in , ,

உன் விழிகளில் விழுந்தேன்❤️(அத்தியாயம் 1) – கி.கரோலின்மேரி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இரவுக்கே உரிய சத்தம் அந்த இடத்தை ஆக்ரமிக்க, வானில் இருள் பரவி இருந்தது. அதில் கண்சிமிட்டும் நட்சத்திரங்களோடு நடுவில் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டு இருக்கும் நிலாவை ரசித்து நின்றாள் தாரிகா.

உதிக்கும் ஆதவனை காண்பது ஒரு சுகம் என்றால், இருளில் ஒளிரும் நிலாவை காண்பதும் ஒரு சுகமே. இவளும் அந்த சுகத்தை அனுபவித்தாள்.

சிறிது நேரத்தில் “வா வெண்ணிலா” என்ற பாடல் ஒலிக்க, அந்த குரலுக்கு சொந்தக்காரி யார் என்பதை உணர்ந்து “பல்லவி” என்று அழைக்க, “நானே தான் அக்கா. நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்றவாறு அருகில் வந்தாள்.

“நீ ஏன் இன்னும் தூங்கவில்லை?” என்று தங்கையிடம் கேள்வி கேட்க,

“நான் தான் முதலில் கேட்டேன்” என்று கூறி அவள் முகத்தை சுருக்க,

“ஒன்னும் இல்லை டா.கொஞ்சம் நேரம் நடந்துட்டு வரலாம் என்று நினைத்தேன்”

அதை கேட்டு “அய்யோ” என்று அவள் அலற,

“என்ன டா? எதுக்கு இப்படி சத்தம் போடுகிறாய்?” என்று அவளை அதட்ட,

“சாரி சாரி பேய் வாக்கிங் போகிற இந்த நேரத்தில்  நீ வாக்கிங் போறேன்  என்று சொன்னாயா அதான் கத்திட்டேன்” என்று மெல்லிய குரலில் கூற,

“ம்ம்ம்” என்று முறைக்க,

“ஹிஹி. சரி ரொம்ப பாசமாக பார்க்காமல் சீக்கிரம் வா தூங்கலாம்” என்றவாறு அவள் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

தாரிகா, பல்லவி இருவரையும் அக்கா தங்கை என்று சொல்வதைவிட இணைபிரியா தோழிகள் என்றே சொல்லாம். இருவருக்கும் இரண்டு வயது மட்டுமே வித்தியாசம் என்றாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள்.

உறங்கும்போது தனக்கு பிடித்த டேடியை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் தாரிகாவையும் வைத்துக்கொண்டு தான் உறங்குவாள். இது வாடிக்கையான ஒன்றுதான்.

காலையில் குளித்துவிட்டு, மஞ்சள் பூசிய முகத்தோடு சாமி முன்னால் அமர்ந்து மனம் உருக வேண்டி கொண்டு இருந்தார் வான்மதி. அந்த வீட்டின் குடும்பத்தலைவி. அமைதியான சுபாவம் கொண்டவர்.

அப்போது அங்கு வந்த லட்சுமணன் மனைவிக்கு தொந்தரவு தராமல், நாற்காலியில் அமர்ந்தார். வேண்டுதலை முடித்துவிட்டு கண்களை திறந்தவர் தீபாராதனையை எடுத்து கொண்டு கணவரிடம் சென்றார்.

புன்னகையோடு விபூதியை நெற்றியில் வைத்தவாறு ” என்ன மா கடவுளிடம் நிறைய விண்ணப்பம் வைத்து இருக்கிறாய் போல?” என்று அவர்வினவ,

“நிறைய இல்லங்க. கொஞ்சம் தான்” என்று கைகளின் அளவை விரித்து காட்டினார்.

அவரின் செயலில் சிரிப்பு வர, “உன்னுடைய பேச்சும், செய்கையும் வேற மாதிரி இருக்கு மா”

“நான் கேட்டது கடவுளுக்கு சின்ன விஷயம் தான் ஆனால் எனக்கு பெரிய விஷயம் அதான் அப்படி சொன்னேன்” என்று புதுவிதமான விளக்கம் ஒன்றை தர,

“இதுபோன்ற விளக்கத்தை எல்லாம் நான் கல்லூரியில் தந்தால் அவ்வளவு தான்” என்று மனைவியை கிண்டல் செய்ய,

“நான் புதுசா ஏதாவது சொன்னால் உங்களுக்கு பொறுக்காது ” என்றவாறு சமையல் அறை பக்கம் நகர்ந்தார்.

‘நாம் திரும்ப எதையாவது சொல்லி அதற்கு தண்டனையாக காலை காபி தடைப்பட்டால் என்ன செய்வது ‘ என்று பயந்து அங்கு கிடந்த நாளிதழை புரட்ட தொடங்கினார்.

அவர் லட்சுமணன் –  அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருக்கிறார். தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருப்பவர். பிள்ளைகளிடம் பாசத்தையும், கண்டிப்பையும் சேர்த்தே வழங்குவார். அவர் துணைவியும் அப்படியே.

அப்போது இறங்கி வந்த தாரிகா, தந்தையை கண்டு “காலை வணக்கம்” என்று கூற, அவரும் பதிலுக்கு தன் காலை வணக்கத்தை கூறினார்.

பிள்ளைகள் பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே வீட்டில் இருக்கும் நேரங்களில்  ‘காலை வணக்கம்’, ‘மதிய வணக்கம்’ என்று  தமிழில் கூறும் முறையை லட்சுமணன் பழக்கப்படுத்தி இருந்தார். அதுவே இப்போதும் தொடர்கிறது.

“என்ன பல்லவியை காணோம்” என்று இரண்டாவது மகளை பற்றி கேட்க, இருவருக்கும் காபி எடுத்து கொண்டு வந்த வான்மதி, “உங்கள் ஆசை மகளுக்கு நான் பாட்டு பாடி எழுப்பி விடவேண்டும். அப்போ தான் அவங்க கண்ணை திறப்பாங்க”

“அவள் லேட்டாக தான் தூங்கினாள் மா” என்று தங்கைக்கு பரிந்து பேச,

“உன்னுடைய அருமை தங்கச்சியை நான் எதுவும் சொல்ல கூடாதே”

“அப்படி இல்லை மா”

“பின்ன வேற எப்படி?”

“வேற எப்படியும் இல்லை மா” என்று அவள் அப்பாவியாக கூற,

“உன்கிட்ட நான் அப்புறம் பேசி கொள்கிறேன் இரு” என்று தன்மகள் அறை நோக்கி சென்றார். அவர் சென்றப்பின் தந்தையும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

தாரிகா பள்ளி ஒன்றில்  கணித ஆசிரியராக பணிபுரிகிறாள். தாயை போல அமைதியும், தந்தையை போல அறிவிலும் சிறந்து விளங்குபவள்.

ஆதவன் தன் ஒளிக்கதிர்களை அந்த அறையில் படற விட, மெல்ல உறக்கம் கலைந்து எழுந்தாள் பல்லவி. மணியை பார்க்க அது ஏழு என்று காட்டியது.

“ஏழு தான் ஆகுதா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா” என்று அவளிடமே கேள்வியை கேட்டு கொண்டு இருக்க, அவள் தனியாக புலம்புவதை பார்த்தவாறே உள்ளே நுழைந்தார் வான்மதி.

“ஏன் மகாராணிக்கு இன்னும் தூக்கம் போதவில்லையா ” என்று கோபமாக கேட்க,

தாயிடம் வம்பு செய்யும் நோக்கில் “போதவில்லையே தாயே போதவில்லையே” என்று பாட,

“இப்போ இந்த பாட்டு ரொம்ப முக்கியம் பாரு. போ முகம் கழுவிட்டு வா” என்று அவளை விரட்டினார்.

‘வயது 23 ஆகுது. இன்னும் குழந்தை மாதிரி இருக்கிறாள். இவளை  என்ன செய்வது’ என்று  சலித்து கொண்டே வெளியே வந்தார்.

சிறிது நேரத்தில் முகத்தை துடைத்து கொண்டே வந்தவள், வேகமாக நாற்காலியில் அமர்ந்து “காலை வணக்கம்” என்று கூற,

“நான் போனதால் காலை வணக்கம் இல்லையென மதிய வணக்கம் தான் வந்து இருக்கும்” என்று காபி கப்பை அவள் கையில் கொடுத்துவிட்டு, ஒரு கொட்டை தலையில் வைத்தார்.

“அம்மா” என்று கத்த,

“என்ன டி”

“காபி குடிக்கும் போதும், சாப்பிடும்   போதும் மட்டும் அடிக்க கூடாது . மற்றபடி எப்போ வேணாலும் அடிக்கலாம்” என்று கூறி காபியை உறிஞ்சி குடிக்க, தலையில் அடித்து கொள்வது வான்மதி முறையானது.

பல்லவி பொறியியல் பட்டம் பெற்று, புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறாள். எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவாள். அவள் குரலை வைத்தே அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். வீட்டில் குறும்புதனம் செய்து வசவுகளை இலவசமாக வாங்கி கொள்வாள். அவளால் அந்த வீடே உயிர்ப்போடு இருக்கும் என்றே சொல்லலாம்.

இதுவே இவர்களின் அன்பான குடும்பம்.

சிறிது நேரத்தில் அனைவரும் தங்கள் வேலைக்கு  செல்ல தயார் ஆனார்கள்.

“சீக்கிரம் வா பல்லவி” என்று தாரிகா கூப்பிட,

“இதோ வரேன்” என்று அக்காவை நோக்கி  வாசல் பக்கம் ஓடியவள், திடீரென திரும்பி வான்மதிக்கு ஒரு முத்தத்தை  கொடுத்து விட்டு, வண்டியில் ஏறினாள்.

“டாடா மா” என்ற மகள்களுக்கு கையசைத்து வழி அனுப்பினார்.

எப்போதும் தங்கையை விட்டுவிட்டு தான் பள்ளிக்கு செல்லுவாள் தாரிகா. அவள் அப்படி செய்ய என்ன காரணம் என்பதை விரைவில் அறியலாம். வழியில் வாய் ஓயாமல் அக்காவிடம் கதை பேசியபடியே வருவாள்.

அவள் கம்பெனி வந்தவுடன் “டாடா அக்கா” என்று கூறிவிட்டு செல்ல, தாரிகா  அந்த கம்பெனியை கண்கள் கலங்க ஏறிட்டாள்.

பின் வண்டியை எடுத்து கொண்டு தான் பணிபுரியும் இடம் நோக்கி விரைந்தாள். செல்லும் அவளை தன் அறையில் இருந்து வெறித்து பார்த்து கொண்டு ஒருவன் நின்று இருந்தான். வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த முடியாத துயரம் அவன் முகத்தை நிறைத்து இருந்தது.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆடும் மயிலே…! (சிறுவர் கதை) – பிரபாகரன்.M

    பீனிக்ஸ் பறவைகள் ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை