#ad
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதுவரை மனிதன் கண்களால் கண்டிராத உயிரினங்கள் கூட அவற்றின் எலும்புக் கூடுகள், சிதை படிமங்கள் மூலமாக இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது
ஆனால் முழுவதும் கட்டுக் கதை என நம்பிக் கொண்டிருந்த ஒர் உயிரினம், கண் முன் வந்து நிற்கையில்… நம் கண்களின் மீதே நமக்கு சந்தேகம் வந்து விடுகிறது
இதுவரை தங்கள் ஆராய்ச்சியில் எத்தனையோ உயிரினங்களை ஆராய்ந்து பார்த்திருந்த நண்பர்கள் இருவருக்கும், கடலுக்குள் உண்மையாகவே இப்படி ஓர் உயிரினம், அதுவும் தேவ கன்னிகை போன்ற உருவத்தில் இருப்பது பேரதிசயமாகவே தோன்றியது.
வார்த்தைகளே மறந்து விட்டிருந்த இருவருக்கும் சற்று நேரம் கழிந்த பின்பு தான் சுயநினைவே வந்தது.
அதிலும் முதலில் பேச ஆரம்பித்தது.. வேற யாருங்க? நம்ம விக்ரம் தானுங்க..
“பாஸ் நாம ஒன்னும் கனவு காணலையே? இப்படிப்பட்ட உயிரினம் இந்தப் பூமியில இருக்குதா என்ன???”
“டேய் கண்ணால பாத்ததுக்கு அப்பறமும் உனக்கு ஏன்டா இந்த சந்தேகம்? கடல் கன்னி என்ற உயிரினம் நிஜமாவே இருக்காங்க போலருக்கு. ஆனா முழு மனிதப் பெண்கள்ல கூட இவ்வளவு சௌந்தர்யமான பொண்ண நான் இதுவரைக்கும் பார்த்தது இல்ல விக்கி” என்றான் அர்னவ்
“ஆமாம் பாஸ்… நானும் கூட இவ்வளவு அழகான பொண்ண என் வாழ்நாள்ல பாத்ததில்ல” என ஆமோதித்தான் விக்கி
“ஹோ நீயே இப்படிப்பட்ட அழகான பொண்ண பார்த்தது இல்லையா? அப்ப நிஜமாவே இவ பேரழகியாத் தான் இருக்கணும்” என கேலி செய்தான் அர்னவ்
“எந்த ரணகளமா இருந்தாலும்.. என்னை கலாய்க்கறது தான் உங்களுக்குக் கிளுகிளுப்பா?” என விக்கி கடுப்பாக
“அட விடுடா, உன்ன நான் கலாய்க்காம வேற யாரு கலாய்ப்பாங்க. சரி, இவ்வளவு நேரம் அந்தப் பொண்ணு ரொம்பத் தூரமா இருந்த மாதிரி தான இருந்துச்சு, நாமளும் அந்தப் பொண்ண பார்த்ததும் நம்ம கப்பலை நிறுத்திட்டோம். ஆனா அவ நம்மள பாத்து முன்னேறி வர மாதிரி இருக்கில்ல?” என அர்னவ் அவளையே பார்த்தபடி கேட்க
“அட ஆமா பாஸ், ஒருவேளை அந்த ரத்ன மணி கிரீடத்தை நம்மகிட்ட குடுக்கறதுக்காகத் தான் வராளோ? ஆனா அந்தக் கிரீடம் மீன் மச்சம் இருக்கற ஆளுக்கு தான் சேரும், அதுவும் அந்த அம்பாரத் தீவு போன பின்னாடி தான் நான் அந்த ஆளையே கண்டுபிடிப்பேன்னு இல்ல என் தாத்தா சொன்னாரு?” என விக்கி யோசனையை பார்த்தான்
இன்னும் தனக்கு மீன் மச்சம் இருப்பதை அர்னவ் விக்ரமிடம் கூறவில்லை
“டேய் இன்னும் நீ உங்க தாத்தா சுட்ட வடையத் தான் திரும்பச் சுட்டுட்டு இருக்கியா?” என அர்னவ் கேலி செய்ய
“ஆமாமா… உங்க அப்பா சுட்ட வடையும் தான், அது தான் ரொம்ப விலாவாரியா டைரில எல்லாம் எழுதி வச்சுருந்தாரே மனுஷன்” என சப்தமாக அல்ல, மெதுவாக வாய்க்குள் முனகிக் கொண்டான் விக்ரம்.
“என்னடா எதோ முணுமுணுக்கற?” என அர்னவ் கேட்க
“அது ஒண்ணுமில்ல பாஸ்.. வந்து.. அய்யயோ டக்குனு பொய் சொல்ல வர மாட்டேங்குதே.. ஆஆஆஆங்.. அது… வந்து.. யார் சுட்ட வடையா இருந்தா என்ன.. இப்போ தான் அந்தக் கிரீடம் கிடைக்கப் போகுதேனு சொன்னேன் பாஸ்..ஹி ஹீ ஹி…” என சமாளித்தான் விக்ரம்
“போதும் போதும்.. ரொம்பச் சிரிக்காத.. முதுகெலும்பு வரைக்கும் தெரியுது” என அர்னவ் மீண்டும் விக்ரமின் வாய்க்கு பூட்டு போட்டான்
இருவரின் கவனமும் மீண்டும் அந்தக் கடல் கன்னிகையிடமே சென்றது.
எங்கோ ஒரு தூரத்தில் இருந்த பொழுது தேவதையைப் போல் தெரிந்தவள், அவர்கள் அருகினில் மெல்ல மெல்ல வந்திட.. இருவரின் மனமும் அவளது தரிசனத்தை அருகில் பார்த்திட ஆவலுடன் துடித்தது
அவள் அந்த ஆழ்கடலினுள் மிக லாவகமாக நீந்தி வரும் அழகினை மெய் மறந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அவள் வழியில் வரும் மீன்கள் எல்லாம் அவளுக்காக மரியாதையுடன் வழி விலகி பாதை அமைத்துக் கொடுத்தன.
சற்றுத் தூரம் வரை அவள் இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தனது மோகனைப் புன்னகை எனும் வலையில் அவர்களைக் கட்டி வைத்தவாறே வந்து கொண்டிருந்தாள்
ஆனால் அருகே நெருங்க.. நெருங்க.. ஹையோ இதென்ன பயங்கரம்… இருவரின் முகமும் பயத்தில் வெளிறிப் போனது
பெரும்புயலில் சிக்கி மீண்டு எழுந்த போது கூட இனி ஆபத்தின்றி எளிமையாக அந்தக் கிரீடத்தினை அடைந்து விடலாம் என விக்ரமும் சரி அர்னவும் சரி நினைத்திடவில்லை.
இன்னும் பல ஆபத்துகளைக் கடந்திட வேண்டும் என தயார் நிலையில் தான் இருந்தனர் எனலாம்
ஆனால் இப்படி ஒரு பயங்கரத்தை இருவரும் சற்றும் எதிர்பார்த்திடவில்லை. புயலில் சிக்குண்ட பொழுது, மீண்டு வர முடியும் என்ற சிறு நம்பிக்கை இருந்தது. ஆனால்.. இவளிடமிருந்து.. இதுவிடமிருந்து.. எவ்வாறு தப்பிப்பது..
முதலில் அவளது அழகினைக் கண்டு அதிசயித்து பிரமித்து நின்றார்கள் என்றால், இப்பொழுதோ அகோரமாய் மாறி அவர்களை விழுங்க வரும்.. இவளது பயங்கரத்திலிருந்து மீளும் வழி அறியாது திகைத்து நின்றனர்
அவளை முதன் முதலாய் தொலைவில் கண்டவர்கள், அவளைச் சுந்தரத் தேவ மங்கையெனவே நினைத்து.. அவர்களது மூளையில் அவளைப் பற்றிய காதல் கவிதையினைப் புனைய ஆரம்பித்திருந்தனர்
ஆனால் இப்பொழுது அவளைப் பார்த்தால் அந்தச் சமுத்திரராஜனும் கூட சற்று நடுங்கித் தான் போவான்.. அந்தச் சூரியன் கூட மேகங்களுக்கிடையில் ஒளிந்து கொள்வான்.. வான் நிலவன் கூடத் தன் கடல் காதலியை கொஞ்சிட அஞ்சுவான்
ஏனெனில்…
காண்பவரை அப்படியே தலைகுப்புற கவிழ செய்யும் அவளின் நயனங்களில் இப்பொழுதோ ரத்தவெறி குடி கொண்டிருந்தது
மதுரமொழி கொண்டு விருந்து படைக்கும் என எண்ணி இருந்த அவளது பவளச் செவ்வாய், இப்போது இவர்களது மரண அறிக்கையை விளம்பப் போகிறது எனத் தோன்றியது
அவளது வெண் சங்கு மென் கழுத்து ‘தாகம்.. தாகம்…’ என்று இவர்களின் ரத்தத்தை பருகிடத் துடித்தது
அல்லி மலரின் தளிர் காம்பினை ஒத்த இவளது மென்கரங்களோ, இப்போது நீண்டு இவர்கள் இருவரின் குரல்வளையைப் பற்றிட முனைந்தது
தூரத்தில் சிறிதளவு பொன் புள்ளியெனத் தோன்றியவள் இப்பொழுதோ இவர்கள் முன்பு பன் மடங்கு பெரியதாகி, பெரும் கடல் அரக்கியாய் தோன்றினாள்
கடலின் அந்தகாரத்தினுள் அழகிய மங்கையைக் கண்ட காளையர்கள், தாங்கள் நிறுத்தி வைத்திருந்த கப்பலை, அவள் உரு மாறத் தொடங்கியதும் பயத்தில் மீண்டும் இயக்க முனைய, அது ஏதோ சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது போல் நின்ற இடத்தை விட்டு நகர மறுத்தது
“விக்கி கப்பல் நகர மாட்டேங்குது டா..” என அர்னவ் தயக்கத்துடன் கூற
“ஐயோ என்ன பாஸ் இது பைக் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதுனு சொல்ற மாதிரி ரொம்ப சாதாரணமா சொல்றீங்க? இந்தக் கப்பல் அதோட உச்சகட்ட வேகத்துல போனாலே இவகிட்ட இருந்து தப்பிக்க முடியுமானு தெரியல. இதுல கப்பல் நகர மாட்டேங்குதுனு சொல்றீங்க, நகருங்க நான் கொஞ்சம் பாக்கறேன்” என்றான் விக்ரம் பதட்டத்துடன்
“என்னமோ பண்ணித் தொலை எப்படியாவது கப்பல் மூவ் ஆனா போதும்” என விலகி நின்றான் அர்னவ்
பெரிய கமல்ஹாசன் இவரு, ராஜா கைய வச்சா… எதுவும் ராங்காப் பூடாதுனு வந்துட்டாரு என, கப்பலே விக்ரமை காரித் துப்பியது
முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவனின் மூச்சு, ஒரு கணம் நின்று பின்பு வெளிவந்தது
கண் முன்னே அந்தப் பெரிய அரக்கி, அவர்களது கப்பலை நோக்கி பெரும் வாளினை ஒத்திருந்த தனது வாலினைச் சுழற்றினாள்
தனது தந்தையின் கனவையும் தனது கண்களிலேயே சுமந்த அர்னவ், நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து, கண்களை மூடி அப்படியே நின்றிருந்தான்
அர்னவே இந்த நிலையெனில், விக்ரமைக் கேட்கவும் வேண்டுமா என்ன?
இரு கண்களையும் இறுக்க மூடிக் கொண்டு, உலகிலுள்ள அனைத்துக் கடவுளையும் நினைத்துக் கொண்டிருந்தான்.
தங்களை எப்படியாவது காப்பாற்றிடச் சொல்லி அல்ல, எந்தச் சக்தியாலும் தங்களைக் காப்பற்ற முடியாது என்பது தெரிந்தே இருந்தமையால், அவ்வாறெல்லாம் அவன் வேண்டவில்லை.
எப்படியாவது தங்களது இலட்சியத்தை உயிரைக் கொடுத்தாவது அடைந்து விட வேண்டும் என்ற இவர்களது குறிக்கோள் அடுத்த ஜென்மத்திலாவது நிறைவேற வேண்டுமென வேண்டினான்
அந்த இறுதி நொடியில் விக்ரமின் எண்ணம் இதுவாக இருக்க, அர்னவோ மானசீகமாய் தன் தந்தையிடம் மன்னிப்பு வேண்டினான்
“என்ன மன்னிச்சுருங்கப்பா, ஒரு அப்பாவா நீங்க உங்களோட பணம் காசு சொத்து மட்டுமே எனக்கு விட்டுட்டு போகல. உங்களோட கனவையும் கூட என் கண்கள்ல விதைச்சுட்டு போனீங்க. ஆனா ஒரு மகனா நான் அந்தக் கனவை விளைவிக்காம கண்ணுக்குள்ளயே கருக்கிட்டேன். உங்க மேல சாத்தியமா, மறுபிறவி எடுத்து வந்தாவது உங்க கனவை நிறைவேத்தல, நான் அர்னவ் இல்ல” என மனதுள் சூளுரைத்து முடிக்கும் தருவாயில், அந்தக் கடல் அரக்கியின் வால் இவர்களின் கப்பலைத் தட்டி உடைப்பெடுக்கச் செய்தது
எஜமான விசுவாசம் சிறிதளவும் இல்லாத அந்தக் கப்பல் அவளது ஒரே தீண்டலில் உடைப்பெடுத்து விட, இருவரும் பொங்கிப் பிரவாகமெடுத்து வரும் கடலின் உவர் நீர் கொண்டு அடித்துச் செல்லப்பட்டனர்
என்ன தான் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு எதற்கும் தயாராக இருந்தாலும், அது பயனற்ற ஒன்று என அறிந்தே இருந்தனர் இருவரும்
பின்னே.. அவ்வளவு பெரிய கப்பலையே சுக்காய் தட்டியவள், ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு தப்பிட விடுவாளா என்ன?
சொல்லி வைத்தாற் போல, அவர்கள் கப்பலை விட்டு வெளியே நீர்ப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டதும், இருவரின் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் அனைத்து உயிர்காக்கும் உபகரணங்களும் நீரினுள் கழன்று விழுந்தன.
இதை ஓரளவு எதிர்பார்த்திருந்த நண்பர்கள் இருவரும், ஒருவரைப் பார்த்து மற்றவர் மென்னகை புரிந்து கொண்டனர்.
அந்த இறக்கும் தருவாயிலும் அவர்களது தன்னிலை தவறி விடவில்லை
கடல் நீர் மெல்ல மெல்ல அவர்களின் உடம்பில் எலும்பு வரை குளிரினைக் கடத்திட, கடலின் மேற்பாகத்திற்கு வர மேற்கொண்ட முயற்சி தோற்றுப் போனது
எவ்வளவோ மூச்சடக்கிப் பார்த்தும் முடியாமல், இறுதியில் தளர்ந்து போன அவர்களின் இருவரின் காது, மூக்கு, வாய் அனைத்திலும் நீர் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, பஞ்சு போன்ற நுரையீரல், நீரினை முழுதும் நிறைத்துக் கொண்டது
உயிர்க் காற்றுக்குப் போராடி போராடி அலுத்து விட்ட இரு உயிர்களும், கடைசியில் நம்பிக்கையுடன் சேர்ந்து தங்கள் சுயநினைவையும் இழந்து விட்டிருந்தது
அந்த ஆழியிவள் தனது பிள்ளைகள் இருவரையும் ஆசையுடன் தன்னுள் உள்ளே உள்ளே மேலும் மேலும் கொண்டு சென்று கொண்டிருந்தாள்
இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்த அவள், அவர்களை நோக்கி செல்ல முனைய, அதே நேரம் யாரோ தன் பின்னால் நிற்கும் உணர்வில் திரும்பினாள்
அங்கு இருந்தவர்களைக் கண்டு, கோபத்திலும் அசூசையிலும் அவள் கண்கள் சிவந்தன
இந்த இருவரையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவுக்கு வந்தவள், வந்திருந்தவர்களை நோக்கித் தனது இந்திராயுதத்தைச் சுழற்றினாள்
#ad
(தொடரும்… வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings