2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இது காதல் தானோ என யோசிக்கும் நிலை..
காதல் மலர்ந்த நிலை..
ஓராண்டிற்குப் பின் காதலர்களின் நிலை
மூன்றையும் விவரிக்கும் ஒரு குட்டி காதல் கதை இதோ..
“வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே”
வாட்சப் நண்பர்கள் குழுவில் வரிகள் விளையாட்டில் பாலா அனுப்பிய வரிகள் தனக்காகத் தானோ என்று கண்மணிக்கு தோன்றியது. ஆனால் அவள் அதை பார்த்தும் பாரதது போல் இருந்தாள்.
ஒன்பது நண்பர்கள் கொண்ட குழு. கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கின்றனர். வேலை பற்றிய பகிர்வுகள் அந்த வாட்ஸப் குழுவில் இருக்கும். அதில் இரண்டு காதல் ஜோடிகள் இருக்கின்றனர். அவர்கள் கடைசியாக வெளியில் சென்ற புகைப்படங்கள் பகிரப்பட்டிருக்கும். அவர்கள் வீட்டில் பிரச்சனை என்றால் அது பகிரப் பட்டிருக்கும்.
நல்ல திரைப்படங்கள் பற்றி விவாதிப்பார்கள். நல்ல பாடல்கள் பற்றி விவாதிப்பார்கள். மொத்தத்தில் அது ஒரு பிஸியான வாட்சப் குழு.
ஒரு மணி நேரமாக இப்படி பாடல் வரிகள் விளையாட்டு விளையாடியிருப்பார்கள். கண்மணி மனதிற்குள் பாலா பகிரும் வரிகள் எல்லாம் தனக்காகத் தானோ என்று தோன்றுகிறது.
அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். ஏனோ சில நாட்களாக அவள் மனதிற்குள் ஆசைகள் தோன்றுகின்றன. அது சரியா தவறா என்ற குழப்பமும் எழுகின்றது.
குழுவில் உள்ளவர்கள் உறக்கம் வருகிறது என்று சொல்லவும் விளையாட்டை முடித்து விட்டு அலைபேசியை கீழே வைத்தாள் கண்மணி.
சில நிமிடங்களுக்குப் பின் கண்மணியின் அலைபேசி சிணுங்கியது.
“தூங்கிட்டியா?” பாலா கண்மணிக்கு வாட்சப்பில் தனியாக குறும்செய்தி அனுப்பியிருந்தான்.
எடுத்துப் பார்த்தவளுக்கு முகத்தில் அத்தனை பிரகாசம்.
“இதுக்கு நான் பதில் அனுப்புனா தூங்கலன்னு தான அர்த்தம்”
“ஹாஹா.. கண்மணி உனக்கு தூக்கம் வரலைனா நம்மை இன்னும் கொஞ்ச நேரம் லிரிக்ஸ் விளையாடலாமா”
“தூக்கம் வர மாதிரி தான் தெரியுது. இருந்தாலும் பரவால்ல.. பத்து நிமிஷம் அப்புறம் நான் போய்டுவேன்”
“ஓகே கண்மணி”
“நீயே ஸ்டார்ட் பண்ணு பாலா”
“என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே.. உன்னிடம் சொல்லவே தயங்குதே”
“என்ன பாட்டு டா இது? “
“என்ன கண்மணி.. முதல் பாட்டே தெரிலைய.. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன.. அது”
“ஆமா ஆமா”
“இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்” பாலா வரிகளை அனுப்பினான்.
கண்மணி முகம் சிவந்து விட்டாள். ஏதும் காட்டிக் கொள்ளாமல் அவளும் தன் பங்கிற்கு அனுப்பினாள்.
“இந்த உப்பு காத்து இனிக்கிது உன்னையும் என்னையும் இழுக்குது”
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்க மணி ஒன்றை நெருங்கியிருந்தது.
“மணி ஒன்னு ஆகிடுச்சி நான் தூங்கப் போறேன்.. டாடா” கண்மணி குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அலைபேசியை அணைத்து விட்டாள்.
அவள் மனமோ உறங்க முன் வரவில்லை மனதிற்குள் பல கேள்விகள். பாலா உண்மையில் தன்னை நேசிக்கிறானா.. என்ன சொல்ல முயல்கிறான்..
எனினும் அவனே கூறாமல் அது பற்றி யோசிக்க வேண்டாம் என நினைத்திருந்தாள்.
அவள் யூகித்து இருந்தது சரி தான். பாலா கண்மணியை நேசித்தான். அவர்கள் காதல் இருவர் மனதிலும் படர்ந்து மகிழ்ச்சியாய் காதல் வாழ்க்கையை தொடங்கினர்.
படத்தில் மட்டும் தான் கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கும் இடம் ரம்மியமாய் தோன்றுமா?
கண்மணி தன் போட்டித் தேர்வை எழுதிவிட்டு கல்லூரிக்கு வெளியே வருகிறாள். அங்கே இரு சக்கர வாகனத்தில் பாலா நின்று கொண்டிருக்கிறான். கண்மணி அவனை நெருங்கி வருகிறாள். முதல்முறையாக அவன் வண்டியில் ஏறப் போகும் வெட்கத்தில் மெல்ல நடந்து வருகிறாள். சாலையின் இருபுறமும் மரங்கள் மெல்ல அசைகிறது. அவளை காற்று உரசுகிறது. ஏற்கனவே வெட்கத்தில் இருந்தவள் இன்னும் சிலிர்த்து நடந்து வருகிறாள்.
அவள் கையில் இருந்த பொருட்களை வாங்கிக் கொண்ட பாலா, “வண்டில ஏறு” மெல்லிய குரலில் கூறினான்.
கண்மணி வண்டியில் கை வைத்து ஏறப் பார்க்கிறாள் ஏதோ ஒன்று தடுக்கிறது. அச்சம், மடம், நாணம் மற்றும் பயிர்ப்பு இவற்றில் ஏதாவது இருக்குமோ.. அது பற்றியெல்லாம் அவளுக்கும் தெரியவில்லை.
மீண்டும் வண்டியில் ஏற முயல்கிறாள் பின் கை விரல் நகத்தை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டு நிற்கிறாள். இப்படியே இரண்டு நிமிடங்கள் சென்றன. பாலா காத்திருந்தான். அவளை அவசரப்படுத்தவில்லை. கண்ணாடியில் கண்மணியின் வெட்கத்தை ரசித்துக் கொண்டிருந்தான். கண்மணி இந்த முறை வண்டியில் ஏறி விட்டாள்.
“வெட்கத்தோட சேர்ந்து வார்த்தை வரும்னா.. ஏதாவது பேசு கண்மணி” பாலாவும் வெட்கத்தோடு சொன்னான்.
“இது வெட்கம் மட்டும்னா பேசிறலாம். சந்தோசமும் சேர்ந்து ஏதோ பண்ணுது.. அதான் முடில”
“உனக்கு தைரியம் வேணும்னா இங்கதான் என்னோட தோள் இருக்கு.. வேணுனா என் தோள் பிடிச்சுக்கோ” பாலா கண்மணியிடம் கூறினான். கண்மணியால் பேச இயலவில்லை. காதலை முழுமையாய் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
“என்னடி அம்மு” அவளை செல்லமாக கூப்பிட்டதில் இன்னும் மகிழ்ந்தாள்.
“வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு.. பேசு பொருள் நீ எனக்கு பேணும் மொழி நான் உனக்கு”
“பேச முடில சொல்லிட்டு பாரதியார் கவிதையே சொல்லிட்டாளே என் அம்மு.. நானும் ஒரு பாரதிதாசன் வரி சொல்லவா”
“சொல்லுங்க”
“அன்புள்ளம் பூணுகின்றேன். அதுவும் முற்றி ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்”
இப்படி தெவிட்ட தெவிட்ட காதல் கொண்டார்கள்.
ஒரு வருடத்திற்குப் பின்..
“உனக்கு காதல் சலிச்சிருச்சில.. நான் எவ்ளோ நேரமா காத்திட்டு இருக்கேன்.. நீ இன்னும் வரல.. பேசாத.. நான் கிளம்பறேன்” கோபமாக கத்திவிட்டு அலைபேசியை துண்டித்தாள் கண்மணி.
கத்தி விட்ட இரண்டே நிமிடங்களில் கோபமெல்லாம் பறந்து ஓடியது.
‘பாலாகிட்டப் போய் கத்திட்டோமே.. திரும்ப கூப்பிட்டு பேசலாம்’
அலைபேசியில் பாலாவை மீண்டும் அழைத்தாள்.
“என்னடா.. வர வேணான்னு சொன்னதும் நிம்மதியா விட்ருப்பியே… வா பொறுமையாவே வெயிட் பண்றேன் பாலா”
சில நிமிடங்களில் பாலா ஹோட்டலிற்கு வந்து சேர்ந்தான். உணவிற்கு ஆர்டர் செய்துவிட்டு பாலாவும் கண்மணியும் பேசிக் கொண்டிருந்தனர். உணவு வருவதற்குள் தான் தாமதமாக வந்த காரணத்தைக் கூறி சமாதானம் ஆகி ஆயிற்று.
உணவு வந்ததும் ஆசையாக அவனுக்குப் பரிமாறுகிறாள். அதற்குள் அவளுக்கு என்ன ஆயிற்றோ.. அடுத்த சண்டையை ஆரம்பித்தாள்.
“உனக்காக நான் ரொம்ப மெனக்கெட்டு ரெடியாகி வந்தேன். நீ எதும் சொல்லலையே இன்னும்.. அழகா இருக்கேன் அது இதுன்னு ஏதாவது சொல்லிட்டே இருப்ப.. இப்போ என்னடா ஒன்னும் தோணாலய” காதலிக்கும் பெண்ணிற்குரிய மனோபாவத்தில் ஏக்கமாய் கேட்டாள் கண்மணி.
பாலா பதில் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“அண்ணா இரண்டு மில்க் ஷேக்” மேலும் ஆர்டர் செய்தான் பாலா
“எனக்கு வயிறு ஃபுல் ஆயிடுச்சி.. எனக்கு வேண்டாம்..”
“எனக்கும் தான் கண்மணி.. இருந்தாலும் ஏன் ஆர்டர் பன்னேன்னா அந்த மில்க் ஷேக் வர கொஞ்ச நேரம் ஆகும் அது குடிக்கிற வரை நீ என் கூட இருப்ப.. நான் உன்னை பாத்துட்டே இருப்பேன்ல அதான்”
வாயடைத்து போன கண்மணிக்கு வெட்கமும் சந்தோஷமும் சூழ அவன் கண்களை பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.
“எப்படி எனக்கு என் காதலும் கண்மணியும் கசக்கும்.. கிறுக்கி”
எவ்வளவு தெளிவாக தன் காதலன் சொல்லி விட்டான். வெவ்வேறு விதமாக வெளிப்பட்டாலும் காதல் காதல் தானே.. புரிந்து கொண்டாள் கண்மணி.
அதற்காக இனி அவர்களுக்குள் சண்டை வராது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.. அதற்கும் தான் காதலில் ஊடல் என்று ஒரு பெயர் உண்டே!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings