in

ஆழியின் காதலி ❤ (பகுதி 11) -✍ விபா விஷா

ஆழியின் காதலி ❤ (பகுதி 11)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நிலைமையைச் சுமூகமாகவே கொண்டு செல்ல விரும்பிய அர்னவ், “பெயரிலேயே கடலளவு காதலைக் கொண்டிருக்கும் ஒருத்தி, என் மேல இருக்கற காதல மறுக்காம ஒத்துக்குவா அப்படிங்கற நம்பிக்கைல தான்” என்றான் அர்னவ் 

“ஆமாம் என் பெயரின் அர்த்தம் காதல் தான். அதுவும் கடலளவு காதல் என்பது தான். ஆனால் அந்தக் காதல் ஆழியின் மீது தானே அன்றி அர்னவ் மீதல்லவே” என அவனை வாரிவிடும் வேகத்தில் சாமினி கூற, சிரிப்புப் பீறிக் கொண்டு வந்தது அர்னவிற்கு

சற்று உரக்கவே நகைத்தவன், “அது தான் நீயே ஒத்துக்கிட்டியே… கடல் மேல தான் உனக்குக் கடலளவு காதலனு. நீ தெரிஞ்சு சொன்னியா இல்ல தெரியாம சொன்னியானு எனக்குத் தெரியல. ஆனா அர்னவ் என்பதற்கு அர்த்தம் கடல் தான், அதுவும் சாதாரணக் கடல் இல்லம்மா… ஆழிப் பெருங்கடல். சோ, இந்த ஆழியின் காதலி நீ தான்… புரிஞ்சுதா?” என்றவன், அவள் கையைப் பற்றி தன்னருகில் இழுக்க முயன்றான்

அவனுக்கு என்ன பதிலுரைப்பது என அறியாமல், திருடு போன ஆட்டுக் குட்டி போலத் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளை, ஆபத்பாந்தவன்.. அனாதரட்சகனாக வந்து காப்பாற்றியது… விக்ரமே தான்

“ஹேய் என்ன இன்னும் ரெண்டு பெரும் பேசிகிட்டு இருக்கீங்களா? ஏற்கனவே சூரிய அஸ்தமனம் ஆகப் போகுதுனு உங்க ஆளுங்க எல்லாரும் கடல்கிட்ட போய்ட்டாங்க, நீ இன்னும் போகலையா சாமினி?” என்று விக்ரம் கேட்டதும்

விடுபட்ட உணர்வுடன், “ஆமாம் விக்ரமரே… இதோ கிளம்பிவிட்டேன்” என்று விட்டு உடனே அங்கிருந்து நகர்ந்து விட்டாள் சாமினி.

பூஜைவேளை கரடியாய் வந்ததற்காக விக்ரமை மனதிற்குள்ளேயே சபித்துக் கொண்டிருந்தான் அர்னவ் 

வெகு  நேரமாக மௌனம் நீண்டுகொண்டே போகவும், சட்டெனத் திரும்பி அருகிலிருந்தவனைக் கூர்ந்து நோக்கியவனுக்கு, ஏதோ சரியில்லையென மனதுக்குத் தோன்ற, தானே பேச்சைத் தொடங்கினான் அர்னவ்

“என்ன விக்ரம்,ரொம்ப நேரமா அமைதியாவே இருக்க? என்ன கயாதேவி கருணை செஞ்சுட்டாங்களா? அவளோட ஒரே டூயட்டா?” எனக் கேலியாக ஆரம்பித்தான் அர்னவ்.

“என் பேர் கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கா சார்? ஒருவேளை நான் உங்க கூட வந்ததயே மறந்துட்டிங்களோனு நினச்சேன்” என்றான் விக்ரம் சற்றே கேலியாய் 

“என்ன விக்ரம்… என்னென்னமோ பேசற? எதுக்குப் புதுசா சார் மோர் எல்லாம்? எதுவா இருந்தாலும் தயவு செஞ்சு நேரிடையா சொல்லு. இப்படிச் சுத்தி வளைச்சு பேசாத” என்றான் அர்னவ்.

“சரிங்க சார்… ஒண்ணே ஒன்னு மட்டும் கேட்கட்டுமா? நான் தான் உங்ககிட்ட அந்த மீன் மச்சத்த பத்தி சொன்னது. அதுவும் ஒரு முறை இல்ல நிறைய முறை சென்னேன். ஆனா அந்த மச்சம் உங்களுக்கு இருக்குனு நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே. என்ன தான் இருந்தாலும் நான் உங்ககிட்ட வேலை செய்ற ஆள், நீங்க என்னோட ஓனர். என்னோட லிமிட் அவ்ளோ தான் இல்லையா?”  என சூடாகவே கேட்டான்  விக்ரம்

“ஹே என்ன ரொம்ப ஓவரா பேசிகிட்டு போற? பெருசா ஓனர், லேபர்னு சொல்ற? அந்தளவுக்குப் பெரிய மனுஷனாகிட்டயா? இங்க பாரு… முதல்ல நான் இந்த மச்சம், அது இதுனு எந்தக் கதையையும் நம்பல. இத்தனைக்கும் என் அப்பாவே எனக்கு அப்பப்போ சின்னச் சின்ன ஹின்ட் கொடுத்திருந்தார். ஆனாலும் கூட நான் அதெல்லாம் நம்பவே இல்ல.

ஏதோ அவர் ஆசைப்பட்ட அந்த மகுடத்த எடுக்கலாம்னு தான் நான் இங்க கிளம்பி வந்தது. ஆனா அதுக்கும் வழியில்லாம, அந்த மகுடத்தினால விடிவு நோக்கி ஒரு பெருங்கூட்டமே இங்க காத்துகிட்டு இருக்கு. அது மட்டுமில்லாம இந்த மச்ச விஷயம் எல்லாம் உனக்குத் தெரிஞ்சா, ஒருவேளை எனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோனு நீ என்னை இங்க வர விட மாட்டனு தான் நான் உன்கிட்ட எதுவும் சொல்லல விக்கி. இது புரியாம நீ பாட்டுக்கு என்னென்னமோ பேசிட்டே போற?” என அர்னவ் கூற, அப்பொழுது தான் அர்னவின் மனநிலையை முழுதாக உணர்ந்தான் விக்ரம்.

இருப்பினும் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவனை அர்னவின் குரல் கலைத்தது.

“இன்னும் உனக்கு என் மேல கோபம் போகலையா? ரொம்பச் சாரி.. மன்னிச்சுடுங்க பாஸ்” என அர்னவ் மன்னிப்பு வேண்ட, விக்கிரமிற்குச் சிரிப்பு வந்து விட்டது.

“அப்பாடா சிரிச்சுட்டியா? இப்போ தான் நீ என் நண்பேன்டா. ஆமா உன் கயாதேவிகிட்ட நீ போட்ட கருணை மனு என்னாச்சு ?” என அர்னவ் கேட்டதும், சிரிப்பையும் மீறி சிறு வெட்கம் வந்தது விக்ரமிற்கு.

“இதோ பாருடா வெட்கமெல்லாம் வருது… என்ன விக்ரமரே? என்ன விடயம் ? என்னிடம் மறைக்காது உரைப்பீரா?” என அர்னவ் மேலும் கேலி செய்ய, விக்ரம் முகத்தில் டன் டன்னாக வெட்கம் வழிந்தது

“அட அட அட.. இந்த ஆம்பளைங்க வெட்கப்படறதே தனி அழகுதான் போ..” என விடாமல் வாரினான் அர்னவ்.

அதற்குள் சமாளித்துக் கொண்ட விக்ரம், “ஆமா ஆமா.. இந்த ஆம்பளைங்க பொண்ணுங்ககிட்ட வழியறதும் ரொம்ப அழகாவே இருந்துச்சு. அந்த வழிசலால தான் கடலோட நீர்மட்டம் உயர்ந்துச்சுனு ஒரு ஆய்வறிக்கை சொல்லுது” என, சற்று முன்பு அர்னவும் சாமினியும் பேசிக் கொண்டிருந்ததைக் குறிப்பிட்டு விக்ரம் சொல்லவும், முகத்தை எங்குக் கொண்டு போய் வைப்பதெனத் தெரியவில்லை அர்னவிற்கு

உடனே “ஆஹா.. ருத்ர தேவரையே வெட்கமுற வைத்துவிட்டோம் யாம்..” என்று விக்ரம் கத்தினான்.

அவன் கத்தியதும் பதறி விக்ரமின் வாயை அடைத்த அர்னவ், “அடேய் நீ கத்துற கத்துல, கடலுக்குள்ள போனவங்க எல்லாரும் மேல வந்துடுவாங்க போல. கொஞ்ச நேரம் வாய மூடு டா” எனவும் 

“அது சரி பாஸ்… நான் வரும்போது ரெண்டு பேரும் ஏதோ முக்கியமா பேசிக்கிட்டு இருந்தீங்க போல. அந்தச் சாமினி வேற ஆட்டு குட்டிய களவாண்ட மாதிரி முழுச்சுட்டு இருந்தா. என்ன ஏதாவது தேவ ரகசியத்தைக் கேட்டீங்களா அவகிட்ட?” என்றான் விக்ரம்

“அடப் போடா… தேவ ரகசியமென்ன ராணுவ ரகசியத்தைக் கூட இந்தப் பொண்ணுங்க லீக் பண்ணிடுவாங்க, ஆனா தன்னோட மனசுல இருக்கற காதலை மட்டும் லீக் பண்ணவே மாட்டாங்க. அத கேட்டுட்டு இருந்தப்போ தான்.. சார் சரியா வந்து அவங்கள காப்பாத்திட்டீங்க” என சற்று கடுப்புடன் அர்னவ் கூற

“நாசூக்கா என்ன கரடினு சொல்றீங்க?” என சிரித்தான் விக்ரம் 

“சே சே.. நாசூக்காலாம் சொல்லல, நேரடியாவே சொல்றேன்” என கேலி செய்தான் அர்னவ் 

“ஹ்ம்ம்.. போதும். எனக்கிந்த பெருத்த அவமானம் போதும். என் மேல விழுந்த கரடி எனும் கரும்புள்ளியை நானே அழிக்கப் போகிறேன்” என விக்ரம் கூற

அதற்கு அர்னவ், “எப்படி? தண்ணி தொட்டா?” என கேலி செய்தான் 

“ஷு.. குறுக்கப் பேசக் கூடாது, பேசினா ஐடியா வராது.. ” என்று கூறிவிட்டு ,தன் ஆகச்சிறந்த ஐடியாவைக் கூறினான் விக்ரம் 

“இதுக்கு அவ்ளோ சீனெல்லாம் இல்ல பாஸ். இப்போ நைட் டைம்ல அவங்க தான கரையில இருக்க முடியாது, ஆனா நாம கடலுக்குப் போலாம்’ல்ல?” என்று அவன் கூறியதும், அர்னவ் முகத்தில் பல்பு எரிந்தது.

“அட அட… இன்னைக்குத் தான் பௌர்ணமி பீல் வருது பாஸ். வாங்க இதே வேகத்தோட கடல்ல குதிக்கலாம்” என விக்ரம் அழைக்க

கடலை நோக்கிச் செல்ல எத்தனித்த வேலையில், அவன் கையைப் பிடித்த அர்னவ், “அப்பப்பா உன்னோட மூளையோ மூளை விக்கி. இதுக்காகத் தான் நான் உன்ன என் கம்பெனியில வேலைக்கு எடுத்தது. அதனால நீ இந்த மூலையிலேயே உட்காந்து கடலை வெறிக்க வெறிக்கப் பார்த்துட்டு இரு. நான் போய்ச் சாமினிகிட்ட பேசிட்டு வரேன்” என எழுந்தான் 

‘அய்யயோ குடி கெட்டுச்சு போ’ என மனதுள் நினைத்தவாறே, அர்னவ் பின்னால் ஓடோடிச் சென்றான் விக்ரம்.

“பாஸ் பாஸ் நில்லுங்க நில்லுங்க. இப்படி நீங்க மட்டும் தனியா போய் சாமினிகிட்ட பேசினா அவங்க எல்லாரும் தப்பா நினைச்சுடுவாங்க, அதனால நானும் வரேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய்ப் பேசலாம்” என விக்ரம் கூற, அவனை ஒரு மார்கமாக பார்த்தான் அர்னவ்.

“எத? உன்னையும் கூட்டிட்டுப் போய்ப் பக்கத்துல வச்சுக்கிட்டு அவகிட்ட காதல் கவி பாடச் சொல்றியா?” என அர்னவ் கேட்க 

“அய்யயே… எனக்கு அந்த அளவுக்கு விவஸ்தை இல்லையா என்ன? நீங்க பாட்டுக்கு சாமினி கூடப் பேசிட்டு இருங்க, நான் பாட்டுக்கு அப்படி ஓரமா என் கயாகிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று விக்ரம் கூறியதும் தான், அர்னவிற்கு முழு விவரமே புரிந்தது.

“ஓஹோ… நீ அப்படி வரயா? எப்படி எப்படி… நான் சாமினி’கிட்ட பேசுவேனாம், துரை அப்படி ஒரு ஓரமா கயா’கிட்ட பேசுவாராம். அத மத்தவங்க எல்லாரும் தூரத்துல கைய கட்டிக்கிட்டு, இல்ல இல்ல வால சுருட்டி வச்சுக்கிட்டு பார்த்துட்டு இருப்பாங்களாம் .

அடேய்… நான் தனியா போனா கூட என்மேல டவுட் வராது டா. ஆனா நீயும் கூட வந்தேன்னு வச்சுக்க, மகனே கன்பார்ம் பண்ணிடுவாங்க டா. அதனால என் சமத்துக்குட்டி.. சக்கரக் கட்டி அடம் புடிக்காம இங்கயே ஒரு ஓரமா உக்காந்து தனியா பேசிட்டு இருக்குமாம். நான் கடல்ல போய்க் கடலை வறுத்துட்டு வருவனாம்” என்று அர்னவ் கூற

“இல்லல்ல… இந்தக் கள்ளாட்டம் எல்லாம் செல்லாது. நானும் கடல்குள்ள கடல வறுக்கணும்” என அடம் பிடித்தான் விக்ரம் 

“ஹோ நீ கடலை வறுத்தே ஆகணுமா? அப்ப இரு… இப்படி இந்தப் பாறை மேல உக்காரு, உன் ஆள அனுப்பி விடறேன்” என்றவன், அங்கு ஓரமாய் இருந்த சிறு படகினை எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றான் 

அர்னவ் முதலில் சென்றது விக்ரமின் ஆளிடம் தான். அங்கு அவன் தனியாக இருக்கும் கஷ்டத்தை எடுத்துக் கூறியவன், விக்ரமிடம் சென்று சற்று நேரம் அளவளாவி விட்டு வருமாறு பணித்துவிட்டே, அடுத்து தன் தேவதையைத் தேடிச் சென்றான் 

ங்கோ… கரையில் தன்னை நோக்கி வருபவரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் விக்ரம்

“என்ன விக்ரமரே, ருத்ர தேவர் சாமினியிடம் முக்கியமான விடயம் பேச வேண்டுமாம். அதனால் இங்கே உனக்குத் தனியாக இருக்கப் பயமாக இருக்குமென்று நீ அழுகையில் கரைந்தாயாம். எனவே உனக்குப் பேச்சுத் துணையாக இருக்குமாறு என்னை அனுப்பி விட்டார்” என்று கூறியவாறு, அந்தப் பாறைக்கருகில் நீந்தி வந்தது, வேறு யாருமல்ல நம் எல்லாளன் தான்

‘இவன் யாருடா சரியா டியூன் பண்ணாத ரேடியோ மாதிரி குரலை வச்சுக்கிட்டு. ஆனா பாஸ் நீங்க என்ன வச்சு செஞ்சுட்டீங்க இல்ல? எப்படி இருந்தாலும் திரும்ப என்கிட்டே தான் வரணும், அப்போ நான் வச்சு செய்றேன் பாருங்க’ என்ற விக்ரமின் எண்ணத்தை, எல்லாளனின் குரல் கலைத்தது.

“எனக்கு ஒரு அதி முக்கிய ஐயம் இருக்கிறது விக்ரமரே. உங்கள் தேயத்தில் எல்லாம் எந்த வகையான உணவுகள் சாப்பிடுவீர்கள்? கடல் வாழ் உயிர்களும் உண்ணுவீர்களா?” என ஆவலுடன் எல்லாளன் கேட்க

‘ரொம்ப முக்கியம்… இந்த ஆளு தான் அடுத்தக் கயாகரர் ஆகப் போறாரா? விளங்கிடும்…’ என நினைத்தவன், அவரிடம் பேசத் தொடங்கினான் விக்ரம்

ங்கே… சாமினி சோகச் சித்திரமாய்ச் சிறிது தொலைவில் பாறை போல் இருந்த ஒரு மேட்டுப் பகுதியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே படகின் துடுப்பை இயக்கிய அர்னவிற்குப் படகு கட்டுப்படாமல் போக, நீரினுள் விழுந்து மூழ்க ஆரம்பித்தான்

அவன் விழுந்த சத்தத்தில் திரும்பிய சாமினி, அவனைக் காக்க கடலினுள் அதிவிரைவாக விரைந்தாள்.

தனது கனவுக் கன்னியான அந்தக் கடல் கன்னியைக் காண, கடலில் விரைந்தோடிச் சென்ற அர்னவ், திடீரென்று அந்தச் சிறு படகு அவன் வசமிருந்து விலகியதால், கடல் நீரினுள் தலைகுப்புற விழுந்தான்.

அந்த நடு இரவில் சில்லென்ற கடலின் உவர் நீர், அர்னவின் உடலெங்கும் விரைவி அவனை உறையவைக்க முயல, அவனருகில் வேகமாக நீந்தி வந்தாள் அவள்

அருகில் வந்தவளைக் கண்டு அவன் பயத்தில் திமிற, அவனைத் தூக்கிக் கொண்டு கரைக்கு விரைந்தாள் சமுத்திரா.

அர்னவை அந்தச் சமுத்திரா தூக்கிச் செல்லக் கண்ட சாமினி, வேகமாக இருவரையும் பின் தொடர்ந்து நீந்தி வந்தாள்.

சாமினி அருகே வரும் முன் கரையை அடைந்த சமுத்திரா, அர்னவைத் தூக்கி கரையில் வீசினாள் 

பின் அவனை உறுத்து பார்த்தவள், “பூஜை முடியும் வரையில் பிரம்மச்சரியம் அவசியம்…  அது மனத்தாலும் கூட” என கோபமாக உரைத்து விட்டு, அதற்குள் அங்கு வந்து சேர்ந்திருந்த சாமினியையும் சேர்த்து முறைத்து விட்டு அங்கிருந்து அகன்றாள்

இவ்வாறு அந்தச் சமுத்திராவே கூறவும், ஆச்சர்யமாகிப் போயிற்று  அர்னவிற்கு 

 ஆனால் சாமினி மனதுள் மிகவும் வெட்கித் தலை குனிந்தாள் 

ஆம்… தனது எதிரியே தனக்கு அறிவுரை வழங்கும் அளவிற்குக் கீழிறங்கிப் போய் மனதை அலைபாயவிட்டு விட்டோமே என்று மனதிற்குள் மிகவும் குன்றிப் போனாள் சாமினி 

அப்பொழுது தான் அங்குக் கரையில் இருந்த எல்லாளனைக் கவனித்த அர்னவ், “என்ன அண்ணே, இவளை புரிஞ்சுக்கவே முடியல? பூஜைக்குப் பிரம்மச்சரிய விரதம் காக்கணும்னு எங்களுக்கு அறிவுரை சொல்லிட்டு போறா? இவ நல்லவளா? இல்ல கெட்டவளா?” என்று கேட்டான்

நமட்டுச் சிரிப்பை உதிர்த்த எல்லாளன், “உம்மை அவள் பிரம்மச்சரியம் காக்குமாறு கூறியது சிவபெருமானுக்காக அல்ல,  யட்சிணி தேவிக்காக. என்ன இன்னும் விளங்கவில்லையா? கடவுளுக்குப் படையல் செய்யப்படும் பொருள் பரிசுத்தமானதாகப் பவித்திர தன்மையுடன் இருக்க வேண்டுமல்லவா? அதனால் தான்” என கூறி முடிக்கவும், அர்னவிற்குப் பகீரென்றது

‘அடிப்பாவி உன்னோட யட்சிணி தேவிக்கு என்ன பலி குடுக்கறதுக்குத் தான் இவ்ளோ அக்கறையா பேசினியா? நான் கூட ஒரு நிமிஷத்துல உன்ன நம்பிட்டனே’ என மனதிற்குள் புலம்பினான்

(தொடரும்)
#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தரணியை வெல்லும் மனிதநேயம் – ✍சௌமியா தட்சணாமூர்த்தி, விழுப்புரம்

    கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம் – ✍ பானுமதி வெங்கடேஸ்வரன்