in ,

ஒரு மாலை (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘ஸ்ரீநிவாசா நகர்‘ என்ற பெயர்ப் பலகையைப் பார்த்ததும் பைக்கின் வேகத்தைக் குறைத்தான் ரவி. அங்கிருந்தே நிறைய வீடுகள் தெரிந்தன. அப்போதுதான் கவனித்தான், நான்கைந்து வீடுகள் தள்ளி நிறைய பேர் கூட்டமாக இருப்பதை. உற்றுப் பார்த்தான், இரண்டு பேர் பச்சைத் தென்னை மட்டையில் கீற்று பின்னிக்கொண்டிருந்தனர். அழுகைச் சத்தமும் கேட்டது.  பறைக்கொட்டும் சத்தமும் கேட்டது.

அதுதான் சாவு வீடு என்று புரிந்து போக, வண்டியை நிறுத்தினான். இப்போது ஒப்பாரிச் சத்தம் பெரிதாகக் கேட்டது. ஹெல்மெட்டை மாட்டிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு, கொக்கியில் தொங்கவிட்டிருந்த  கவரையும் எடுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி சாவு வீட்டை நோக்கி மெல்ல நடந்தான்.  

கவருக்குள் மாலை இருந்தது. ‘ மறக்காம ஒரு மாலை வாங்கிட்டுப் போயிடுப்பா… ‘ என்று அம்மா சொன்னது நினைவில் வந்து நின்றது.

மூன்று கிலோமீட்டருக்கு முன்பே டீ குடிக்க நின்றபோது பக்கத்திலேயே ஒரு பூக்கடை இருக்க… என்ன மாதிரி மாலை வாங்குவதென்று யோசித்தபடியே கடையை நெருங்கினான்.

அங்கே தொங்கிக்கொண்டிருந்த மாலைகளை பார்த்தபடியே இவன் வருவதைப் பார்த்த கடைக்காரர் ‘ மாலையா தம்பி… ‘ என்று கேட்க, ‘ ஆமாண்ணே… ‘ என்று இவன் சொல்ல… ‘ என்ன விசேஷத்துக்கு தம்பி ‘ என்று அவர் கேட்க, ‘ஒரு  பெரிய காரியம்… ‘ என்று இவன் சொல்ல, அதுவரை முகத்தில் நிறுத்தியிருந்த மலர்ச்சியை சட்டென தூக்கி எறிந்துவிட்டு ஒரு மாலையை கொக்கியில் இருந்து கழற்றி எடுத்தபடி, ‘ பெரிய காரியத்துக்கெல்லாம் இந்த மாலைத்தான் தம்பி போடுவாங்க… ‘ என்றுவிட்டு  கூடவே, ‘ நூறு ரூபா தம்பி… ‘ என்றார் அவர்.

கவருக்குள் இருந்த மாலையை மறுபடியும் பார்த்தவன், ‘ இந்த கிராமத்துல இந்த மாலைக்கு நூறு ரூபாய்… ஹூம்… ‘ என்று முனுமுனுத்துக்கொண்டான். 

பழைய காரைவீடு. முன்பக்கம் பந்தல் போட்டிருந்தனர்.  திண்ணையில் அழுகைச் சத்தத்துடன் பெண்கள் கூட்டம்.      மக்கள் உள்ளே போவதும் வெளியே திரும்புவதுமாய் இருந்தனர்.  சிலர் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர்.

சிலர் அங்கே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்க, சிலர் கற்கள், சிமெண்ட் ஸ்லாப் என்று கிடைத்த இடங்களில் எல்லாம்  உட்கார்ந்திருந்தனர்.

‘ உங்க பெரிய மாமனோட சின்ன மாமியாருக்கு பெரிய ஓர்ப்படியார்… ‘ என்று உறவை நீட்டி இழுத்துச் சொன்ன அம்மா, ‘ அவங்களுக்கு மூணு ஓர்ப்படியாராக்கும்… ‘ என்று கொசுறாகவும் சொல்லி அவனை குழப்பியும் அனுப்பியிருந்தார்.

‘ அதிகப்படியான  போக்குவரத்தும், பேச்சு வார்த்தையும் இல்லை என்றாலும், எங்கேயாவது எப்போதாவது பார்க்க நேர்ந்தால் பத்து நிமிடமாவது நின்று பேசாமல் நகரமாட்டார்கள் அந்த பெரியம்மா… ‘ என்றும் அம்மா சொல்லியிருந்தார். இவனுக்கும் அவர்களை அதிகம் தெரியாது.

கவரைப் பிரித்து ஓரமாகப் போட்டுவிட்டு மாலையை மட்டும் கையில் பிடித்தபடி நடந்தான்.  அப்போது ஒரு பையன் கையில் ட்ரேயுடன் எதிரே வந்தான்.

‘ அண்ணே… டீ எடுத்துக்கங்க… ‘  

‘ இல்லேப்பா… வர்றப்பத்தான் டீ குடிச்சிட்டு வந்தேன்… ‘

பறைக் கொட்டு காதுகளை கிழித்தது. இவனைப் பார்த்ததும், வாசல் ஓரமாய் நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிலர் எழுந்து நின்று கைகளை நீட்டினர். அவர்களுக்கு கை கொடுத்துவிட்டு திரும்பி அங்கே ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தவர்களை ஒதுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். மாலையை பெரியம்மாவின் உடல் மேல் போட்டுவிட்டு நகர்ந்தான். கண்ணீர் ஒன்றும் வரவில்லை, இவனைப் பொருத்தவரை அது யாரோ… அம்மாவுக்காக வந்தவன்…

அப்போது ஒரு வண்டி ஹாரன் சத்தத்துடன் ரோடோரம் மெல்ல வந்து நின்றது. அது இறுதி யாத்திரை ரதம் என்று பார்த்ததும் புரிந்தது. உடனே, அந்தப்பக்கம் இருந்த ஒருவர், ‘ ஏம்பா…. மாலைகளை அப்படியே அள்ளிக்கிட்டு வாங்கப்பா… ரதத்துல தொங்கவிடலாம்… ‘ என்று சொல்ல, இரண்டு மூன்று பேர் ஓட்டமுமும் நடையுமாக பந்தலுக்குள் ஓடினர்.  இவன் போட்ட மாலையும் மற்ற மாலைகளுடன் சேர்ந்து ரதத்திற்கு மாறியது.

இப்போது ரோடு பக்கம் இருந்து டிரம் செட் சத்தம் கணீர் என்று கேட்டது. யாரோ நெருங்கிய சொந்தக்காரர்கள், மாலை, சீர்வரிசை எடுத்துக்கொண்டு டிரம் செட் முழங்க வருகிறார்கள் என்று புரிந்துகொண்டான்.

ஓரமாய் கிடந்த ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.  மொபைலைப் பார்த்தான். மணி ஒன்று.

‘எப்போது எடுப்பார்கள் என்று தெரியவில்லையே… அதுவரை இந்த வேகாத வெயிலில் உட்கார்ந்திருக்கத்தான் வேண்டுமா… இன்னும் கொஞ்சநேரமாலா பசிக்க ஆரம்பித்து விடுமே… ‘ யோசனை ஓடியது.

பின்னால் சிலர் பேசிக்கொண்டனர், ‘ தோ… மக வயித்து கோடி வந்திடுச்சு…  இனிமே குளிப்பாட்டிப் பேரனுங்க எண்ணெய்த்திரி பிடிக்க, கோடித்துணி போர்த்தினாங்கன்னா அப்புறம் தூக்கிடுவாங்க…. நாமலும் கிளம்பிடலாம்… ஆடு மாடெல்லாம் கட்டியே கிடக்கும்… ‘

‘ இரண்டு அல்லது மூன்று மணி போல தூக்கிவிடுவார்களோ…  ‘ யோசனை ஓடியது.

‘ வந்தாச்சு… மாலை போட்டாச்சு… தூக்க லேட்டாகும்போல… உட்கார்ந்து என்ன செய்ய… ‘ யோசித்தபடியே அம்மாவுக்கு ஃபோன் போட்டு சொல்ல நினைத்த அதே வேளை, அதுவே சிணுங்கியது.

அம்மாவின் நம்பர்தான்…

‘ டேய்… ராசு சித்தப்பன் ஃபோன் பண்ணினான்டா… ஏன் அத்தாச்சி நீ வரலையான்னு கேட்டான்… உன்னை அனுப்பி இருக்கேன்னு சொன்னேன்… உன்னை பார்க்கலைன்னு சொன்னான். நீ அவங்க யாரையும் பார்க்கலையாடா… ‘ என்றாள்.

‘ அம்மா… எனக்கு யாரைம்மா தெரியும்… உனக்குத்தான் அந்த உறவுமுறைகாரங்களை எல்லாம் தெரியும்… மாய்ஞ்சு மாய்ஞ்சு மணிக்கணக்கா பேசுவே…  ‘ என்றான் இவன்.

‘ அதுசரி… நீ யாரோடாவது ஒட்டினாத்தானே உனக்கும் தெரியும்… ஏதாவது சொன்னா நீ பார்த்துக்கோம்மான்னுட்டு ஓடிடுவே… எப்படியோ அத்திப் பூத்தாப்புல இன்னிக்கு சொன்னதும் மறுக்காம கிளம்பிட்டே… ‘ என்றவள்,  ‘ உன்ன அனுப்பியிருக்கேன்னு சொன்னதும், ராசு உன் நம்பரை கேட்டான்டா, குடுத்துருக்கேன்… ‘ என்றாள் அம்மா.

அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ‘ உர்ர்… உர்ர்…உர்ர்ரென்றது மொபைல். ‘ கொஞ்சம் இரும்மா… வேற ஏதோ கால் வருது… புது நம்பரா இருக்கு… ‘  என்றுவிட்டு இடையில் யார் கூப்பிடுகிறார்கள் என்று பார்த்தான். புது நம்பர்தான்…

‘ அம்மா சொன்னவராக இருக்குமோ… ‘ அம்மாவின் காலை ஹோல்டிங் வைத்துவிட்டு அந்த நம்பரை அழுத்தினான்.  

‘ தம்பி…நாந்தான் ராசேந்திரன்… எங்கேப்பா இருக்கே… ‘

ஸ்பீக்கரை ஆன் பண்ணி மொபைலை கையில் பிடித்தபடியே பேசினான்.

‘ சித்தப்பா… நான் இங்கேதான் உட்கார்ந்திருக்கேன்… ‘

‘ இங்கேன்னா… ‘

‘ சாவு வீட்டுலத்தான்… மாலை போட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்கேன்… எனக்குப் பின்னாலதான் ரதம் நிக்குது… மாலை போட்டு ஜோடிச்சிக்கிட்டிருக்காங்க… நீங்க…? ‘

‘ ரதமா… இங்கே ரதம் கிடையாதேப்பா… பாடையில வச்சு தூக்கிட்டுப் போறதுன்னு சொல்லிட்டு பாடைதானே கட்டிக்கிட்டிருக்காங்க…  ‘

சட்டென திரும்பிப் பார்த்தான். ரதம்தான் நின்று கொண்டிருந்தது.

‘  தம்பி… ஸ்ரீனிவாசாநகர்லதானே இருக்கீங்க… ‘

‘ ஆமா… நீங்க… ? ‘

‘ நானும் அங்கேதான் இருக்கேன்… நீ வேற யார் வீட்டுக்கோ போயிட்டீயோனு நினைக்கறேன்.. இந்த ஊர்ல எத்தனை சாவுன்னு தெரியலையே… சரி சரி… செத்துப்போனவங்க பேரு மாரியாத்தாவான்னு கேளுப்பா… ‘

பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டான்.

‘ தம்பி செத்துப்போன பேரு சிவகாமி… ‘ என்றார் அவர்.

சட்டென எழுந்தான்.  ‘ என்ன தம்பி… என்னாச்சு… ‘ என்றார் அவர்.

‘ ஒன்னுமில்லைங்க… ஒரு மாலை வாங்கணும்… இங்கே எங்கே கிடைக்கும்… ‘ என்றபடியே அவரது பதிலையும் எதிர்பார்க்காமல் பைக்கை நோக்கி ஓடினான்.

‘ நான் லொகேஷன் மேப் போட்டு உடறேன் பார்த்துட்டு வந்துடுப்பா… ‘ மொபைலில் ராஜேந்திரன் இன்னும் பேசிக்கொண்டே இருந்தார்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாக்கிங் போகிறான் மணி (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    எனக்கொரு மகன் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு