ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
உளமதில் உருவம்
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு
சர்வோதயா..!
இப்படி நண்பர்களுக்கு உதவி புரிவதற்காக, செக்ஷன் மாறி மாறி வேலை செய்வதைக் கிருஷ்ணன் வழக்கமாக கொண்டிருந்தான். அதனால், அவனுக்கு ஆங்காங்கு புதுப்புது தோழமைகள் தோள் கொடுத்தன.
எந்த ரத்த பந்தமும் இல்லாமல், நாம் மதிக்கிற ஓர் உறவு உண்டென்றால், அது நட்பாகத் தானே இருக்க முடியும்? கஷ்டத்திலிருந்து வந்தவன், ஆதலால் அவர்கள் கஷ்டங்களில் எளிமையாக பங்கு கொண்டு விட்டான். இதன் பயனாகவே கடவுள் ஒருவனை இவனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் தான் மாதவன் ஜி..!
சர்வோதயா சங்கம் இருக்குமிடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கும் கடை தான் ‘பழனிபாபு ஜ்வல்ஸ்’, அதைப் பற்றி கிருஷ்ணனிடம் மாதவன் சொன்னார்.
“ஏம்பா உனக்கு கல்யாண வயசு வந்துருச்சுல்ல. ஒரு நக நட்டு சேத்து வெச்சா தானே நாளைக்கு ஒதவும்.! ஒரு மாசத்துக்கு ஒரு காயின் வாங்கு போதும். குறையறப்போ வாங்கு, ஏறப்போ வித்திடு. காயினா இருக்குறது எப்போவும் உதவும். நகையா வாங்கிப் புட்டா செய்கூலி சேதாரம்னு வாங்கும் போதும் விக்கும் போதும் லாஸ் தான்…! காயினா வாங்கிட்டா அனிக்கு என்ன விலையோ அப்டே எடுத்துக்குவாங்க.. அப்டே போனாலு ரெண்டு மூன்றுவா தான் போவும்..” என்று தங்கத்தைப் பற்றி தங்கமாய் எடுத்துரைத்தார்.
தங்கமான மனிதர் தான் இவர். ஒருவன் வளர வேண்டும் என்று நினைக்கிறாரே.!
கிருஷ்ணனும் மாதம் ஆனால், பழனி பாபு கடை வாசற்படியை மிதிக்காமல் இருக்க மாட்டான். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்போது, அவன் ஊதியமே நான்கு இலக்கத்தில் இல்லாத நிலை. குறைந்த சம்பளம் என்றாலும், பணத்தைக் கையாளும் முறையை அவன் கைக்குள் வைத்துக் கொண்டான்.
ஒருபுறம் மாதாமாதம் அவன் கையில் தங்கம் மின்னினாலும், மறுபுறம் அவன் “கைநாட்டில்லை” கையெழுத்து என்கிற குட்டு வெளியாகி விட்டிருந்தது.
பழைய லெஜ்ஜர்களில் இருந்த வடிவேலுவின் கையெழுத்தை ஆடிட்டர்கள் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். மேலும், கிருஷ்ணன் வந்த பிறகு தான், வடிவேலு கணக்கில் ஒரு தவறும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் கண்டுபிடித்து விட்டார்கள்.
கிருஷ்ணன் ஒன்றும் பேசாமல் ஒப்புக் கொண்டான். வீட்டு நிலைமையை எடுத்துச் சொன்னான். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி அவனுக்கு ஆடிட்ங் போஸ்ட் கொடுக்குமாறு செகரெட்ரியிடம் பரிந்துரை செய்தார்கள்.
மீசைக்காரருக்கு மீசை துடித்தது. அனைவர் பார்வையும் தன் மேல் இருப்பதால், கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சரி என்பது போல சிரித்துவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டார்.
கிருஷ்ணன் பதவி உயர்வு கிடைத்ததை, வீட்டில் சொல்ல நினைத்து விடுமுறை கேட்டான். மீசைக்காரர் சூட்சமமான ஒரு யோசனையுடன், செலவுக்குப் பணம் கொடுத்து, அவனை ஊருக்கு அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணன் நேர்மை பேர்வழி. இரக்க குணம் கொண்டவன். கணக்கு வழக்கு பார்த்தால், நாம் சுரண்டுவது எங்கே தெரிந்து விடுமோ என்பதற்கு முன்னேற்பாடாக மீசைக்காரர் இதைச் செய்தார்.
சூழ்ச்சி ஏதும் அறியாத கிருஷ்ணன், பேருந்தில் பிறந்த ஊருக்குப் பயணித்துக் கொண்டிருந்தான். அவன் ஆவல் முழுதும் அம்மாவின் முகத்தைப் பார்ப்பதில் இருந்தது.
அப்போதெல்லாம் ஏது செல்போன்? தெருவிற்கு என்ன, பத்து பதினைந்து தெருவிற்கு ஒன்று இருந்தால் அதிசயம். அவனுக்கும் வாங்க வேண்டும் என்ற ஆசை தான். அதை விட அத்தியாவசிய செலவுகள் இருப்பதால், அதை இப்போதைக்குத் தள்ளி வைத்து விட்டான். ஆனால் இன்றோ எல்லாவற்றை விடவும் கைபேசி தான் அத்தியாவசியமாகி விட்டது.
முடியாத ஓடை போல், ஓடிக் கொண்டிருக்கும் சிந்தனை அலைகளுக்கு, பெற்றோரின் முகத்தை உருவமாக கொடுத்தான். அவன் தலை மேல் அவர்கள் பிம்பங்கள் சுழல, லேசாக கண்ணயர்ந்தான்.
கனவில் ஏனோ அந்தப் பெரியவரின் முகம் தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து, “ரொம்ப நாள் ஆச்சே இவர பாத்து..! கோயில்ல பாத்த மாறி ஞாபகம். இவர பாக்கும் போதெல்லாம் அப்பா நெனவு வரும். ஊருக்குப் போய்ட்டுத் திரும்புன உடனே, கோயில்கு போவனும்…” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
புறக்கண்களுக்குத் தெரிகின்ற கிருஷ்ணனின் உடல், குடியேற்றம் சென்றது. அகம், தன்னை அறியாமலேயே அம்பலத்தானை நினைக்கத் தொடங்கி விட்டிருந்தது…!
லட்சுமி வீடு..!
லட்சுமிக்கு ஜாதகம் எழுதியாயிற்று. தகப்பன் ராகுகாலம் ஓரை எல்லாம் பார்த்துவிட்டு, வரன் பார்க்க தினமும் கிளம்பி விடுவார். லட்சுமியின் நாட்கள் உண்மையில் சக்கரம் போலவே சுழன்றது.
காலையில் எழுந்திருக்க வேண்டும். வீட்டு வேலைகள் கொஞ்சம் செய்துவிட்டு, சமையல் கற்க வேண்டும். மீண்டும் மாலையில் படிக்க உட்கார்ந்து விட வேண்டும். நேரம் மிச்சம் இருந்தாலும் அதையும் தன் இச்சைப்படி செலவு செய்ய முடியாது. தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வரும். இப்படியே நாள் சக்கரங்கள் தொடர்ந்து ஓடின.
வீட்டிற்கு ஜோசியர்கள் வருவதும் போவதும் சகஜமாகி விட்டது. ஜோசியர் “விருப்பாச்சாரியர்” நட்டநடு கூடத்தில் அமர்ந்து கொண்டு, “லட்சுமி இனிமே மகாராணி ஆகிருவா..” என்று ஒவ்வொரு ஜாதகமாக ஆரம்பிப்பார்.
லட்சுமிக்கு இருக்கும் வேலையில், அவர் பேச்சை அவள் ஒரு பொழுதுபோக்காகவே கருதினாள். அவர் ஆரம்பிப்பார்.
“இந்த வரன் ஃபாரின் வரனாக்கும். கண்ணான முடிஞ்ச உடனே பொண்ணு கையோட வெளிநாடு போயிடுவா. அப்ரோம் என்ன ஜமாய் தான்..” என்று சொல்ல, சமையலறையில் ஜல்லி கரண்டிகள் உருளும்.
அதைப் புரிந்து கொண்ட லட்சுமியின் தந்தை, “வேற வரன் பாருங்க..” என்று எடுத்துக் கொடுப்பார்.
அடுத்த ஜாதகத்தை எடுக்கும் போது விருப்பாச்சாரியாரின் உதடுகள், “இது.. அந்த வீட்டுக்காராவங்க. எப்பா..! காரு பங்களானு வாழறாங்க. உங்களுக்கும் அவுகளுக்கும் அந்தஸ்து எங்கேயோல இருக்கும்..” என்று முணுமுணுப்பார்.
ஒருவழியாக அடுத்த ஜாதகத்தைப் புரட்டியெடுத்து வைக்கையில், “அடுத்த ரயில்வண்டி, புகை வாங்க ரெடியாகி விட்டது” என்று லட்சுமி நினைத்துக் கொள்வாள்.
அந்தச் சிரிப்பின் நீட்டிப்பைத் தொடர்ந்து, லட்சுமியின் பெரிய அண்ணன் வேலு ஓடி வந்தான். “அம்மா எங்க?” என்று மூச்சிரைக்கக் கேட்டான்.
சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, “என்னடா.. ஏன் இப்படி ஓடியாற?” என்று கேட்டதும், வேலு ஒரு போஸ்ட் கவரை நீட்டினான். அன்று புனிதவதி பள்ளிக்குப் போகவில்லை ஆதலால், வேலை இடமாற்றத்திற்கான சர்குலரைப் பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஒரு பிரதி கொடுத்தனுப்பி இருந்தார்கள்.
புனிதவதி, அந்தப் பள்ளிக்குப் புதிதாக சேர்ந்தவள் என்பதால், அவளுக்குத் தான் இடமாற்றம் என்பது அவளும் அறிந்த ஒன்றே.
அந்தக் கவர் என்னவென்று வீட்டில் அனைவரும் கேட்க, “ஒன்னுல.. எனக்கு டிப்லாய்மெண்ட்..! எனக்கு ஆச்சரியம் என்னன்னா, அந்தப் பெரியவர் சொன்ன மாறியே ஆயிடுச்சேன்னுதா..” என்று இழுத்தாள்.
லட்சுமியின் தந்தை குறுக்கிட்டு, “சரி.. எந்த ஊர் எடுக்கப் போறதா உத்தேசம்?” என்று கேட்க, அதற்குப் புனிதவதி, “இதுலலாம் நம்ம இஷ்டப்படி கேக்க முடியாதுங்க.. எங்க போடுறாங்களோ அங்க போவேண்டித்தான்..” என்று சொன்னாள்.
வீட்டில் இருக்கும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, ஜோசியர் அவராகவே வருகையை நிறுத்திக் கொண்டார். அவரைப் போலவே, பால்காரர், பேப்பர் காரரும் கூட விடைப்பெற்றுக் கொண்டனர். தங்கியிருந்தது வாடகை வீடு ஆதலால், உறவினர்களை விடவும் அண்டை வீட்டாரின் அன்பு நெஞ்சை அடைத்தது.
எப்படியோ கவுன்சிலிங் முடிந்து ஆர்டரும் வந்து விட்டது. வீட்டையே வழித்தெடுத்து லாரியில் போட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டு மாமியின் கணவர், இதுவரை பேசியதேயில்லை. ஆனால், அந்த மனுஷன் தான் லட்சுமி வீட்டு பீரோ, கட்டில் எல்லாம் தூக்க உதவி செய்தார்.
வீட்டிற்கும் அக்கம் பக்கத்தாருக்கும் விடைபெற்று கொள்ளும் போது உள்ளே தொலைபேசி அழைத்தது. லட்சுமியின் அப்பா உள்ளே சென்று வெடுக்கென்று எடுத்து, “ஹலோ.. யாருங்க..” என்றதும் “நா தாங்க ஜோசியரு.. நல்ல வரன் ஒன்னு மாட்டிருக்கு..” என்று ஆரம்பித்தார்.
மறுமுனையில் லட்சுமியின் தந்தை, “அட இருங்க. நாங்களே இங்க அரக்கபரக்க இருக்கோம். ஒரு பத்து நிமிஷ சென்று கூப்பிடுங்க..” என்று போனைத் துண்டிக்காமல், மேசை மீது மல்லாக்க படுக்கப் போட்டு சென்று விட்டார்.
அவர் செல்வது தெரியாமல், ஜோசியர் ஜாதகத்தைக் கையிலெடுத்து, “கன்னியா ராசி, மிதுன லக்னம்.. பேஷா இருக்கு பொருத்தம்” என்று தொடங்கி விட்டார்.
லட்சுமி எதேச்சையாக அங்கே வர, “யார் இது? போன ஏன் இப்படி கவுத்து போட்டு போயிருக்காங்க..” என்று வேகமாக எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ..” என்று சொல்ல வந்தவள், ஜோசியர் குரல் கேட்டதும் அதை அப்படியே தொண்டைக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, காதை மட்டும் நன்றாக திருகி வைத்துக் கொண்டாள்.
“பைய பேரு கிருஷ்ண.. ஊரு ரொம்ப தொலைவு, வேலூர்கிட்ட. ஆனா தம்பி இங்க தான் நம்மூர்ல சர்வோதயத்துல வேல பாக்குறதா கேள்வி. பொறவு அவர்க்கு ரெண்டு அண்ணே, ஒரு அக்கா. அக்காவுக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் ஆய்ப்போச்சு. காசு பணம் இல்லாட்டியு ஊருக்குள்ள அவுகளுக்கும் சரி, பையனுக்கும் சரி நல்ல மதிப்பு இருக்கு. பையன் தங்கம். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. சொல்லப் போனா, வேலை செய்ற இடத்துல இவன் தான் சுத்த கையாம்ல. உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு வீட்ல பேசி பாத்துட்டு என் நம்பர்க்கு போன் போடுங்க..” என்று காத்திருந்தார்.
இவர் சொல்லி முடிப்பதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருந்தது. லட்சுமி அப்பா கண்ணில் படுமாறு ரிசீவரை படுக்கப் போட்டுவிட்டு பக்கத்து அறையில் சென்று ஒளிந்து கொண்டாள்.
தகப்பன் நேரே வந்து போனை எடுத்து, “வேணா.. வேற வரன் பாருங்க..” என்றதும் லட்சுமியின் மனம் வலித்தது. ஜோசியர் நம்பரை அப்பா பாக்கெட்டிலிருந்து மறைமுகமாக எடுத்து, நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்து விட்டாள்.
அதற்குப் பிறகு, லாரி கிளம்பும் வரை யார் பேசுவதும் அவள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவளது மனம் கிருஷ்ணனுக்கு உருவம் கொடுப்பதில் முனைந்து இருந்தது…
கிருஷ்ணன் – இல்லம்..!
பேருந்து குடியேற்றத்தில் நின்றது. காலாற நடந்தே வீடு சென்றான். தெருவிற்குள் நுழைந்ததுமே அவனை நண்பர்களும், பக்கத்துவீட்டு, எதிர்வீட்டு அத்தைகளும் சூழ்ந்து கொள்ள, அவர்கள் அன்பிலிருந்து அழகாக விடுத்துக் கொண்டு இல்லத்தில் நுழைந்தான்.
அம்மாவைப் பார்த்தான். அவள் தேகம் முழுதும் சுருங்கி, ஒடுங்கிப் போயிருந்தாள்.
கிருஷ்ணனைப் பார்த்ததும், “வாடா.. எப்டி இருக்க.?” என்று சமையலறைக்கு ஓடினாள்.
கிருஷ்ணன் அதைக் கவனித்ததும், “எனக்கு ஒன்னும் வேணாம்மா, முதல்ல உக்காரு..” என்று சொன்னான். அவள் அதைக் கவனிக்காதது போல் பாத்திரங்களை உருட்டத் தொடங்கினாள்.
சின்ன அண்ணன் ராதா வந்தான். “நல்லாகிரியா..? தொலவுல்ல..! பிரண்ட்ஸ்லா செட் ஆயிடுச்சா..?” என்று நலம் விசாரித்துவிட்டு, “நைனாக்கு கால் ஆப்ரேஷன் பண்ணி எடுத்துடனும்னு சொல்டாப்ல டாக்டரு..! நீ சரியான நேரத்துக்கு தா வந்திருக்க..” என்றான்.
கிருஷ்ணனுக்கு, தலையில் ஆணியை வைத்து, உள்ளே ஒரு இன்ச் இறக்கின மாதிரி இருந்தது.
‘பழனி பாபு ஜுவல்ஸ்’ – தற்போதும் இருக்கிற இடம்.. சிதம்பரத்தில் மேற்கு ரத வீதியில் காணலாம்
(தொடரும் – வெள்ளி தோறும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
“Rombavum sensational story. Eppadi yirunthaalum padikka aaval.” VaazhththukkaL.
“MaNdakoLaththur Subramanian.”