in ,

அகலக் கால் ஆகாதுங்க! (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

இன்றைய அவசர உலகில் வாழும், அவசர மனிதன் எதையும் அவசரமாகவே செய்து, அவசரமாகவே ஜெயித்து விட வேண்டும், என்று ஆலாய்ப் பறக்கிறான். விளைவு?… அகலக் கால் வைக்கிறான் அதல பாதாளத்தில் சரிகிறான், வாழ்க்கையை வெறுக்கிறான், விரக்தியை வாங்குகிறான்.

அகலக்கால் வைத்தல் என்றால் என்ன?”

சக்திக்கு மீறிப் போதல் (Attempt something  beyond  one’s  ability).

                ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையானது அவனது தேக ஆரோக்கியத்தின் அடிப்படையிலும், கால்களின் உயர அடிப்படையிலும், அவனுடைய ஒரு அடியை, அதாவது ஒரு “எட்டு வைத்தல்” அளவை நிர்ணயித்து வைக்கின்றது.  உயரமான மனிதனின் ஒரு அடி அளவு சற்று அதிகமாகவும், குள்ளமான மனிதனின் ஒரு அடி அளவு சற்றுக் குறைவாகவும் இருப்பது இயல்பு.  அதை விடுத்து, தங்கள் விருப்பம் போல் எட்டு வைத்தலின் அளவை மனிதன் அதிகரித்துக் கொண்டு அகலக் கால் வைத்து நடக்க ஆரம்பித்தால், அது தொடர் செயல்பாட்டிற்கு உகந்ததாக இருக்காது.  ஆரம்பத்தில் எளிதாகத் தெரிந்தாலும், போகப் போக வேறு விதமான ஆபத்துகளைத்தான் சந்திக்க வேண்டிவரும். 

              அதே போல்தான், மனிதன் தன்னுடைய அனைத்துச் செயல்பாடுகளிலும் ஒரு அளவினை நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவானே ஆயின், அவன் எந்த நேரத்திலும், எந்தவித இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பது நிதர்சனமான உண்மை.

            அகலக்கால் வைக்கும் சிந்தனை ஒரு மனதில் உருவாகக் காரணம், அதீத நம்பிக்கை. ஆங்கிலத்தில் இதை “OVER CONFIDENCE” என்பர்.

           மிகையான தன்னம்பிக்கை 3 தனித்துவமான வழிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

          மிகையான மதிப்பீடு என்பது நீங்கள் உங்களை விட சிறந்தவர் என்று நினைப்பது.

          மிகையான நிலை என்பது நீங்கள் மற்றவர்களை விட சிறந்தவர் என்ற மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை.

          மிகையான துல்லியம் என்பது நீங்கள் உண்மையை அறிவீர்கள் என்ற அதிகப்படியான நம்பிக்கை.

         இந்த 3 வகையான அதிகப்படியான தன்னம்பிக்கை வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்படுகிறது, வெவ்வேறு காரணங்களைக் கொண்டுள்ளது மற்றும் பரவலாக மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.

          ஒருவர் சொந்த வீடு கட்டத் திட்டமிட்டு, தன்னுடைய பட்ஜெட்டை நிர்ணயித்துக் கொண்டு, அதற்கேற்ப கட்டுமானப் பணியைத் துவக்கினார்.  பணிகள் நகர ஆரம்பித்ததும், தானே தன்னிச்சை போல் வீட்டு அறைகளின் அளவுகளை அதிகப்படுத்தினார்.  அதே போல், ஆரம்பத்தில் தரைத்தளம் மட்டுமே கட்டுவது என்ற முடிவிலிருந்தவர் திடீரென்று முதல் தளத்திலும் ஒரு போர்ஷன் கட்டி வாடகைக்கு விடுவது என்ற முடிவுக்கு வந்து, அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்தார்.  விளைவாய் பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்தது. உடனே அவர் அழகழகாய் அறிவிப்புச் செய்து, கவர்ச்சியான திட்டங்களைக் களமிறக்கி, கடன் மேளா நடத்தும் தனியார் வங்கியை நாடி, ஆவணப் பத்திரங்களை அடகு வைத்துக் கடன் பெற்று கட்டுமானப் பணியைத் தொடர்ந்தார். அதையடுத்து கட்டுமானப் பணியினைக் காண வரும் நண்பர்கள், மற்றும் உறவினர்கள் கூறும் அபிப்ராயங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் கேட்டு கட்டுமானப் பணியில் ஒவ்வொரு இடத்திலும் மாற்றங்களை அனுமதித்தார்.  ஒரு கட்டத்தில் பணிகள் பாதியே முடிந்திருந்த நிலையில் மொத்த தொகையும் தீர்ந்து விட, அக்கம் பக்கத்திலும், உற்றார் உறவினர்களிடமும் கடன் வாங்கினார்.  அதன் மூலம் பணிகள் சிறிதளவு நகர்ந்தனவே தவிர, முடிந்தபாடில்லை. இனி பணிகளைத் தொடரவே இயலாது!… என்கிற நிலை வந்ததும், அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு தனது அன்றாடப் பணிகளில் ஆழ்ந்தார் அவர். 

      மண்ணில்  புதைத்த விதை மரித்துப் போகுமா? வாங்கிப் போட்ட கடன் மறைந்து போகுமா? வங்கியிலிருந்து தவணை மற்றும் வட்டிக்கான கேட்போலை வந்திறங்க, திரும்பச் செலுத்துவதற்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டி வங்கிக்கு கடிதம் எழுதினார், அதையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தொடர முடியாமல் போனது. பிரச்சினை உச்ச கட்டத்திற்குப் போக, பாதி கட்டப்பட்ட நிலையிலிருந்த கட்டிடம் வங்கியால் ஏலம் விடப்பட்டு கடன் வசூலிக்கப்பட்டது.

      இதுதான் அகலக் கால் ஏற்படுத்திய அகால விபத்து.  இதே நபர் தன் கையிருப்புக்குத் தகுந்தாற் போல் முதலில் இரண்டு அறைகளை மட்டும் கட்டிக் கொண்டு குடியேறியிருக்கலாம். அதன் பிறகு தொகை சேரும் போதெல்லாம் அதற்குத் தகுந்த மாதிரி வீட்டை சிறிது சிறிதாக பெரிதுபடுத்தியிருக்கலாம்.

      சில வருடங்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த ஒருவர் அந்தக் கால கட்டத்தில் மிகவும் பிரபலமாயிருந்த இரும்பு பைப்பிலான சேர் (“எஸ்” டைப் சேர்) தயாரிக்கும் தொழிற்சாலையைத் துவக்கினார்.  எடுத்த எடுப்பிலேயே அதிக அளவு முதலீடு செய்தார்.  ஆடம்பரமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, படோடோபமாக அலுவலத்தை நிர்மாணித்து, அதிகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, துவக்கத்திலேயே  அதிக அளவு உற்பத்தி செய்து குவித்தார். ஆனால், காலமாற்றத்தின் விளைவாய் பிளாஸ்டிக் மோல்டிங் சேர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சந்தைக்குள் நுழைந்து விந்தை புரிய ஆரம்பித்ததில், இரும்புச் சேர்களுக்கான ஆர்டர்கள் வெகுவாய்க் குறைய ஆரம்பித்தன. அகலக் கால் வைத்த அவரால் அந்தச் சரிவைச் சமாளிக்க முடியாமல் போக, திக்கித் திணறி கடைசியில் மொத்தத்தையும் வந்த விலைக்கு விற்று விட்டு பெரிய நஷ்டத்தைச் சந்தித்து விட்டு, வேறொரு கம்பெனியில் பணியாளராகப் போய்ச் சேர்ந்து கொண்டார்.

      இவரே, அளவான முதலீட்டோடு, ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் இல்லாத வகையில் தொழிலைச் செய்திருந்தால், சரிவின் வீரியம் இவரை வெகுவாய்ச் சாய்த்திருக்காதல்லவா?

      “நிதானம்… நிதானம்!”… என்று ஒவ்வொரு அடியிலும் நமக்கு நாமே சொல்லிக் கொண்டு நடை பயின்றால், அகலக் கால் வைக்கும் நினைவும் வராது, ஆபத்தை சந்திக்கும் நிலையும் வராது.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அரை வேக்காட்டு அதிபர்கள் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    அனுபவம் ஓர் அருந்தவம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்