எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஜங்க்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த ராமன் நடக்க ஆரம்பித்தார். பிஷப்ஹீஃபர் காலேஜை ஒட்டித்தான் வீடு. சுமார் இரண்டரை கிலோமீட்டர்… நடந்தே போய் விடலாம் என்ற தைரியத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டார்.
மதுரையில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தார். திரும்பி வந்து சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இறங்கினார். ஆட்டோவை நெருங்கினார். இருநூறு ரூபாய் சொன்னான்.
கடுப்பானார். ‘ தம்பி… மதுரைலேர்ந்து வர்றேன்… நூறு ரூபாதான் பஸ்க்கே கொடுத்தேன். இதோ இங்கே இருக்கற பிஷப்ஹீஃபர் காலேஜுக்கு இருநூறு ரூபா கேட்கறீயேப்பா… ‘ என்றார்.
அவனோ கூலாக, ‘ ஸார்… நைட் நேரம்… இதான் ரேட்… ‘ என்றான்.
மற்ற ஆட்டோக்காரனிடம் கேட்க இஷ்டமில்லை. அவங்களும் அதே ரெட்தான் சொல்லுவார்கள், தெரியாதா என்ன… சவாரி இல்ல்லாமல் ஒரு மணிநேரம் கால்கடுக்க நின்றிருந்தாலும் நிற்பார்கள். ரேட்டைக் குறைக்கமாட்டார்கள்.
இவர் நகருவதைப் பார்த்த ஆட்டோக்காரன் கூப்பிட்டான். ‘ ஸார் வேணா குறைச்சுப் போட்டுக்கலாம்… ‘
பேரம் பேசுவதாவது. அதற்கு முதலிலேயே குறைத்து அவன் சொல்லியிருக்கலாமே… கண்டுகொள்ளாமல் நடந்தார்.
ராத்திரி நேரம் ஜில்லென்று இருந்தது. ஜி.ஹெச்.பக்கம் பாலம் ஒன்று கட்டிக்கொண்டு பஸ்ஸை விடுவதில்லை. பஸ் போனாலும் தென்னூரில் இறங்கி நடந்துவிடலாம். இப்போது நடந்தே விடலாம் என்று நடக்க ஆரம்பித்துவிட்டார்.
கிட்டத்தட்ட பாதிதூரம் வந்துவிட்டார். கால் லேசாக வலிப்பது போல இருந்தது. யாரிடமாவது லிஃப்ட் கேட்கலாமா… அதே நேரம் ஒரு பைக்காரன் அவரைக் கடந்து போனான்.
ஆகா மிஸ் பண்ணிவிட்டோமே. அவன் தூரத்தே வரும்போதே நாம் கைகாட்டியிருக்க வேண்டும். முன்னே போய்விட்டவனை எப்படி கைதட்டி கூப்பிடுவது, அது அநாகரீகமல்லவா…
யோசித்துக்கொண்டே நடந்தார். இப்போது அடிக்கொருதடவை பின்பக்கம் திரும்பியும் பார்த்துக் கொண்டார். யாரும் வரக் காணோம்.
ஒரு ஆட்டோ வந்தது. காலியாக இருப்பது போலத் தெரிந்தது. ஆனாலும் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். நீட்ட இருந்த கையை இழுத்துக்கொண்டு பேசாமல் நடந்தார்.
நல்லவேளையாக ஒரு மொபெட்காரன் வந்தான். கை இறக்கி நீட்டினார்.
‘ தம்பி… பிஷப்ஹீஃபர் காலேஜ் வரை… ‘
‘ஸார்… நான் முன்னால ரைட் எடுத்துடுவேன்… ‘ என்றுவிட்டு போய்விட்டான். பார்த்துக் கொண்டே நடந்தார். ரைட் எடுத்துதான் போனான் அவன்.
நமக்கில்லை… நமக்கில்லை…
மறுபடியும் பின்பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தார். இன்னொரு பைக் வந்தது.
‘ தம்பி… பிஷப்ஹீஃபர் காலேஜ் வரை… ‘
‘ ஸார்… நான் ரைட்ல போறேன்… ‘ என்றுவிட்டு அவனும் போனான்.
இதென்ன இன்னிக்கு எவனும் நம்ம ரூட்டுல போகக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு போறானோ…
அப்போதுதான் ஞாபகம் வந்தது, பாலம் வேலை நடைபெறுவது. ஆனாலும் ஆட்டோ போகும். பைக் போகலாம். வழிவிட்டிருக்கிரார்கள். இவர்களுக்கென்னதான் வந்தது.
திடீரென்று இன்னொரு மொபெட் வேகமாய் வந்தது. கை இறக்கினார். அவன் நிற்காமல் வேகமாய் கடந்து பிறகு நின்று திரும்பினான்.
‘ தம்பி… பிஷப்ஹீஃபர் காலேஜ் வரை… ‘
‘ இல்ல ஸார்… ‘ என்றுவிட்டு போய்விட்டான்.
எதற்காக இல்லை என்றான் என்று இவருக்குப் புரியவே இல்லை. ஒருவேளை இவனும் ரைட்டில் போவானோ. ஆனாலும் நேராகத்தான் போனான்.
முக்கால்வாசி தூரம் கடந்தாகிவிட்டது. மீதத்தையும் கடந்துவிட மாட்டோமா…
போங்கடா… போங்க… யாரையும் நம்பி நான் பொறக்கலை…
நடந்தார்… நடந்தார்… யாரும் வரவே இல்லை. ஜிஹெச்சையும் தாண்டினார். இன்னும் ஒரு பர்லாங்தான்… நடந்தார்.
சட்டென கிரீச்சிட்டு ஒரு மொபெட் நின்றது.
‘ ஸார்… சுந்தரமூர்த்திதானே நீங்க… ‘
‘ ஆமா… ‘
அப்போதுதானே தெரிந்தது. அவர் எப்போதும் மளிகை சாமான் வாங்கும் கடைக்காரர் அவர் என்று. ஆனால் அவர் கடை காந்தி மார்க்கட் பக்கமாயிற்றே… ஒருவேளை வீடு குமரன் நகர் அல்லது ஸ்ரீனிவாச நகர் பக்கமோ… இல்லை வயலூரோ…
‘ எங்கே இந்தப்பக்கம்… ஏன் நடந்து போறீங்க… அதுவும் இந்த நேரத்துல… ‘
சுருங்கச் சொன்னார், கதையை.
‘ பிஷப்ஹீஃபர் காலேஜ்தானே… வாங்க… நான் டிராப் பண்ணிடறேன்… ‘
மறுத்தார். ‘ தேங்க்ஸ்… தோ வந்தாச்சு… கொஞ்சம் தூரம்தானே… நடந்துடுவேன்… சில்லுனு இருக்கு கிளைமேட்… என்ஜாய் பண்ணிட்டே வந்துடறேன்… தேங்க்ஸ்… நீங்க போங்க… ‘
தானாக வந்த லிஃப்ட்டை மறுத்துவிட்டு நடந்தார். வீட்டையும் அடைந்தார்.
கதவைத் திறந்துவிட்ட கமலம், ‘ ஒரு இருநூறு ரூபா கொடுத்துட்டு வந்தா என்ன குறைஞ்சா போயிடுவோம்… இந்த அர்த்த ராத்திரில நடந்தே வந்திருக்கீங்களே… அதுவும் தனியா… ‘ என்று முனகிக்கொண்டே உள்ளேபோனாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings