மனித வாழ்க்கை என்பது மூன்று நிலைகளை உள்ளடக்கியது.
முதலாவது நிலை,
அவன் குடும்ப வாழ்க்கை. தாய் தந்தையர், சகோதர சகோதரியர், மற்றும் உற்றார் உறவினர்களோடு இணக்கமுடன் வாழும் வாழ்க்கை.
இரண்டாவது நிலை என்பது,
அவனது தொழில் வாழ்க்கை. அலுவலகமெனில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களோடு, வியாபாரம் எனில் வாடிக்கையாளர்கள் மற்றும் சக வியாபாரிகளோடு இணைந்து செயல்படும் வாழ்க்கை.
மூன்றாவது நிலை என்பது,
சமூக வாழ்க்கை. தான் வாழும் சமூகத்தோடு அதன் பழக்க வழக்கங்களோடு, வரை முறை மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும் வாழ்க்கை.
ஆக, மேற்கூறிய மூன்று நிலைகளில் வாழும் போது மனிதன், பல்வேறு சூழ்நிலைகளையும், பல்வேறு பிரச்சினைகளையும், இடர்பாடுகளையும், சிக்கல்களையும் சந்திக்க நேருவது தவிர்க்க முடியாதவொன்று. அவ்வாறான சூழ்நிலைகளில் ஒரு தனி மனிதனானவன் தன் பிரச்சினைக்கான தீர்வினை தானே சுயமாய்ச் சிந்தித்து, அந்தத் தீர்வின் நன்மை தீமைகளை தானே தீர ஆராய்ந்து, ஒரு முறைக்கு பலமுறை யோசித்து, எடுத்த முடிவிலிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்காத மனஉறுதியோடு, தானே சுய முடிவாய்த் தீர்மானிப்பதே சரியான முறையாகும். சிலர் விமர்ச்சிக்கலாம், “தான் தோன்றித்தனமாக முடிவெடுக்கிறான்” என்று. ஆனால், அது உண்மையல்ல. சுய முடிவு என்பது திடமான தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதுதான் அங்கு மறைந்திருக்கும் உண்மையாகும்.
“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே!… உனக்கு நீதான் நீதிபதி!… மனிதன் எதையோ பேசட்டுமே!… மனசைப் பார்த்துக்க நல்லபடி!… உன் மனசைப் பார்த்துக்க நல்லபடி!” என்று ஒரு பழைய திரைப்படப் பாடலில் ஒரு கவிஞர் எழுதியிருப்பார். அதுதான் யதார்த்தமான உண்மை. உனக்கு நீதான் விதி எழுதுபவன். உன்னுள்ளிருக்கும் திறமையின் அளவையும், ஆற்றலின் அளவையும் உன்னையன்றி வேறு யாரால் நுட்பமாக உணர முடியும்?. உனக்குள் மறைந்திருக்கும் இயன்றவைகளைப் பற்றியும், இயலாதவைகளைப் பற்றியும், அறிந்து கொண்டு உனக்காக முடிவெடுக்க பிறரால் எப்படி முடியும்?. அவர்கள் என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள்?. ஒருவேளை, உன்னுடைய முந்தைய செயல்பாடுகளே அவர்களுக்கு அளவுகோல் என்றால்… அது எப்படி சரியானதாகும்?. எல்லாச் செயல்பாடுகளும், எல்லா நேரங்களிலும், ஒரே மாதிரியான முடிவையா தரும்?. அவைகள் காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப, செயலின் வெளிப்பாட்டுத் தன்மைக்கேற்ப மாறுபடும் தன்மை உடையன அல்லவா?
உதாரணமாக, புதிதாய் ஒரு வியாபாரத்தை துவங்க விரும்பும் ஒருவன், பலரிடம் அது குறித்த அபிப்ராயத்தைக் கேட்பான் எனில், அவனுக்கு எந்த அளவிற்கு நேர்மறைக் கருத்துக்கள் வருகின்றனவோ, அதை விட அதிக அளவிற்கு எதிர்மறைக் கருத்துக்களும் வரும்….வந்தே தீரும். அந்த இரண்டையும் கேட்டு, கேட்டவைகளை அவன் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டேயிருந்தால் அவன் குழம்பிய மனநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவதை யாராலும் தடுக்க முடியாது. பொதுவாகவே, எல்லா வியாபாரத்திலும் லாபமும், நஷ்டமும் மாறி மாறி வந்து கொண்டேதானிருக்கும். சிலர் வெற்றியடையும் அதே வியாபாரத்தில் பலர் தோல்வி காண்பதுண்டு. ஆகவே, பிறர் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைச் சற்றுக் குறைத்துக் கொண்டு, தன் நிலைக்கேற்ப சுய முடிவெடுப்பவனே வெற்றியாளன் ஆக முடியும். தோற்றவர்களைப் பார்த்து அஞ்சுவதை விட, அவர்கள் எதனால் தோற்றார்கள், எந்த இடத்தில் சறுக்கினார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டால் வெற்றியை எளிதில் தொட்டு விடலாமே!.
சிலர்,
“அடுத்து என்ன படிப்பது?”,
“எந்தக் கம்பெனிக்கு வேலைக்குப் போவது?”
“எந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுவது?”
“எந்த ஏரியாவில் வீடு கட்டுவது?”
“என்ன கலரில் பேண்ட் சர்ட் எடுப்பது?”
போன்ற எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களிடம் தன்னம்பிக்கை என்பது சிறிதும் இல்லாததுதான். தனக்குப் பிடித்ததை தான் தேர்வு செய்து விட்டால், ஒருவேளை அது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டால், அந்த மற்றவர்கள் தன்னைக் குறை கூறுவார்களோ?… என்கிற அச்ச உணர்வே அவர்களைச் சுய முடிவெடுக்க விடாமல் தடுக்கின்றது.
இன்னும் சிலர் இருக்கிறார்கள், சுய முடிவெடுத்து அதன் மூலம் நஷ்டப்பட்டு விட்டால் மொத்தப் பழியும் தன் மீது வந்து விடும் என்று அஞ்சிக் கொண்டு, பழிக்குத் துணையாக பல பேரைச் சேர்த்துக் கொள்ளும் விதத்தில், எல்லோரிடத்திலும் அபிப்ராயம் கேட்டு வைத்துக் கொள்வர். இதில் பெருத்த சோகம் என்னவென்றால், அவர் யாரிடமெல்லாம் அபிப்ராயம் கேட்டாரோ அவர்கள் எல்லோரையும் விட, நல்ல முடிவெடுக்கும் திறன் அவருக்குள்ளேயே உள்ளது என்பதை அவர் அறியாதிருப்பதுதான். சோம்பேறித்தனத்தின் காரணமாக அடுத்தவர் அறிவால் உயர ஆசைப்படும் இவர்கள் சுயம் மறந்த சுவர் மனிதர்கள்.
பத்து பேரை ஒரே தூக்கில் தூக்கி, தனது துதிக்கையால் சுழற்றி எறியக் கூடிய உடல் வலிமையும், திறனும் கொண்ட யானை, காலில் கட்டப்பட்ட ஒரே ஒரு சிறிய இரும்புச் சங்கிலிக்கு அடங்கி, நின்ற இடத்திலேயே மணிக்கணக்கில் நின்று கொண்டிருக்கும். அது நினைத்தால் ஒரே நொடியில் அந்தச் சங்கிலியை உடைத்தெறிந்து விட்டுத் தப்பலாம். ஆனால் செய்யாது. காரணம், அது “நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்! நம்மால் தப்பவே முடியாது” என்கிற முடிவைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டுள்ளதுதான். அதுபோல்தான் இந்த சுய முடிவெடுக்கத் தயங்கும் மனிதர்களும்.
வெற்றி என்பது வெளியில் எங்கோ உள்ள ஒரு பொருளல்ல. அது ஒவ்வொருவருக்குள்ளேயும் உள்ள பொருள். சுய மதிப்பீடு செய்து அதன் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, சுய முடிவெடுத்தால் அது அதுவாகவே நம் கையில் வந்து விழும். பிறர் தரும் உபாயங்கள் எப்போதுமே செல்லுபடியாகும் என்று உறுதி கூற இயலாது. உபாயங்கள் சில நேரங்களில் அபாயங்களாய் மாறலாம். காயங்களைத் தரலாம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings