அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
நடராஜன் வந்தான்
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு
மீண்டும் பரண் மேல் போய் உட்கார்ந்து கொண்டான் கிருஷ்ணன். அப்போது “திசையது நான்கும் மலையாகியிருக்கும் இடமதில் வசிப்பான்..!” என்கிற வரி புரிந்து விட்டது.
“யாரோ சதுரகிரியில இருக்காங்கன்னு புரியுது. பாடலில் ‘நான்கு எட்டால் வந்த சேயவன்’னா..?’ புரிலேயே”
அந்த நான்கு வரியை மனதில் பதிய வைத்துக் கொண்டு, மற்ற ஏடுகளை எல்லாம் பழையபடி பரண்மேல் இருக்கும் அறையிலேயே பத்திரப்படுத்தினான்.
மனதில் அசைந்தபடியே இருந்தது வார்த்தைகள். ஆனால், விளக்கம் பிடிபடவில்லை. நூல்கள், கதைகள் என அதிகம் படிக்கத் தொடங்கினான். தான் வேலை செய்யும் இடத்திலிருக்கும் தமிழாசிரியரிடம் கேட்டுப் பார்த்தான், வேலைக்காகவில்லை. மனதில் அசைபோடுவது நின்று போனது, அந்த நினைவும் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று போனது.
கிருஷ்ணனின் மனதில் ஏக மாற்றங்கள். அவன் மனம் மட்டுமா? உலகிலும் தான் எத்தனை (ஏ)மாற்றங்கள்..! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று வழிபட்டவர்கள், இன்று அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளுகிறார்கள்.
சாதாரணமாக ஆற்றிலும் நதியிலும் இருந்த நீர், இப்போது பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைப்பட்டு விட்டது. காற்று கூட நச்சுத்தன்மை கலந்து, கேட்பாரற்று இருக்கிறது. கடவுளின் பக்தி போய், நாமே கடவுள் என்கிற நிலை உருவாகி விட்டது.
எங்கும் எந்திரம்…! துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சாப்பாட்டை வீணாகாமல் வைக்க, உடனுக்குடன் செய்திகள் பார்க்க, தொலைவில் இருப்பவரை அழைக்க, கணக்கு போட…. ஏன்? ஒருவன் கணக்கு முடிந்தால் கூட, எரிக்கும் இயந்திரம் வந்து விட்டது. சில நொடிகள் தான். உடலைச் சாம்பலாக்கி சொம்பில் கொடுத்து விடுகிறார்கள்.
இப்படி உலகமே இயந்திரமயமாக, புதிதாக ஸ்மார்ட் போன் என்று ஒன்று வந்தது. உண்மையில் அதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. பயன்படுத்துபவரைப் பொறுத்தே அது பயன்படும்.
ஸ்மார்ட் போன் காலத்திலும் பெற்றோரின் பாசமோ நேசமோ மாறிவிடவில்லை. எட்டு வயதில் சதுரகிரி மலைக்கோயிலைப் பற்றிக் கூறிய மகளுக்கு, இப்போது முழுமையாக இருபத்தோரு வயது.
அவளின் வரவுக்காக வெளியே பார்த்தபடி இருக்கிறார் கிருஷ்ணன். இளையவள் பலூன்கள் ஊதி, வீடெல்லாம் வண்ணங்கள் படரச் செய்கிறாள்.
லட்சுமி சமையல்கட்டில் எல்லோருக்கும் பிடித்ததைச் செய்து, தன் கைப்பக்குவத்தைக் காட்டுவதில் முனைந்து இருக்கிறாள்.
சதுரகிரி..!
சில அத்தியாயங்களுக்கு முன் லட்சுமி கேட்ட கேள்விக்குப் பதிலாக, நாம் சந்திக்கத் தவறிய தம்பதியர், யமுனா ராமலிங்கத்தை சந்திக்க வந்திருக்கிறோம்.
யமுனாவின் வெகுநாள் ஆசையாகிய சதுரகிரி பயணம் இப்போது தான் நிறைவு அடைய இருக்கிறது. இருவரும் ஒன்றாக மலை ஏறுகின்றனர். நாய் ஒன்று அவர்களுடனே வந்தபடியே இருக்க, அவர்கள் கோயிலில் சென்று தரிசனம் முடித்து வருகிறார்கள். அப்போது யமுனா, எதிரில் நிற்கும் இருவரைப் பார்த்து அதிர்ச்சி கொள்கிறாள்.
அவர்களிடம் சட்டென்று, “எம் பைய எப்டி இருக்கான்? நல்லார்க்கானா? என்ன படிக்கிறான்? என்ன பத்தி சொல்லிருக்கீங்களா?” என்று கேட்கும் போதே அவளுக்கு அழுகை வந்து விட்டது.
அவள் பார்த்தது, பேரழிவில் படகில் பிள்ளையை வாங்கிக் கொண்ட தம்பதியர்களைத் தான். அந்த வளர்ப்புத்தாய் சலனத்துடனே சொன்னாள்.
“அவன் சித்தனா ஆகிட்டான். அவனுக்கு அது தான் எண்ணம்னு சொன்னான். நாங்க கொஞ்ச நாள் அதட்டினோம். அப்புறம் எங்களால முடில. அவனும் நிறைய பேருக்கு நல்லது பண்ண ஆரம்பிச்சான். தியானத்துல ஆழ்ந்தான். நாங்க எதுவும் கேக்கல” என்றாள்.
யமுனாவிற்குக் கோவம் பற்றிக் கொண்டு வந்தது.
“ஏன் நீங்க அவன கண்டிக்கலையா?” – இது யமுனா
“ஏன்’மா கண்டிக்கனும். உங்க எல்லோருக்குமே இருக்குற புரியாத விஷயம் இது. எம் பைய டாக்டர், இன்ஜினியர் என்கிறது போல, எம் பைய ஒரு சித்தன். சொல்லப் போனா, அவன்னு இல்ல, நாமளும் அதுக்குதா இவளோ கஷ்டப்படுறோம். இந்த பூலோக வாழ்க்கை முடிஞ்சதும் இறைவன் அடி சேரத்தான் இந்தப் பிறப்பே. அத மறந்துட்டு உலக வாழ்க்கையில மூழ்கிடுறோம். ஒரு சிலருக்குத் தான் அந்த நியாபகமே இருக்குது.
இப்டிலாம் எங்களுக்கு எடுத்து சொன்னது எம்மகன் தான். எந்தப் பெற்றோருக்கு இது கிடைக்கும்? நீங்க நினைக்கிற மாதிரி, சொந்தப் பிள்ளை இல்லங்குறதுனால, இப்டி விடல. அவனுக்கு நாங்க முழு சுதந்திரத்தை கொடுத்தோம். இன்னொன்னு, உங்க கணவன் ராமலிங்கத்துக்கும் இந்த எல்லா விஷயமும் தெரியும். நாங்க எங்க பையன நம்புனோம். உங்க கணவர் ஜாதகத்தை நம்பினார். அவர்கிட்டயும் நீங்க கேட்டு தெரிஞ்சிக்கலாம்…” என்று நிறுத்தினார்.
வளர்ப்புத்தாயின் விளக்கம் யமுனாவை என்னவோ செய்தது. எப்போதும் சில விஷயங்கள் உண்மையானாலும் அதை ஏற்றுக் கொள்ள மனமுதிர்ச்சி தேவையாய் இருக்கிறது. யமுனா ராமலிங்கத்திடம் கோபமோ வருத்தமோ படவில்லை. தன் பிள்ளை மேல் அக்கறை கொண்டு, இத்தனை தூரம் தனக்குத் தெரியாமலே கஷ்டப்பட்டிருக்கிறாரே என்கிற எண்ணம் தான் அவளிடம் மேலோங்கி இருந்தது. ராமலிங்கம் அவளின் மனக்கவலையைப் போக்க நினைத்தான்.
வீட்டிற்குச் சென்றபின், யமுனா சாப்பிடவே இல்லை. ராமலிங்கம் அவள் நிலையைப் புரிந்து கொண்டு, கடலலை வளர்ந்த காப்பகத்தின் வாயிலாக ஐந்து வயது நிரம்பிய ஆண்குழந்தையைத் தத்தெடுத்தான். அவனை வீட்டிற்கும் கூட்டி வந்து நிறுத்தினான்.
யமுனாவைப் பார்த்ததும் அவன், “அம்மா..” என ஓடிச்சென்று கட்டிக்கொள்ள, யமுனா முதலில் ஒன்றும் புரியாதவள் போல் இருந்தாள்.
ஒரு பிள்ளை அம்மா என்றழைக்கும் போது எந்தத் தாயால் தான் அதை மறுக்க இயலும்.? “உம் பேரு என்னடா கண்ணு?” என்றாள்.
“நடராஜ்” என்று நிமிர்ந்து சொன்னான் அவன். யமுனா அவனை அணைத்துக் கொண்டு, விழிநீரில் ராமலிங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்தாள்.
பரங்கிப்பேட்டை பீச்..!
டாக்டர் பிரம்மாவின் கார், பரங்கிப்பேட்டை பீச்சிற்குப் பறந்து கொண்டிருந்தது. காரில் உடன் கடலலையும் இருந்தாள். அவர்களைப் பின்தொடர்ந்து ஒரு புல்லட் வண்டியும் வந்தது. கடலலைக்கு அன்று பிறந்த நாள். இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக, பிரம்மா இங்கே கூட்டி வந்திருந்தான்.
காரில் இருந்து இறங்கிய கடலலை, “சூப்பர்..! டெக்கரேஷன்’லாம் ரொம்ப நல்லாருக்கு. எங்க என்னோட கிப்ட்?” என்று பளிச்சென்று கேட்டாள்.
அவளுக்குப் பதில் சொல்வது போல், புல்லட் வண்டியின் சப்தம் அருகில் கேட்டது. அதிலிருந்த இறங்கிய இளைஞன், நேரே கடலலையிடம் வந்து, “ஹாய் கா.. ஐ அம் அர்ஜூன். சினிமாட்டோகிராஃபர்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிரம்மாவும் அர்ஜூனும் மட்டும் கண்ணடித்துக் கொண்டனர்.
கடலலை பொறுமை தாங்காமல், “பாக்கவே காமெடியா இருக்கான். ஆன இந்த சுருட்ட முடிய தா, எங்கேயோ பாத்திருக்கேன்..” என்று அர்ஜூனைப் பார்த்துக் கிண்டலடித்தாள்.
அர்ஜூன் மெல்ல சிரித்து, “என்ன நியாபகம் இல்லியா கா..? எனக்கு உயிர் கொடுத்த தெய்வம்கா நீங்க..!” என்றான்.
கடலலையின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அதைப் புரிந்து கொண்ட அர்ஜூன், “சரி. நீங்க டாக்டர்..! எத்தனை உயிரைக் காப்பாத்திருப்பீங்க.! இப்போ நான் ஒன்னு கேக்குறேன். அப்போ நா யாருன்னு சட்டுன்னு சொல்லிடுவீங்க பாருங்க..! உங்கள நா கடலனு கூப்பிடலாமா? இப்போவும் டாக்டர் வேலை தான் பாக்குறீங்களா… இல்ல சித்தர்கள்ல பெண்கள் இருக்காங்களான்னு தேடிட்டு இருக்கீங்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
கடலலையின் கண்களில் அதிர்ச்சி, சந்தோஷம் இரண்டும் ஒன்றாகத் தெரிகிறது. சட்டென்று கத்தத் தொடங்கிவிட்டாள்.
“ஓ.. நீயாடா..? அப்போ ஒல்லியா.. ஒன்னும் சாப்பிடாத மாறி இருந்தே..! இப்போ என்ன ஜிம்லாம் போறியா? என்ன கடலன்னு இப்போ வரிக்கும் யாருமே கூப்பிட்டதே இல்லடா..! பரவால்லயே..! இந்த புல்லட் ஒட்டுற அளவுக்கு தெம்பு இருக்கு ஒனக்கு..!” என்று கிண்டல் அடித்தாள்.
மூன்று பேரும் சிரித்து ஓய்ந்த பின், பிரம்மாவின் பக்கம் திரும்பிய கடலலை, “தேங்க்ஸ் டா.. எங்க கலர் பேப்பர்ல எதையாவது மடிச்சிட்டு வந்துருவியோனு நினைச்சேன். நிஜமாவே இது விலைமதிப்பிலாத கிப்ட் தான். எனக்கு உறவுன்னு சொல்லிக்க உன்னைத் தவிர யாருமில்லன்னு நினைச்சேன்..” என்று வார்த்தையை முடிக்கும் முன்
அவளைத் தடுத்த பிரம்மா, “ஆஹான்..! இனி நீ அப்படி சொல்லவே கூடாது. நம்மள நம்பி இன்னொரு உயிர் வரப்போவுது. உன்னோட ஸ்கேன் ரிப்போர்ட் வந்துருச்சு” என்றான் கடலலையின் வயிற்றில் கை வைத்தபடி.
அவள் விழிகள் ஆனந்த கண்ணீரை வழிய விட்டன. “தேங்க் யூ சோ மச்..! இந்த நாள நான் மறக்க மாட்டேன். கங்க்ராட்ஸ் வீ ஆர் பேரண்ட்ஸ் நௌ..!” என்றாள் அதே கலங்கிய கண்களோடு.
அர்ஜூன் நடுவில் புகுந்து, “சரி சரி..! செண்டிமென்ட் போதும். போட்டோ ஷூட்க்கு இந்த ஸ்பாட் ஓகே..! ரெடி..” என்று பரபரத்தான்.
கடலலையும் பிரம்மாவும் விதவிதமாக போஸ் கொடுக்க, அதைக் கேமராவின் பிளாஷ்கள் ஒவ்வொன்றாக தனக்குள் விழுங்கியபடி இருந்தன. இந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்த சூரியன், அன்று வெகுநேரம் கழித்து தான், கடலினுள் மறைந்தான்.
குடியேற்றம்…..
தனது மகளை வரவேற்கத் தயாராய் இருந்த கிருஷ்ணன், வண்டியை எடுத்துக் கொண்டு பஸ் நிலையத்திற்குச் சென்றார். அப்போது சென்னையிலிருந்து நீல நிற வண்டி ஒன்று நின்று கொண்டிருக்க, அதில் ஒவ்வொருவராக இறங்கிய வண்ணம் இருந்தனர்.
அதில் தன் மகள் வருகிறாளா என்பதை எதிர்பார்த்தவருக்கு ஒரு போன் கால் வரவே, எடுத்து அட்டெண்ட் செய்கிறார்.
“பா.. நான் தான்பா. நான் வீட்டுக்கு வந்துட்டேன். நீங்க எங்க சுத்திட்டு இருக்கீங்க?” என்று ஒரே அதட்டல்.
மகளின் குரலுக்கு மயங்காத தந்தை தான் உண்டா? கிருஷ்ணன் நேரே கிளம்பி வீட்டை அடைந்தார்.
எல்லோர் வீட்டையும் போலவே, அன்று ஒரே குதூகலம். பின்பு சமரசம். செந்தமிழ் அவள் பாட்டுக்கு எதையாவது போனில் தட்டிக் கொண்டே இருப்பாள்.
இதைக் கவனித்த அம்மா லட்சுமி, “என்னடி ஆவுன்னா அத்த தட்டிட்டே இருக்க?” என்று எரிச்சல் காட்டினாள்.
“மா..! உனக்கு ஒன்னும் தெரியாது போம்மா. நான் ஒரு முக்கியமான வேலை பண்ணிட்டு இருக்கேன். நீ வேணா பாரு, ஒரு நாள் இந்த உலகமே என்ன திரும்பிப் பாக்கும்” என்றாள்.
அம்மாவிற்கு இன்னும் கோவம் அதிகமாகி, “நீ ஒன்னு பண்ண வேணாம். முதல்ல சாமான் எவ்ளோ கிடக்கு, போய் அத தேய். அப்ரோ உலகத்தைத் திருப்பி போடலாம்..” என்றாள் கிண்டலாக.
தமிழும் போனை பொத் என்று வைத்துவிட்டு, வெடுக்கென்று எழுந்து சென்றாள். சாமான் கழுவ செல்லவில்லை. புத்தகங்களை அடுக்கி வைக்கிறேன் என்று எழுந்து அறைக்குச் சென்று விட்டாள். அவள் அப்பாவின் அறை தான் அவளுக்குப் புத்தக அறை.
அங்கே போய் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு, “ரகசியம் பரம(ன்) ரகசியம்” என்கிற இந்திரா சவுந்தர்ராஜன் அவர்களின் நூலை எடுத்து வைத்துக் கொண்டாள். படிப்பதும் அடிக்கோடிடுவதும் என்றே இரண்டு மணி நேரம் கழித்தாள். கிட்டத்தட்ட பாதி புத்தகம் படித்தாயிற்று. அப்போது “பொத்” என்று ஒரு சத்தம். பரண் மேலிருந்து ஒரு புத்தகம் கீழே விழுந்தது.
எடுத்தவள் கையில் “அர்த்தமுள்ள இந்துமதம்” எனும் கண்ணதாசனின் புத்தகம்.
“ஓ..! அப்பா மேல கூட நிறைய புக்ஸ் வெச்சிருக்காரு போலேயே..” என்று உடனேயே மேலே ஏறி பார்க்கலானாள்.
(தொடரும் – வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings