in ,

வேலை வேணும் (சிறுகதை) – ஜெயந்தி.M

எழுத்தாளர் ஜெயந்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

என்னங்க, எப்படியாவது வேலை கிடைச்சுடும் தானே? ஏங்கியபடியே தன் மீது சாய்ந்த மாலதியின் கண்களை உற்று நோக்கினான் மருதன்.

கிடைச்சிடும்,  யாரை நம்பி நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம்? ஏற்ற, இறக்கங்கள் உள்ள இந்த உலகத்தில் நம்மால் இயன்ற அளவு முயற்சி பண்ணிட்டோம். இரு, பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் மருதன்.

நெல்லும், கொள்ளும் நன்கு விளையும் நன்செய்ப் புன்செய் நிலங்களோடு அவர்கள் கொண்டாடி மகிழ்ந்த காலங்கள் மாறி இப்போது பழைய சோறும் ஊறிய ஊறுகாயும் அவர்களின் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தன.

ஏழைகளின் உயர்வை அங்கீகரிக்காத  உலகம்,சிறு குழந்தைகளின் அங்கலாய்ப்பைக் கூட பெரிது படுத்தாத சிறிய மனிதர்கள், நல்லது எங்கிருந்து வந்தாலும் அது நல்லதே என்பதை ஏற்காத மனத்திமிர் போன்ற தடுப்புகளுக்கு மத்தியில் வாழும் உலகில் இனத்தால், மொழியால், மதத்தால், சாதியால் ஏற்படும் பிளவுகளில் மட்டும் என்ன  பெரிய மாற்றங்கள் வந்து விடப்போகிறது?

மனிதனை மனிதன் சாப்பிடும் நிலை கொண்ட உலகிலும் கூட ஆணவத்திற்கு அடிபணிதலையும் எதற்கும்  ஆமாம் சாமி போடக்கூடாது என்பதையும் வன்மையாகக் கண்டிக்கும் பாடலுக்குத் தன் மனதைத் திறந்து கொண்டிருந்தான் மருதன். நடப்பவை நல்லவை என்று நினைக்கத் தோன்றாத அளவு அவனது ஏழை மனம் புண்பட்டிருந்தது.

“என்னங்க! கிடைத்திடும் தானே” என்று மாலதி கேட்ட கேள்வியில் உள்ள ஓராயிரம் ஏக்கங்களை அவன் புரியாதவன் இல்லை. இந்த முறை கலெக்டருடைய நேரடி நியமனம் தான். ஆதலால் துணிந்து விண்ணப்பிக்கலாம். தகுதிக்குக் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டுப் பொன்னம்மாள் அக்கா தந்த துணிச்சலிலே தான் அவள் தகுதியான இடங்களுக்குத் துணிந்து விண்ணப்பித்திருந்தாள்.

தனக்கு நேர்காணலுக்கான அழைப்பு வரும் என்று அவள் நம்பி இருந்தாள். அவள் விண்ணப்பித்த இடங்களிலும் உள்ள பல இடங்கள் சாதி ஒதுக்கீட்டிலும், இட ஒதுக்கீட்டிலும், முன்னுரிமை ஒதுக்கீட்டிலும் அவளுக்குத் தகுதியானது இல்லை என்ற தர நிலையில் கழிக்கப்பட்டிருந்தது.

தகுதியுடைய ஒரு இடத்திற்காவது பணியில் சேரத் தனக்கு அழைப்பு வருமா என்று பத்து நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த அவளின் மனப்போராட்டத்திற்கு அந்த வியாழக்கிழமை விடிவாக அமைந்தது.

காலையிலேயே தொலைபேசி அழைப்பின் மூலம் பக்கத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் அமைப்பாளர் பணிக்கான நேர்காணலுக்கு அவள் அழைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. விதவைகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இன சுழற்சி முறை, ஊனமுற்றோர், இராணுவ உறுப்பினரின் குடும்பத்தார் போன்ற பல முன்னுரிமைகளைத் தாண்டி இவற்றில் எதிலும் வராத தினப்பசி முன்னுரிமையில் மட்டுமே உள்ள மாலதிக்கு அந்த அழைப்பு வந்திருந்தது.

ஒருவேளை இது கண் துடைப்பாக இருக்குமோ? என்று வியந்த மாலதியால் தன் கண்களை தனக்கே நம்ப முடியாத நிலை.எல்லா நிலையிலும் வசதி படைத்தோர் இருப்பின் அவர்களே முன்னுரிமை பெற்றவர்கள் ஆகிவிடும் சூழலில் மாலதிக்கு யார் முன்னுரிமை தருவது?

ஒரு காலனியின் குடியிருப்பில்  எந்த முன்னுரிமையும் பெறத் தகுதி இல்லாத நிலையில், ஆனால் எல்லா முன்னுரிமைக்கும் தகுதியான ஏழ்மைச் சூழலில் அவள் வாழ்வது பணி நியமனம் செய்யப் போகும் ஆட்சியருக்குத் தெரியவாப் போகிறது?

முக்குருணி வெதப்பாடு விளையும் பூமியும் மாடி வீடும் கொண்டோர் தங்களின் இனத்தின் அடிப்படையில் முன்னுரிமை பெற்று மேலே செல்கின்றனர். இது என்ன நேர்காணல்? ஆனாலும் மாலதியின்  மனதில் நம்பிக்கை குறையவில்லை. மாங்குடி கிராமமே அவள் மனக்கண் முன் வந்தது.

மாலதியின் வாழிடம் மாங்குடியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சங்குடி கிராமம் என்றாலும் மாங்குடி மக்களின் வாழ்வியல், சாதி சமயக் கட்டமைப்புகள், ஊர்க்கட்டு எல்லாவற்றையும் அவள் அறிந்து வைத்திருந்தாள்.

ஏனெனில் அந்த வட்டார  வளர்ச்சி அலுவலகத்தில் பஞ்சங்குடி ஊராட்சி சார்பாகக் கிராம சுகாதாரத் தூதராக அவள் ஒரு வருடம் பணியாற்றியிருந்தாள். மாங்குடி கிராம மக்களின் வாழ்க்கைச் சுழல் அவளுக்குப் பழகிய ஒன்றாகவே இருந்தது.  எப்படி இருந்தாலும் தனக்கு அந்தச் சூழலின் வேலை உறுதி இல்லை என்பது தெரிந்திருந்தாலும் ஒருவித நம்பிக்கையோடு இருந்தாள் மாலதி.

வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்தால் அவளுக்கு ஒரு கழிப்பறைக்கு  ரூபாய் 60 வீதம் கமிஷன் கிடைக்கும் என்பது செய்யப்பட்ட விதிமுறை.ஏறக்குறைய 52 வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு அவள் போட்ட திட்டங்களில் அனைத்துமே கட்டப்பட்டு விட்டாலும் அவளுக்குரிய கமிஷன் ரூபாய் மட்டும் அக்கவுண்டில் கிரெடிட் ஆகாத சூழல். ஏன் என்று கேட்டால் வட்டார வளர்ச்சி அலுவலரின் பதிலில் அது இன்னும் பிளானில் இல்லை என்ற ஒற்றை வரி மட்டுமே வந்தது.

இப்படித்தான் அந்தப் பணியில் இருந்து அவளைக் கழித்து விட்டனர் அந்த ஊர்ப் பெரும் புள்ளிகள், பஞ்சங்குடி ஒன்றியத்தின் முக்கிய அலுவலர்கள்  என்று அனைவரையும் மாலதிக்குத் தெரியும் என்றாலும் அனைவரும் முன்னே சிரித்தும் பின்னே சரித்து விடுபவர்களாகவுவே இருந்தனர். எனவே யாருடைய தயவையும் நாடிட மனது வரவில்லை.

தன் கணவனின் இயலாமையும், யாரிடம் தயவு வேண்டாமையும், பிள்ளைகளின் எதிர்காலமும் அவள் கண்முன்னே வந்து போயின. உள்ளது போகும் வரை போகட்டும் என்றாலும் போக்கிடமே இல்லாமல் அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

அவள் விண்ணப்பித்து இருந்த வேலைக்கு நேர்காணலுக்காக எத்தனை பேருக்கு அழைப்பு வந்திருக்கும் என்று தணியாத ஆர்வம் இருந்தது தனக்குக் குறிக்கப்பட்ட இடம் பொதுப்போட்டி என்பதால் அவர்கள் உண்மையாகவே எத்தனை பேர் அந்த நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருக்கலாம் என்பதை அறிய விருப்பம் கொண்டாள் மாலதி.

தங்களின் வாழ்க்கைப் புதினப் பக்கங்கள் படிப்பதற்கு இனிமையாகவும் படித்துவிட்டு “உச்” கொட்டுவதற்கு ஏற்றதாகவும் அமைகிறதே என்று வேதனையில் ஆழ்ந்தான் மருதன்.

தான் கிராம சுகாதாரத் தூதுவராக பணியாற்றிய போது இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தற்போது தங்களது ஒன்றியத்திற்குப் பொறுப்பு அலுவலர் என்பதால் மெல்ல அஞ்சுகன் சாருக்குப் போன் போட்டாள் மாலதி.

எதிர் முனையில்” ஆம் மாலதி உன்னோடு விண்ணப்பித்தவர்களில் 34 பேருக்கு மாஙங கிராமத்துக்கு நேர்காணலுக்குக் கூப்பிட்டு இருக்காங்க! பொதுப்போட்டி என்கிறதால வயசு தான் பார்ப்பாங்க! நீயும் இன்னொரு பொண்ணும்தான் உள்ளதிலேயே அதிக வயசு. 37 வயசுல நீங்க இருக்கீங்க. 100 சதம் உனக்கு தான் இது கிடைக்க வாய்ப்பு உள்ளது. நானும் அங்கே தான் வருவேன். புதன்கிழமை நேர்காணலில் சந்திப்போம்” என்று கூறிவிட்டுப் போனைத்  துண்டித்தார் அஞ்சுகன் சார்.

மாங்குடி கிராமத்தின் மூலம் தனக்கு நல்லது நடக்கவிருக்கிறது என்று மகிழ்ச்சி அவளுக்கு இரண்டு தினங்கள் நீடித்தது. இடையிடையே அஞ்சுகன் சார் போன் பண்ணும் போதெல்லாம் மகிழ்ந்தாள் மாலதி.

அவள் விண்ணப்பித்திருந்த வேலை காலையில் அதாவது பகுதி நேரம் மட்டுமே என்பதால் மதியத்திற்கு மேல் பீடி சுற்றலாம் அல்லது வேறு ஏதாவது சிறு தொழில் செய்யலாம். நடக்க இயலாத தனது நரம்புத் தளர்ச்சி நோய் கணவனைக் கடையில் அமர்த்தி வேலையைப் பார்க்கச் சொல்லலாம் என்பன போன்ற கற்பனை வானில் அவள் சிறகடித்துக் கொண்டிருந்தாள்.

தன் வீட்டு வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் ஏறக்குறைய 47 லட்ச ரூபாய் திட்டத்தின் ஒதுக்கீட்டால் அது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அஞ்சுகன் சார் மாலதியிடம் பெருமை பேசிக்கொண்டார்.

சொந்த ஊர் முதல் வீட்டு முகவரி வரை அவர் கொடுத்த போதும் கூட மாலதி கதை கேட்பது போலத் தான் அவர் கூறுவத  எல்லாம் கேட்டுக்கொண்டாள். காரணம் உட்கார்ந்து பீடி சுற்றினால் இருபது ரூபாய்க்கு மேல் பீடி சுற்ற இயலாது அவளால். எப்படி அவளால் நூறுகளைத் தாண்டி ஆயிரம் தாண்டி இலட்சங்களைத் தாண்டி  நினைக்கக் கூடும்?

எனவேதான் என்னமோ மேலதிகாரி கதை சொல்கிறார் என்று கேட்டுக் கொண்டாள் மாலதி. அவளுக்குத் தேவை எல்லாம் நேர்காணலில் போது அவள் மனம் விரும்பும் ஒரு ஆதரவு தான். யாராவது ஒருவர் நமக்காகப் பரிந்து பேச மாட்டார்களா? என்ற ஏக்கம் தான்.

அவளின் ஏக்கத்தைப் புரிந்தவர் யார்? ‘அஞ்சுகன் சார் நாளை பார்க்கலாம் என்று ஒரு நம்பிக்கை வார்த்தை சொன்னாரே! ஒருவேளை அவருக்கு சம்திங் ஏதும் கொடுக்க வேண்டுமோ? அப்படி இருந்திருந்தால் தான் சொல்லி இருப்பாரே, அப்படி எல்லாம் இருக்க முடியாது” என்று மாலதி தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

நூற்றுக்கு நூறு உனக்குத் தான் வாய்ப்பு என்று கூறிய பிறகு எப்படி தனக்கு அந்த வேலை கிடைக்காமல் போகும்? தனக்கு வரும் என்கின்ற நம்பிக்கையில் இருந்தாள் மாலதி. வேலை கிடைத்து விட்டால் காதில் கிடக்கும் கடைசி ஒரு ஜோடி தங்கக் கம்மலை விற்றாவது ரூபாய் 6 ஆயிரத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள் மாலதி.

நேர்காணலுக்கான நாளும் வந்தது. குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்குமாகச் சுற்றி வந்தார் அஞ்சுகன் சார். மாலதியை நேர்காணலுக்கு அழைத்த நான்கு நபர்கள் கொண்ட மூன்று பெஞ்சின் அருகிலும் அவரும் போனார்.  கடைசி வரை அவளின் மனம் விரும்பிய படி நடந்ததோ இல்வையா என்பது தெரியவில்லை.

அன்று இரவு மாவட்ட ஆட்சியரின் நேரடி நியமனம் என்று இரவு நெடுநேரம் வரை நியமன ஆணைகள் தயார் செய்யப்பட்டு நேரடியாகவே உரிய நபரிடம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அடுத்த நாள் காலை மதியம் மாலை என்று காத்திருந்தவளுக்கு எந்த நியமன ஆணையும் வழங்கப்படவில்லை.அன்று காலை 11 மணி முதல் மாலதியின் அழைப்பை நிராகரித்தார் அஞ்சுகன் சார்.

இரவு 9:30 மணிக்குத் தொடர்பு கொண்டு முன்பின் தெரியாதவரைப் போல மாலதியைத் திட்டத் தொடங்கினார் அஞ்சுகன் சார்.

“எனக்கு ஏன் கால் பண்றீங்க? உனக்கும் எனக்கும் ஏதாச்சும் கமிட்மெண்ட் இருக்குதா? நான் என்ன உங்கிட்ட ஒரு லட்சம் இரண்டு லட்சம் பணம் வாங்கினேனா? ஏம்மா என்னைத் தொல்லை பண்ற”  என்று கேட்ட அஞ்சுகனின் வார்த்தையைக் கேட்டு மனம் நொந்து அழுது விட்டாள் மாலதி.

அவளுக்கு இனிமேல் அந்த வேலையே வேண்டாம் போல இருந்தது அன்றோடு தனது வேலைக்கான விண்ணப்பப் படிவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கண்ணீரோடு தீர்மானித்தாள் மாலதி.

அடுத்த நாள் காலை குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்கச் சென்றாள்.அருகில் இருந்த பெட்டிக் கடையில் அன்றைய தினகரன் நாளிதழில் தலைப்புச் செய்திகள் கொட்டெழுத்தில் போடப்பட்டிருந்ததில் அந்த ஒரு குறிப்பிட்ட செய்தி மட்டும் அவளின் கவனத்தை ஈர்த்தது.

நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 4375 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான செய்தி அது.  தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று அதில் போடப்பட்டிருந்தது. தண்ணீர் குடத்தைக் கீழே இறக்கி வைத்து விட்டுப் பெட்டி கடையில் பேனாவைக் கேட்டு வாங்கி விண்ணப்பப் பதிவிறக்கத்திற்கான வெப்சைட்டைக் குறித்துக் கொண்டு  வீட்டை நோக்கி விரைந்தாள் மாலதி.

பெட்டிக்கடையின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த அவளின் கணவன் மருதன் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான். மாலதியின் வேலை வேண்டும் என்ற ஏக்கத்தில் விளையும் தேடல் மீண்டும் தொடர்கிறது என்று எண்ணியவன் அவள் பின்னே  தனது தளர்ந்த நரம்பு கொண்ட  காலின் வீங்கிய  வேதனையோடு அவளைத் தொடர்ந்து நடந்தான். தனக்கும் சேர்த்து ஒரு விண்ணப்பம் போட வேண்டும் என்று எண்ணியபடியே!

எழுத்தாளர் ஜெயந்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரகசியமாய் ஒரு சேதி (சிறுகதை) – சசிகலா ரகுராமன்

    ‘சஹானா’ சிறந்த படைப்புப் போட்டி 2025-26 – www.sahanamag.com