எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்பு நண்பனுக்கு
இராசா, நான் நலம். என் உயிரும் உறவுமான நீயும்நலமாக இருப்பாய் என்றே நம்புகிறேன்.
மேலுலகில் கடவுள் உனக்கு எல்லா செல்வங்களும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தந்தருள வேண்டுகிறேன். செபிக்கிறேன்
கல்லூரியின் மூன்றாவது நாள் மூத்த மாணவர்கள் விடுதியின் முக்கிய நுழைவாயிலில் நின்று வம்பிழுத்த போது மூத்த மாணவன் ஆனாலும் அந்தக்கலகத்திலிருந்து விடுவித்து ஆசுவாசப்படுத்தி விடுதியின் உணவகத்தில் வெங்காய வடையும் தேநீரும் பகிர்ந்ததில் உண்மையான நட்பை விட உயிர் அண்ணனாகத் தான் அறிமுகமானாய்…
இன்றும் செய்தித்தாள்களில் கல்லூரி செய்திகளில் என் மூக்குக் கண்ணாடி தாண்டி எங்கும் வியாபித்துப் போகிறாய் திரைப்படங்களில் வட்ட வளையங்கள் வழியே பழைமையை நினைவு படுத்துவது போல…வாழும் நாளெல்லாம் நொடிக்கொருதரம் எனக்கான பாதையின் மீதே உந்தன் பார்வை நிலை நின்று விடுகிறது. எதைச் சொல்ல…எதை விடுக்க..
கல்லூரிச் சுவர் தாண்டி எம்.ஜி.ஆர் நடித்த மீனவ நண்பன்பார்த்த ஞாபகங்களுக்குள் இழுத்துப் போடுகிறது…
திரைப்படம் முடிந்து படகில் பயணம் எப்படி இருக்கும் என்று சாதாரணமாகக் கேட்டதற்காக அடுத்த நாள் கல்லூரியில் உடல் நலமில்லை மருத்துவரை பார்க்க வேண்டும் என பொய் சொல்லி விட்டு ராமேசுவரம் வந்து என்னை உங்கள் வீட்டுப் படகில் பயணிக்க வைத்த நாளை எப்படி இதய அறைகளிலிருந்து பிடுங்க முடியும்…
தெரியாமல் தவறிக்கடலில் என்னை அப்படியே அள்ளிப்போட்டு மூன்று நாள் சோறு தண்ணி இல்லாமல் என்னோடு மருத்துவமனையில் தூக்கமின்றி நான் நலமாக எழும் வரை அருகில் இருந்த உன்னை..ம்..ம்..காலமும் எப்படிப் பிரித்துப் போடுகிறது…அதற்கு முதலில் விலங்கிட வேண்டும்.
வேதனைக்குள் சுழன்றாடி சோதனைகளுக்கு இலக்காகி உருட்டிப் போட்ட அத்தனை இன்னல்களை தான் தாண்டி நான் எழுந்து நின்று சிகரங்களில் நின்றாலும் பள்ளங்களின் பாதச்சுவடுகளைப் போல உனது ஊக்குவிப்புகள் பின் நின்று இயக்கப்படுத்துகின்றன. கண்ணீர் விழுங்கி காலத்தை எனக்குள் உருவேற்றி உருவேற்றி மின்னும் உயரங்களைத் தொடும் ஒவ்வொரு நொடியும் ஓயாது தன்னையே உருக்கி உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் உன் கண்ணீர் நினைவில் எழும்.
உன் வீட்டிற்கு வந்து உன் தங்கை தேன்மலரை விழி விரிய சந்தித்து.. அவள் இதயத்தில் விழுந்து…
தவறு செய்து விட்டோமோ என்று அடிக்கடி என்னையே வேதனைச் சாட்டைகளால் காயப்படுத்திக் கொள்கிறேன்
கோபங்களில் நான் குதித்தால் புன்னகை கவசத்தால் என்னை குளிர்விப்பாய். எது உனது சுதந்திரம் அதற்கான வாய்ப்புகளை உனக்குத் தந்திருக்கிறேனா என்ற அடிப்படையெல்லாம் அறியாமல் உனக்கான பொழுதுகளை நான் திருடினாலும் உயிரைக் கொடுக்கவும் துணிவாய்.
புதிய வார்ப்புகள் திரைப்படம் பார்த்து விட்டு விடுமுறையில் ஊருக்குச் செல்லும் வேளையில் நீ அழைத்தும் நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்றதும் என் கண்களில் பளபளப்பின் ஒளியும் கண்டு உனக்குள்ளே ஒளிர்ந்த ஆச்சரியம் எனக்குள்ளே முதல் முறையாய் பயம் வந்தது..
ஆம். நீ அழைக்கும் போதெல்லாம் வர மறுத்த நான் அப்போது உடனே வருகிறேன் என்று நான் சொன்னது தேன் மலருக்காக என்பது எனக்குள்ளே அப்போது தான் இலைக் குருத்தாய் புரிந்து.
உன்னிடமிருந்து வருகையில் அதையே பின்பற்றியபடி எனக்கான வாய்ப்புகளைக் தேடத் தொடங்குவேன். எனது பற்பலத் தேடல்களில் உன்னை தொலைக்கச் சொன்னார்கள்.
உன்னைப் பார்க்கத்க்கத் தோன்றிய கணங்களில்எனக்கான தேடல் எதற்கு என்ற எண்ணத்தில் நுழைந்துவிடுகிறது மனம்.
எனக்கான கனவுகளில் நான் இமயம் தொட்ட போதும் உன் இதய இருப்பிடம் காலியாகி வெற்றிடம் நிரப்ப முடியாத பாலை வனமா…நினைவுகளின் சோலை வனமா… புரியாத சுழல்கள் தான்…
யாருக்கும் தெரியாமல்…உன் தங்கை தேன்மலரோடு நான் ஓடிப்போக…கோபத்தில் உறவினரோடு எங்களை விரட்டியஉன்னையும் உறவினர்களையும்சுனாமி எனும் பேரலைச் சருட்டிக்கொண்டு செல்ல.
இதய அலைகள் ஓங்கி ஓங்கி இதயச் சுவர்களில் அறைந்து இரத்தச் சிதறல்களில் குளிக்கச் சொல்கிறது…
உன் அன்பின் ஆழத்தை தொடாமலிருந்த போதும் என்றும் உன் அன்பு நண்பன்நான் இருளில் மூழ்கி அலையும்
இதயக்கண்ணன்
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings