in , ,

திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 3) – பாலாஜி ராம்

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்             

பூமி அதிரும் அளவுக்கு கனத்த காலடி சத்தத்துடன் உள்ளே நுழைந்தவன் கதவினை தாழிட்டான். என் மனதில் இது யாராக இருக்கும் என்ற சந்தேகம் பலப்பட இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன் யாராக இருந்தால் என்ன நான் மாட்டிக் கொள்ளும் நிலைமை வந்தால் என் முன் அமர்ந்திருக்கும் இந்த அம்மனுக்கு அவனை பலியிடலாம் என்ற முடிவில் இருந்தேன். 

ஆணவமும் கர்வமும் கலந்த சிரிப்பு சத்தம் கேட்டது. இது மல்லையன் குரல் அல்ல என்று யூகித்தேன். அப்படி என்றால் இது யாருடைய குரலாக இருக்கும் என்ற எண்ணம் எழ அம்மனின் கைக்கும் இடுப்பிற்கும் இடையே  புடவை கட்டுவதற்கான இடைவெளி இருந்தது. அந்த வழியாக என் கண்ணைப் பொருத்தி பார்த்தேன்.

அது மல்லையன் அல்ல என்று உறுதிப்படுத்திக் கொண்டு அந்த முகத்தை உற்று கவனித்தேன். பறந்த நெற்றியில் திருநீறு, இரு புருவங்களுக்கு இடையே சந்தன பொட்டு, கழுத்தில் கருங்காலி மாலை, கையில் கழுகு உருவம் பதித்த வெள்ளி காப்பு,  காதிலும் கழுகின் உருவம் பொறிக்கப்பட்ட காதணியை அணிந்திருந்தான். 

இந்த உருவத்தை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே? என்று நன்கு யோசித்தேன் அப்பொழுதுதான் என் சிந்தனைக்கு கருடகொடியோன் நினைவுக்கு வந்தான். ஆமாம், அவனே தான். இவன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான். ஒருவேளை நாம் இங்கு இருப்பது தெரிந்து தான் வந்திருப்பானோ?

இன்று இவனா அல்ல நானா என்று பார்த்து விடுகிறேன் என்ற எண்ணத்தில் கத்தியுடன் மெல்ல எழும் போது அவன் பேச்சு குரல் கேட்டது. மீண்டும் அமர்ந்து கொண்டேன். 

“என்னிடம் நீ சரியாக மாட்டிக் கொண்டாயா! உன்னால் இனி எங்கும் செல்ல முடியாது. என் கட்டுப்பாட்டில் தான் நீ இருந்தாக வேண்டும். இன்று முதல் நீ எனக்கு அடிமை” என்ற கருடக்கொடியோனின் குரலை கேட்டதும் எனக்கு ஆத்திரம் மேலிருந்து இவனைக் கொன்றால்தான் என் கோபம் அடங்கும் என்ற அளவிற்கு ஆத்திரம் மேல் எழுந்தது. மீண்டும் அவன் பேசலாயினான். 

“அடியே நாகதேவி தீராத பகையை மனதில் வைத்துக்கொண்டு பரம்பரை பரம்பரையாக எங்கள் குல வாரிசுகளை கொன்று தீர்த்தவளே! அடியே கொல்லிமலை நாயகி.. உன்னால் நான் போட்டிருக்கும் இந்த கருட மந்திர கட்டுக்குள் இருந்து வரவே முடியாது. நீ எங்கள் குலத்திற்கு செய்த பாவத்திற்கு கனவிலும் நினையாத கொடுமைகளை அனுபவிக்கப் போகிறாய். இந்த கருட கொடியோனின் பிடியிலிருந்து உன்னால் தப்பவே முடியாது” என்று ஆவேசமாக பேசிவிட்டு  அறையை விட்டு வெளியேறினான். 

எனக்கு அப்போது தான் தெரிந்தது அவன் என்னிடம் பேசவில்லை அம்மனிடம் தான் பேசினான் என்று. எனக்கு ஒன்று மட்டும் நன்றாக புலப்பட்டது. கொல்லிமலையில் காணாமல் போன நாகதேவியின் சிலை  வேறு எங்கும் இல்லை இவ்வளவு நேரம் என்னை மறைத்துக் கொண்டிருந்த இந்த சிலை தான் என்று தெரிந்து கொண்டேன்.

தெய்வம் கட்டுப்பட்ட நிலையில் இருக்கிறது, இந்த நேரத்தில் இந்த தெய்வத்திற்கு சக்தி மிகவும் குறைவு. கட்டிலிருந்து நாக தேவியை விடுவித்தால் அந்த தேவியின் பூரணமான ஆசீர்வாதம் கிடைக்கும். இது என் லட்சியத்திற்கும் உதவியாக இருக்கும் என்று எண்ணிய நான் ஆழ்மனதிற்குள் என் குலதெய்வத்தை வேண்டினேன். 

“தெய்வம் விடுபட நல்லதொரு உபாயம் தர வேண்டும் அம்மா” என்று குரல் கொடுத்ததுமே ஒருவித மயக்கம் ஏற்பட்டது.

என் முன் இருக்கும் அம்மன் சிலை மீது சாய்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் பலத்த குரலில், “திருவந்தி…. திருவந்தி… திருவந்தி…” என்று சத்தம் கேட்டது. திடீரென்று கண் விழித்துக் கொண்டேன். கண்விழித்தும் கூட அந்த சத்தம் என் ஆழ் மனதிற்குள்ளே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. 

திருவந்தி என்றால் பெயரா? ஊரா? அல்லது பொருளா? என்ற சந்தேகம் வரவே இதற்கு தீர்வு காணும் முடிவில் இருந்தால் இங்கிருந்து தப்பிப்பது கடினமாகிவிடும் என்று எண்ணி கத்தியையும் வெள்ளி தகடையும் கையில் எடுத்துக் கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேற கதவைத் திறந்தேன்.

மல்லையனின் குரல் கேட்டது. அவன் அறைக்கு வெளியே நின்று கொண்டு யாரோ ஒருவரிடம் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். 

“இந்த நிலையில் நான் எவ்வாறு வெளியேறுவது, தாயே நாகதேவி.. நீ தான் அருள் புரிய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டேன். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான  திருமூலரின் பரிபூரணமான அருளை பெற்ற மூலிகை கல்பத்தை சரியான பதத்தில் செய்து, சரியான நேரத்தில் உட்கொண்டு தன் உடலை சிரஞ்சீவியாக வைத்திருக்கும் என் குருநாதர்  ஆதிகிழவனார் எனக்கு கொடுத்த மூலிகை சாம்பிராணி நினைவுக்கு வந்தது. சட்டைப்பையிலிருந்து மூலிகை சாம்பிராணியை எடுத்தேன்.

சாம்பிராணியை ஏற்றுவதற்கு தீப்பெட்டியை அறை முழுதும் தேடினேன். கடைசியில் கலசத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கின் பின்புறம் ஒரு தீப்பெட்டி இருந்தது. சாம்பிராணியை ஏற்றுவதற்கு முன் நாகதேவி அம்மனுக்கு சாதப்பட்ட புடவையின் முந்தானையில் ஒரு பகுதியை கிழித்து மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்றாக கட்டிக் கொண்டேன். 

ஏற்றிய சாம்பிராணியை அறையின் கதவைத் திறந்தவுடன் கண்ணில் படுமாறு வைத்துவிட்டு அம்மன் சிலை  பின்னால் மறைந்து கொண்டேன். அதன் புகை சிறிது சிறிதாக அறையை நிரப்பிக் கொண்டிருந்தது. நான் சத்தமாக எனது இருக்கைகளை தட்டினேன். நான் நினைத்தது போலவே சத்தம் கேட்டு மல்லையன் அறைக்குள் வந்தான்.

அந்தப் புகை அவனை  ஈர்க்க சாம்பிராணியை கையில் எடுத்த மறுகணமே மயங்கினான். பிறகு, சாம்பிராணியை கையில் எடுத்துக்கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறி நிலைவாசல் கதவின் அருகே சென்றேன். மெல்ல உள்பக்க தாழ்பாளை திறந்து வெளியே எட்டிப் பார்த்தேன். 

வெளியில் காவல் காத்துக் கொண்டிருந்த இரண்டு காவலாளிகளும் என்னை பார்த்து விடவே சத்தம் போட்டுக் கொண்டு என்னை தாக்க வந்தனர். உடனே கையில் வைத்திருந்த மூலிகை சாம்பிராணியை வெளியே தூக்கி போட்டு விட்டு கதவை மூடிக் கொண்டேன். 

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விளையும் பயிர்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 4) – பாலாஜி ராம்