அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஒரு கையெழுத்து
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு
யமுனா ஏதும் பேசவில்லை. ராமலிங்கமும் தான். படகிலிருந்த அனைவரும் ஒரு வித ஆச்சரியத்தோடு அவர்களைப் பார்த்தார்கள். யமுனாவின் விழிகள் நீர், கசிந்து கொண்டே இருந்தது. இதைப் பார்க்கும் போது, கடலலைக்குக் கூட கண்ணீர் வந்தது.
பிரம்மாவின் தோளில் சாய்ந்து, “இப்படி ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல தான என் அம்மாவும் என்ன தொலைச்சிருப்பாங்க” என்று சிறுபிள்ளை போல் அழுதாள் கடலலை. பிரம்மாவிற்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அவள் தலை முடியை கோதிவிட்டான்.
படகு அமைதியாக கோயில் கிழக்கு வாசலில் வந்து தேங்கி நின்றது. பாலச்சந்தர் எல்லோரையும் துரிதப்படுத்தினார்.
“வாங்க.. வாங்க.. கோயில்ல இடமிருந்தா செத்த உட்காருவோம். இல்லன்னா வாசல் வாசலா போனா, நம்ம கடை வந்துரும். வாங்க.. வாங்க..!” என்று கீழே குதித்தார்.
நீர் முட்டி வரை சலசலவென்று ஓடியவாறு இருக்க, எல்லோரும் இறங்குகிறார்கள். ராமலிங்கம் நிகழ்த்திய அதிர்ச்சியிலிருந்து, யாரும் மீளவில்லை. அனைவரும் வாசல் வாசலாக கடந்து, தெற்கு கோபுர வாசலருகே வந்து விட்டார்கள். அங்கிருந்து கடை பக்கம் தான் ஆதலால், விறுவிறுவென்று கடையை அடைந்தார்கள்.
“தொப் தொப்” என்று அப்படியே அனைவரும் மூச்சிரைக்க உட்கார, காற்று மெல்லியதாக வீசியது. அது எல்லோருக்கும் அப்போது அவசியமாக கூட இருந்தது. ஒரு நிமிடம் அதை ரசித்துவிட்டு, மேல் மாடி அறைக்குச் சென்றார்கள். அப்போது படுத்தது தான். அடித்து போட்டாற் போல் அப்படி ஒரு உறக்கம்…..
பேரலை வந்து மூன்று நாளுக்குப் பிறகு, லேசான போக்குவரத்து விடப்பட்டது. சிறு சிறு ட்ரக்கிலும், பெரிய லாரியிலும் கூட மக்கள் பயணித்தார்கள். கிருஷ்ணன் விடைபெற இருந்த அந்தக் காலை வேளையில் பாலச்சந்தரும் உடன் வந்தார்.
கிருஷ்ணனின் பார்வைக்கு அவர் கூறிய பதில், “என்ன நம்பி தான்பா உங்கம்மா இங்க அமிச்சிருக்கு. இப்போ வேற, மழையும் காத்துமா இருக்கு. நானு கூட வரேன்” என்றார்.
லட்சுமிக்கு வந்த வேலை ஆகவில்லை. அம்பலத்தானைத் தரிசிக்க வந்து, இப்படி அலங்கோலமாக ஆகிவிட்டதே என்ற கவலை. வடிவேலுவுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்து விட்டது. அவனின் அம்மா கிளம்பி வருவதாகச் சொல்லி விட்டார். அவனும் இப்போது நிம்மதி பெருமூச்சுடன் வீடு திரும்புகிறான். யமுனாவும் ராமலிங்கமும் கூட விதி என்று தங்களைத் தேற்றிக் கொண்டு வீடு திரும்புகின்றனர்.
கடலலையும் பிரம்மாவும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். பிரம்மா கேட்கிறான். “உனக்கு ஏன் கடலலைன்னு பேர் வெச்சாங்க? அத பத்தி உங்கம்மா எதுவும் சொல்லலியா?” என்றான்.
“இல்ல பா. ஆனா, நானே எப்போவாச்சும் நினைப்பேன். கடல்’ங்கற வார்த்தைய சொன்னாவே, அலைங்றது தானே நியாபகம் வரும். பொதுவா பாத்தா, கடல்னா பெரியளவுல நீர் நிறைஞ்ச இடம். அதாவது ஸ்திரமான ஒரு இடம். அந்த ஸ்திர இடமானது, அசையும் போது அலையாகுது. இது கிட்டத்தட்ட மனுஷன தான் குறிக்குதுன்னு நினைக்குறேன். நம்ம மனுஷ உடம்பு அசையாம இருந்தா, அதுக்கு எந்தப் பயனும் இல்ல. நம்ம மெடிக்கல் டெர்ம்ஸ்ல சொல்லணும்னா கிட்டத்தட்ட ‘கோமா ஸ்டேஜ்’. நம்ம கை, கால் அசைஞ்சி செய்யுற வேலைகள் தான் நம்மள இன்னொருத்தவங்களுக்கு அடையாளம் காட்டுது. பெருமையைத் தேடி கொடுக்குது. என்னோட செயல் என்னெனிக்கும் இந்த உலகத்துல வாழனும்னு நினைச்ச அம்மா, எனக்கு ‘கடலலை’னு பேரு வெச்சிருக்கலாமோங்குறது என்னோட எண்ணம். ஐ லவ் மை நேம்.” என்று பேச்சில் பறவையைப் போல் படப்படத்தாள். ஆனால், அதில் தான் எத்தனை தெளிவு..!
காலம் இப்போது எல்லோரையும் பார்த்துச் சிரித்தது.. “இனி கிருஷ்ணனுக்கு என் அழைப்பு இல்லை..” என்பது போல் அம்பலத்தான் அவர்களை வழியனுப்பி வைத்து விட்டான்…..!
சில மாதங்கள் வரை, பேரிடர் நிலைமையே நீடித்திருந்தது. அதற்குப் பிறகு, பாலச்சந்தர் சுயமாகவே பதவியிலிருந்து விலகி, மனைவியுடன் கோயில் கோயிலாக சுற்ற ஆரம்பித்து விட்டார்.
கிருஷ்ணன் குடியாத்திலேயே ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு, வருடங்களைத் தள்ளினான். வடிவேலு தன் அம்மாவுடன் சேர்ந்து, ஹோட்டல் பிசினஸ் ஆரம்பித்தான். பிரம்மாவும் கடலலையும் திருமணம் செய்து கொண்டனர்.
பாலச்சந்தர் உடனில்லை என்றாலும், அனைவரிடமும் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அப்படி சில வருடத்திற்குப் பிறகு, கிருஷ்ணனிடம் பேசும் போது, கிருஷ்ணன் பேச்சில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“ஐயா.. எத்தனை வருஷத்து தவம் யா. கவர்மெண்ட் வேலை கிடைச்சிருச்சு யா. எல்லா உங்க ஆசிர்வாதம் தான்யா..” என்ற கூற, பாலச்சந்தருக்கு உச்சி குளிர்ந்தது.
“நல்லாருய்யா. நல்லாருய்யா..! தமிழ் எப்படி இருக்கா? குறும்பு ஜாஸ்தியா ஆயிடுச்சு போல..” என்று வினவினார்.
கிருஷ்ணன் சிரித்தவனாய், “ஆமாங்கய்யா… இப்போதான் எழுந்து நடக்குது, அப்பப்ப பேசுது. நீங்க குழந்தைய தொட்டில்ல போடும் போதே வரலன்னு எங்களுக்கெல்லாம் வருத்தம். ஒரு நாள் வீட்டுக்கு வாங்கய்யா” பாசமாய் கூப்பிட்டான்.
“நிச்சயமா வரெம்பா..” என்றதும் உரையாடல் முடிந்தது.
அன்றைய இரவு, கிருஷ்ணனும் சிநேகிதனும், இரவு முழுக்க, கவுன்சிலிங்கிற்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினார்கள். அந்த பனிரெண்டு மணி இரவில், மனிதாபிமானத்தோடு அத்தனை சான்றிதழ்களையும் செராக்ஸ் எடுத்துக் கொடுத்தார் ஒரு கடைக்காரர்.
ரவியிடம் கிருஷ்ணன் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தான். “டேய்..! நம்ம ஊர்லே கிடைச்சா நல்லார்க்கும் டா..” என்றான்.
“எல்லாம் கெடைக்கும் வாடா..” என்று அர்த்த ராத்திரியில் இருவரும் பேருந்து ஏறினார்கள்.
அதிகாலை எழுந்து சான்றிதழ்களைச் சரிபார்த்து விட்டு, கிருஷ்ணன் உட்கார்ந்து கொண்டிருந்தான். பேருந்திலிருந்து இறங்கி, கவுன்சிலிங் நடக்கும் இடத்திற்கு இருவரும் சென்றார்கள். சூரியன் மெல்ல மெல்ல மேலே உதித்தான். வேலை வந்துவிட்டது. எந்த இடம் என்று தேர்ந்தெடுக்க வேண்டியது தான் பாக்கி.
கிருஷ்ணனுக்குச் சொந்த ஊர் கிடைத்தால் சிறப்பு. 8.30 மணிக்கு, ஆரம்பித்து விட்டது கவுன்சிலிங். எல்லோரும் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். இடத்தைச் சொல்வதும், ஆர்டர் வாங்கிக் கொண்டு போவதும், என்று அந்த இடமே கலைகட்டி இருந்தது.
மைக்கில் நிறைய ஊர்களின் பெயர்கள் சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தன. அதில் சிதம்பரம் பக்கம் சில ஊர்களின் பெயர்களும் சொல்லப்பட்டன.
கிருஷ்ணனுக்குப் பழைய நினைவுகள் தேங்கி நின்றன. அதைக் கலைக்கும் படியாய், “கிருஷ்ணன் பழனிசாமி” என்று மைக் ஒலி எழுப்ப, அவன் விறுவிறுவென்று தன் சான்றிதழ்கள் நிரம்பிய கோப்பை வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து சென்றான்.
“ஸ்க்ரீன் பாருங்க. எந்த ஊர்ன்னு டக்குனு சொல்லுங்க” என்று ஸ்க்ரீனை அவன் பக்கம் திருப்பினார் ஒருவர். அந்த நிமிடம் அவன் மனதில் தோன்றிய பெயர் ‘சேம்பள்ளி’. கிருஷ்ணன் சொல்ல, அந்த ஊர் உடனே பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டது. பணிநியமன ஆணை அச்சிடப்பட தொடங்கியாயிற்று.
ஊருக்குப் போகும் வழியில், ஏக சலனம் கிருஷ்ணன் மனதில். சிநேகிதனிடம் சேம்பள்ளி ஊரைப் பற்றியும், அது நம் ஊரிலிருந்து எத்தனை தொலைவு என்பதையும் கேட்டுக் கொண்டே வந்தான். நிறைய கனவுகளோடு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.
குடியேற்றம்…!
லட்சுமி அங்கும் இங்கும் மெதுவாக தனது மேடிட்ட வயிற்றை பிடித்தபடி, நடந்து கொண்டிருந்தாள். கிருஷ்ணன் கவுன்சிலிங்கிற்குச் சென்ற பின், லட்சுமிக்கு நிம்மதியான உறக்கமில்லை. ராதாவும் பார்வதியும் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் கார்த்திகை தீபம். வீட்டில் பொறி, அவல் எல்லாம் வாங்கியாயிற்று.
வாசலில் தேங்கி நிற்கும் ஆட்டோவைப் பார்த்த பார்வதி, “வாய்யா..! உள்ற வா. ஏன் அங்கே நின்னுட்ட..” என்று கிருஷ்ணனை அழைத்தாள்.
லட்சுமி உடனேயே வெளியே சென்று, கிருஷ்ணனுடைய பையெல்லாம் வாங்க முனைய, கிருஷ்ணன் அதைத் தடுத்தபடி லட்சுமியின் வயிற்றில் கை வைக்கிறான்.
“எப்படி இருக்கா என் ரெண்டாவது மகாலாட்சுமி..?” என்று கேட்டான். லட்சுமி பூரித்தாள்.
பின்பு, “உங்க மொத பொண்ணு தாங்க ஓவர் ஆட்டம், இது சமத்து. தோ இருக்காளே, இவ தான் அப்பா எங்க அப்பா எங்கனு உசுர வாங்கிட்டா” என்று ஆரம்பித்தவுடன், மெல்ல நடந்து வந்தது அந்த மொட்டு.
“பா… பா…” என்றபடி கைகளை மேலே தூக்கிக் கொண்டு ஆட்டியது. கிருஷ்ணனும் அதைத் தூக்கிக் கொண்டு உச்சி மோந்தான்.
கிருஷ்ணன் நேரே பார்வதியிடம் சென்று, “மா.. ஒரு வழியா நமக்கு விடிவுகாலம் மா. நாளைக்கு கார்த்திகை தீபம் முழுமையா கொண்டாடப் போறோம். நிஜமாவே என் மனசுல ஒளி பிறந்துடுச்சு. இங்கேர்ந்து வேலைக்கு போற இடம், ஆறு கிலோ மீட்டர் தான்ம்மா. பஸ் இருக்குதாம். வாழ்க்கையே நிறைவா இருக்குமா” என்று கண்கள் விரியச் சொன்னான்.
“ஆமாம்டா… உனக்கு கல்யாணம் பண்றதே பெரும்பாடாயிடும் நினைச்சேன், மகாலட்சுமியே வந்துட்டா. மொத கொழந்த பொறக்குரச்சே ரொம்ப பயந்துட்டேன். இப்போ பாரு… நடக்கவே ஆரம்பிச்சிடுச்சு” என்று சொல்லி, அங்கு வந்த குழந்தையையும் “வாடி என் பட்டு” என்று மடியில் அமர்த்திக் கொண்டாள் பார்வதி.
கிருஷ்ணனிடம் ஏதோ சிந்தனை. அதனூடே சென்று குளித்து முடித்து வந்தான். பாயை விரித்துப் படுக்க முனைய, அவனுக்கோ தூக்கமில்லை.
நடந்து கொண்டிருந்த லட்சுமியைப் பார்த்த பார்வதி, “ஏம்மா.. ஏன் இன்னும் தூங்கல. போய் தூங்குடா..” என்றாள்.
அத்தை சொல்வதைக் கேட்ட லட்சுமி கிருஷ்ணன் அருகில் போய் உட்கார்ந்தாள். ஏனோ அவள் மனம் முழுக்க, அம்பலத்தில் மிதந்து கொண்டிருந்தது.
‘யமுனா என்ன ஆனா? அவங்க கணவர் என்ன ஆனாங்க? அந்தப் பெரியவர் என்ன ஆனாரோ?’ என்றவாறு நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு அப்போது அந்தப் பேரலை நியாபகம் தான் வந்தது. ‘அப்பப்பா.. அந்த தேருக்குப் பிறகு, அம்பலத்தானை காணவே முடியவில்லை’ என்று சலித்துக் கொண்டாள்…
அந்த நேரம், ராதாவின் மனைவி வெளியே வந்து, “மா… அத்தே உன்கிட்ட பேசிட்டு பாத்ரூம்க்கு போச்சே, இன்னும் வரலியே” என்று லட்சுமியிடம் கேட்டாள். அவளுக்கும் அப்போது தான் நியாபகம் வந்தது. இருவரும் சென்று பார்த்தனர்.
லட்சுமி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, “அத்தே..!” என்று கத்தினாள். அவளின் குரல் பார்வதியின் காதில் விழவில்லை. அது தான் ஒன்பது ஓட்டைகளுக்குள் சுற்றிக் கொண்டிருந்த மூச்சுக்குதிரை வெளியேறி விட்டதே..!
“பொறப்பையும் இறப்பையும் ஒன்பது ஓட்டைக்குள்ள அடக்கிட்டானே… ஆண்டவ..!” என்று இருவரும் அப்படியே சரிந்து அமர்ந்தார்கள்.
(தொடரும் – வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings