இந்தத் தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஹால்ல சோஃபால அந்த கிரேட் மேன், எதுத்தாப்பல ரெண்டு பேர்.சிரிச்ச முகத்தோட “வாடாப்பா ஶ்ரீதரா எங்கே போயிட்டே இத்தனை நாளா, பையன் ஆத்துக்கு சிட்னிக்கா”
“இல்லை சார் இங்கேதான். முத தடவையா ஒரு சரித்திர நாவல் டிரை பண்ணிண்டிருக்கேன்”
ஹா..ஹா..னு சிரிச்ச அவர், ”பாவம்டா தமிழ் நாட்டு மக்கள் ,அவாளை விட்டுடு.சரி இவா யாரு தெரியுமோ? இது ஃபேமஸ் லாயர் கணேஷ், இது அவரோட அசிஸ்டன்ட் “
அவர் சொல்லிண்டிருக்கப்பவே இடை மறித்து “வசந்த் தானே”
கணேஷ் புன்னகையுடன் “என்னைத் தெரியலை என் அசிஸ்டன்டை தெரியறது”
வசந்த்,”பாஸ் என் புகழ் உலகளாவியது”
சுஜாதாவிடம் நான் எடுத்து வந்த சித்திரத்தை நீட்டினேன்.
“என்ன இன்விடேஷனா இந்த வயசுல இன்னொரு கல்யாணமா”
“இல்லை சார் இந்த படத்தை பாருங்க இதுக்கேத்த மாதிரி வெண்சங்கு பத்திரிகை தீபாவளி மலருக்கு கதை வேணும்”
“குறுநாவல் எழுத டயம் இல்லையேடா அடுத்த மாசம் 15 தேதிக்கு மேலதான் கொஞ்சம் ஃப்ரீ.”
“இல்லை 100 வார்த்தைல இன்னிக்கே வேணும்.”
“நூறு வார்த்தைலயா, ஆரம்பிச்சவுடனே முடிஞ்சு போயிடுமே, அப்டி வார்த்தை லிமிட் வச்சா எனக்கு எழுத முடியாது, நீ வேற ஆளைப் பாரு”
வசந்த் இடை மறித்து “எழுதலாம் பாஸ் கவிதை ஓகேயா நான் சொல்றேன் எழுதிக்கோங்க இப்பவே..பச்சை ரவிக்கையில் ஹூக் அந்து போச்சு”
கணேஷ்,”டேய் டேய் சும்மா இருடா படத்துக்கு ஏதோ கதை கேக்கறார் அவர், நடுவுல உன் மூக்கை நுழைக்காதே”
சுஜாதா சிரிச்ச வண்ணம்,”சாரி ஶ்ரீதரன் இந்த விளையாட்டுக்கு நான் வரலை வேற யாரையாவது பாரு”
வேற எப்படி அவரை வற்புறுத்தறது, மேடம் கொடுத்த காபியை குடிச்சிட்டு கிளம்பினேன். வாத்தியார்,”சாரி இன்னொரு தடவை பாப்போம்”
அங்கிருந்து யோசனை பண்ணிண்டே கிளம்பினேன். பக்கத்துல காந்திநகர் ரெண்டாவது மெயின் ரோட்ல கல்கி இருக்கார் நம்மளை பாப்பாரானு பயத்தோடயே போனேன். வாசல்லயே செடிக்கு தண்ணி ஊத்திண்டு நின்னுண்டிருந்தார். கேட்ல என்னைப் பாத்தவுடன் “யாருப்பா அது என்ன வேணும்” கேட் பக்கம் வந்தார்.
“நான் ஶ்ரீதரன் சார் ரைட்டர், விகடன்ல கூட தொடர்கதை எழுதியிருக்கேன்.”
“ஓ…கேள்விப்பட்டிருக்கேன், வா வா என்னைப் பாக்க வந்தயா”
“ஆமாம் சார் ஒரு உதவி வேணும்”
கார்டன் பெஞ்ச்லயே உக்காந்தோம். ”காபி சாப்பிடறயா”
“இல்லை சார் இப்பதான் குடிச்சேன்”
“சொல்லு எதாவது சங்கத்துக்கு டொனேஷனா?”
“இல்ல சார் ஒரு கதை வேணும்”
“என்னப்பா இது வினோதமான கோரிக்கை, என்னோட புஸ்தகம் ஒண்ணே கொடுக்கச் சொல்றேன்.”
அந்தப் படத்தை எடுத்து பவ்யமா நீட்டினேன்.
அதை வாங்கி உத்துப் பாத்தார். “புரியலையே, உன் குழந்தை போட்ட சித்திரமா? இதுல என் ஆட்டோகிராஃப் வேணுமா?”
“இல்லை சார் ராமாமிர்தம் சாரைத் தெரியுமில்லையா”
“ஆமாம் நம்ம ராமாமிர்தம், வெண்சங்கு ஆசிரியர், நன்னாத் தெரியுமே போன வாரம் கூட உட்லண்டஸ்ல சந்திச்சோமே”
“வெண்சங்கு தீபாவளி மலர் போடப் போறார் அதுல சின்னஞ்சிறு கதைகள்னு இந்தப் படத்துக்கு ஏத்த மாதிரி 100 வார்த்தைகள்ல ஒரு கதை வேணும்.”
வயித்தைப் பிடிச்சிண்டு குலுங்க குலுங்க சிரித்தார். ”ஏன்பா என் கதைகளை படிச்சிருக்கயா? சின்ன நாவலே 3 பாகம் எழுதறவன், என்னைப் போய் புரியாத படத்துக்கு நூறு வார்த்தைல கதை கேக்கறயே, யோசனை பண்ண வேண்டாமா ராமாமிர்தம் கேட்டான்னு நீயும் வந்துட்டயே.சரி என்னோட பாழடைந்த பங்களா கதைத் தொகுப்பு ஒண்ணு தரச் சொல்றேன் வாங்கிண்டு போ”
இந்தத் தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings