in ,

அழகரின் ஆய்வு அனுபவங்கள் (சிறுகதை) – செல்வம். T

எழுத்தாளர் செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

செயற்கையாய் குளிரூட்டப்பட்ட அந்த தொழிற்சாலையின் கூட்ட அரங்கில் இயற்கை வியர்வை நெற்றியில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது சிலருக்கு. நடந்த தவறுக்கு பலி ஆடு யார் என்பதை தேர்வு செய்வதற்காகவோ அல்லது அடுத்து நடக்கும் நிகழ்வுக்கு பலி ஆடு தேடும் படலமாகவோ இந்த கூட்டம் இருக்கும் என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருந்தது அங்கு நிலவிய நிசப்தம். 

“இப்ப பாருங்களே யாராவது ஒரு பெரிசு பஞ்சாயத்த ஆரம்பிங்கப்பா” என்ற வசனத்தை சொல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நடுநாயகமாக அமர்ந்திருந்த நிர்வாக மேலாளர், தனது கண்ணாடி பிரேமை சரிசெய்தவாறே, “நமது நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து நாளை மறுநாள் ஆய்வு செய்ய ஒருவர் வர இருக்கிறார். அந்த ஆய்வை யார் பொறுப்பேற்று நடத்துவது என்று தேர்வு செய்யவே இந்த கூட்டம். உங்கள் திறமையை வெளிக்காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம்” என்று கூடுதலாக ஒரு பிட்டையும் சேர்த்து போட்டார்.

“யாராவது பொறுப்பேற்று நடத்த ஆர்வமாய் இருக்கிறீர்களா?” என்று ஆவலை தூண்டினார்.

ஆனால் அவரின் நப்பாசை வீணாய் போனாது, யாரும் முன்வரவில்லை. யாரும் முன்வராத காரணத்தால் “மிஸ்டர் அழகர் அவர்களை இந்த ஆய்வை பொறுப்பேற்று நடத்த நியமிக்கிறேன்” என்று அறிவித்தார்.

தாங்கள் தப்பித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியை விட மாட்டிக் கொண்டான் அழகர் என்ற மகிழ்ச்சியில், மனத்திரையில் அழகர் கழுத்தில் மாலையும், அருவாளுடன் நிர்வாக மேலாளர் நிற்கும் காட்சியையும் ஓட்டி மகிழ்ந்தனர்.

அது தொழிற்சாலை கார் உதிரிபாகங்களை தயாரிக்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம். உற்பத்தி திறனில் எந்த குறையும் இல்லை, ஆனால் பல வருடங்களாக இந்த ஆய்வில் அடிவாங்கிக் கொண்டிருந்தது. ஆய்வு அறிக்கை வெளிவந்த பிறகு, அந்த ஆய்வுக்கு பொறுப்பேற்றவர்களை பலியாடாக ஆக்கி அவமானப்படுத்தும் நிகழ்வு, அங்கு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..

அழகர் காட்டான், ஊர்க்காரன் என்று பல பட்ட பெயர்களால் அறியப்பட்டவன், ஒவ்வொரு தொழிற்சாலையிலும், அலுவலகங்களிலும் சிறு சிறு குழுக்களாய் பிரிந்து அரசியல் செய்பவர்கள் உண்டு. ஆனால் இதில் எதிலும் சேராதவன். அரசியல் செய்ய ஆர்வம் இல்லாததால் இல்லை. யாரும் அவர்களுடைய குழுவில் சேர்த்துக் கொண்டதில்லை. 

அந்த தொழிற்சாலை நிர்வாகத்தில் இருந்த பலர் நகரங்களிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வளர்ந்த தனியார் பள்ளி, கல்லூரிகளில் படித்த பிராய்லர் கோழிகள் அல்லது தான் கிராமத்தில் வளர்ந்த நாட்டுக்கோழி என்ற அடையாளத்தை மறைத்து வாழும் பிராய்லர் கோழிகள். தன்னலத்தை பற்றி எப்போதும் சிந்தித்துக்கொண்டு அடுத்தவர்கள் தங்களுக்கு போட்டியாளர்கள் என்ற எண்ணத்திலேயே வாழ்பவர்கள்.

ஆனால் அழகர் கிராமத்து வாசனை மாறாத நாட்டுக்கோழி. எதையும் மறைத்து பேசும் வழக்கமில்லை. நயமாக பேசுவது என்னவென்று அறியாதவன். அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் அவனை ஏளனமாக பார்த்தவர்கள் பலர். மாட்டிக்கொண்டான் பட்டிக்காட்டான் என்று ஒவ்வொருவரும் அவனுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

“ப்ரோ இன்ஸ்பெக்சனை எப்படி நடத்துறதுனு கூகுள்ல சியர்ச் பண்ணுங்க. நல்ல நல்ல வீடியோஸ் யூடியூப்ல இருக்கு” என்று பீட்டர் வீட்டுக் கொண்டிருந்தான் “ஒரு மொபைல் இல்லைனா வாழ்க்கை இல்லை” என்று வாழும் குறுந்தாடி.

“வெல், மிஸ்டர் அழகர் இந்த இன்ஸ்பெக்சனை எப்படி நடத்துறதுனு உங்களுக்கு ஏதாவது ஐடியா வேணும்னா என்னை கேளுங்க” என்றது எம்பிஏ படித்த ஒரு மேதாவி.

“அப்ப அந்த ஐடியாவை வைச்சு நீங்க ஏன் இந்த ஆய்வை நடத்தக்கூடாது” என்று பதில் வந்தது அழகரிடம்.

தன் நவ துவராங்களை மூடிக்கொண்டு கிளம்பியது எம்பிஏ. அதன்பிறகு அவனுக்கு ஆலோசனை சொல்லும் ஆர்வத்தில் யாரும் அவன் பக்கத்தில் வரவில்லை. அன்றைய பொழுது முழுவதும் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தவனை அனைவரும் அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் காலையில் தொழிற்சாலையில் ஒவ்வொரு பிரிவிலும் பணியாற்றும் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். மதியம் வரை ஆய்வுக்கான எந்த ஏற்பாடும் நடந்த மாதிரி தெரியவில்லை. அனைத்து பணிகளும் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது.

மதியத்திற்கு மேல் உற்பத்தி பணிகளை நிறுத்தி வைத்து இயந்திரங்கள் இருக்கும் பகுதியில் சில மாற்றங்களை அங்கு பணியாற்றுவர்களின் உதவியுடன் தானே செய்ய ஆரம்பித்தான். அங்கு பணிபுரிவர்களை இரண்டு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்கு அனுப்பினான்.

அவனுடைய நடத்தையை கண்டு பலர் ஆச்சரியப்பட்டு போனார்கள். “இந்த காட்டு பய வசமாய் மாட்டிக்க கொள்ள போகிறான்” என்று கருவிக்கொண்டிருந்தனர்.

மறுநாள் ஆய்வுக்காக வந்தவரை வரவேற்று அழைத்து இயந்திரங்கள் இயங்கும் பகுதிக்கு முதலில் அழைத்து சென்றான் அழகர். வழக்கமாக கான்பரென்ஸ் அறையில் நிர்வாகத்தின் பல மணி நேர கொட்டாவி சூழ் பிரசென்டேசன் முடிந்த பிறகு ஏனோ தானோ என்று நடக்கும் இயந்திர பகுதி ஆய்வை கண்டவர்களுக்கு இது அதிசயமாகத்தான் இருந்தது.

அங்கு ஆய்வுக்கு வந்தவர் பணிபுரிபவர்களிடம் உரையாற்றினார். பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை சோதனை செய்தார். பின்பு ஆய்வுக்கு வந்தவர் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சில பதாகைகளை கண்டு முன்புறுவல் பூத்து அழகரின் கரங்களை பற்றி வெல்டன் என்று கூறி கான்பரென்ஸ் அறையை நோக்கி நடந்தார்.

நாள் முழுதும் நடக்கும் ஆய்வு ஒரு மணி நேரத்தில் முடிந்ததை கண்டு நிர்வாக மேலாளர் ஆச்சரியப்பட்டு போனார். பிறகு ஆய்வுக்கு வந்தவர் ஆய்வு அறிக்கையை தலைமையகத்தில் சமர்பிப்பதாகவும், அருமையான நிர்வாகம் என்று பாராட்டி விட்டு சென்றார்.

“மிஸ்டர் அழகர், எந்தவித முன் அனுபவமில்லாமல் எப்படி இந்த ஆய்வை வெற்றிகரமாக நடத்தினாய்” என்று கேட்டார், நிர்வாக மேலாளர்.

“அனுபவம் இல்லை என்று யார் சொன்னது சார். பன்னிரெண்டு வருடங்கள் அனுபவம்” என்று பதிலளித்தான் அழகர்.

“என்ன சொல்றீங்க அழகர்..?” என்று தன் கண்களை விரித்து ஆர்வமாய் கேட்டார், நிர்வாக மேலாளர்.

“சார் நான் படித்த அரசு பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மாவட்ட கல்வி அதிகாரியின் ஆய்வு நடக்கும்”, அந்த அனுபவத்தை வைத்துதான் இதை நடத்தினேன் என்று பதிலளித்தான் அழகர்.

“வருசம் வருசம் பள்ளியில் ஆய்வா? அப்படி எதுவும் நாங்க பார்த்ததில்லையே” என்று ஆச்சர்யமுற்று கேட்டது, சுற்றி நின்ற பிராய்லர் கோழிகள்.

“வருடத்தில் எந்த நாளும் கண்டுகொள்ளாத கரும்பலகைக்கு ஆய்வுக்கு முதல்நாள் ஊமத்த இலையையு்ம் கரிகட்டையும் அரைத்து கரும்பலகைகளுக்கு பூசுவோம், வகுப்பறைகளுக்கு ஒட்டடை அடித்து, பள்ளியை சுற்றிலும் சுத்தப்படுத்தும் பணி அனல் பறக்கும்… அதுமாதிரிதான் இயந்திரங்களுக்கு விதிகளின்படி ஏற்ற வர்ணம் அடித்து சுத்தம் செய்து உயவுபொருட்களையும் இட்டு ஆய்வு அதிகாரி பார்வைக்கு காட்டினேன்.

மற்ற நாட்களில் செய்திதாள்களில் அட்டை இட்ட புத்தகம், பதிவேடுகளுக்கு ஆய்வு நடக்கும் நாளில் பளபளவென்று பிரௌன் சீட் அட்டை இட்டு பெயர் எழுதிய லேபிள்களை ஒட்டுவோம். நல்ல கையெழுத்து உள்ள பதிவேடுகளை ஆசிரியர் மேலாக அடுக்கி வைத்திருப்பார். அதைபோல அழுக்குபடிந்த இயந்திர பதிவேடுகளுக்கு அட்டை இட்டு லேபிள் ஒட்டி, நன்கு எழுதப்பட்ட பதிவேடுகளை மேலாக வைத்தேன்.

ஆய்வு நடக்கும் நாளன்று வகுப்பறையில் பாடம் சம்பந்தப்பட்ட சார்ட்களை தொங்க விடுவோம். அதைபோல கான்பரன்ஸ் அறையில் நீங்கள் வைத்திருந்த யாரும் படிக்காத நிர்வாக விதிகள் மற்றும் இயந்திரத்தை இயக்கும் போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளடங்கிய பதாகைகளை பணியாளர்கள் பணிபுரியும் இடத்தின் சுவற்றில் மாட்டி வைத்தேன்.

ஆய்வுக்கு வந்தவர் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது என்பதை ஆசிரியர் முதலிலேயே முடிவு செய்து அவர்களை அந்தந்த பாடங்களை படிக்க சொல்லுவார். அதைபோல தொழிற்சாலை விதிகள், இயந்திரங்கள், கடந்த வருட உற்பத்தி விவரங்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என பணியாளர்கள் சிலருக்கு தலைப்பு கொடுத்து தயார் செய்தேன்.

ஆய்வாளர் பேசும் விஷயங்களுக்கு ஏற்ப அவர்கள் தானாகவே முன்வந்து பதிலளித்தனர். அவர்களின் தயாரான பதிலை கேட்ட ஆய்வாளருக்கு இங்குள்ளவர்களை பற்றி நல்ல எண்ணம் ஏற்ப்பட்டது. கேட்ட கேள்விகளுக்கு தயக்கமில்லாமல் பதில் சொல்லும் யாரையும் எதிர் கேள்வி கேட்க யாருக்கும் தோன்றாது என்ற உளவியல் உண்மையை நான் பள்ளியிலேயே படித்திருக்கிறேன்” என்றான். 

எழுத்தாளர் செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இங்கு நீயொரு பாதி நானொரு பாதி (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    அரூபன் (பயணம் 1) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.