இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த ஊறுகாய் பாட்டிலை எல்லாம் என் கிழிசல் பனியன் துணி இருக்கு பாரு அதையெல்லாம் எடுத்து அதுக்குள்ளே சுத்தி பெரிய புளூ பெட்டில அடுக்கி வை.
உவ்வே, இந்த அழுக்கு நாத்தம் எடுத்த பனியன் துணிலயா? அதுக்கு ஊறுகாயே எடுத்துண்டு போக வேண்டாம்.
உன் கைல இருக்கறது உன் பழைய அழுக்கு ஸ்லிப், என் பனியன் இல்லை. கப்பு இங்கே வருது.
ஆமாம் ஆமாம், எங்காத்து கொடில காயப்போட்டிருந்த இந்த அழுக்கு ஸ்லிப்பை திருடி வச்சிண்ட அந்த நாட்களெல்லாம் மறந்து போச்சாக்கும்.
சரி, சரி பழசெல்லாம் இப்ப எதுக்கு மளார்னு பேக்கிங் வேலையை பாரு
ஓ இதெல்லாம் என்ன டயலாக்னு முளிக்கறீங்களா? ஒண்ணுமில்லை முதல் தடவையா வெளிநாட்டு பயணம்(லண்டன்)முதமுதலா ஏரோப்பிளேன்ல ஏறப் போறோமில்லை ரெண்டு நாள்ல அதுதான்.
யாருப்பா அது, நீ லண்டன் போனா என்ன,லாகூர் போனா என்ன அந்த கொடில இருந்து திருடினேன்னு பழி போட்டாங்களே அந்த கதை சொல்லுன்றது.
ஹி…ஹி… அதெல்லாம் எதுக்கு இப்ப அறியாத வயசுல செஞ்ச காதல் தப்புக்கள், அதுவா இப்ப முக்கியம். சரி சரி எனக்கும் அந்தப் பழைய கதைகளை சொல்றதுக்கு எப்பவும் தெவிட்டாது, அதையும் கொஞ்சம் சொல்றேன்.
நான் பிறந்தது, வளந்தது படிச்சது எல்லாம் இந்த மதுரைலதான்.இப்ப சொக்கிகுளத்துல பங்களா கட்டிண்டு இருக்கேன், ஆனா அந்த படிக்கிற காலத்துல இருந்தது,வைகை ஆற்றை ஒட்டினாப்பல இருக்கே லட்ச்மிநாராயணபுர அக்கிரகாரம், அதுல நடுவாந்தரமா ஒரு ஸ்டோர்.
மதுரைல அப்பல்லாம் ஸ்டோர்னு சொன்னா ஒரு நீளமான தொடர் வீடுகள்.10 ,12 குடித்தனம் எதிரும் புதிருமா ஒரு ஸ்டோர்ல இருக்கும். பாத்ரூம் டாய்லெட், கிணறு ,எல்லாருக்கும் பொது. ஒரு நீளமா மொட்டை மாடி அங்கே நைட் எல்லாரும் பாயோ, ஜமக்காளமோ விரிச்சு படுத்துப்போம்.
அந்த மொட்டை மாடில இன்னொரு சவுகரியம், பக்கத்துல கல்பனா தியேட்டர். அதாவது எங்க ஸ்டோர் பின் சுவரை ஒட்டி ஒரு சாக்கடை கால்வாய், அதுக்கு அடுத்து தியேட்டர்தான்.ராத்திரி நைட்ஷோ மாடில படுத்தா வசனம் கேக்கும். அந்த துணி காயப் போடற கொடிக்காக கம்பம் இருக்கே அதுக்கு பக்கமா நின்னா பாதி படம்( அதாவது இடுப்புக்கு கீழே) கூட தெரியும்.
கொடின்னா தெரியாதா, அதான்பா துவைச்ச துணிகளை வெய்யில்ல காயப் போட ரெண்டு கம்புகளுக்கு நடுவே கட்டற நீளமான கயிறு.பொதுவா அந்தக் காலத்துல எல்லார் வீட்டு மாடிலயும் இந்த கொடிக் கயிறு உண்டு, அதுல துணி காயப் போட வற இளசுகள் காதல்ல விழறதும் சகஜம். மழை, குளிர் காத்துனு தியேட்டர் வாசலை புளூ ஸ்கிரீன் போட்டு மூடினா ஒண்ணும் தெரியாது, வசனம் மட்டும் கேட்டுக்கலாம்.
இப்படி பல படங்களோட வசனம் கேட்டு கேட்டு எங்க ஸ்டோர் பசங்களுக்கு வசனம் அத்துப்படி. ‘கல்யாணப் பரிசு’படம்னா பாட்டு வசனம் எல்லாம் தலைகீழா மனப்பாடம். வெள்ளி விழா தாண்டி ஓடிச்சே.
நான் அமெரிகன் காலேஜ்ல டிகிரி முதல் வருஷம் படிச்சிண்டிருந்தேன். அப்பதான் முதல் முதலா பெண்கள்னா என்னனு தெரிஞ்சிக்க ஒரு ஆர்வம் வந்தது. அதுவும் எதனாலேன்னா பசங்க குசு குசுனு பேசறதை கேட்டு ஒரு கெமிகல் ரியாக்ஷன் திடீர்னு.
எங்க ஸ்டோர்ல எங்க போர்ஷன் 6 வது, அதாவது நடுவுல. முதல் போர்ஷன்ல, ஒரு சின்ன ஃபேமிலி சங்கரய்யர், வேதா மாமி அவங்க பொண்ணு சுசீலா.
சுசீலா நல்ல கலரா அழகா புஷ்டியா இருப்பா, முனிசிபல் ஸ்கூல்ல 9வதோ 10வதோ படிக்கறானு நினைக்கறேன். அவ ஸ்கூலுக்கு போறப்ப நின்னு நிதானமா ‘அம்மா போய்ட்டு வரேன்’ ன்னு கல்யாணப்பரிசு சரோஜாதேவி மாதிரி கத்தி சொல்வா.
அப்ப நானும் காலேஜ் புறப்படற டைமா, அவசரமா பாண்ட்ஸ் பவுடரை முகத்துல அப்பிண்டு புறப்படுவேன்.ஆனா சுசிலா கிட்ட பேசற தைரியம் வரலை. ஆனா அவ ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னால அவ அம்மா கிட்ட கத்தி சொல்லிண்டு போறது எனக்காகத்தான்னு நானா நினைச்சிப்பேன்.
ஒரு சனிக் கிழமை காலைல 10.30 மணி இருக்கும் மொட்டை மாடில உக்காந்து கெமிஸ்ட்ரி புக்கோட போராடிண்டிருந்தேன். கல்பனா தியேட்டர்ல அசோகன் வில்லத்தனமா பேசிண்டிருக்கார்.
திடீர்னு பூச்சு மஞ்சள், சந்திரிகா சோப் கலந்த கலவை மணம். சுசீலா ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் நிறைய துவைத்த துணிகளோட தூக்க முடியாம தூக்கிண்டு வந்தா, துணி காயப் போட.
முதல் தடவையா பக்கத்துல நேருக்கு நேர் அவ முகத்தை பாத்தேன், உண்மைல அழகிதான். லேசா புன்னகை அவ முகத்துல. கெமிஸ்ட்ரி புக்ல மனசு போகலை. துணிகளை காயப் போட்டுண்டே கிட்டத்தட்ட ஒரு 6 அடி தூரத்துல வந்தப்ப , “என்ன வசனம் கேக்கறயா, பாடம் படிக்கறயானு” மெதுவா கேட்டா.
அவ குரலை கேட்டே என் நெஞ்செல்லாம் ஐஸ்கிரீம்.
“இல்லை மண்டே கெமிஸ்ட்ரீ எக்சாம், படிக்கலைன்னா நானும் உன்னை மாதிரி குண்டடிக்க வேண்டியதுதான்.”
“ சரி சரி நல்லா படி, பெயிலாற அளவு நாங்க ஒண்ணும் மக்கு இல்லை அஞ்சு ராங்க்குக்கு உள்ளேதான் எப்பவும் தெரிஞ்சிக்கோ.நான் அனுமார் கோவிலுக்கு போகணும் நேரமாச்சு,உங் கூட பேசிண்டிருந்தா அம்மா இங்கேயே வந்து சட்ணி பண்ணிடுவா”
கால் கொலுசு கிணுகிணுக்க இறங்கி போயிட்டா.இப்ப கெமிஸ்ட்ரி படிக்க முடியமா நீங்களே சொல்லுங்க. டப்னு புஸ்தகத்தை மூடினேன், போறும் இதுவரை படிச்சதுக்கு 60, 65 மார்க் வாங்கிடலாம்.
கீழே போனா அம்மா, “ டே போய் மெஷின்ல இந்த அரிசியை அரைச்சிண்டு வந்துடுனு, நானும் நாலு நாளா சொல்றேன் காதுல போட்டுக்க மாட்டேங்கறே”பித்தளை தூக்கை தூக்கி கைல கொடுக்கறா.
“ போம்மா எனக்கு வேற வேலை இருக்கு” சட்டைய மாட்டறப்ப ட்யூப் லைட் பளிச்சிட்டது, அட சுசீலா என்ன சொன்னா, “ சரி சரி அம்மா கொடு அந்த அரிசித் தூக்கை, அரைச்சிண்டு வரேன்” மாவு மில் அனுமார் கோவில் பக்கத்துலதான்.
ஸ்டைலா தலையை தூக்கி வாரிண்டேன், லேசா பவடர் , பேகி பேன்ட், நீலக் கலர் டீ ஷர்ட் சகிதம் பெரிய பித்தளை தூக்கு கையிலே எடுத்துண்டு வேகமா புறப்பட்டேன்.
அம்மா“ என்னடா மாவரைக்கதானே போறே?இல்லை ஏதாவது டிராமால ஆக்டிங் கொடுக்கப் போறயா?”
“ ஏன் அதுக்குதான் போறேன், பாத்தா எப்படித் தெரியறது, நீ சொல்றதை கேட்டு வேலை செஞ்சாலும் ஏதாவது கோளாறு, செய்யலைன்னாலும் நைநைன்னு பிடுங்கல், என்னதான் பண்றது எனக்குத் தெரியல்லை.”
“ இல்லை ஏதாவது ஜெய்ஷங்கர் படத்துக்கு போறயோ,இல்லை எங்கயாவது எக்குத்தப்பா மாட்டிண்டுட்டயோனு டவுட்”
அம்மாவுக்கு குசும்பு ஜாஸ்தி, பதில் பேசாம மாவு மில் போயி பித்தளை தூக்கை வரிசைல வச்சிட்டு, “ பாண்டி அண்ணே அரைச்சு வைங்க இதோ கோவில் வரை போயிட்டு வரேன்”
அவசரமா அனுமார் கோவில் வந்தேன், வாசல்ல பூ வாங்கிண்டு இருந்தா சுசீலா அடிக்கடி திரும்பி பாத்துண்டே.
என்னைத்தான் தேடறானு தெரிஞ்சது.
ராவுத்தர் புஸ், புஸ்னு துண்டை வச்சு மொட்டை குழந்தைக்கு மந்திரம் ஓதிண்டிருந்தார், அவரோட மந்திரத்துக்காக காத்திருந்த வரிசை மறைவுல நான் இருந்ததை சுசீலா கவனிக்கலை.
காலை டப்னு ஒரு தட்டு தட்டிண்டு கோவிலுக்குள்ளே போனா. நான் பூனையாய் பின் தொடர்ந்தேன். அர்ச்சகர் சூடத் தட்டை நீட்டினப்ப என் கையும் நீண்டதை பார்த்து அவள் முகம் சற்றே மலர்ந்தது.
பிரகாரம் சுத்தி வரப்ப ரெண்டடி கேப் விட்டு கூட நடந்தேன்.
சுசிலா,” பரவாயில்லை ரொம்ப ட்யூப் லைட் இல்லை நீ”
“11th ல 476 மார்க் வாங்கியிருக்கேனாக்கும் பெருமையா சொன்னேன்.”
“அப்ப எதுக்கு இன்ஜினியரிங் படிக்காம பி.எஸசி படிக்கறயாம்”
“ஏன் உனக்கு இனஜினியரிங் படிக்கறவங்களதான் பிடிக்குமோ?”
“என் அத்தை பையன் மெட்ராஸ்ல கிண்டி இன்ஜினியரிங் காலேஜ்லதான் படிக்கறான்”
சட்னு என் முகம் வாடிப் போனதை பக்கவாட்டிலிருந்து பாத்து விஷமமாய் சிரித்தாள்.
2 நிமிடம் ஒண்ணும் பேசாமல் நடந்தேன்,
“ஐய்யே மூஞ்சியைப்பாரு இஞ்சி தின்ன ஏதோ மாதிரி, எனக்கு என் அத்தை பையனை விட, உன்னைதான் பிடிக்கும் போதுமா”
சட்னு அவ கையை எட்டிப் பிடித்தேன், “ஐ லவ் யூ சுசீ”
“சரி சரி கையை விடு யாரும் பாக்கப் போறாங்க”விடு விடு வென வெளியே நடந்தாள் ஒரு புன்னகை விகசிக்க.
மெஷின்ல இருந்து மாவு தூக்கை எடுத்துண்டு வந்து வீட்ல வச்சேன், நேரா மாடிக்கு போனேன் இப்பவும் அசோகன்தான் கல்பனா தியேட்டர்ல பேசிண்டிருந்தார். கொடியில இன்னும் சுசிலா காயப் போட்ட துணிகள் காத்துல ஆடிண்டிருந்தது.
பக்கத்துல போய் அவளோட துணிகளை தொட்டுப் பாத்தேன். யூனிபார்ம் ஷர்ட், உள்ளே போடற ஸ்லிப். அது பனியன் மாதிரிதான் கொஞ்சம் இருந்தது, ஆனா பூச்சு மஞ்சள் கரை அங்கங்கே லேசா சந்ரிகா சோப் வாசனை. கையால் தொட்டு இழுத்து அதை சுருட்டி வைத்தேன், அதன் மணம் மனதை மயக்கியது.
யாரோ படில ஏறி வர சத்தம், அவசரமாய் அந்த பாடீஸ் ஸ்லிப்பை ஷர்ட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டேன். படியில் ஏறி வருவது சுசிலாவும், அவ அம்மாவும் இன்னும் சில துவைத்த துணிகளோட. ஓரக் கண்ணால் என்னைப் பாத்து அரைப் புன்முறுவலோடு நடந்து, கடந்து போன கணம் என்னை பறி கொடுத்தேன்.
கீழே வந்ததும் அம்மா,” என்னடா இது பித்தளை தூக்கு அலுமினியம் ஆயிடுச்சு, அரிசி கொடுத்தா மிளகாப் பொடி ஆயிடுச்சு”
ஐய்யோ இப்ப இந்த சுசிலாவோட உள்ளாடையை எங்கே ஒழிச்சு வைக்க……
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings