in

அழைத்தான் அம்பலத்தான் (இறுதிப் பகுதி) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்...(இறுதிப்பகுதி)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

செந்தமிழின் பயணம்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

ரண் மேல் ஏறிய செந்தமிழ், அங்கு ஏகத்துக்கும் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மேலும், அங்கு சிறிய அறை இருப்பதையும் பார்த்தாள். அதற்குச் சாவியைத் துழாவ நினைத்து பரண் பூராவும் தேடினாள், கிடைக்கவில்லை.

நேரே அப்பாவிடம் சென்று, “அப்பா.! பரண் மேல ஒரு ரூம் இருக்குல அதோட சாவி குடுங்க… இப்பவே” என்றாள்.

கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி. அதைக் கலைத்துக் கொண்டு, “சரி வா எடுத்துத் தரேன்” என்றழைத்து, சாமி செல்ஃபிற்குப் பக்கமாய் இருந்த தனது தந்தை பழனிசாமியின் போட்டோவின் பின்னிருந்து சாவியை எடுத்தார். 

அதைப் பார்த்த செந்தமிழ், “பா..! எங்க வெச்சிருக்க..! ஏதோ சீக்ரெட் போலேயே? அப்போ அதுக்குள்ள என்ன இருக்கு?” என்றாள்.

கிருஷ்ணன் பதிலேதும் சொல்லாமல், சிறுவயதில் இந்த ரகசியத்தின் மேல் தனக்கிருந்த ஆர்வத்தை நினைத்து சிரித்துக் கொண்டே நடந்தார். அப்படியே பரண் மேல் ஏறினார். தமிழையும் மெல்ல ஏற்றி விட்டார். 

அவள் பார்க்க, பரண் மேல் உள்ள அறையிலிருந்து அந்த ஏடுகள் எடுக்கப்பட்டன. அதைப் பார்த்து அதிசயித்தாள் அவள்.

“வாவ்..! பழங்காலத்து சுவடி.! இதெல்லாம் பாக்காமயே போயிடுவனோன்னு நினைச்சேன். செம்ம..!” என்று தொட்டுப் பூரித்தாள். 

“ஹ்ம்ம்.. சரி உங்கம்மாக்கு இதை பத்தி ஏதுமே தெரியாது. நீயும் சொல்லாத. இதுல இருந்த ஒரு சில வார்த்தைகளோட அர்த்தம் புரியலன்னு அதுக்கப்பறம் இதை நான் தொடவேயில்ல” – இது கிருஷ்ணன். 

செந்தமிழ் தடுமாறித் தடுமாறி படிக்கலானாள். அவளை நிறுத்திய கிருஷ்ணன், “எப்படி அந்தக் காலத்து தமிழ் எழுத்துகள படிக்கிறே?” என்று வியந்து கேட்டார்.

“இதுவா… நான் இப்போ குட்டி குட்டி புக்ஸ்லாம் படிக்கல. ஹிஸ்டாரிக்கல் புக்சுக்கு தாவிட்டேன். அதனால கல்வெட்டு எழுத்துகள் பத்தி, கூகுள்ள பாத்து தெரிஞ்சி வெச்சிக்கிட்டேன். நம்ம இருக்குறது 2020னாலும் நம்ம நாகரிகம் 2000 வருசத்துக்கும் மேல பழமையானதுல்ல” என்றாள் சாதாரணமாக. 

கிருஷ்ணன் வியப்பிலிருந்து மீளாதவனாய், தான் தேடிய சொற்களைப் பற்றியும், தனக்கு இந்த ஏடுகள் எப்படி கிடைத்தது என்பது பற்றியும் சுருக்கமாக கூற, செந்தமிழ் மேலும் உற்சாகமடைந்தாள். 

“சரி சரி… உங்களுக்குப் புரியாத லைன் எடுங்க, முடிஞ்சா கண்டுபிடிக்க முடியுதான்னு பாப்போம்” என்று செந்தமிழ் சொல்ல, கிருஷ்ணன் ஏடுகளைக் கும்பிட்டு அவள் கையில் கொடுத்தார். அவளும் அதைப் பயபக்தியோடு வாங்கி படிக்க ஆரம்பித்தாள். 

“கண்ணன் கையிலெடுத்த ஏடு இது

அவன் இளவல் எழுதியதாம்

தான் இளவல் என்ற சத்தியம்

அவனும் அறிய வாய்ப்பாம்”

“இளையவன் காண்பட கடல்நீர் சூழ்ந்திட 

பஞ்சாட்சர நாயகன் சரண் அடைந்தே

உலகமிது நீரில் அழிய

அரி-அரன் பெயரைக் கொண்டவன்

தன் ஆருயிர் சேயை நீட்ட”

“இளவல் பிறந்த ஊர் புறப்பட

கண்ணனுக்குப் பிறந்ததோ மகாலட்சுமிகள்

அதில் ஈராவதவள் பிறக்க, 

சுபிட்சம் உடன் பிறக்கும்”

என்று படித்துக் கொண்டிருந்த அவளை, மெல்ல நிறுத்தினார் கிருஷ்ணன்.

“இதுக்கு அப்பறம் தாம்மா புரில” என்றார். அவளும் ஒரு தலையசைப்போடு படிக்கலானாள்..! 

“நான்கு எட்டால் வந்த சேயவன்

மாயவன் பிடியினில் விடுபட

திசையது நான்கும் மலையாகியிருக்கும்

இடமதில் வசிப்பான்..!”

“கண்ணனுக்குக் சூரியன் துணையால் தொழில் அமைய,

அன்னையாம், சிவனின் இடதுபுறம் கொண்டவள்

தன் கர்மக் கணக்கைத் தீர்த்து, சொர்க்கம் போவாள்”

“கண்ணென காப்பாளாம் உயர் தமிழையும் 

அன்பையும் ஒருத்தி

அவளே மாதவன் விளைத்த திருமலராம்…!”

“பஞ்ச பூதமதில் அசையாத நிலத்திற்கோர்

போர் முடிந்து, அசையும் நீரில் அழிவுதொடங்கி

பரந்து கிடக்கும் காற்றிலும் வரலாம் வரலாமே..!

அது நிகழ்த்தும் மாற்றம் அரிதாமே..!”

முழுப்பாடலையும் படித்தவள், அப்பா கூறிய வரிகளுக்குச் சென்றாள்.! 

“பாடலில் நான்கு எட்டால்  வந்த சேயவன்… பாடலில் நான்கு எட்டால் வந்த சேயவன்…” என்று ஒன்றுக்கு இரண்டு முறை அந்த வரிகளைப் படித்தாள்.

கிருஷ்ணன் அவள் சிந்தனையை மேலும் தூண்டுபவராய், “மா.. எட்டுங்குறது சூட்சம எண். அப்படி ஏதாவது யோசிக்கணுமா?” என்றார். செந்தமிழ் உடனேயே கீழிறங்கி, தனது கைபேசியை எடுத்து வந்தாள். 

ஏதோ ஒரு கோப்பைத் திறந்து, சில வார்த்தைகளை அச்சிட்டு தேடினாள். அதைப் பார்த்து அவள் விளக்கத் தொடங்கினாள்.

“அப்பா..! இதோ பாருங்க. இந்த புக் நேம், ‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ என்னோட ரீசண்ட் ரீட். எனக்குப் பிடிச்ச ஆத்தரோட புக். இதுல நான் நிறைய கருத்துகள் வித்தியாசமா படிச்சிருக்கேன். அதுல நீங்க கேக்குறதுக்கும் பதில் இருக்கு. அதாவது இன்னிக்கு செக்யூரிட்டி சிஸ்டம் நல்லா வளர்ந்துருச்சு இல்லியா?

ஆனா, இந்த விஞ்ஞான காலத்துக்கு முன்னாடி, நம்ம தமிழர்கள் குறியீடுகள்’ளையும் எண்கள் சார்ந்த விஷயங்களையும் தான் இந்த செக்யூரிட்டி சிஸ்டம மெயின்டெய்ன் பண்ணிருக்காங்க. அதாவது வார்த்தைகள்ல வித்தைய வெச்சிருக்காங்க. அதுபடி இப்போ இந்தப் பாடலைப் படிப்போம்” என்று சொல்லி, “பாடலில் நான்கு எட்டால் வந்த சேயவன்..”னா, பாடலோட வார்த்தைகள்ல “நாலு×எட்டும்= முப்பதிரண்டாவது வார்த்தைனு அர்த்தம். அப்டி வெச்சி படிங்க.!” என்று வார்த்தைகளை எண்ணத் தொடங்கினாள். 

கிருஷ்ணனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. இன்று இந்தப் பாடலுக்கு முழுவிடையும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. இருவரும் ராமலிங்கத்தின் கதைக்குள் போய்த் திரும்பி வந்தார்கள். கிருஷ்ணன் நினைத்துக் கொண்டான்.

அதற்குள் செந்தமிழ் எண்ணி முடித்து விட்டு, “அப்பா.. ராமலிங்கம் அங்கிளோட சன் தான் அந்த நான்கு எட்டால் வந்த சேய்.. போலருக்கே” என்று வியப்படைந்தாள்.

கிருஷ்ணனிடம் ஆமோதிப்பு. ‘ஆமா… மா..! ராமலிங்கத்தோட சொந்த மகன், சதுரகிரியில இருக்கான் போல’ என்று சிந்தித்தார். 

“ஓகே..! என்னப்பா யோசனை? அடுத்த ஏட்டை திருப்புங்க..!” என்றாள் தமிழ்  உற்சாகமாக.

“கண்ணனுக்குக் சூரியன் துணையால் தொழில் அமைய,

அன்னையாம், சிவனின் இடதுபுறம் கொண்டவள்

தன் கர்மக் கணக்கைத் தீர்த்து, சொர்க்கம் போவாள்”

என்ற வரிகளைப் படித்த கிருஷ்ணன், “என்னமா இது? சிவன், சூரியன்னு கடவுள் பெயரெல்லாம் வருது” என்றார்.

அதற்குச் செந்தமிழ், “ப்பா… பொறுமையை பாருப்பா. ‘கண்ணனுக்குச் சூரியன் துணையால் தொழில் அமைய’ன்னா உனக்கு வேலை கிடைச்சது தான். பொதுவா ஜாதகத்துல அரசாங்க உத்தியோகத்துக்கு சூரியன் தான் வலுவா இருக்கணும்னு ராதா பெரியப்பா சொல்லி கேட்டிருக்கேன். அப்புறம் இப்படியும் எடுத்துக்கலாம். உனக்கு சூரியன் ஆட்சியில தான வேலை வந்துச்சு..” 

அடுத்து, ‘அன்னையாம் சிவனின் இடதுபுறம் கொண்டவள் தன் கர்ம கணக்கைத் தீர்த்து, சொர்க்கம் போவாள்’ன்னா, பாட்டி பேரு பார்வதி தானே, உங்கம்மாவை தான் அப்டி சொல்லிருக்காங்க. நீ கூட அடிக்கடி வருத்தப்படுவியே எங்கம்மாக்கு ஒரு வாய் சோறு போட முடியலியேன்னு. அதாவது அவங்க கடன் வைக்காம போய்ட்டாங்கன்னு சொல்ல வராங்க..” என்றாள். 

அடுத்தத்த வரிகளை படித்தவள், பூரிப்படைந்தாள்.

“கண்ணென காப்பாளாம் உயர் தமிழையும் 

அன்பையும் ஒருத்தி

அவளே மாதவன் விளைத்த திருமலராம்…!”

இந்த முறை கிருஷ்ணன் விளக்கினான். 

“வாவ் டா கண்ணு.! இதுல உன்னபத்தியும் இருக்கே. ‘கண்ணென காப்பாளாம் உயர் தமிழையும் அன்பையும் ஒருத்தி..’ன்னா, தமிழையும் அன்பையும் ஒருத்தி ரொம்ப பெருசா மதிப்பாளாம். அடுத்து, ’அவளே மாதவன் விளைத்த திருமலராம்’ன்னா, மாதவன்’கறது கிருஷ்ணனோட பேர். ‘திரு’ங்குறது எப்பவுமே முதன்மை, மரியாதையை குறிக்கும். மலர்ங்குறது பெண்மையைக் குறிக்கிற விஷயம். அப்போ என்னோட முதல் பெண்ணான உன்னைப் பத்தி தான் கண்ணு சொல்லிருக்கு” என்று உச்சி மோந்தார் கிருஷ்ணன். 

அவளிடமும் வியப்பு கலந்த தீர்க்கமானதொரு ஆமோதிப்பு..! அடுத்த வரிகளைப் படித்த நொடி, இருவர் கண்களிலும் அவ்வளவு அதிர்ச்சி..! 

“பஞ்ச பூதமதில் அசையாத நிலத்திற்கோர்

போர் முடிந்து, அசையும் நீரில் அழிவுதொடங்கி

பரந்து கிடக்கும் காற்றிலும் வரலாம் வரலாமே..!

அது நிகழ்த்தும் மாற்றம் அரிதாமே..!”

“அப்டின்னா, முன்ன பிரிட்டிஷ் காலத்துல நம்ம தேசத்துக்காக போர் வந்தது. அப்புறம், உங்க காலத்துல பேராழி அலை வந்து நீர் உயிரைக் குடிச்சது. அடுத்து, நம்ம சுவாசிக்கிற காற்றுலயும் பிரச்னை வரும்னு சொல்லுது இந்த வரிகள்..” என்று அந்த ஏட்டுக் கட்டையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தமிழ். 

பின்பு, அவளிடமிருந்து அதை வாங்கிய கிருஷ்ணன், அவளைச் சமாதானப்படுத்தி கீழிறக்கினார். அப்போது அந்தச் சாவியை அதே இடத்திலே வைக்கும்படி சொன்ன செந்தமிழை ஒரு பார்வை பார்த்து, கிருஷ்ணன் வேறொரு முடிவெடுத்தார். 

செந்தமிழ், தன் வாழ்வின் முக்கியமான நாளைப் பற்றி எழுத புறப்பட, கிருஷ்ணன் அந்த அறையின் சாவியைச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் செந்தமிழின் போட்டோவின் பின் வைத்தார். அந்த நிமிடம் கிருஷ்ணனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை.

மனதில் இந்த வார்த்தைகள். ‘எங்க என் அப்பாவைப் பத்தி இந்த உலகம் தெரிஞ்சிக்காம போயிடும்னு நினைச்சேன். ஆனா அப்டி இல்ல, இன்னொன்னு. எங்க என் அண்ணனோட ஜோதிடக்கலையும் முடிஞ்சிடுமோன்னு நினைச்சேன். அப்படியில்ல; எங்க என்னோட கதை எழுதுற பழக்கமும் முடிஞ்சிடுமோன்னு நினைச்சேன். அதுவும் அப்படியில்லை…” இவை எல்லாவற்றிற்கும் பதிலாக, கிருஷ்ணன் செந்தமிழின் முகத்தைப் பார்த்தார்…

– செந்தமிழின் பயணம் தொடங்கட்டும்..! 

******************** நிறைவு ************************

யாரும் இவ்வுலகத்தில் நிரந்தரமில்லை. நாம் சாஸ்வதமில்லை என்றாலும் நம் செயலுக்கு சாஸ்வதத்தன்மை உண்டு. எப்படியெனில், திருவள்ளுவர் இல்லை ஆனால், திருக்குறள் படிக்கும் போதெல்லாம் அவரை நாம் நினைக்காமலா இருக்கிறோம்?

என் வரையில், நாம் இனி புதிது புதிதாக படிப்போம்..! கற்றுக் கொள்வோம்..! அதில் வெற்றி கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து பயணிப்போம். அந்தத் தொடர்வையே அடுத்த தலைமுறைக்குத் தொடக்கமாய் தருவோம்….! அவர்களின் மரபணுக்களில் இருப்பதும் நாம் தானே…!

*******************நன்றியுரை *******************

இத்தனை நாள் என் வளர்ச்சிக்குத் துணையாயிருந்த பெற்றோருக்கும் எனது குட்டி விமர்சகருமாகிய என் தங்கைக்கும் எனது நன்றிகள் கூற கடமைப்பட்டிருக்கிறேன். எனது கனவைத் தனது என நினைப்பவற்கு என் அன்பு கலந்த நன்றிகள். எனது உழைப்பிற்குத் தூண்டுகோளாய் இருக்கின்ற எனது தோழமைகளுக்கும் நட்பின் வணக்கங்கள்.

என்னைப் புத்தகம் படிக்கத் தூண்டிய “இந்தியாவிற்கான திறமையின் தேடல்” என்ற நிறுவனத்திற்கும் எனது எழுத்துலக ஆர்வத்தைச் சுட்டிக்காட்டிய “ழகரம்” என்ற மாதாந்திர நூலுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்த ஊரடங்கில், பல ஊர்கள் மூடி இருந்தாலும், என் புத்தக உலகம் எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருந்தது. அதற்குத் துணையாயிருந்த இணையத்தள புத்தகங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் என அனைத்திற்கும் பின் இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..! 

புத்தக வாசிப்பு குறைந்து வரும் இக்காலகட்டத்திலும் கூட, இ-புத்தகம் வாசிக்க வந்த, இந்த சஹானா தளத்தின் வாசகர்களுக்கும் என் பணிவு கலந்த நன்றிகள்..! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விதை (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 17) – ✍ விபா விஷா, அமெரிக்கா