in ,

அபஸ்வரம் (சிறுகதை) – சசிகலா எத்திராஜ், கரூர்

எழுத்தாளர் சசிகலா எத்திராஜ் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

”பூக்குட்டி சீக்கிரமா கிளம்புடா, பள்ளிக்கு நேரமாச்சு!” சுகந்தி தன் எட்டு வயதான மகளிடம் சொல்லிக் கொண்டே மதியஉணவை அதங்கிய சில்வர் டப்பாவில் இரண்டு பேருக்கும் எடுத்துப்  போட்டவளோ தானும் கிளம்பினாள். 

சுகந்தி கொசுவலை கம்பெனியில் வேலை செய்கிறாள். தானும் தன்னில் உருவான  குழந்தையும் மட்டுமே அவ்வீட்டின்  கிளிக்கூண்டில் வாழ்கிறார்கள்.

காலையில் கிளம்பிப் பள்ளியில் மகளை விட்டுட்டு வேலைக்குப் போனால் மாலை வரும்போது வாசலிலே காத்திருக்கும் மகளின் புன்னகையில் இன்று வரை தன்னுயிரைத் தாங்கிக் கொண்டு வாழும் அபலை.

காதல் அவளின் வாழ்க்கையை திசைமாறிய பறவையாக ஆழிக்காற்றில் சுழற்றி தூர எறிய காதல் தீயில் மலர்ந்த மலர் தான் பூங்கொடி.

ஆணோ பெண்ணோ அவர்களின் காதல் அந்தரங்கமான ஒன்று

அதனுள்  நுழைந்த கள்ளிச்செடி முட்களோ கீறிச் சென்று விட அங்கே பிரிவு என்ற சொல்லால் காதல் சமுத்திரத்தின் ஆழத்தில் ஒளிந்து கொள்ள அவளின் காதலோ கடற்கரையைப் பிடிக்காமல் மோதிச் செல்லும் சீற்றமான அலையாக அவளை அலை கழித்தது வாழ்க்கை.

ஆனாலும் அவள் காத்திருக்கிறாள் தான் இழந்ததை மீட்பேன் என அவளுக்கான வைராக்கியம். ஊராயின் பேச்சும் அவளைச் சர்ப்பமாகத் தீண்டிச் சென்று கொண்டு தான் இருக்கிறது தினதினமும். 

அவளின் கள்வாடியவனின் பெயரோ ரகுவரன். என்ன ஒரு அழகான பெயர். பெயருகேற்ற ஆளும் அழகும் நிறைந்தவன்.

அவளை மயக்கவே இப்பிறப்பே எடுத்து இருப்பானோ என்னுமளவுக்கு இருந்தவனை விதி  சந்திக்க வைத்த சூழ்நிலையை இன்று வரை அவளால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அவளுள் எரியும் அக்னியின் ஜ்வாலையோ என்று அவளையே எரிக்குமோ தெரியவில்லை.

பதினெட்டு வயதில் தாய் இறக்க, தந்தையோ குடிக்கு அடிமையாக அவரின் வயிற்றுக்குள் தனக்கும் சேர்த்து

தினமும் தையல் கடைக்கு வேலைக்குச் செல்கிறவளை போட்டோ எடுக்கும் கடைக்கு முன் அமர்ந்து தன் காமிரா கண்களால் அளவெடுத்தான் ரகுவரன்.

அவனின் பார்வையில் சிலிர்த்து ஒன்றுமறியாத சிறு பறவையாகச் சிறகுகளை விரித்துப் பறக்க முயற்சித்தது.

தாய் இல்லாமல்  கண்டிக்க யாருமில்லாத வழியின்றி, வயதில் கோளாறில் உடல்நிலையில் தோன்றும் மாயஜாலங்களில் ஹார்மோன் கட்டுபாடின்றி அவன் தன்னைப் பார்ப்பது மனத்தினுள்  ஆசை விதையைத் தோற்றுவித்தது.

அதை அவளின் முகப் பாவத்தில்  அறிந்தவனோ விரைவாகத் தன் வலையில் சிக்கும் மீனாக்கினான் ரகுவரன்.

தந்தைக்கும் தெரியாமல் அவனின்  வீட்டுக்கும்  தெரியாமல் கல்யாண பந்தத்தில் ஒப்புக்கு  ஒரு மஞ்சளை மஞ்சக் கயிற்றில் கட்டி தாம்பத்ய வாழ்க்கையின் ருசிகளை அறிய வைக்க அவளின் இளமை அதிகமாகவே தீனிப் போட்டது. 

அங்கே அவர்களுக்குள் காதல் என்ற போர்வையில் அன்றில் பறவைகளாகச் சிறகை விரித்துப் பறந்தார்கள். அவனின் மேல் பித்தாக இருந்தவளின் மீது போலி அன்பைக் கொண்டவனோ ஒப்பனை பூசிய நடிகனைவிட அழகாக நடித்தான்.

தினசரி நாட்களோ திகட்டாமல் சென்றாலும்  அங்கே நுழைந்த ஓநாய் கூட்டமோ இடையில் புகுந்தது. இனமும்  ஏற்றதாழ்வுகள் எனப் பல காரணங்களைச் சொல்லி உயிர் மட்டுமே மிஞ்சும் என அவளை மிரட்டி வாழ்க்கையில் மீண்டும் அவனின் கண் முன் வரக் கூடாது என மொத்தமாகப் பிரித்து விடக்  கோழையைப்  போல அவனின் பெற்றோர்பின் சென்றவனைக் கண்டவளுக்கு மனக் கொதிப்பை ஆற்றிக் கொள்ள வழியின்றி தவித்தாள் சுகந்தி.

அந்நிலையிலும் அவளுக்கான  ஆனந்தம் கொள்ள வைத்தது ஒன்று எதுவென்றால் தன் கர்ப்பபையில் இரண்டு  மாதமாகச் சிப்பிக்குள் வீழ்ந்த  மழைத்துளி முத்துவாக மாற அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுள் இருந்தது. 

அதனாலே தான் இழந்த வாழ்க்கையை  அழித்துக் கொள்ளாமல் இருந்தவளை, இதே ஊரார்  ஒருத்தனைக் கட்டி அவனும் விட்டுட்டுப் போய்விட்டானென ஏளனப்  பேச்சுகளோ சுனாமியாகச் சுழல, அதிலிருந்து மீள ரொம்ப கஷ்டமும் பட்டாள். 

பாறைகளிலும் புதர்களுக்கிடையே வளரும் சப்பாத்திக்கள்ளி தண்ணீர் விட்டு வளர்க்க வேண்டிதில்லை.

தானாகவே அது வளர்ந்து விடும். அதற்காகத் தனியாக எந்தவித உழைப்பையும் கொடுக்க வேண்டாம். இயற்கையோடு போராடி தன் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளும் காதலைப் போல.

காதல் அடுத்தவர்  சொல்லி வருவதில்லையே. வந்தால் அது அவரவர் வாழ்க்கையை மலரச் செய்யவதோ இல்லை கருகச் செய்துவிட்டு சென்று விடுமோ இரு மனங்களின் இருக்கும் நேசம் உண்மையானதாக இருந்தால் மட்டுமே. 

காதல் வந்தால் தானாகவே நேசக்காற்றை சுவாசித்து நிலைத்து நிற்க இரு மனங்களும் இணைந்து போராடி ஜெயிக்க வேண்டும்.

ஆனால் இங்கே ஒரு கை ஓசை என்றும் நிலைக்காது என அறிய முடியவில்லை அப்பேதைக்கு. அவள் அவனின் மேல் கொண்ட நேசம் நிஜம்.

ஈரமண்ணில் வைக்கும்  வாசமுள்ள மலர்க்கு ஒவ்வொரு நாளும் கவனிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தால் தான் நறுமணத்தோடு மலரும் எனத் தனக்குத் தானே எண்ணி ரகுவரனின் மீது தீவரமான காதலை அளித்தவளுக்கு அவன் கொடுத்துச் சென்றது பாலையில் தெரியும் கானல் தான் வாழ்க்கையெனக் கற்றுக் கொடுத்துவிட்டான். 

தந்தையை விட்டு இவன் மட்டும் தான் தன் உலகம் என நினைத்தவளுக்கு தாயின் அன்பினை கொடுப்பானென நினைத்தவளுக்கு அது பொய் மூலாம் பூசிய தகரம் என அறிந்தபோது அவளால் நிலை கொள்ள முடியவில்லை.

அதைவிட ஏமாளி, ஏமாந்தவள் இன்னும் எத்தனை பேரைப் பிடிக்கப் போறாளோ  என்றப் பேச்சைக் கடக்க இயலாமல் தவித்துக் கொண்டு தான் இன்று வரை கடந்தும் கொண்டிருக்கிறாள்  சுகந்தி.

அவள் தன்னவனின் மேலே வைத்திருந்து அளப்பரிய பிரியத்துடன் நேசம் கலந்த அன்பை புரியாமல் மேனியை மட்டும் அறிந்துச்  சென்றவனை திரும்ப வருவானா… அப்படி வந்தால் தன் மனம் அவனை எவ்விதம் ஏற்றுக் கொள்ளும்.

ஏனோ அவளுக்கு  வாழ்க்கையின்  மேலே ஒரு பிடிப்பின்றி வெறுப்பு உண்டானது. 

கோழையாக ஓடியவனை  நினைத்துக் காத்திருப்பதும் தேடுவதும்  மனத்தைப் பிசைந்தது.

தன் வலிகளை மறைக்கப் பூங்கொடி எனும் பூங்கொத்தை இறுக்கமான பிடித்து  வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் சுகந்தி.

அவளின் தினசரி வாழ்க்கைப் போராட்டமாகப் பலவித எண்ணங்களோடு மகளை அழைத்துக் கொண்டு செல்லும்போது மகளின் பேச்சில்  இப்போது அடிக்கடி உதிக்கும் வார்த்தை அப்பா.

அவர் காணாம் எங்கே? எல்லார் வீட்டிலும் அப்பா இருக்காங்க. நம் வீட்டில் மட்டும் இல்லை ஏன? என அவளுக்கு மொழியில் கேட்பவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தாலும் பேச்சை மாற்றி மகளின் மனத்தை வேறு திசைக்கு மடை மாற்றிவிடுவாள் சுகந்தி.

திருமண நாட்களில் வாழ்ந்த நாட்கள் சொற்பமாக இருந்தாலும் அவனுக்கு உண்மையாக வாழ்ந்தவளின் உள்ளம் இன்றோ நாளையோ வருவான் என்ற எதிர்ப்பார்ப்பு இன்று வரை  அதிகரித்துக் கொண்டே தான் வந்துள்ளது. 

எல்லாம் தன் மகளுக்காக மட்டுமேயெனத் தனக்குள்ளே சொல்லியவளுக்கு அதற்கான விடையைத் தேடித் தேடிக் களைத்துப் போனது சுகந்தியின் மனம்.

பசுமையான நாட்கள் வறண்ட பாலையாக மாற்றியவனின் மீதும் அதே அளவு காதல் இருக்கிறதா என யோசனை செய்தால் அதற்கான பதில் இன்று வரை தெரியவுமில்லை. புரியவுமில்லை அவளுக்கு.

மகளைப் பள்ளியில் விட்டுட்டு குழந்தையை  ஆயிரம் கொஞ்சல் மொழிகளில் கொஞ்சி முடித்து,  தன் வேலைக்குச் சென்றவளுக்கு அங்கே போனபோது தான் தெரிந்தது. 

அவள் வேலை  செய்யும் கம்பெனி வேறு ஒருவருக்கு கை மாறியதை ஏற்கெனவே அறிந்தவள் தான். 

ஆனால் அது கிடைக்கக் கூடாதவனுக்குக் கிடைத்திருப்பதைக் கண்டவளுக்கு மனம் வலித்தது.

இந்த வேலையும் நிலைக்குமோ. ஆள் குறைப்பு சொல்லி நிறுத்தி வேலையை விட்டு நிறுத்தி விடுவாங்களோ என்கிற பயம் இருந்தது.

இனத்தையும் ஏற்றத்தாழ்வுகளால் அப்பனின் துண்டிலும் அம்மாவின் முந்தானையிலும் தன்னை  மறைத்துக் கொண்டு சென்றவன் இன்று இங்கே கம்பீரமாக நடைப் போடுவதைப் பார்த்து மனத் துடித்தது.

தான் மட்டும் இன்று வரை சுமைதாங்கியா மகளைத் தாங்கிப் பெற்று இத்தனை நாட்களாகத் தனிமையில் பிடியில் மற்றவர்களின் முன் வாழ்க்கையை தொலைத்தவளாகக் காட்சியளித்து கொண்டிருப்பவளின் முகமோ இறுக்கத்தைத் கொண்டிருந்தது.

யாருக்காக இத்தனை வருடங்களாகக் காத்திருந்தாளோ அவனைக் கண்டபிறகு அவளுக்கான அவ்வாழ்க்கை அடர் கசப்பினை அளித்தது.

ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டுத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முன் உயரமான மனிதனாக இன்றைய நாகரியத்தின் தோற்றத்தில் வந்து நின்றவனின் கண்களோ அவளை மேலிருந்து கீழே வரை அணுஅணுவாக ஆராய்ந்தது தன் லேசர் விழிகளால்.

எட்டு வருடங்களுக்கு முன் சதைப் பிண்டமாக இணைந்து தனக்கென்று ஒரு மகளைக் கொடுத்துவிட்டுச் சென்றவனின் பார்வை அறுவெறுக்க அவனை ஏறியிட்டுப் பார்த்தவளுக்கோ வாழ்க்கையில் ஒரு கயவனை நம்பி பணையம் வைத்துத் தோற்றுவிட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்த அதை உணர்ந்தவளோ அறுவெறுத்துப் போனாள் சுகந்தி.

மனம் சட்டென ஒரு தெளிவு தோன்றவும் தன் ஈட்டி விழிப் பார்வையோடு நோக்கியவளோ ” என்ன சாரே ராவுலே அடுப்பாங்கரையை உருட்டும் திருட்டுப் பூனையின் பார்வையிலே கவிழ்த்து கொட்டிவிட்டுச் சென்று விடலாம் நினைக்கிறீங்க போல” என எள்ளலாகக் கேட்டவளை முகம் கறுத்துப் போய் நின்றாலும் அவளின் அழகு அவனைத் தூண்டியது தான் உண்மை… ”சுகந்தி உன் கூடப் பேசணுமே. உன்னை முதல் முறையைப் பார்த்ததை விட இப்ப தான் குலோப் ஜாமூன்  மாதிரி பார்க்கத் தித்திப்பாகப்   இருக்க” எனச் சொன்னவனை ஏறிட்டு அறுவெறுத்தப் பார்வையோடு நோக்கியவளோ, 

”என்  வாழ்க்கையோ மற்றவர்கள் முன் கேலிப் பொருளாகத் தினமும் வலம் வந்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் நீ வருவாயெனத் தினமும்  எனக் கண்ணாடி முன் நின்று  எனக்கான மனதின்  திருப்தியடைய  சொல்லிக் கொண்டிருந்தேன்.

அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உன்னுடைய ஒற்றைக் கபட பார்வையும் பேச்சும் காட்டிக் கொடுத்தது.

அன்று உன்னைச் சந்தித்தப் போது  அதைப் புரிந்துக் கொள்ளாத வயசு கோளாறு தான் எனக்கு.

 ஆனால்  இன்றும் என் வாழ்க்கைகுள்  நீ வருவாயென எதிர்ப்பார்ப்போடு தான்  இருந்தவளை உன்  நரி பார்வையிலே தெரிந்து தெளிந்து விட்டேன்.

 இனி உனக்கும் எனக்கும் பிறந்தக் குழந்தைக்காகக் கூட உன்னை அருகில் நெருங்க விடக் கூடாது. நாளைக்கு அது வளர்ந்து நிற்கும்போது அவளிடமும் தப்பாக நடக்கமாட்டாய் என்பது என்ன நிச்சயம். பெற்றோரைப் பார்த்ததும் நம்பி வந்தவளை நடு ஆற்றில் விட்டுச் சென்றவன் தானே நீ. இப்போது நமக்கிடையே பேச எதுவுமில்லை என்றே தோன்றுகிறது. 

இன்றைய வரை நான்  வாழ்க்கையில் மற்றவர்கள் முன் தோற்றுவிட்டேனேயென எனக்குள்ளே போராடிக் கொண்டிருந்தேன். 

இன்று தான் தெளிந்தது. ஸ்வரங்களை மீட்டும்போது அழகான ராகங்களுக்கிடையே அபஸ்வரமாக உன்னிடம் காதலை யாசித்துத் தோற்றேன். 

அன்றைக்கு இந்தத் தெளிவு  இல்லாமல் போனது என் கர்மம்மா நானே நினைத்துக் கொண்டு இருந்தாலும்,  எனக்காகக் கடவுள் கொடுத்தப் பரிசாக என் மகள் இருக்கிறாள். அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு அவளுக்காகவே இவ்வுலகில் தலைநிமிர்ந்து நடப்பேன்.

தாய் தோற்ற வாழ்க்கையை  ஜெயித்துக் காட்டுவாள் என் மகள்” எனச் சொல்லியவள் கடந்த காலத்தில் கணவனாக ஏற்றவளோ நிகழ்காலத்தில் இறந்து போன சவமாக எண்ணி அவன் எதுவும் பேசமுடியாத நிலையில் நிற்க வைத்துவிட்டு  அக்கம்பெனியிலிருந்து வெளியேறினாள் சுகந்தி.

வெளியே வந்தவளின் முகத்திலோ சூரியனின் அனல் பார்வையோ குளிர்வித்தது வேர்வையின் வாயிலாக. 

அதை அழுந்தத் துடைத்தவளோ இப்பிரபஞ்சத்தில் இத்துண்டு மண்துகளாக இருக்கும் நிலமகள் தன்னையும் தன் மகளையும் தாங்கிக் கொள்ள மாட்டாளா என்ன?. 

இயற்கையை நம்பி வளரும் சப்பாத்திக்கள்ளியாகத் தன் வாழ்க்கையில் முட்களாலே  சூழ்ந்து  இருக்கட்டும். 

ஒருவனால்  ஏமார்ந்து  துணிவின்றி தோற்றுவிட்டேன் என்கிற மனதின் கேள்வியோ இப்போது தான் அடர்மழையில் மண்ணில் விழ்ந்து கரைந்து போனது சுகந்திக்கு.

எழுத்தாளர் சசிகலா எத்திராஜ் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீராத சுமை (சிறுகதை) – ஹேமா பிரேம்

    ஏக்கம் (ஒரு பக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி