எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பூனைபோல் அறைக்குள் நுழைந்த தன் இளைய மகன் கருணாகரனைப் பார்த்த சிதம்பரம், ‘என்னப்பா… ஒரு வாரமா நீ இருக்கற இடமே தெரியல… நேரமே ஆபீசுக்குப் போயிடறே, வீட்டுக்கு லேட்டா வர்றே.. ஏதாவது உன் தாத்தா மாதிரி இரண்டாவது வீடு ரெடி பண்ணிட்டயா?’ என்றார் கேலியாக.
‘அட போங்கப்பா… ஒரு வீட்டுக்கே வாங்கற சம்பளம் பத்த மாட்டேங்குது… இதில இன்னொரு வீடு வேறே.. ஆபீசில ஆடிட்டிங் போயிட்டு இருந்தது.. நேற்றோட ஒருவழியா முடிஞ்சது… அதுதான் இன்னைக்கு என்னோட தகப்பன் சாமி திருவாளர் சிதம்பரநாதரைத் தரிசனம் பண்ணலாம்னு வந்தேன்..’ என்றான் கருணாகரன் தன்பங்குக்கு நக்கலாக.
அப்பாவும், மகனும் பேசிக்கொள்வதை யாராவது மூன்றாவது மனிதர்கள் அருகிலிருந்து கேட்டால், அவர்களை அப்பா, மகன் என்று ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். அந்த அளவிற்கு கேலியும், கிண்டலும் அவர்களின் பேச்சில் இடம் பெறும்.
அதற்கு எதிர்மறை குணம் கொண்டவன் சிதம்பரத்தின் மூத்த மகன் மூர்த்தி. யாரிடமும் நெருங்கிப் பழக மாட்டான். குரலெடுத்து உரக்கப் பேச மாட்டான். தேவை என்றால் மட்டும் அம்மாவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி தன் காரியத்தை முடித்துக் கொள்வான்.
அதுவும், பிறந்ததிலிருந்து அவன் தன் அப்பாவிடம் பேசியது அனைத்தையும் ஒன்று சேர்த்தால், மொத்தமாக ஒரு நாப்பது பக்க நோட்டில் இரண்டு பக்கம் மட்டுமே வரும். அவனின் அந்த குணத்தின் காரணமாக, மூர்த்திக்கு ரோபோ என்று பெயர் வைத்திருந்தனர் சிதம்பரமும், கருணாகரனும்.
அதனால் தானோ என்னவோ, கல்யாணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் போக மூர்த்தி விருப்பப்பட்டபோது, குடும்பத்தினர் அனைவரும் முழு மனதோடும், மகிழ்ச்சியோடும் அதற்கு ஒப்புதல் அளித்து வழி அனுப்பி வைத்தனர்.
கருணாகரன் ஏதோ பேச வாய் திறக்கும்போது அறைக்குள் தடதடவென்று ஓடி வந்தான் கருணாகரனின் ஐந்து வயது மகன் அருண். ‘தாத்தா.. தாத்தா.. நேத்து ராத்திரி அப்பா மொட்டை மாடியில சிகரெட் குடிச்சாங்க… உங்ககிட்ட சொல்றேன்னு சொன்னதும் பயந்து போய் எனக்கு சாக்லெட் கொடுத்தாங்க..’ என்றான்.
‘திருட்டுப்பய, சிகரெட் குடிச்சானா? இரு அவனுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கிறேன்..’ என்று சொல்லி கருணாகரனின் காதைப் பிடித்து வலிக்காமல் திருகினார்.
மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி, ‘படவா என்னை விட்டுட்டுத் தனியாகவாடா குடிச்சே?’ என்றார் கிசுகிசுப்பாக.
தன் அப்பாவுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த மகிழ்ச்சியில், அருண் அறையை விட்டு வாயில் ஹார்ன் அடித்துக் கொண்டு பஸ் ஓட்டிக்கொண்டு வெளியே ஓடினான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அப்பாவும் மகனும் கலகலவென வாய்விட்டுச் சிரித்தார்கள்.
அப்பாவையே ஒரு கணம் பார்த்தான் கருணாகரன். வெளியில் சிரித்த முகமாக இருந்தாலும், அண்ணனையும் அவனையும் வளர்த்து ஆளாக்க அவர் பட்ட சிரமங்கள் ஒரு திரைப்படம் போல் அவன் மனதில் ஓடியது.
அண்ணனின் படிப்புத் தேவைக்கு ஒரு பெரிய தொகை தேவைப்பட்ட போது, உறவினர் ஒருவரின் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு கடன் வாங்கி, பின் அதைத் திருப்பிச் செலுத்த அவர் பட்ட சிரமம் அவனுக்கு மட்டுமே முழுதும் தெரியும். ஏன், அந்தக் கவலைகளை அவர் அம்மாவிடம் கூடப் பகிர்ந்து கொண்டதில்லை என்பதையும் அவன் அறிவான்.
வயதின் காரணமாக, சுருக்கம் விழுந்திருந்த அவரின் முகத்தை உற்று நோக்கிக் கொண்டே அப்பாவிடம் கேட்டான் கருணாகரன். ‘அப்பா…இப்ப நாம பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருக்கிறோம். நீங்களும் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு நிம்மதியா ஓய்வில் இருக்கீங்க… ஆனா எனக்கு உங்களை ஏதாவது ஒரு வகையில் இன்னும் சந்தோசப்படுத்திப் பார்க்க ஆசையா இருக்கு. ஒளிக்காம, கிண்டல் பண்ணாம சொல்லுங்க… உங்க வாழ்க்கையில எதையாவது அனுபவிக்கவில்லை என்ற ஏக்கம் உங்க உள் மனசில் ஒளிஞ்சிருக்கா? இருந்தா மறைக்காமல் சொல்லுங்க, நான் நிறைவேத்துகிறேன்..’ என்றான் கருணாகரன்.
‘இந்தக் கேள்வியை எல்லோரும் மரணப்படுக்கையில் இருக்கும்போதுதான் கேட்பாங்க. ஏன்னா, அசையாமல் படுக்கையில் படுத்துக் கிடப்பவர் பெரிதாக ஒன்றும் கேட்டுவிட முடியாது என்பதால். ஆனால் நீ பரவாயில்ல… நான் தெம்பாக நல்லா நடக்க முடிகிற காலத்திலேயே கேட்டு விட்டாய். சரி… சொல்லுகிறேன், மொத்தம் எனக்கு என் வாழ்நாளில் அடைய நினைத்து, நிறைவேறாத ஆசைகள் மூன்று உண்டு. அதில் முதல் இரண்டு ஆசைகள் வெளியில் சொல்லலாம். ஆனால் மூன்றாவது ஆசை உன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது… அதற்கு ஒப்புக்கொண்டால் உன்னிடம் சொல்கிறேன். இல்லாவிட்டால் என் ஆசைகள் என்னோடு மண்ணில் புதையட்டும்..’ என்றார் சிதம்பரம்.
‘மனம் விட்டு சொல்லுங்க அப்பா.. உங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கும். இது என்னுடைய பிராமிஸ்..’ என்றான் கருணாகரன்.
‘என்னோட முதல் ஆசை… நான் பிறந்து, ஓடி விளையாடி, வளர்ந்த என் கிராமத்தில் குறைந்தது ஒரு வாரம் தங்கி என் பழைய நட்புக்களோடும், உறவுகளோடும் பேசிப் பழக வேண்டும். இரண்டாவது ஆசை, எத்தனையோ முறை நான் முயற்சி செய்தும் பல பல காரணங்களால் நிறைவேறாமல் போனது… அதாவது நல்ல பெளர்ணமி நிலவின் ஒளியில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும். ம்.ம். அடுத்து மூன்றாவது ஆசை….’ என்று இழுத்தார் சிதம்பரம்.
‘சொல்லுங்கப்பா… நான்தான் வெளியில் சொல்ல மாட்டேன் என்று பிராமிஸ் பண்ணியிருக்கேனே?’ என்றான் கருணாகரன்.
‘அதாவது நடிகை ரோஜாதேவியை நேரில் பார்த்துப் பேச வேண்டும்..’ என்று தன் மூன்றாவது ஆசையைச் சிதம்பரம் சொன்னவுடன் திக்கென்றிருந்தது கருணாகரனுக்கு.
அவர் சொன்ன ரோஜாதேவியைப் பற்றி கருணாகரனுக்கும் கொஞ்சம் தெரியும். ஐம்பதுகளில் தமிழ்த்திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த நடிகை. அவர் சேர்ந்து நடிக்காத கதாநாயர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரபலமான, அழகான, திறமையான நடிகை. சிதம்பரத்தின் இளமைப் பருவத்தில் நிச்சயம் அந்த நடிகை அவரின் கனவுக் கன்னியாக இருந்திருக்கக்கூடும்.
‘ரோஜாதேவிக்கு இப்ப வயசாயிருக்குமே அப்பா?’ என்றான் கருணாகரன்.
‘ஆமாப்பா… இப்ப பெங்களூர்ல இருக்காங்க. எங்க காலத்தில அவர் நடித்த எல்லாப் படங்களையும் தவறாமல், அவருக்காகப் பார்த்திருக்கிறேன். கன்னடம் தாய்மொழியாக இருந்தாலும், அவர் பேசும் மழலைத் தமிழ் இனிமையாக இருக்கும். வட்டமுகம்.. பெரிய கண்கள்.. நளின நடை என்று ஒரு நடிகைக்குத் தேவையான எல்லா அழகும் பெற்றவர் அந்த நடிகை. உனக்குப் புரியும்படி சொல்லணும்னா ரோஜாதேவி அந்தக் காலத்து ஐஸ்வர்யா ராய்… போதுமா?’ என்று முடித்தார் பெருமூச்சுடன்.
‘சரிங்க அப்பா… ஒவ்வொன்றாக உங்களின் ஆசையை நிறைவேற்றுவது என் கடமை…’ என்று அவருக்கு உறுதி அளித்துவிட்டு யோசிக்கத் தொடங்கினான் கருணாகரன்.
தன் அப்பாவின் கிராமமான புதூருக்குப் பக்கத்தில் உள்ள சிறிய நகரத்தில், வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தன் கல்லூரி நண்பனை அலைபேசியில் கூப்பிட்டு, புதூர் கிராமத்தில் ஒரு வாரம் அப்பா தங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டான்.
நண்பனும் ஒரு வாரத்தில் திரும்பக்கூப்பிட்டான். ‘டேய் கருணா.. உங்க அப்பாவோட புதூர் கிராமத்தில் ஓரளவு வசதியுடன் கூடிய வீடு பார்த்து எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன். அப்பாவிற்கு காப்பி, டிபன், சாப்பாடு போன்றவை பக்கத்து வீட்டில் இருக்கும் வீராயி என்ற பாட்டி கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். வீட்டின் சாவி வீராயிப் பாட்டியிடம் இருக்கும். நீ அப்பாவை அழைத்துக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் புதூர் கிராமத்துக்குப் போகலாம், அப்பா தன் விருப்பப்படி எத்தனை நாள் வேண்டுமானாலும் அங்கே தங்கலாம். வீட்டு வாடகை மற்றும் பாட்டியின் சாப்பாட்டுக்கு மட்டும் காசு கொடுத்துவிட்டால் போதும்..’ என்று திருப்திகரமான தகவல் கொடுத்தான்.
அப்பாவை புதூர் கிராமத்தில் தனிக்குடித்தனம் வைத்து விட்டு வந்த நான்காம் நாளே சிதம்பரத்திடம் இருந்து போன் வந்து விட்டது கருணாகரனுக்கு.
‘டேய்… என்னை வந்து கூட்டிக்கிட்டு போடா..’ என்ற அவரின் குரலில் சலிப்பும் வெறுப்பும் தெரிந்தது.
‘என்னப்பா? என்ன ஆச்சு? போய் நாலு நாள்தானே ஆச்சு, இவ்வளவு சீக்கிரமா வர்ரேங்கறீங்க?’ என்ற கருணாகரனின் குரலில் வியப்புத் தெரிந்தது.
எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடனும், ஏக்கத்துடனும் தன் கிராமத்திற்குச் சென்ற அப்பா இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவதுதான் அவனின் ஆச்சரியத்திற்குக் காரணம்.
‘அட போடா.. என் வயது சினேகிதன் ஒரே ஒருத்தன் தான் ஊரில் இப்போது உயிரோடு இருக்கிறான். அவனுக்கும் காது சரியாகக் கேட்பதில்லை. இங்கே உள்ள இளம் பிராயத்தினரிடம் பேச முற்படும்போதெல்லாம், அவங்க என்னை ஏதோ வேற்றுக் கிரகவாசி போல் பார்த்து மிரண்டு விலகிச் செல்கின்றனர். நாங்கள் இளவயதில் குதித்து விளையாடிய நொய்யல் ஆற்றுப் பக்கம் போனால், ஆறு வரண்டு போய் முள்காடாய் மூடிக் கிடக்கிறது. மற்றொரு முக்கிய விசயம்…நான் இருக்கும் வீட்டில் வெஸ்ட்டர்ன் டைப் டாய்லெட் இல்லை. இண்டியன் டைப் மட்டும்தான். அதில் உட்கார்ந்து எழுந்திருப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. மொத்தத்தில், நான் பிறந்து வளர்ந்த என் ஊர் இப்ப எனக்கு அந்நியமாகப் போய் விட்டது. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிக்கிட்டுப் போடா..’ என்றார் அழாக்குறையாக.
சிதம்பரத்தின் முதல் ஆசை திருப்தியாக முடியவில்லை என்றாலும், அடுத்த ஒரு மாதத்தில் சிதம்பரத்தின் இரண்டாவது ஆசையை நிறைவேற்றத் தயாரானான் கருணாகரன்.
பெளர்ணமியன்று ஆக்ராவில் இருப்பது போல திட்டமிட்டு, சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலகாமவும், பின் டெல்லியிலிருந்து கார் மூலம் ஆக்ராவுக்கும் செல்வதாக ஏற்பாடு. காரில் அவர்கள் ஆக்ராவை நெருங்கும் வரையில் எல்லாம் நல்ல படியாகத்தான் நடந்தது.
ஆனால் ஆக்ராவை அடையும்போது, எதிர்பாராமல் வானத்தில் திடீரென்று மேகங்கள் திரண்டு வந்து கனமழை பொழியத் தொடங்கியது. காரை ஓட்டி வந்த டெல்லி டிரைவர் அசோக் வர்மா வேறு பயமுறுத்தினார்.
‘சார்…இங்கே இந்த சீசனில் மழை பிடித்தால் ஒரு வாரம் விடாமல் பெய்யும்… நீங்கள் சீசன் தெரியாமல் வந்து விட்டீர்கள். எதற்கும் போய்ப் பார்க்கலாம் வாங்க’ என்றார் ஆறுதலாக.
தாஜ்மஹாலை அடைந்தபோது மேகம் மறைத்திருந்த நிலையில் அங்கே பெளர்ணமி நிலவே கண்ணுக்குத் தெரியவில்லை. பொழியும் மழையில் மங்கலாகத் தெரிந்த தாஜ்மஹால் சிதம்பரத்திற்கு பெரிதும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இளமையில் அவர் ரசித்துப் பார்த்த ‘பாவை விளக்கு’ படத்தில் சிவாஜியும் சாவித்திரியும் தாஜ்மஹாலில் காதலில் உருகி நடித்து, சி.எஸ்.ஜெயராமனும், சுசீலாவும் பாடிய ‘காவியமா? நெஞ்சின் ஓவியமா?’ என்ற பாடல் மனதில் கறுப்பு வெள்ளைப் படமாக ஓட, கொட்டும் மழையைப் பார்த்து மறுகி கசப்புடன் , ‘திரும்பி டெல்லி போகலாமடா?’ என்றார் சிதம்பரம் விரக்தியாக.
‘வேணும்னா ஒரு நாள் தங்கி நாளைக்கு முயற்சி பண்ணிப் பார்க்கலாமா அப்பா?’ என்றான் கருணாகரன். அவனுக்கு சிதம்பரத்தின் வாடியமுகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
‘வேண்டாம்டா… டிரைவர் சொல்றதப் பார்த்தா மழை இரண்டு மூன்று நாட்களுக்கு விடாது போல… பிளைட் டிக்கெட் வேறே புக் பண்ணியாச்சு… நீயும் ஆபீஸ் போகணும். உயிரோடு இருந்தா மறுபடி வரலாம்.. கிளம்பு..’ என்றார் உறுதியாக.
சிதம்பரத்தின் மூன்றாவது ஆசையை நிறைவேற்றத்தான் கருணாகரன் அதிகம் சிரமப்பட வேண்டி இருந்தது. பெங்களூரில் டாட்டா இன்ஸ்ட்டியூட்டில் வேலை செய்யும் ஒரு நண்பனை சிரமப்பட்டுக் கண்டுபிடித்து, பிறகு அந்த நண்பனும் முயற்சி செய்து, ரோஜாதேவியின் டச்சப் கேர்ளாக இருந்து, தற்போது அவர் வீட்டில் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டு பிடித்து, பணத்தால் அந்தப் பெண்ணை மடக்கி எப்படியோ ரோஜாதேவியைப் பார்ப்பதற்கு அந்த வாரத்தில் ஏற்பாடும் செய்து விட்டான்.
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் அமைந்திருந்த அந்த மிகப் பிரும்மாண்டமான பங்களாவினில் சிதம்பரமும், கருணாகரனும் நுழைந்தவுடன், அவர்களுக்கு உதவி செய்த அந்தப் பணிப்பெண்தான் அவர்களை வரவேற்று உட்கார வைத்தார்.
சோபாவில் உட்கார்ந்திருந்த தன் அப்பா சிதம்பரம், ஒரு வித பரபரப்புடன் நெளிந்து கொண்டிருப்பதைக் கவனித்தான் கருணாகரன்.
ஒரு காலத்தில், வெள்ளித் திரையில் புகழின் உச்சியில் இருந்த கதாநாயகர்களுடன் நடித்து, தமிழ் ரசிகர்களை கிறங்க வைத்துக் கொண்டிருந்த அவரின் அந்தக் கனவுக்கன்னியைப் பார்க்கப் போகும் தருணம் அவரை உணர்ச்சி வெள்ளத்தில் தள்ளியிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டான்.
ரோஜாதேவியைச் சந்திக்க அவர்களுக்கு உதவிய அந்தப் பணிப்பெண் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு, இன்னும் ஐந்து நிமிடத்தில் ரோஜாதேவி வந்துவிடுவார் என்றும், உடல்நிலை சரியில்லாததால் அவரிடம் சீக்கிரம் பேச்சை முடித்துக் கொள்ளவும் எச்சரித்து விட்டுச் சென்றார்.
சிறிது நேரத்தில் வாக்கரின் துணையோடு ஒரு பெண் உருவம் அவர்கள் இருக்கும் திசையை நோக்கி வந்தது. நடக்கும்போது, கால்களை எடுத்து வைக்க அந்தப் பெண்மணி சிரமப்படுவது நன்கு தெரிந்தது. நன்றாக உற்றுப் பார்த்தவுடன் தான் அந்தப் பெண்மணி தன் கனவுக்கன்னி ரோஜாதேவி என்பதை யூகித்தார் சிதம்பரம்.
எத்தனையோ படங்களில் துள்ளித் துள்ளி நடனமாடிய அந்தக் கால்கள் தற்போது நடக்கவே தடுமாறுவதைப் பார்த்தார். அவர்களின் அருகில் வந்த ரோஜாதேவி, ‘பண்ணி.. பண்ணி… ‘ (வாங்க…வாங்க) என்று வரவேற்று எதிரில் இருந்த சோபாவில் சிரமப்பட்டு அமர்ந்தார். பேச வாயின்றி மெளனமாக ரோஜாதேவியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சிதம்பரம்.
ஒரு காலத்தில் கருமேகம் போல் அடர்ந்திருந்த அவரின் கூந்தல் கொட்டியிருந்தது. லேசாக மேக்கப் போட்டிருந்தும், முகம் சுருக்கம் விழுந்திருந்தது நன்கு தெரிந்தது. அவரின் மை தீட்டப்பட்ட அழகான பெரிய கண்கள் சுருங்கி, சோடாப்புட்டி கண்ணாடிக்குள் அடங்கியிருந்தது. சிதம்பரம் அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருப்பதை உணர்ந்து, தானே பேச்சை ஆரம்பித்தான் கருணாகரன்.
‘நல்லா இருக்கறீங்களா மேடம்?’ என்றான் கருணாகரன்.
‘ஓ.. நீங்க தமிழா? எந்த ஊரூ?’ என்று தமிழில் பேசினார் ரோஜாதேவி.
ஒரு காலத்தில் கிளியின் குரல் போல் திரையில் ஒலித்த அவரின் குரல், வயதின் காரணமாக உடைந்து போய் ஒலித்தது. சிதம்பரத்திடம் இருந்து எந்தப் பேச்சும் இல்லாததால் கருணாகரனே பேச்சைத் தொடர்ந்தான்,
‘கோயம்புத்தூருங்க மேடம்..’ என்றான் கருணாகரன்.
‘ஓக்கே… ஓக்கே.. நான் ஊட்டிக்கு ஷூட்டிங் போகும்போது உங்க ஊர் வழியாகத்தான் போவேன்…’ என்றவர் கொஞ்சம் நெளிந்து கொண்டே, ‘எனக்கு உடம்பு சரியில்ல… நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமா?’ என்று எழுந்து, வாக்கரின் உதவியுடன் மெதுவாக உள்ளே சென்றார்.
மல்லேஸ்வரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் காபி சாப்பிடும்போதுதான் வாயைத் திறந்தார் சிதம்பரம்.
‘டேய் கருணா…..எனக்கு ‘நோஸ்டால்ஜியா’ என்ற வியாதி இருக்குதுடா….’ என்றார் பரிதாபமாக.
எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
கதாசிரியர் பற்றி:-
இதுவரை எனது சிறுகதைகள் தினமணி கதிர், மங்கையர் மலர், கல்கி, மல்லிகை மகள், கொலுசு, மைவிகடன் மற்றும் சஹானா போன்ற இணைய இதழ்களில் வெளி வந்துள்ளன. எனது சிறுகதை ‘ காவடி ஆட்டமும் காந்திமதியின் காதலும்’ மங்கையர் மலர் நடத்திய ஜெயசிறீராஜ் நினைவு சிறுகதைப்போட்டியில் ரூ.3000/ பரிசு பெற்றுள்ளது. எனது சிறுகதை ‘ஓர் ஒடுங்கிய உழவனின் கதை’ திருப்பூர் மக்கள் மாமன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு(ரூ 1000/) வென்றுள்ளது.
மேலும் எனது சிறுகதைத் தொகுப்பு (20 சிறுகதைகள்) புத்தகமாக ‘குடைக்காம்பு’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
நன்றி.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings