பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஏதோ தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு! அவன் மகேஷ், அந்த அபார்ட்மென்ட்டுக்குப் புதுசு. குடி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. அம்மா விதவை…. ‘இவனுக்கு வேலை கிடைத்து சென்னைக்கு போகிறான். இனி நமக்கு கிராமத்தில் என்ன வேலை. அவனுக்கு ஒருத்தி வரும் வரையாவது சமைத்துப் போட வேண்டாமா.’
“டேய்… பாக்கிறது பாக்கறே… கொஞ்சம் பெரிய வீடாவே பாத்துடு. உனக்கு கல்யாணம் ஆனா சவுரியமா இருக்கும்”
அதான் இந்த வீட்டைச் பார்த்து குடியும் வந்தாகி விட்டது. காலையில் எழுந்தவுடன் வண்டியை (டூவீலர்) எடுத்துக் கொண்டு மார்க்கெட் போவான். காய்கறி, மளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வருவான். மாலையில் அம்மா ஏதாவது கோவிலுக்கு போய் வருவாள்.
வதனா…! அடக்கமான அழகான பெண். அப்பாவுக்கு அரசு வேலை. இ.எம்.ஐ.யில் இந்த ஃப்ளாட்டை வாங்கினார். ஒரே பெண். கல்லூரியில் எம்.பி.ஏ பண்ணுகிறாள். தினமும் காலையில் அப்பாவுடன் தரைத்தளத்தில் நடைப்பயிற்சி செய்வாள்.
சுமார் நூறு ஃப்ளாட்களைக் கொண்ட பெரிய அபார்ட்மென்ட். அடுத்த வீட்டில் யாரு… என்ன… எப்படி…. ம்…ஹும்…. பழக யாருக்கும் நேரமில்லை. எல்லோரும் வேலை வேலை என்று பறப்பார்கள்.
ஞாயிறு ஒருநாள் விடுமுறை. அனைத்துப் புறாக்களும் கூட்டிலடைந்து விடும். அல்லது அவரவர் குடும்பத்துடன் சுற்றுலா, கோவில், குளம். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பழகும் சந்தர்ப்பம் குறைவு.
இன்று வதனாவின் அப்பா, அலுவலக வேலையாக வெளியே போய்விட்டதால், தனியாகவே நடைப்பயிற்சிக்கு வந்தாள். இவளைத் தவிர நடை பயின்ற எல்லோரும் மூத்த குடிமக்கள். அப்படி இப்படி நடந்து விட்டு பார்க்பெஞ்சில் அமர்ந்து அரட்டை. அரசியல் முதல் அடுத்தாத்து அம்புஜம் வரை அலசல்கள்.
வதனா வேக வேகமாக அபார்ட்மென்டைச் சுற்றிச் சுற்றி வருவாள். அப்பா உடன் இல்லாததால் வேகம் அதிகம்.
மகேஷ் தன் வண்டியை ஸ்டான்ட் எடுத்துவிட்டு, பின்னால் நகர்த்தினான். இங்கே யார் வரப் போகிறார்கள் என்று சற்று அசால்டாகவே நகர்த்தினான். வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த வதனாவைக் கவனிக்காமல் அவளை இடிக்கும் நிலைக்குச் சென்று விட்டான்.
தற்செயலாக அதைக் கவனித்ததால் வதனா ” ஹலோ….. கவனம்” என்று குரல் கொடுத்தாள்.
மகேஷ், திடீரென அருகில் இனிமையான குரல் கேட்கவே, வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. நாம் காண்பதென்ன கனவா அல்லது நனவா. நம் கண் எதிரே நிற்பது மண்ணுலக மங்கையா, விண்ணுலக நங்கையா….. ஆஹா…. அப்சரஸ் அருகில் வந்தாளா…. ?
“ஸாரி…. மேடம்…. பார்க்கலே”
“அதான் தெரியுதே…. நல்ல வேளை….”
“ஆமாம்….. இங்கதான் இருக்கீங்களா?”
“என்ன அசட்டுத்தனமான கேள்வி… சரி வண்டியை எடுங்க”
அசடு வழிந்து கொண்டே வண்டியைக் கிளப்பினான் மகேஷ்
மாலை வதனாவும் தாயாரும் கோவிலுக்குக் கிளம்பினார்கள். லிஃப்டில் தரைத்தளம் வந்தவர்கள் ரோட்டை நோக்கி, நடக்கத் தொடங்கினர். அப்போது மற்றொரு பிளாக்கிலிருந்து மகேஷின் அம்மா கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாள். வதனாவின் அம்மாவைப் பார்த்து சிரித்தாள் மகேஷின் அம்மா.
“கோவிலுக்கா?”
“ஆமாம்…. நீங்க.?”
“கோவிலுக்குத் தான்… நாங்க இங்கே வந்து ஒரு வாரம் தான் ஆச்சு…. கிராமத்துல இருந்துட்டு…. இங்கு வந்ததுல…. மனுஷாளையே…. பாக்க முடியலே….. எல்லாரும் ரொம்ப பிஸியாக இருக்கா….”
“ஆமாம், அப்படித்தான்…. யாரும் லேசுல பழக மாட்டாங்க…. பழகினா… விட மாட்டாங்க”
“அப்படியா…. பாக்கலாம்…. இப்பத் தானே வந்திருக்கோம். போகப் போகப் பழகிடும்”
பேச்சு கோவில் வரை தொடர்ந்தது. பிரகாரத்தைச் சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்தனர். மகேஷின் அம்மாவிற்கு வதனாவின் பேச்சு ரொம்பப் பிடித்தது.
(அப்ப கதையை முடிச்சிடலாமா. மகேஷும் வதனாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு. அதெப்படி….. இப்பத் தானே பாத்திருக்காங்க…… அதுக்குள்ளே கல்யாணம்னா எப்படி…. இருங்க… அவசரப்படாதீங்க. )
மற்றொரு விடுமுறை நாள், மகேஷ் வீட்டில் இருந்தான். அழைப்புமணி அடித்தது. “அம்மா….” என்றான்
“யாருன்னு போய்ப் பாரேன்டா….”
பார்த்தான், வதனா நின்றிருந்தாள்
“அட…. நீங்களா….. என் வீடு எப்படி….?”
“வெய்ட்…. வெய்ட்…. நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் கேட்டா….?”
“அப்படின்னா…. புரியலே….”.
“இல்லே…. நான் கேக்குறேன்…. நீங்க இங்க எப்படி…?”
“நல்ல ஜோக்….. என் வீட்டுல வந்து…. அப்படின்னா…. எங்கம்மாவைத் தெரியுமா….?”.
“நல்லா கேட்டீங்களே…. உங்கம்மாவா அவங்க…. அவங்கதான் எனக்கு இப்ப வழிகாட்டி…. நாளைக்கு நான் எப்படி குடும்பம் நடத்தணும் என்பதற்கு கைடு….”.
“அப்ப நீங்க எக்ஸ்பர்ட் ஆகியிருப்பீங்க…. இனி தைரியமா குடும்பம் நடத்தலாம்…. ஐ மீன்…. நீங்க….”.
“என்ன…. பேச்சு ஒருமாதிரியாக போகுது….. “
“இல்லையே.. நல்லாத்தானே போகுது… ஆமா … எங்கே வந்தீங்க.” கேட்டுக் கொண்டிருந்த அம்மா கலகல என் சிரித்தவாறே….
“வாம்மா….வதனா….. மகேஷைத் தெரியுமா?”
“நல்லவேளை…தப்பிச்சேன்…. மோதலே…. நான் இன்னிக்கு நல்லா இருக்கேன்… இல்லைன்னா ஹாஸ்பிட்டல்ல என் கால் ஊஞ்சலாடிட்டிருக்கும்…” வதனா சிரிக்க… எல்லோரும் சிரிக்க….. !
(அப்படியே முடிச்சிடலாமா….. சே…. என்னங்க…. காதலிக்கவே ஆரம்பிக்கலே. ஓகே….இப்போது எல்லோரும் அறிமுகமாகி விட்டனர்… ஸோ….. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்திடலாமே….. இல்லையே….. அதுல கொஞ்சம் சிக்கலிருக்குங்க…என்ன…..?)
இப்போது இவர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். ஆனால் தனிமையிலல்ல…
“அம்மா…. ரொம்ப போரடிக்குதும்மா…. அப்படியே ஜாலியா…. மகாபலிபுரம் போகலாமா…. “
“போகலாம்..மகேஷ்….. ஆனா நாம்ப ரெண்டுபேர் மட்டுமா…. நல்லாருக்காதே….”
“ஒரு ஐடியா சொல்லட்டா….”
“என்ன சொல்ல வறே….. வதனாவையும் கூட கூப்பிடலாமா…..”
“அடப்பாவி…. கரெக்டா சொல்றே….. ஆனா வதனாவை மட்டுமில்லே. அவ அப்பா, அம்மாவையும்….” மகேஷின் முகத்தில் அசடு வழிந்தது. எப்படியோ ஒரு நாள் புறப்பட்டனர்.
மகாபலிபுரம்….. காதல் கிளிகள் கொஞ்சி விளையாடுவதற்கென்றே படைத்தானோ பல்லவன்…. கல்லிலே கலை வண்ணம் கண்டான். சிலை வடித்தான் ஒரு சின்னப் பெண்ணிற்கு… கன்னியவள் வயதோ பதினாறு…. ஆண்டுகள் போயின அறுநூறு. இன்னும் அவள் முதுமை எய்தவில்லை. என்ன தான் ரகசியம் புரியவில்லை.
இது போல் அங்கு வரும் காதலர்கள் மிக இனிமையாக பொழுது போக்குவர். நேரம் போவதே தெரியாமல் சிற்பங்களின் அழகைப் பருகுவர்.
நமது மகேஷும் வதனாவும் பெற்றோர்களுடன் நடக்கத் தொடங்கினர். மகேஷின் அம்மா… “டேய் நாங்க இந்த பெஞ்சுல உட்கார்றோம். நீங்கள் எல்லா இடமும் சுற்றிப் பார்த்துவிட்டு வாங்க.”
பெற்றோர்களை விட்டுவிட்டு வதனாவும் மகேஷும் நடந்தனர்… பெரியவர்கள் நாசூக்குத் தெரிந்தவர்கள். இப்போது ஜோடிக்கிளிகள் சுதந்திரமாய்ப் பறந்தன.
பலவித கருத்துப் பரிமாற்றங்கள். தங்கள் தங்கள் திறமைகள் குறித்து விவாதங்கள். குடும்ப நிலை பற்றிய கருத்துக்கள்.
கடைசியில் மகேஷ், “அப்போ எல்லா விதத்திலும் நாம ரெண்டு பேரும் ஒரே தண்டவாளத்துல பயணம் செய்யறோம். இதை வேறு விதமாக வித்தியாசமான கோணத்தில் பார்க்கலாமா?”.
வதனாவுக்கு மகேஷ் எங்கு வருகிறான் என்பது ஓரளவு புரிந்தது. இருந்தாலும் “நீங்க எங்க வறீங்க?” குறும்பாகக் கேட்டாள்
“என்னங்க நம்மைப் பெற்றவங்க நாம தனியாகப் பேச வழிவிட்டு ஒதுங்கிட்டாங்க. அப்படீன்னா அவங்க மனசுல ஏதோ முடிவு பண்ணிருக்காங்கன்னு தெரியுதில்லே. அந்த முடிவை ஏன் நாம் அப்ரூவ் பண்ணக்கூடாது. ஐ மீன். நாம்ப ஏன் லவ் பண்ணக்கூடாது?”
“ஓஹோ… ஐயாவுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கோ…. ஏதோ போனாப் போகுது ஃப்ரண்ட்ஷிப்பா இருந்து தொலைப்போம்னு பாத்தா…. ரூட்… எஙகெங்கேயோ போகுதே…. நான் இந்த விளையாட்டுக்கு வரலை…. இந்த மாதிரி சபலம் வந்ததுன்னா…. என் படிப்புக் கெட்டுடும். எனக்கு வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருக்கு. இப்பவே காதல், கீதல் வலையில் சிக்கினா, தப்ப முடியாது”
“என்னங்க விளையாடறீங்களா…. இவ்வளவு தூரம் ஆசையா வந்திருக்கோம்….. ஒரு தடவை…. ஒரே ஒரு தடவை ‘ஐ லவ் யூ’ சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க…”
“வேண்டாங்க…. இந்த விபரீத ஆசையெல்லாம் வேண்டாங்க. நாம பெஸ்ட் ஃப்ரண்டா இருப்போம். தாட் இஸ் ஆல்…. அதுக்கு மேல இப்ப வேண்டாம்”
“அப்படீன்னா…. ஏதோ உங்க மனசுலயும் இருக்கு….. ஆமா….. நம்ம பெத்தவங்க ஒத்துக்கிட்டாங்கன்னா…?”
“அதை அப்போ ஆலோசிக்கலாம்…. இப்ப புறப்படுவோம்.”
ஆனால் அங்கே பெற்றோர்களிடையே ஒரு மினி நிச்சயதார்த்தமே நடந்திருந்தது…. இவர்களுக்குக் தெரிய வாய்ப்பில்லை.
அந்த ஜோசியர் முன் மகேஷின் அம்மா வெகு ஆர்வத்துடன், அவர் திருவாய் மலர்ந்து என்ன அருளப் போகிறார் என அவரது முகத்தையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள். ஆனால், ஜோசியர் என்னமோ பெரிதாகக் கண்டுபிடிக்கப் போவது போல் இரண்டு ஜாதகங்களையும் அக்குவேறு ஆணியாவேறாகப் பிரித்துப் பரிசீலித்துக் கொண்டிருந்தார்.
திடீரென நிமிர்ந்து அம்மாவின் முகத்தைப் பார்ப்பதும் பிறகு மீண்டும் ஜாதகத்தினுள் முழுகி முத்துக் குளிப்பதுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. திரும்பவும் தலையை நிமிர்த்தி அம்மாவைப் பார்த்தவர், ஏனோ தனது முகவாய்க்கட்டையை வலது. கையால் சொறிந்து கொண்டார்.
(அதுதான் எல்லா டிவி சீரியல்லேயும் பாக்குறோமே…)
திடீரென தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ஏதோ சொல்ல வருகிறார், என்ன… என்பது போல் ஆர்வமாக அவரது முகத்தைப் பார்த்தாள் மகேஷின் அம்மா.
“ஜாதகம் இரண்டுக்கும் எட்டுப் பொருத்தம் பிரமாதமாயிருக்கு”
“அப்படியா…. ரொம்ப சந்தோஷம்…”
“ஆனா…..”
“ஆனா, ஆவன்னா எல்லாம் வேண்டாம். சொல்லறதை சட்டுப் புட்டுனுச் சொல்லுங்க.”
“ஏம்மா… அவசரப்படுறீங்க….அதுக்கு முன்னால் நீங்க பெண்ணுக்கு உறவா,.. பிள்ளைக்கா….?”
“நான் மகேஷோட அம்மாங்க….”
“அப்ப உங்ககிட்ட தாராளமா சொல்லலாம்…”
“என்ன சொல்லப் போறீங்க…. ஏதாவது பரிகாரம், கிரிகாரம்னா சொல்லுங்க… செய்துடறோம்”
“ஒன்னுமில்லே…. பெண்ணோட ஜாதகத்துல செவ்வாய் ரொம்ப ஸ்ட்ராங்கா நிக்கறார். பெண்ணுக்கு செவ்வாய் தோஷம்….”
” அதனாலென்ன…. பரிகாரம் ஏதாவது செய்துட்டாப் போச்சு…”
“இல்லீங்க…. அவ்வளவு ஈசியா சொல்லிட முடியாது…. பெண்ணுக்கு செவ்வாய் தோஷம்னா… பையனுக்கு ஆகாது.”
“அதுதான் ஏதாவது பரிகாரம் செய்திடலாம்”
“இல்லீங்க…. கலியாணம் ஆன ஆறுமாசத்துல மாப்பிள்ளை உசிருக்கே ஆபத்து வர வாய்ப்பிருக்கு”
“இப்ப என்ன சொல்ல வரீங்க?”
“இந்தப் பெண் வேண்டங்கறேன்….. வேறே பெண்ணா கிடைக்காது”
“இல்லீங்க இந்தப் பெண் மாதிரி கிடைக்காது”
“அப்புறம்…. ஒங்க இஷ்டம்…. நாளைக்கு வந்து என்னைக் கேக்கப்படாது…”
“நான் வரேங்க” கிளம்பினாள் மகேஷின் அம்மா.
இதை எப்படி வதனாவின் பெற்றோரிடம் சொல்வது.? சொல்லாமல் மறைத்து கலியாணம் பண்ணிடலாமா. அப்புறம் மகேஷுக்கு ஏதாவது ஆச்சுன்னா…. ஐயையோ…. வேண்டாம்…. வேண்டாம்….. ஜாதகம் பொருத்தமில்லேன்னு சொல்லிடலாம்.
ஆனா…. மகேஷ்கிட்ட உண்மையை மறைக்கறது தப்பில்லையா. பாவம் அவங்க ரெண்டுபேரும் நெருங்கிப் பழகிட்டாங்க…. அவங்களைப் போய் பிரிக்கறதா…? மகேஷின் அம்மா குழம்பினாள்.
“அம்மா…” மகேஷ் வந்து விட்டான்.
“என்னம்மா போன காரியம் காயா, பழமா… நீ போனேன்னா அது பழமாத் தானே இருக்கும்…. ஓ கே…. அப்ப வதனாகிட்ட ‘சக்சஸ்’ னு சொல்லவா….?”
“இல்லே மகேஷ்…. அவசரப்படாதே…. ஜோசியர் என்ன சொல்றார்னா…?”
“என்னவாம்….. பொருத்தமில்லைன்னுட்டாரா?”
“இல்லைடா….. ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு…. ஆனா….?”
“ஆனா…… என்னம்மா….. “
“வதனாவுக்கு செவ்வாய் தோஷமாம்டா… கல்யாணம் பண்ணினா… உன் உசிருக்கு ஆபத்தாம்”
கல..கல….கல…..வென சிரித்தான் மகேஷ்
“அம்மா…. செவ்வாயாவது…. தோஷமாவது…… எல்லாம் காசுக்காகச் சொல்றது….. ஏதாவது பரிகாரம், அது இதுன்னு சொல்லி இருப்பாரே….”
“இல்லைடா….. இதுக்குப் பரிகாரமே இல்லையாம்…….அந்தப் பெண் வேண்டாம்னு சொல்லிட்டார்டா….”
“போம்மா…..இதையெல்லாம் நம்பிக்கிட்டு….. பொருத்தம் பாக்கணும்னே…. பாத்துட்டே… அதோட விடு….. மற்ற காரியத்தைப் பாக்கலாம்….”
“இல்லேடா….. கல்யாணத்திற்கப்புறம் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா…. என்னால் தாங்க முடியாதுடா…. உன்னை விட்டா எனக்கு யாரிருக்கா…. வேண்டாம்டா…. சொன்னாக் கேளு…..”
“சரிம்மா….. நீ பயப்படறே….. ஆனா ஒன்னு…. வதனாகிட்டே பேசறேன்…. அவ ஒத்துக்கிட்டான்னா….ஓகே….”
பேசினான்….
இவனை விட அதிகமாக கல…..கல….கல….. என்று சிரித்தாள் வதனா.
“நான் அதுதான் அன்னைக்கே சொன்னேன். காதல், கீதல்னு வளத்துக்க வேண்டாம்னு….. இப்ப பாத்தீங்களா…. இது மாதிரி ஏதாவது வரும்னு எதிர்பார்த்துத் தானிருந்தேன்….. ஓகே…. அதனாலென்ன….. ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸா இருப்போம்….. அவ்வளவு தானே….”
“இல்லே வதனா….என்னால் அப்படி விட முடியாது. எனக்கு நீ வேணும் வதனா… உன்னைத் தவிர வேறொரு பெண்ணை என்னால் நினைக்கக்கூட இடமில்லை….”
“இல்லை மகேஷ்…. சூழ்நிலையைப் புரிஞ்சுக்கோங்க. பெரியவங்க மனசைத் துன்புறுத்தக் கூடாது. நாம் நாமாக இருப்போம்”
“இல்லை வதனா…. உன்னை முதன் முதலாய்ப் பார்த்ததிலிருந்தே… நீ எனக்கு கிடைக்க மாட்டியான்னு ரொம்ப எதிர்பார்ப்பை வளர்த்துக்கிட்டேன். அதற்கேற்றமாதிரி நாம் பழக நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. பெரியவங்களும் அதை மறுக்கலே… ஏதோ உரித்த வாழைப்பழம் வாயுக்குள் விழுந்து அது வயிற்றை அடையற நேரத்துல, வாந்தி எடுடா… ன்னா…. சே… முடியாது வதனா. நீ இதையெல்லாம் நம்பறியா…?”
“இல்லே மகேஷ்…. எனக்கு இந்த ஜாதகம் ஜோசியம் எதுலையும் நம்பிக்கை கிடையாது. ஆனா கடவுள் நம்பிக்கை உண்டு. நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் கடவுள் தான் இயக்குகிறார் என்பதில் தீவிர நம்பிக்கை உண்டு. எனவே, இப்படித்தான் நடிக்கணும்னு இருந்தா அதை நம்மால் மாற்ற முடியாது. எதற்காகவும் பெரியவங்க மனசு கஷ்டப்படக் கூடாது…மகேஷ்”
“அப்ப ஒன்னு செய்யலாம்…. உங்கப்பா. அம்மாவிற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம். எங்கம்மாவை நான் சமாளிச்சுக்கறேன்…. ப்ளீஸ்…வதனா… என் கூட கொஞ்சம் கோஆபரேட் பண்ணேன்…..”
“நீங்க இவ்வளவு தூரம் சொல்வதால ஒத்துக்கறேன். ஆனா என் படிப்பு முடிந்து தான் திருமணம்…. ஓகேவா….”
“ஓகே”
எப்படியோ மகேஷின் அம்மாவின் அரைகுறை ஒப்புதலுடன் மகேஷ் வதனா திருமணம் இனிதே நடந்தது.
(அப்பாடா…. ஒரு வழியா கதையை முடிச்சிட்டீங்க…..யாரு சொன்னா….. செவ்வாய் தோஷம்…. என்ன பண்ணித்துன்னு தெரிய வேண்டாமா….?)
இன்னிக்கு மகேஷ்…வதனா தம்பதியரின் 25வது திருமண நாள்…. தோளிற்கு மேல் வளர்ந்த ஒரு பையனும், (அமெரிக்காவுல இருக்கான்) +2 படிக்கிற பெண்ணும்….. தங்கள் திருமண நாளுக்கு மகேஷின் மகன் ஒரு ஸ்மார்ட்ஃபோன் குரியர் மூலம் பிரசன்ட் பண்ணினான். மகளுடன் கொடைக்கானலில் கேக் வெட்டி ஸ்டார் ஹோட்டலில் என்ஜாய் பண்ணுகிறார்கள்.
(அப்ப…. செவ்வாய் தோஷம்…? அதுதானே….. என்னாச்சு….?. எல்லாம் நம் மனசுல தாங்க….. நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்….. எல்லாம் நலமே…!)
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings