இன்னும் இரண்டே நாளில் கோகுலாஷ்டமி வரப் போகிறது என்கிற நிலையில், உமாவுக்கு அவள் அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது.
மகள் தியா பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக இந்தப் பண்டிகையின் சிறப்புகளைப் பற்றிக் கேட்க, கண்ணனின் லீலைகளையும், விஷமங்களையும் பற்றி உமா சொல்லிக் கொண்டிருக்கவும், கணவன் கணேசன் அலுவலகத்திலிருந்து வரவும் சரியாக இருந்தது.
கோகுலாஷ்டமிக்கு என்னென்ன பட்சணங்களும், நைவேத்தியங்களும் செய்வார்கள் என்று கேட்ட தியாவிடம் “சீடை, தட்டை போன்ற பட்சணங்களும், கண்ணனுக்கு மிகவும் பிடித்த அவலில் பாயசமும், பால், தயிர் வெண்ணெய்” என்று விவரித்துக் கொண்டிருந்தாள் உமா
”அம்மா நீ என்னென்ன பண்ணித் தரப் போற?” என்று தியா கேட்டு முடிப்பதற்குள்
”அதெல்லாம் ஒன்றும் இழுத்து விட்டுக் கொள்ளாதே? கிருஷ்ணன் உன்னிடம் சீடை, முறுக்கு பண்ணித்தா! என்று கேட்டாரா? இதெல்லாம் மனிதர்களா வகுத்துக் கொண்ட நியதி. விதவிதமாக சாப்பிட இப்படி ஒரு ஏற்பாடு. உன் திருப்திக்கு வேண்டுமென்றால் பாலையோ, பழத்தையோ நைவேத்தியம் செய்து விடு” என்றான் கணேசன். அவன் எப்பவுமே இப்படித் தான்.
‘விஷப்பரிட்சை எதுக்கு! என்று நினைத்திருக்கலாம். அல்லது மனைவியை கஷ்டப்பட வைக்க வேண்டாமென எண்ணியிருக்கலாம்’ என்று தனக்குள் பேசிக் கொண்ட உமா, தனது அம்மாவுடன் கொண்டாடிய கோகுலாஷ்டமி பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போனாள்
அம்மா நினைத்தால் இரண்டு மணி நேரத்தில் ஐம்பது பேருக்கு சமையல் செய்து முடிப்பாள். கைமணம் அற்புதமாக இருக்கும். வீட்டில் எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும் பண்டிகைகளில் அவள் என்றுமே குறை வைத்ததே இல்லை.
“குழந்தைகள் பத்து நாட்களாவது வைத்திருந்து சாப்பிடட்டுமே” என்று பார்த்துப் பார்த்து செய்வாள். கோகுலாஷ்டமி வந்து விட்டால் வெல்ல சீடை, உப்பு சீடை, தேன்குழல், தட்டை இன்னும் பிறவும் இருக்கும்.
ஒவ்வொன்றும் சம்படம் சம்படமாக செய்வாள். குழந்தைகளான என்னையும், தம்பியையும் உதவிக்கு அழைத்துக் கொள்வாள். மாவு தயார் செய்து விட்டு ’சீடைக்கு அழுத்தி உருட்டி எண்ணையில் போட்டால் முகத்தில் வெடித்துடும்’ என்று சொல்லி மாவை எடுத்து விரல்களின் இடையில் அழுத்தாமல் உருட்ட வேண்டும் என்பாள்.
நாங்களும் அம்மாவுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று பவ்யமாக உருட்டிப் போடுவோம். இதுவரை ஒருநாளும் சீடையோ மற்ற பட்சணங்களோ நன்றாக வரவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆயிரம் குறை சொல்லும் பாட்டியும் கூட, ”உன் பொண்டாட்டி செய்யும் தட்டை நன்றாக இருக்கும்” என்பார் அப்பாவிடம்.
அம்மாவின் கைப் பக்குவத்தில் சரியான உப்பு காரத்துடன் கரகரவென தட்டை அபாரமாக இருக்கும்.
பண்டிகைக்கு மட்டும் தான் செய்வாளா! என்றால் இல்லை. வெளியில் எங்காவது செல்லும் போதோ, கோவிலிலோ பார்ப்பவர்கள் யாராவது கர்ப்பமாக இருப்பதாகக் கூறிவிட்டால் போதும், அம்மா உடனே மாவு அரைத்து தட்டை தட்டி, ஒரு பாட்டில் புளிக்காய்ச்சல் செய்து, இனிப்புடன், இரண்டு முழம் பூவுடனும் கிளம்பி விடுவார்.
உமா கருவுற்றிருந்த போது அவளுக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அம்மா, உமாவின் திருமணத்துக்குப் பின், அவளுக்கு நல்வாழ்க்கை கிடைத்து விட்ட திருப்தியில் மறைந்து விட்டாள்.
அம்மா மறைந்த அடுத்த மாதமே உமா கர்ப்பமானாள். அம்மாவின் நட்சத்திரத்திலேயே பிறந்த தியாவை அம்மாவின் மறு உருவமாகவே எண்ணினாள் உமா.
திடீரென யாரோ கையை பிடித்து உலுக்கும் உணர்வு ஏற்பட்டதும் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டாள்.
இன்று பண்டிகைகள் என்றாலே பெரும்பாலானவர்கள் கடையில் வாங்கி வைத்து நிவேதனம் செய்து விடுகின்றனர். செய்ய செய்யத் தானே பழக்கம் வரும். ஒரு தடவை பக்குவம் தவறினாலும் மறுமுறை சுமாராகவாவது வரலாம். நாமே செய்தோம் என்ற திருப்தியும், கைக்கு அடக்கமான செலவுடனும், சுகாதாரமாகவும் இருக்கும்.
நம்முடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டு விடக்கூடாது. நாம் எவ்வளவோ முன்னேறினாலும் கடவுளுக்கு பீட்ஸாவையும் பர்கரையுமா நைவேத்தியம் செய்ய முடியும்?
அம்மா எத்தனையோ விதமான பட்சணங்கள் செய்தாள். இன்று நாம் நாலு விதமாவது செய்தால் தான் நாளை நமது மகள் அவள் காலத்தில் இரண்டு விதமாவது செய்வாள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது என்னுடைய தலையாயக் கடமை அல்லவா?
முடிவெடுத்தவளாய், சமையலறைக்குச் சென்று பட்சணங்களுக்கு வேண்டிய பொருட்களுக்கான பட்டியலை எழுதத் துவங்கினாள் உமா
#ad
#ad
கோகுலாஷ்டமி கதை அருமை.உமா உண்டானது அம்மாவே வந்து விட்டதாக நினைப்பது சிறப்பு.சீடை முறுக்கு என சாப்பிட்டது போல அசத்தி விட்டீர்கள்.எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
அம்மாவின் நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்து விட்டது.
ஆதி கதை அருமை. கன்னி முயற்சி என்று இன்னிக்குத் தளத்தில் சொல்லியிருக்கீங்க ஆனால் இதற்கு முன் எங்கள் ப்ளாகில் உங்கள் கதை வந்த நினைவு. ஒருவேளை சஹானாவில் முதல் முயற்சியோ!!?
கதை நன்றாக இருக்கிறது ஆதி. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். பல வரிகள் உங்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவுபடுத்தியது.
பாராட்டுகள், வாழ்த்துகள்
கீதா