஊஞ்சல்களையும் அப்புறப் படுத்தி விட்டனர்.

‘ எத்தனை வருஷ பழைய மரமோ… கிளைங்க புட்டுக்கிட்டு விழ ஆரம்பிச்சிடுச்சு… சின்னப் பசங்க விளயாடட்டும்னுதான் ஊஞ்சல் கட்டி உட்டோம். பெரியப் பசங்களும் அதுல உட்கார்ந்து ஆடினா எப்படி கிளைங்க தாங்கும். இனிமே பிள்ளைங்க யாரும் ஊஞ்சல் ஆடாதீங்க… ’ என சில பெரிசுகள் சொல்லிவிட்டபடியால், எப்போதாவது அந்தப் பக்கம் பட்சம் பல்லாங்குழி, சடுகுடு, கிரிக்கெட் என்று மட்டுமே ஆடிக்கொண்டிருந்தனர்.  சிலசமயம் அதுவுமில்லை.

திடீரென்று ஊருக்குள் கூட்டம் போட்டு, ‘ இரண்டு வருடங்களாக அம்மனுக்கு திருவிழா எடுக்காத காரணத்தால்தான் மழைமாரி நின்று விட்டது, ஏரியும் காய்ந்து கிடக்கிறது. அதன்பொருட்டு அதைச் சுற்றிலும் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டது. விவசாயமும் படுத்துவிட்டது. அதனால் உடனே அம்மனுக்கு திருவிழா எடுக்க வேண்டும்… ‘ என்று பேசினர். 

நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து திருவிழாவுக்கு நாளும் குறித்துவிட்டனர். உடனே கோவிலைச் சுற்றிலும் சுத்தம் செய்யும் பணி துவங்கியது. மேடையிலிருந்து சரிந்து விழும் கற்களை, பொங்கல் வைக்க அடுப்பு கூட்டி கருப்பாக்கி வைத்திருந்தனர். புது கற்களை வாங்கி வந்து மேடையும் செப்பனிடப் பட்டது. சுற்றிலும் வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களும் அப்புறம் படுத்தப்பட்டன. வெளியே வந்த  பாம்புகள் அடிக்காமல் துரத்தப் பட்டன.

திருவிழா கூடினால், சுற்றுப்பட்டு எட்டு கிராமங்களிலிருந்தும் ஜனக்கூட்டம் கூடும், அந்தந்த கிராமங்களிலிருந்து சுவாமிகளும் பல்லக்கில் இங்கே வந்து செல்லும்.  அதற்கு வசதியாக ரோடுகளின் இரண்டு புறங்களிலும் கிடந்த முற்புதர்கள் அகற்றப் பட்டு மரக் கிளைகளும் வெட்டப் பட்டன. 

எப்போதும் போல, முதல் நாள் காப்பு கட்டுதல், மறுநாள் பொங்கல் வைத்து மாவிளக்கு போடுதல், கரகம் தூக்குவார்கள். அடுத்த நாள், அக்கினிச்சட்டி, தீமிதி திருவிழா, அடுத்தநாள் தேர் ஊருக்குள் வலம் வரும், மறுநாள் கிடாவெட்டு, கடைசி நாள் மஞ்சள் நீராட்டு.

xxxxxxxxx

மைனர் சிங்காரத்தின் வீட்டில் அவசரக் கூட்டம் கூடியது. அவனைச் சுற்றிலும் அவனது கைத்தடிகள், போதையில்.

தலையை சிலுப்பிக்கொண்டு கர்ஜித்தான் மைனர் சிங்காரம். ‘எப்போ திருவிழா எடுத்தாலும், இந்த சின்னச்சாமிக்குத்தான் முதல் மரியாதை. அவங்க அப்பன் காலத்துல அவன் அப்பனுக்கு. இப்போ இவனுக்கு. நல்லவேளை இவனுக்கு பொட்டைப் புள்ளைங்க மட்டும்தான்… இல்லேன்னா அப்புறம் இவனோட மகனுக்குத்தான் போகும்…. ச்ச்சே பரம்பரை பரம்பரையா இவனுங்களுக்கே முதல் மரியாதையா… நானும்தானே உடன்பங்காளி. நாமட்டும் இளிச்சவாயனா… இவன் செத்தான்னா முதல் மரியாதை என்னைத்தானே தேடி வருமில்லையா… ‘

‘ஆமா ஆமா… உடக்கூடாதுண்ணே உடக்கூடாது… ‘ கோரஸாக குரல்  எழுப்பினர் கைத்தடிகள்.

ஒரு கைத்தடி எழுந்து வந்து மைனர் சிங்காரத்தின் காதில் ஏதோ ஓதினான். கெக்கலித்த இவன், ‘ டேய்… நம்ம மச்சானுக்கு இன்னொரு பாட்டில் எடுத்துக் குடுடா… அதுக்குத்தான் மாமன் மச்சான் வேணுங்கறது… ‘ என்றவன் அவனையேப் பார்த்து, கடைவாயில் சிரிப்புடன், ‘ மாரி… சரி, நீயே போயி… சாமியாடி வீராசாமியைக் கூட்டிட்டு வா… ‘ என்றான்.  

மாரிமுத்து எழுந்து தட்டில் கிடந்த கறித்துண்டுகளில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மைனர் சிங்காரத்தைப் பார்த்து, ‘ மாமே… நான் போயி வீரனை கூட்டியாறேன்… காரியத்தைக் கச்சிதமா முடிக்கறோம்… முதல் மரியாதையை வாங்கறோம்… ‘ என்று உளறியபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினான்.

சாமியாடி வீராசாமி சாமியாடுபவர். கோவிலுக்கென்று அடித்து வைத்திருக்கும் பெரிய அரிவாளை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள, சாமி வந்து அவர் அதில் ஏறிநின்று நாக்கைத் துருத்திக்கொண்டு ஆடினால், எல்லோரும் அரண்டு போவார்கள். ஆளும் தோளும் அப்படி, அவரது கண்களும் நாக்கும் அப்படியப்படி.

மைனர் சிங்காரத்தின் திட்டம் இதுதான்.  திட்டப்படி திருவிழா கூடும். கரகம் தூக்குவதற்கு முன்பாக,  சாமி அழைப்பார்கள்.  வீராசாமியின் மேல் சாமியை வரவழைப்பதற்காக நான்கைந்து பேர் உடுக்கை அடித்து பாட்டுப் பாட, பெண்கள் குலவை சத்தம் போடுவார்கள்.  திடீரென்று சாமி வந்து ஆடுவார் வீராசாமி.  

இரண்டு பேர் அரிவாளை பிடித்துக் கொள்ள வீராசாமி அதன் மேல் ஏறி நின்று கொண்டு கரகம் தூக்குவதற்காக எதிர் நின்று கொண்டிருக்கும் பங்காளி சின்னச்சாமியை, ‘ நீ எச்சில் தட்டுல சோறு தின்னுட்டே… அது சாமி குத்தம்டா… சாமி குத்தம்… பெரிய மனுஷன்… நீ சின்னத்தனமா நடந்துக்கலாமா… அது தப்புன்னு உனக்குத் தெரியாதா…’ என்று சொல்லுவார்.

சின்னச்சாமி பெண்கள் சபலம் உள்ளவன் என்று ஊருக்கேத் தெரியும். அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று சாமியையே சின்னச்சாமி கேட்பான்… சாமியாடி வீராசாமி அரிவாளை விட்டு இறங்குவார்… அதே வேகத்தில் அரிவாளைப் பிடுங்கிக் கொண்டு ஒரே வீச்சு… சின்னச்சாமி கழுத்து வெட்டுப்பட்டு செத்து விழுவான்.

முதல் மரியாதை தானாகத் தேடி வரும்.

சின்னச்சாமி சபலம் கொண்டு அலைந்ததால்தான் சாமி கோபம் கொண்டு அவனை பழி வாங்கி விட்டது என்று மக்கள் நம்பவும் செய்வார்கள்.

அரிவாளால் வெட்டினால்தானே அது கொலை. எலுமிச்சை செருகிய அரிவாளால் வெட்டினால் அது சாமியே பழி வாங்கிவிட்டதாகத்தானே அர்த்தம். கொலை கேஸாகாதல்லவா.

திருவிழா நிற்கும். நம் கழுத்தில் மாலை ஏறும், தலை மேல் பூக்கிரீடம் ஏறும், கரகம் ஏறும். ஊரு மக்கள் என் காலில் விழுந்துதான் என் கையால் பிரசாதம் வாங்குவார்கள்.  

இன்னொரு பாட்டிலை எடுத்து சாராயத்தை இறக்கிக்கொண்டு ஒரு கறித்துண்டை எடுத்து கடித்தபடியே மாரிமுத்து வருகிறானா என்று மிகவும் பிரயத்தனப்பட்டு உற்று உற்றுப் பார்த்தான், மைனர் சிங்காரம்.  போதை ஏறியதில் கண்கள் மங்கலாய் தெரிந்தன. இன்னும் அவனை வரக் காணோம்.

சாமியாடி வீராசாமி வந்துவிடுவார், ரகசியம் பேசவேண்டும் என்பதால், அவசர அவசரமாய் கூட்டத்தைக் கலைத்தான் மைனர் சிங்காரம். கொஞ்ச நேரத்தில் சாமியாடி வீராசாமியும் மாரிமுத்துவும் ஓட்டைச் சைக்கிளில் கிராக் கிராக் சத்தத்துடன் வந்து இறங்கினர். மாரிமுத்துவை மட்டும் கூட வைத்துக்கொண்டான் மைனர் சிங்காரம்.  

சாமியாடி வீராசாமி சரியான முடாக்குடியர். ஒரே மூச்சில் நான்கு பாட்டில்கள் கூட இறக்குவார். இரண்டு பாட்டில்களை எடுத்து மேலே வைத்தான் மாரிமுத்து. நான்கைந்து கரண்டிகள் கோழிக்கறி வருவலையும் அள்ளி ஒரு தட்டி வைத்து நீட்டினான்.  நாக்கில் எச்சில் ஊற அவைகளை ஒரு கை பார்த்தார் சாமியாடி வீராசாமி.

எதிர்பாராத விதமாக, திடீரென்று ஒரு ஐம்பது ரூபாய் கட்டை எடுத்து சாமியாடி வீராசாமியின் முன்னால் போட்டான் மைனர் சிங்காரம்.  ஒன்றும் புரியாமல் பார்த்தார் சாமியாடி வீராசாமி.  அருகே போய் அவரது காதில் தனது திட்டத்தை ஓதினான் இவன்.  ஒரு பெரிய சிரிப்பு சிரித்தபடி பணத்தை எடுத்து தனது மடியில் கட்டிக்கொண்டார் அவர்.  

‘அதுக்கென்னா செஞ்சுட்டா போச்சு… ‘ என்று கடைவாயில் சிரித்தார் சாமியாடி வீராசாமி.  சொல்லிவிட்டு மறுபடியும் பணக்கட்டை எடுத்து முத்தம் கொத்துவிட்டு அதை மறுபடியும் இடுப்பு மடிப்பில் வைத்து செருகிக்கொண்டார்.

‘கவலைப்படாதே பங்காளி… நீதான் அடுத்த முதல்வன்… ‘ என்று நாக்குழறியபடி இன்னொரு முழு பாட்டிலையும் எடுத்து தனது இடுப்பில் செருகிக்கொண்டு தள்ளாடியபடி நடந்து போனார் சாமியாடி வீராசாமி.

xxxxxxxxx

திருவிழா ஆரம்பமானது. காப்பு கட்டினார்கள்.  யாரும் ஊரைவிட்டு வெளியே போகக் கூடாது என்று அறிவித்தார்கள். ரோடெல்லாம் ஆங்காங்கே போஸ்டர்கள் பளிச்சிட்டன. பிளக்ஸ் போர்டுகள் ஆங்காங்கே உயர்ந்து நின்றன. அதில் சீரும் சிங்கங்கள் என்ற வாசகங்களுடன் வாலிபர்களின் முகங்கள் தெரிந்தன.

சிலர் தங்களது ஓரிரு வயது குழந்தைகளின் போட்டோக்களையும் கொடுத்திருந்தார்கள். தோரணங்கள் தொங்கின. வீடுகளில் பச்சைக் கீற்று பந்தல்கள் கட்டப்பட்டிருந்தன.  ஆங்காங்கே கல் அடுப்பைக் கூட்டி பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். 

மைனர் சிங்காரம் குறித்து வைத்த கெடு அன்றுதான். வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு பாட்டில் சாராயத்தை எடுத்து உள்ளே இறக்கிக் கொண்டான்.  கைத்தடிகள் புடைசூழ கோவிலுக்குப் போனான்.  

பந்தல் போடப்பட்டு அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டு ரேடியோக்கள் காதுகளை கிழித்துக் கொண்டிருந்தன.  சில பேனர்களில் மைனர் சிங்காரம் சிரித்தபடி கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்தான். 

‘மாமோவ்… எல்லாம் நம்ம ஏற்பாடுதேன்… ‘ என்று தலையைச் சொரிந்தான் மாரிமுத்து. அவனைத் தட்டிக்கொடுத்தான் மைனர் சிங்காரம்.  மாரி மாரிதான்… என்று புகழ்ந்தான் இவன்.

சாமி சிலைக்கு அரச்சனை செய்து கொண்டிருந்தார் சாமியாடி வீராசாமி. எதேச்சையாய் மைனர் சிங்காரத்தைப் பார்த்துவிட்ட சாமியாடி வீராசாமி உதட்டோரம் நமட்டுச் சிரிப்புடன் கண்ணடித்தார். மைனர் சிங்காரமும் பதிலுக்கு கண்ணடித்தான்.

சாமியாடி வீராசாமி நீட்டிய விபூதித் தட்டில் நூறுரூபாய் போட்டுவிட்டு எரியும் சூடத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான் மைனர் சிங்காரம். விபூதியை அள்ளி மைனர் சிங்காரத்திற்கு நெற்றியில் பெரிய பட்டை அடித்துவிட்டார் சாமியாடி வீராசாமி.

சாமியை மறுபடியும் ஒருதடவை பார்த்து கும்பிட்டுவிட்டு, ‘செத்தேடா சின்னசாமி… அடுத்தது எனக்குத்தான்டா மாலையும் மரியாதையும்… ‘ என்று உள்ளுக்குள் கர்ஜித்தபடி ஒதுங்கி நின்றான் மைனர் சிங்காரம்.

ரேடியோக்கள் அலறின. கரகம் தூக்கப் போகிறார்கள், எல்லோரும் கோவிலுக்கு வந்து சேரவேண்டும் என்று ரேடியோக்கள் முழங்கின.

கூட்டம் முட்டித் தள்ளியது. பொங்கலையும் மாவிளக்கையும் கொண்டுவந்து திண்ணையில் பரப்பி வைத்துவிட்டு சாமி உத்திரவுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். மைனர் சிங்காரம் முன்வரிசையில் நின்றிருந்தான். எதிரே சின்னச்சாமி ஈரமான காவி வேஷ்டியில் நின்றிருந்தார். காவித் துண்டையும் இடுப்பில் கட்டியிருந்தார் அவர்.

‘இதாண்டா நீ கடைசியா கோவில் வாசல்ல நிக்கறது… நல்லா சாமியை வேண்டிக்கோ… ‘ சின்னச்சாமியைப் பார்த்து மனதுக்குள் கர்ஜித்துக் கொண்டான் மைனர் சிங்காரம்.

‘இந்தப்பா சாமியாடப் போறாங்க… பொட்டிய நிறுத்துங்கப்பா… ‘ என்று ஒரு பெரியவர் குரல் கொடுக்க, ரேடியோ வாளிகள் அலறலை நிறுத்தின. மேளதாளங்கள் முழங்கின. உடுக்கைச் சத்தம் விண்ணை முட்டியது. குலவைச் சத்தம் அதிர்ந்தது. ஐந்து பேர் சுற்றிலும் நின்றுகொண்டு உடுக்கை அடித்துக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார்கள். சாமியாடி வீராசாமி மெல்ல ஆட ஆரம்பித்தார். 

நுனியில் எலுமிச்சை செருகிய அரிவாளை ஒருவர் எடுத்து வர, அதை இரண்டு பேர் வாங்கி கூர் மேல்நோக்கிப் பிடித்துக் கொள்ள, கூட்டம் சற்றே விலகி நின்றது. குலவைச் சத்தம் முழங்க, நாக்கைத் துருத்திக்கொண்டு சட்டென சாமியாடி வீராசாமி அரிவாளின் மேல் ஏறி நிற்க, நீர் சொட்டும் உடையில் கைகளைக் கட்டிப் பக்திப்பரவசமாய் சின்னச்சாமி நின்றிருக்க, நமட்டுச் சிரிப்புடன் மைனர் சிங்காரம் காத்திருக்க…

‘டேய்…சின்னச் சாமி…’ என்று சாமியாடி வீராசாமி சாமியாடி கர்ஜிக்க… அந்தநேரம் பார்த்து திடீரென்று ஊஞ்சலாடி ஊஞ்சலாடி முறிந்து தொங்கிக்கொண்டிருந்த அரசமரக்கிளை ஒன்று முறிந்து மைனர் சிங்காரத்தின் தலையில் விழ… கூட்டம் சிதறியது. ஒருநொடி செய்வதறியாது தடுமாறிய வீராசாமி வாங்கிய பணத்துக்கும் ஏற்றிக்கொந்த் பாட்டிலுக்கும் விசுவாசமாய் இருக்க நினைத்தை அரிவாளை ஓங்கிக்கொண்டு குதிக்க, கவனம் பிசகி அவர் விழுந்து முட்டி உடைந்து ரத்தம் சிந்தியது.

அடிக்கட்டை தலையில் விழுந்ததால், மைனர் சிங்காரம் அப்படியே அலறிக்கொண்டு கீழே விழுந்தான். ரத்தம் கசிந்தோடியது. அவனைச் சுற்றி குழுமியிருந்த கைத்தடிகளுக்கும் லேசான காயங்கள், சிராய்ப்புகள். பயத்தில் அலறிக்கொண்டு கூட்டம் ஒதுங்க கைத்தடிகளும் பீதியில் சிதறி ஓடினர்.

சாமியாட்டம் நின்றது. பெரியவர் ஒருவர், கரகத்தை தூக்காமல் விட்டால் சாமிக் குத்தமாகுமென்று சொல்ல, களேபரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, மாலை மரியாதைகளுடன் பெரும்பங்காளி சின்னச்சாமியின் தலையில் கரகம் ஏறி அவரை அலங்கரித்தது.  திருவிழா தொடர்ந்தது… முடிந்தது…

மைனர் சிங்காரம் மட்டும் இன்னும் படுக்கையிலேயே அதுவும் கோமாவிலேயேதான் இருக்கிறான்.

சாமியாடி வீராசாமி நொண்டியாடி வீராசாமியாகி ஊருக்குள் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருக்கிறான்.

அரசமரத்தடி அம்மனுக்குத் தெரியாதா யார் எப்படி என்று.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெண்ணைத் தேடி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    மருமகள் மஞ்சுளா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு