in , ,

கதை கதையாம் (பகுதி 3) – சுஶ்ரீ

இந்தத் தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அவர் சைன் பண்ணிக் கொடுத்த புஸ்தகத்தை வாங்கிண்டு ஏமாற்றத்தோட கிளம்பினேன். யோசிச்சேன் அடுத்து ஜெயகாந்தன் சார் கிட்ட போலாமா?

அவரை நாலஞ்சு தடவை பாத்திருக்கேன் ஆனாலும் அதிகம் பேசினதில்லை பாத்தாலே ஒரு வித பயம். அதுலயும் அவர் கே.கே.நகர்ல இருக்கார். போகவே ஒரு மணி நேரம் ஆயிடும். லன்ச்சுக்கு அப்பறம் போகலாமானு யோசிச்சேன்.

சாண்டில்யன் சார் தியாராய நகர்ல இருக்கார்னு தெரியும். முதல்ல என் வீட்டுக்கே போனேன்.

“என்ன காலங்காத்தால ஊர் சுத்தி ஆறது எதாவது திரிசமம் பண்றேளா? என்னவோ இன்னிக்கு கிளீன் பண்ணி முடிச்சிடுவேன்னு வீர வசனம் பேசிட்டு அரைகுறையா விட்டுட்டு கம்பி நீட்டிட்டீங்க”

“சுசீ முக்கியமான விஷயமா பெரிய பெரிய எழுத்தாளர்களை சந்திச்சு பேசிண்டிருக்கேன். நீ என்னடான்னா விவரம் தெரியாம பேசறே”

“சரி சரி, உங்களுக்கு பிடிச்ச பாகக்கா கொத்சும், பருப்பு துவையலும் செஞ்சிருக்கேன், கை கால் அலம்பிண்டு சாப்பிட வாங்கோ”

“தொட்டுக்க சுட்ட அப்பளம்தானே?”

“என் சமத்து சக்கரைக் கட்டி, சீக்கிரம் வாங்கோ அப்பளம் நமத்துப் போயிடும்”

“சரிடி என் தங்கக் கட்டி, என் சுசிலான்னா சுசிலாதான், இதோ வந்துட்டேன்”

சுசிலா சிரிச்சிண்டே சமையலறைக்கு போனா.

உண்மைல சொல்றேன் சுசிலா மாதிரி மனைவி வாய்க்க கொடுத்து வச்சிருக்கணும்.

அன்பு ரசத்தை ஆசையோட கிண்ணத்தில் ஊத்தி அருகிலிருந்து பருக வைத்து இன்புறுவாள் (சே இந்த வசந்த்தைப் பாத்ததுல இருந்து எனக்கும் கன்னா பின்னானு கவிதை வரது)

இதுல இருக்கற கசப்பு ருசியா, எள் மணக்கும் காரம் ருசியா, புளிப்பு ருசியா, போட்ட வெல்லத்தோட சிறு இனிப்பு ருசியா, பக்குவமா வதங்கின பாகல்காய் துண்டுகளோட ருசியா சொல்லவே முடியாது.

என் சுசிலாவைப் போல எது ருசினு கண்டுபிடிக்க முடியாது.

பத்தாத்துக்கு பருப்புத் துவையல். மல்லிப்பூ சாதத்துல துவையலை நோகாம பிசைஞ்சு செக்கு நல்லெண்ணை சேத்து,சைட்ல ஒரு குளம் போல வெட்டி

அதுல ஆகா எண்ணெய் மிதக்கும் அந்த கொத்சு, அதில் மீனாய் மிதக்கும் பாகல் துண்டுகள். கரியடுப்புல சுட்ட சீரகம், மிளகு போட்ட கள்ளிடைக்குறிச்சி உளுந்து அப்பளம்.சொர்க்கமே வேண்டாம், இது போதும்.

கெட்டித் தயிர் போட்டு சாதம் தொட்டுக்க கொத்சு இதோட முடிஞ்சது திருப்தியா எழுந்து உக்காந்தா உண்ட மயக்கம் எங்கேயோ கொண்டு போறது. இதுல கதையாவது ஒண்ணாவதுனு ஈசிசேர்ல சாஞ்சிக்கதான் தோணறது.

சுசிலா தானும் சாப்டுட்டு, சமையலறையை சீர் பண்ணிட்டு வெத்தலை தட்டோட வந்தா. ”ஏன்னா வெத்தலை போட்டுக்கறேளா,ஜீரணம் சரியா ஆகும்”

மயங்கும் கண்களோட பக்கத்துல ஸ்டீல் சேர்ல உக்காந்த அவளைப் பாத்தேன்.

சாதாரண நூல் புடவை இள நீலக் கலர்ல,மேச்சிங்கா பிளவுஸ், வேலை பாத்து அலுத்தாலும் அழகு குறையாத முகம், லேசா கலைந்த கூந்தல். கொத்தமல்லி இலைத் துண்டு ஒண்ணு சங்குக் கழுத்தில் சொகுசாய் உக்காந்திருக்கு. என் கை நீட்டி அதை எடுக்க முயற்சி செஞ்சேன், சட்னு தலையை இழுத்துண்டா, ”என்ன இந்த நேரத்துல சரசம்”

“இல்லைம்மா இங்கே ஏதோ பச்சையா ஒட்டிண்டிருக்கு அதான்”

தானே துடைத்துக் கொண்டாள்., ”சரி சொல்லுங்க,வெத்தலை மடிச்சு கொடுக்கட்டுமா?” கேட்டுண்டே இரண்டு வெற்றிலைகளை தன் தொடைகளை மறைத்த புடவை மேலயே சுத்தம் பண்ணி காம்பை கிள்ளி எறிந்து விட்டு பின் பக்கமா ரோஸ் சுண்ணாம்பு தடவி தூள் பாக்கு சில பேரீச்சம் பழத் துண்டுகள் கலந்து அழகா மடிச்சு நீட்டினா.

எனக்கு வெற்றிலை போடறது அவ்வளவா பிடிக்காது ஆனா மனைவி அன்பா கொடுக்கறதை மறுக்க முடியுமா. வாயில போட்டு வெள்ளறி ஆடு மாதிரி அசை போட்டேன்.

அடுத்து அதே மாதிரி அடுத்த இரண்டு வெற்றிலை மடிந்து அழகாய் அந்த செப்பு வாய்க்குள் அடைக்கலமானது. வெற்றிலை கூட இவ்வளவு அழகா சாப்பிட முடியுமா, அசையும் வாய் அழகா,சிவக்கும் இதழ்கள் மெல்ல நுனி நாக்கை மட்டும் வெளியே நீட்டி சிவந்திருக்கானு கடைக் கண்ணால் பாக்கறா கண்கள் அழகா?

இன்னும் கொஞ்ச நேரம் இவ எதுர்ல இருந்தா இன்னிக்கு வேற வேலை நடக்காதுனு சட்னு மனசை கல்லாக்கிண்டு எழுந்தேன்.

இந்தத் தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கதை கதையாம் (பகுதி 2) – சுஶ்ரீ

    மலரும் சுமைதானடி (சிறுகதை ) – இரஜகை நிலவன்