எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏன் தாத்தா சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் சங்கர்.
“ஒன்றுமில்லை சங்கர். இன்றைக்கு உனக்கு எக்ஸாமில்லையா,” பதிலளித்தார் சந்திரசேகர்.
“சும்மா சொல்லுங்க தாத்தா. நான் வெளியே வரும்போதே நீங்கள் ஏதோ நினைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தீர்கள்”.
“சங்கர், உனக்கும், வயதும் காலமும் வரும் போது தெரியும். எங்கே இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பல!”
“இல்லை தாத்தா. அம்மா உடம்பிற்கு சரியில்லாமல் படுத்து விட்டாள். அப்பாவிற்கு ஏதோ ஆடிட்டிங் டயமாம். காலையிலே போயிட்டாங்க. ஆமா இப்படி காலையிலே பனியிலே வெளியே நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கீங்களே” என வினவினான் சங்கர்.
சங்கர் வரும் வரை தன் நெஞ்சுவலியை மறைத்து வைத்தவர் இப்போது பொறுக்க முடியாது என்ற நிலை வந்த போது நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.
“ஐயையோ! தாத்தா என்னாச்சுது,” என்றான் சங்கர்.
“ஒன்றுமில்லேப்பா.” என்ற போது “ஏண்டா இன்னுமா டிபன் வாங்கக் கிளம்பலே” என்ற வார்த்தைகள் வேகமாக வெளியே வந்தன சங்கரின் அம்மாவிடமிருந்து.
“அம்மா தாத்தாவிற்கு மறுபடியும் வலி வந்து விட்டதம்மா” என்றான் சங்கர்.
“ஆமாம், அவருக்கு இப்படித்தான் ஓயாமல் வலிவரும். நேற்றுதானே அப்பா கூட டாக்டரிடம் போய் முன்னூறு ரூபாய் தெண்டம் போட்டுட்டு வந்தாங்க. சும்மா மாத்திரையைத் தூக்கிப் போட்டுட்டு கூட்டிண்டு போ.”
மருமகளின் பேச்சும் தொனியும் அந்த வலியிலும் சந்திரசேகருக்கு சிரிப்பைத் தந்தது. ‘நான் மருமகள் தேர்ந்தெடுத்ததில் தவறி விட்டேனோ’ என்று ஒரு கணம் தோன்றினாலும், ‘இனி அதை நினைத்து பிரயோஜனமில்லை’ என மெதுவாக எழுந்து சங்கரின் விரலைப் பிடித்துக்கொண்டு அருகிலிருந்த ஹோட்டலை நோக்கி நடந்தார்.
“ஏன் தாத்தா, அம்மா எப்போதும் உங்களை ஜாடை மாடையா திட்டறா?”
“சீ, அப்படி பேசக் கூடாது. தாத்தா செய்ய வேண்டிய வேலைகளை செய்தால் தான், உடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்று சொல்கிறாள்.”
“தாத்தா சீக்கிரம் வாங்க. நான் ஸ்கூலுக்கு லேட்டாப் போனா டீச்சர் வேறே திட்டுவாங்க. சீக்கிரம் டிபன் பண்ணிட்டு ஓடனும்.”
இருவரும் காலை டிபனை முடித்துக் கொண்டு, பார்சலும் வாங்கி விட்டு வர சந்திரசேகருக்கு நெஞ்சுவலி தாங்க முடியாமல் போக, அருகில் வந்த ஆட்டோவை நிறுத்தி சங்கரும் தாத்தாவும் ஏறிக் கொண்டார்கள்.
காலையில் நினைத்து சிரித்தது திரும்பவும் நினைவிற்கு வந்தது சந்திரசேகருக்கு.
தமிழரசியைக் காதலித்தது, அவளுக்காக வீட்டிலே சண்டையிட்டு சாப்பிடாமலே திரிந்தது… அம்மா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியது…. பயப்படாமல் அவளையே கூட்டிக் கொண்டு மெட்ராஸ் வந்தது… சென்னைப் பட்டணம் தன்னை ஆளாக்கிய பிறகு ஊரே மறந்து போனது. வைராக்கியமாக அம்மா அப்பாவுடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.
ரொம்ப நாள் கழித்து ஊரிலுள்ள ஒரு நண்பன் மூலமாக அப்பா, அம்மா எல்லோரும் இறந்து போனது தெரிய வந்தது… திரும்ப தன் ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றாமலே போய் விட்டது.
தம்பி இருமுறை வந்து சொத்தை சரி பாதியாக எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போனது… நீயே ஆண்டு அனுபவித்துக் கொள் என்று சொன்னது…
இப்போது திடீரென்று பிள்ளையார்புரம் போக வேண்டும் போல ஆசை வந்தது. இரவு மகன் வேலையிலிருந்து வந்ததும் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்.
அடுத்த வாரம் கண்டிப்பாக ஊருக்குப் போக வேண்டும். தான் வாழ்ந்த வீடு… தமிழரசியின் வீடு… தெருக்கள்…. தமிழரசியை சந்தித்த இடங்கள்.. எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போதே அதை கலைத்துவிட்டான் பேரன் சங்கர் “இப்போ வலி எப்படி இருக்குது, தாத்தா.” என்றான் அவருடைய நெஞ்சைத் தடவியபடி.
“குறைந்து போச்சுடா. வீடு வந்துடுச்சு இறங்கு” என்று சொல்லி விட்டு வலி தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இறங்கினார்.
முன் அறை ஜன்னலின் ஓரத்தில் இருந்த மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டு, நாற்காலியில் திரும்பவும் காற்றாட வந்து உட்கார்ந்தார்.
ஸ்கூலுக்குப் புறப்பட்ட சங்கர், “தாத்தா, நான் வர்றேன். இன்றைக்கு எங்க ஸ்கூல் ‘பேரன்ட்ஸ் டே’ எல்லோரும் வருவாங்க. நீங்களும் வர்றீங்களா தாத்தா?” என்று கேட்டான்.
“இல்லேப்பா. நீ அப்பாவிடம் சொல்லி தாத்தாவிற்கு பிள்ளையார்புரம் போவதற்கு அடுத்த திங்கட்கிழமை ரயில் டிக்கட் ஒண்ணு எடுத்து வரச் சொல்றியா.”
“சரி தாத்தா. ஆமாம், உங்களுக்கு அந்த பிள்ளையார்புரத்திலே யார் இருக்கிறாங்க, தாத்தா.”
‘என் இளமைக்காலம்’ சொல்ல நினைத்தவர், இவனுக்கு விவரம் புரியாது என்று எண்ணி “நம்மோட சொந்தக்காரங்க எல்லாம் அங்கே இருக்கிறாங்கப்பா” என்றார்.
“நானும் வரட்டுமா, தாத்தா.”
“உனக்கு ஸ்கூலுக்குப் போகனுமே.”
“சரி தாத்தா. நான் உங்களுக்கு ரயிலுக்கு டிக்கட் எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் சங்கர்.
மறுபடியும் தன் இளமைக் கால வாழ்கைக்கு அவர் கனவுகள் தாவ சாயங்காலம் அவர் மகனும் பேரன் சங்கரும் அவருக்கு பிள்ளையார்புரம் டிக்கட்டோடு வந்த போது நாற்காலியிலிருந்து அவர் எழுந்திருக்கவே யில்லை.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings