in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 19) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 19)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பாலச்சந்தருடன் பயணம்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

குடியேற்றம் – லட்சுமி வீடு..!

காஃபி, சுவீட் போன்ற உபசரிப்புகள் முடிந்து, முதலில் பாலச்சந்தர் பேச்சை எடுத்தார்.

“நாங்க மொத சும்மா பேசிட்டு உங்க சம்மதம் கேக்கலாம்னு வந்தோம்..! ஆனா.. நாங்க வரும் போதே நீங்க மாப்பிள்ளைன்னு கத்தவும், ரொம்ப சந்தோஷம் எங்களுக்கும்..! அப்போ நீங்களு வரன் முடிச்சி பேசுற நிலைமைக்கு தா இருந்தீங்க போல..! நல்லது” என்று கேட்டார்.

லட்சுமியின் தந்தை ஆர்வத்தோடு அதை ஆமோதித்தார். பாலச்சந்தர் முன் நின்று சொன்னார்.

“நா கிருஷ்ணனுக்கு சிநேகிதன் மாறி..! இது அவுங்க அம்மா பார்வதி, அப்பா தவறிட்டாரு, அங்க இருக்குறது இவனோட அண்ணன் ராதா.. அவுரு கிருஷ்ணனோட மாமா..” என்று எல்லோரும் அறிமுகப்படுத்தி வைத்தார். 

மாமா வணக்கம் சொல்லிவிட்டு, “நல்லதுங்க.. நிச்சயம், கல்யாணம் பத்தி பேசிடலாங்களா?” என்று இழுத்தார்.

அவர் அப்படி கேட்டது புனிதவதிக்கு ரொம்ப பிடித்திருந்தது. போய் லட்சுமியை அழைத்து வரச் சென்றாள். கிருஷ்ணன் ஏதும் பேசவில்லை. சிறுபுன்னகையைச் சிதற விட்டுக்கொண்டே லட்சுமியின் விழிகளை தேடிக் கொண்டிருந்தான்.

புனிதவதி அழைத்து வருகிறேன் என்று சொல்லிய சில நொடிகளில் மெல்லிய கொலுசொலி கேட்கவும், கிருஷ்ணன் ஆவலோடு அதை ரசித்தான். பின் மெல்ல மெல்ல தன் கழுத்தை மேல் தூக்கி, லட்சுமியை நோக்கினான்.

அவள் தலை கவிழ்ந்தபடி அன்னம் போல் நடந்து வந்தாள். கிருஷ்ணனுக்கு ஆச்சரியம். ‘இவளா அன்றைக்கு என்னிடம் அத்தனை பேசினாள்? இவளா எனைப் பார்க்க வந்தாள்..?’ என்று கேள்விகள் பல ஓடின.

‘எப்பா..! எத்தனை அடக்கம்..! தெகிரியமாகப் பேசும் போதும் சரி, இப்படி அடக்கமாக, அன்னம் போல் நடந்து வரும்போதும் சரி.. அவள் அழகு தான்..! இதில் அப்படியே மகாலட்சுமி போல் இருக்கிறாள்..!’ என்றெல்லாம் கோட்டை கட்டி, அவளை மனதார வணங்கினான். 

மாமா பார்வதியைப் பார்த்தார். அவளுக்கு சம்மதம் என்பது சிரிப்பிலேயே தெரிந்தது.

லட்சுமி வீட்டில், அங்கேயே ஒப்புத்தாம்பூலம் மாற்றிக் கொண்டு, “நாங்க சொந்தக்காரங்களோட வந்து, மொறப்படி பெண் கேக்குறோம்..” என்றவுடன், புனிதவதி பார்வதியைப் பார்த்து, “சரிங்க சம்மந்தி..” என்று பூரித்தாள். 

பிறகு, கிருஷ்ணனின் மாமா, “மார்கழிகுள்ள கல்யாணத்த முடிச்சிலாங்களா? நாங்க அப்டித்தான் மனசுல வெச்சிருக்கோம். இழவு ஊந்த வீட்ல, உடனே இப்டி எதுனா நடந்தா நல்லதும் கூட. அதுக்கு தா.. கேக்குறோம்..” என்று சந்தேகத்துடன் கேட்க

லட்சுமியின் அப்பா கோவிந்தன்,  “அதுலாம் ஒன்னுலிங்க. இவளோ சீக்கிரமா முடியும்னு நாங்களு நினைக்கல. ரொம்ப நல்லது. வரதட்சணை ஒன்னு நாங்க தரல, முடிஞ்சத செய்றோம். பொண்ணு படிச்சிருக்கு, கண்டிப்பா நல்லா பாத்துக்கும். எங்க வூட்ல எல்லாரும் ஒரு மாறி, எம்பொன்னு ஒரு மாறி. ரொம்ப பாசம், பந்தம் இருக்கணும்னு நினைக்கும்..! அது அப்படியே வளர்ந்துருச்சு..! நீங்க அத அன்பா பாத்துக்கிட்டா போதும்.. வேற என்ன வேணும் எனக்கு?” என்று பளிச்சிட்டுச் சொன்னார்கள்.

கிருஷ்ணன் இப்போது வாய் மலர்ந்தான்.

“வரதட்சணை எதுவும் வேணாம்ங்க. உங்க திருப்திக்குன்னு எவ்ளோ போட்டாலும் சரி. உங்க பெண்ணையே தர்றீங்க..! அதோட குணத்துக்கு முன்ன இந்தப் பணமெல்லாம் என்னங்க?” என்றான்.

சந்தோசத்தில் லட்சுமி அப்படியே விக்கித்துப் போனாள். லேசாக கண் கலங்கினாள். அதை கிருஷ்ணனைத் தவிர வேறாரும் பார்க்கவில்லை.

‘கண் துடை’ என்று சைகை செய்ய, அவளும் துடைத்துக் கொண்டாள். மாப்பிள்ளை வீட்டார் நல்லபடியாக விடைபெற்றுக் கொண்டனர்.

கிருஷ்ணன் போகும் போது கூட, அவளைப் பார்வையாலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான். மனமெல்லாம் லட்சுமிக்கு அவன் பால் இருந்தது.

“லட்சுமிக்கு கல்யாண கலை வந்துவிட்டது” என்று சொந்தக்காரர் எல்லோருக்கும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள் புனிதா.

சிதம்பரம்..! 

ராமலிங்கம் பயணித்த கார், நேரே வீட்டை அடைந்தது. மனோ தூங்கி விட்டான். அவனை, அப்படியே தூக்கிக் கொண்டு போய் உள்ளே சமர்த்தாக படுக்கையில் போட்டு விட்டாள் யமுனா.

டிரைவரைத் தன் வீட்டிலேயே குளிக்க அனுமதித்து, தன் கதர் வேட்டி சட்டை ஒன்று கொடுத்து, “வாங்க.. நம்ம ஒன்னாவே போவோம் கோயில்கு..!” என்று சொல்லி மனைவியிடம் திரும்பி, “மா.. நா அப்டே கிளம்புறேன்மா கடைக்கு..” என்றான்.

மாப்பிள்ளை கணக்காக, டிரைவர் ரெடி ஆக, இருவரும் முதலில் சங்கத்திற்குச் சென்றார்கள்.

“வாங்க.. இது நம்ம கட தான், நா இங்க தா வேலப் பாக்குறேன். உங்கள மாறிதா நானும், ராப்பகலா ஊரூரா போவேன். குடும்பத்த பாக்கவே முடியாது. இப்போதான், புது செகரெட்ரி வந்தாரு.. கொஞ்சம் பரவால்ல. லாட்டரி விழவும், இந்தோனேசியா சுற்றுலா போய்ட்டு இப்போதா ரிட்டர்ன் வந்தோம். செகரெட்ரியு ரொம்ப நல்லவரு. அதான் மாசக் கணக்குல லீவு கொடுத்தாரு..!” என்று இட்லி தட்டை நீட்டினார்.

டிரைவரும் பாசத்தோடு தட்டை வாங்கிக் கொண்டு, இட்லியை உள்ளே அனுப்பினார். “செம்ம சாப்பாடுங்க.! மல்லிப்பூ இட்லின்னா இதான்..” என்று பாராட்டிக் கொண்டே ஐந்தாறு சாப்பிட்டான்.

ராமலிங்கம் அவனுக்குத் தெரியாதவாறு, பில் கட்டிவிட்டு, “வாங்க கோயிலுக்குப் போகலாம்..” என்று நடந்தே கூட்டிச் சென்றான். 

இருவரும் கோயிலில் கால் பதித்த வேலையில், ஒரு மூலையில் மட்டும் ஒரே கூட்டம். ராமலிங்கம் அதை கவனியவில்லை. முதலில் தரிசனம் முடித்து விடுவோம் என்று ஒவ்வொரு சந்நதியாக அழைத்துச் சென்று ஆற அமர தரிசிக்கச் செய்தார். ஓட்டுனரும் மனம் நிறைய வழிபட்டுவிட்டு, அவர்க்குத் தன் நன்றியையும் கூறினான்.

பிரகாரத்தில் இருவரும் உட்காருகையில், டிரைவர், “நீங்க நல்லா இருக்கணும்யா.. என்னையும் தொழிலையும் மதிச்சி, என்ன உங்களோட இவளோ தூரம் கூட்டியாந்தீங்களே..!” என்று நெகிழ்ந்தான்.

ராமலிங்கம் புன்னகை மட்டும் புரிந்தான். அந்த மூலையில் இன்னும் ஜனக்கூட்டம் போன பாடில்லை. டிரைவர் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன சார் அங்க? இங்க யாரோ ஒரு சித்தர் சாமி இருக்குறதா நான் கூட பேப்பர்ல படிச்சிருக்கேன். போய் பாக்கலாமா? நீங்க இதுவரிக்கு பாத்ததுண்டா?” எனக் கேட்கவும், ராமலிங்கம் நெஞ்சை இறுகப் பற்றிக் கொண்டான்.

“வேணாம் யா.. அத பத்தி கேக்காதீங்க.. நீங்க வேணும்னா போய்ட்டு வாங்க. சக்தி வாய்ந்தவரு தா. அவுரு சொல்லணும்னு நெனச்சா கூப்டே சொல்லுவாரு..” என்று குற்ற உணர்ச்சியோடு சொன்னான். வீட்டை விட்டு, அவரை வெளியே துரத்தியது அவன் தானே..!

காலம் மவுனமாகவே பதில் சொல்கிறது. ஆனால், குற்றம் உள்ளவர்களுக்கு மட்டும், அந்த மவுனமே மிகுந்த சத்தமாய் கேட்டுக் கொண்டிருக்கும்.! இப்படியான நிலையில் தான் இப்போது ராமலிங்கமும் இருக்கிறான். 

டிரைவர் எழுந்து சென்ற பின், ராமலிங்கம் தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

‘நடராஜா.! உன்ன புரிஞ்சிக்கவே இவளோ நாள் ஆயிடிச்சு எனக்கு. இதுல நீ படைச்ச ஒரு படைப்ப, நா உதாசீனப் படுத்திட்டே.. பாவம் அவுரு. இந்த சித்தர் நிலை அவுருக்கு எவ்ளோ கஷ்டமா இருக்குமோ? நா வீட்டை விட்டு வெளிய அமிச்சது ரொம்ப தப்பு.. அவராண்ட போய் பேசுறதுக்கு எனக்கு மூஞ்சில்ல. ஆனா, நாள் தவறாம அவர கும்பிடறேன். தாமதமா வர எதுவுமே ஏற்க தக்கது இல்லையோ?’ என்று சிந்தையில் ஆழ்ந்த ராமலிங்கத்தை, டிரைவர் உலுக்கி எழுப்பினார்.

“அந்த சித்தர், என்னோட வந்த உங்கள கூட்டி வரச் சொன்னாரு” என்று சொன்னதும் ராமலிங்கத்தின் முகத்தில் ஆச்சரிய ரேகை. உடனே எழுந்து சென்று, கூட்டத்தை வழித்து எடுத்து ஓரங்கட்டி விட்டு, அவர் காலில் போய் விழுந்தான்.

அவர் சிரித்தார். பின் ஒரு கூர்மையான பார்வை பார்த்து, “மனோவை, அதாவது உன்னோட ஒரே வாரிசைப் பத்திரமா பாத்துக்கோ..” என்று சொல்லிவிட்டு, அதைச் சொல்வதற்காகவே அங்கிருந்தது போல, அந்த இடத்தை விட்டு அகன்றார்.

பஞ்சாட்சர மந்திரத்தைச் சத்தமாக சொல்லிக் கொண்டே சென்றவரை, எல்லோருமே சிறு பயத்தோடு தான் பார்த்தார்கள்.

ர்வோதய சங்கம்..!

கிருஷ்ணனின் கல்யாண வேலை, வெகு ஜோராக ஊரில் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வேலை நிமித்தம், ஊருக்கு போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தான்.

அப்படி ஒரு நாள், செகரெட்ரியோடு வெளியூர் செல்கையில் அவர் சொன்னது கிருஷ்ணனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

“டேய் கிருஷ்ணா.. உன் கல்யாணத்துக்கு என்னால வரமுடியாது டா. என்ன வேற ஊருக்கு மாத்தப் போறதா மேலிடத்தில பேசிட்டு இருக்காங்க. அநேகமா, நாளைக்கே நான் இருக்குறது சந்தேகம் தான். பொண்ணு வீட்டுக்குப் பேச வந்தப்போவே எனக்கு இந்த சேதி தெரியும். அப்போ சொன்ன, நீ மூஞ்சிய நல்லா வெச்சிக்க மாட்டேன்னு நா சொல்லல. இத்தா நா உன்னோட வர, கடைசி ஆடிட்டிங்..” என்று சொல்லும் போது தான் கிருஷ்ணனுக்கு “ஓ.. நாம் செய்வது வேலை. இவர் செகரெட்ரி. கணக்கு எழுதுகிறோம்.. சம்பளம் வாங்குகிறோம்..” என்று நியாபகம் வந்தது.

குடும்பத்தில் ஒருவராக பாவித்ததால், அவரை ஆபீசில் உள்ள யாருமே அந்நியமாக நினைக்க முடியவில்லை. சிநேகிதன் போல், இன்ப துன்பங்களில் கலந்து கொண்டதால், அவரோடு செல்வது சுற்றுலா போலவே தெரிந்தது. 

ஆடிட்டிங் முடித்து திரும்புகையில், பெரிய துணி கடையின் முன் வண்டியை நிறுத்தினார். ஆபீசில் உள்ள அனைவரின் குடும்பத்தினர்க்கும் துணி எடுத்தார்.

“ராமலிங்கத்துக்கு புள்ளல்ல. அவுனுக்கு இந்த சட்டை நல்லார்க்கும். வடிவேலு வூட்ல, அம்மா அப்பாக்கு புடவை வேஷ்டி..” என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தார்.

கடைசியில் கிருஷ்ணனிடம், “இந்தாய்யா.. நா உன்ன மறக்கவே மாட்டேன்..” என்று ஒரு பையை நீட்டினார். அதில், என்ன இருக்கிறது என்றும் அவரே விவரிக்க ஆசைபட்டான் கிருஷ்ணன். அவரும் அவ்வாறே செய்தார்.

“இதுல உனுக்கு, உங்க ஆத்தாவுக்கு, ராதாவுக்கு, மாமாவுக்கு, வரப் போற பொஞ்சாதிக்கு.. பொறவு குழந்தைக்கு கூட நல்ல கலர்ல துணி எடுத்திருக்கேன். பொன்னோ பையனோ எப்டியோ அப்டி தெச்சிக்கோ..! நீ நல்லா இருக்கணும்யா..” என்று வாழ்த்தி கைப்பிடித்து கூட்டிச் சென்றார்.

கிருஷ்ணனுக்கு அழுகை வந்தது. அவன் அதை அசிங்கமாக நினையவில்லை. அதை அவரிடம் மறைக்க, அவர் ஒன்னும் அந்நியமில்லை. அவன் அழுது கொண்டே கடை விடுதியை அடைந்தான். 

அவரும் ஒரு கனத்த இதயத்தோடு, வீடு சென்றார். அன்றிரவு கிருஷ்ணன் வடிவேலுவிடம் அனைத்தையும் சொன்னான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமலிங்கம், “நமக்கு கேடு காலம் வரப்போவுது…” என்று எழுந்து உட்கார்ந்தான். அந்த அகால வேளையில் அவன் அப்படிச் சொன்னது இருவரையுமே திடுக்கிடச் செய்தது. கிருஷ்ணன் ‘ஏன்?’ என்பது போல் பார்த்தான்.

அதற்கு ராமலிங்கம், “ஊர்லேர்ந்து வந்தவுடனே, எனக்கு திருவண்ணாமலைல சரக்கு இறக்க சொல்லிருந்தாங்க. சரக்கு இறக்கிட்டு, லெஜ்ஜர்ல சைன் போடுறப்போ, காதுல விழுந்தத தான் சொல்றேன். அந்த மீசைக்காரரே தான் நமக்கு வரப் போறாராம். அனிக்கு நம்மகிட்டப் பேசிட்டு, மன்னிப்பு கேட்டது கூட ஒரு சூழ்ச்சி தானாம். இப்போ இந்த ஊரு வேணும்னு கேட்டு வரானாம். இத கேட்டதும் எனக்கு சுருக்குன்னு ஆயிடுச்சி. இந்த மனுஷனுக்கு என்னத்துக்கு நியாபக சக்திய கொடுத்தானோ கடவுள்? எல்லா அந்த அம்பலத்தானோட செயல்..” என்று முடிக்கவும் வேம்புவும் எழுந்து கொண்டார். 

“ஆமாம்பா..! என் தோப்பனார் கூட சொன்னார். இந்த வருஷ ஏதோ பீட வருஷமாம். பெரிய பெரிய அழிவுகள் வரும்னு சொன்னார். இந்த மார்கழில ரொம்ப பேர் சொர்க்கம் போவாங்கன்னு சொல்லிட்டிருக்கார்..” என்பதை கேட்கையில், கிருஷ்ணனுக்குப் பயம் தொற்றிக் கொண்டது.

“எனக்கு கல்யாணம் நிகழும் போதா இப்படி வரவேணும்?” என்று தலையில் அடித்துக் கொண்டு, உறங்கச் சென்றான்.

அப்போதும் அந்தப் பெரியவரின் முகம் அவனைத் துரத்தியது. ‘நாளைக்கு கண்டிப்பாக, கோவில் சென்று அவரைப் பார்த்து விட வேண்டும்’ என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புரியாத புதிர் (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர், கோவை

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 7) – ✍ விபா விஷா, அமெரிக்கா