in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நன்றாகப் படித்தும், நிறைய மதிப்பெண்கள் பெற்றும், எந்த வேலையும் கிடைக்காமல், தன் மானத்தையும் உயிரையும் காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் சினிமாவைத்  தேர்ந்தெடுக்க வைத்த இந்த சமூகத்தின் மேல்தான் கோபம். ஆனால் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு பேசினாள் ரேஷ்மா.

“அம்மா, நான் உங்கள் மகனிடம் நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகுங்கள் என்று பலமுறை கூறிவிட்டேன். நீங்கள் என்னிடம் கூறி பயனில்லை, உங்கள் மகனிடன் கூறுங்கள். இரண்டு கையும் தட்டினால் தான் ஓசை கிடைக்கும்” என்றாள்.

அதுவரை வாயை மூடிக் கொண்டிருந்த சுமதி, “என் அத்தான் இங்கு வரும் போதெல்லாம் நீ ’ஈ’ என்று மயக்கி இளித்தால் அவர் வராமல் என்ன செய்வார்? உங்கள் சினிமாக்கார சாகசங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே” என்றாள் கோபத்துடன்.

“சுமதி, மரியாதையோடு நாகரிகமாகப் பேசத் தெரிந்தால் பேசு. இதுவரை நீ பேசியதையே ஆன்ட்டிக்காகத்தான் பொறுத்துக் கொண்டேன், எப்போதுமே பொறுத்துக் கொள்ள மாட்டேன்… மைண்ட் இட்” என்றாள் கடுமையான குரலில்.

“செய்வது ஆளை ஏமாற்றும் தொழில், இதில் ரோஷம் வேறு” என்று கூறி அவளை மேலும் வெறுப்பேற்றினாள் சுமதி.

“உனக்கு ஒன்று தெரியுமா சுமதி? இதுவும் மற்றத் தொழில்களைப் போலத்தான். சிலர் ஏமாற்றுவார்கள், என்னைப் போல் பலர் ஏமாற்றப்படுவார்கள். உண்மை தெரியாமல் உளராதே, உனக்கு இப்படித்தான் பேசத் தெரியும் என்றால் இனி இங்கு வராதே. இங்கு வந்தது இதுவே கடைசியாக இருக்கட்டும்” என்றாள் கடுமையாக.

“அவளை விடு. எங்கு ஷூட்டிங் நடந்தாலும் இந்த ரிஷி உன் பின்னாலேயே வந்து விடுகிறான், அது எங்களுக்கு உறவினர் மத்தியில் மிகுந்த அவமானமாக இருக்கிறது. நீதான் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றாள் காமாட்சி.

எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த அன்னம்மா மாமி, “ரிஷி சார் மிகவும் நல்லவர், எங்கள் ரேஷ்மா அம்மாவும் மிகவும் சாது. ரொம்ப பிரியமானவர்களைப் பிரித்தால் இருவர் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்காதம்மா. இவர்களைப் பிரித்தால் குருவிக் கூட்டை கலைத்தது போல் இருக்கும் அம்மா” என்றாள் மனம் பொறுக்காமல்.

“சமையல்காரி எல்லாம் புத்தி சொல்லி கேட்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. யார் யார் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்க வேண்டும், நாங்கள் வருகிறோம்” என்று காமாட்சி வேகமாக சுமதியுடன் கிளம்பி விட்டார்.

அவர்கள் இங்கு வந்து ரேஷ்மாவுடன் பேசியது எல்லாம் ரிஷிக்குத் தெரியாது போல் இருக்கிறது. ரிஷி சுவாமிமலையில் இருந்து அடிக்கடி போன் செய்து கொண்டேயிருந்தான், கோபத்தில் ரேஷ்மா முதலில் அவனுடைய அழைப்புகளை தவிர்த்தாள். பிறகு வேண்டாவெறுப்பாக பேசினாள்.

வழக்கமாக அவனுடன் மூச்சு விடாமல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் ரேஷ்மா, அவனுடைய போனை எடுக்காததே அவனுக்கு நெஞ்சில் ஏதோ உறுத்தியது. அப்படியிருக்க சிறிது நேரம் கழித்துப் போனை எடுத்தவள், “ஹலோ சார், சொல்லுங்கள் என்ன வேண்டும்?” என்று ஒரு மாதிரியான வறண்ட குரலில் கேட்கவும், ரிஷிக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது,

“ரேஷ்மா டியர், ஊரிலிருந்து யாராவது வந்து உன்னிடம் ஏதேனும் அவமரியாதையாக நடந்தார்களா?” எனக் கேட்டான் ரிஷி.

“நோ நோ, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்றாள் மெதுவாக.

“நீ என்னிடம் பேசும் முறை இது அல்லவே. என் ரேஷ்மாவின் பேச்சு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும், நீ போனை வை” என்றவன், தொடர்பை துண்டித்து விட்டான்.

அன்று மாலை ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் அந்தப் படத்தின் முதலாளியும், இயக்குனரும் ரேஷ்மாவைப் பாராட்டி பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளதாகவும்,  அதில் அவர்கள் முக்கியமான நண்பர்கள்  சிலரும்  கலந்து கொள்வதால் காலம் தாழ்த்தாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென்று ரேஷ்மாவிற்கும், அவளுடைய  பி.எ. சதீஷிற்கும் தெரிவித்து இருந்தனர்.

அப்படத்தில் ஆடிய நடனங்களுக்குப் பிறகு, ரேஷ்மா தான் மிகவும் பிசி என்றால், சதீஷும் அவளுடைய கால்ஷீட் இன்டர்வியூ என மிகவும் பிசியாகி விட்டான்.

ரிஷி கோபத்தில் சுவாமிமலையிலிருந்து, அடுத்த நாளே சென்னைக்கு கிளம்பி ரேஷ்மா வீட்டிற்கு வந்தான். பங்களாவின் உள்ளே நுழையும் போதே, இவனைப் பார்த்தவுடன் ஓடிவரும் சதீஷ் வரவில்லை. தோட்டக்காரன் தான் ஓடி வந்து இன்று அதிகாலை ரேஷ்மாவும், சதீஷும் படப்பிடிப்பிற்காக ஏதோ வெளிநாட்டிற்குப் போயிருக்கிறார்கள் என்றான்.

ரிஷி ஒன்றும் சொல்லாமல், அன்னம்மா மாமியிடம் விசாரிக்கலாம் என்று உள்ளே போனான். முதலில் எதையும் வெளிப்படையாக சொல்லத் தயங்கினாள் மாமி. ரிஷி வற்புறுத்திய பிறகு அன்னம்மா நடந்தது எல்லாவற்றையும் தெளிவாக, மிகைப்படுத்தாமல் விளக்கினாள்.

“தம்பி, உங்கள் அம்மாவிற்கு ரேஷ்மாவின் மேல் வெறுப்பு இல்லை. ஆனால் அதே நேரத்தில் நல்ல குலத்தில் பிறந்த பெண் தான் மருமகளாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். என் மகன் வாழ்க்கையிலிருந்து நீ விலகி விட வேண்டும் என்றார்கள். ஆனால் தம்பி, அந்த பெண் சுமதிதான் மிக அசிங்கமாக, ஒழுக்கமில்லாதவள் என்ற அர்த்தத்தில் மிக அநாகரிகமாய் பேசியது.

அந்தப் பெண் பேசிய பேச்சினால்தான் ரேஷ்மா’ம்மா மிகவும் மனமுடைந்து அன்றைக்கெல்லாம் அழுது கொண்டே இருந்தார்கள். எதுவும் சரியாக சாப்பிடவுமில்லை, காலையில் கூட எதுவும் சாப்பிடாமல் வெறும் காபி மட்டும்தான் குடித்து விட்டு ஏர்போர்ட் போனார்கள்” என்றாள் மூச்சு விடாமல்.

“தம்பி… உங்களிடம் எதையும் சொல்லக் கூடாதென்று ரேஷ்மா அம்மா சொல்லிவிட்டுச் சென்றார்கள். நான் உங்களிடம் சொன்னது தெரிந்தால் அம்மா என்னைக் கன்னாபின்னாவென திட்டுவார்கள், ஆனால் எனக்கு மனம் கேட்கவில்லை. அந்தம்மாவின் சிரிப்பை அழித்து விட்டு இவர்கள் என்ன குலப் பெருமையைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை ஐயா” என்று முடித்தாள்.

‘ரேஷ்மா ஓயாமல் அழுதாள், சரியாக சாப்பிடவில்லை’ என்ற அன்னம்மா மாமி கூறியது ரிஷிக்கு நெஞ்சில் யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது. ஒன்றும் பேசாமல் வேகமாகச் சென்று காரை ஸ்டார்ட் செய்தான். அவன் கோபத்தை அதிலேயே தெரிந்து கொண்டாள் அன்னம்மா மாமி.

ரிஷி ரேஷ்மா வீட்டிற்கு சென்று வந்ததையும் காமாட்சிக்கு யாரோ தெரிவித்திருக்கிறார்கள். ரிஷி தன் அம்மா அப்பாவைப் பார்க்க சுவாமி மலையில் உள்ள தங்கள் பண்ணை வீட்டிற்குச் சென்றான்.

காமாட்சி அவனை பலமாக வரவேற்றாள், கூடவே சுமதி இருந்தாள். அவள் எதிரில் அவன் அம்மாவோடு பலமாக  விவாதம் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் ரேஷ்மாவைப் பற்றித் தன் கருத்தை உறுதியாக, ரேஷ்மாவைத்  தவிர தன் வாழ்வில் வேறு யாருக்கும் இடமில்லை என்றும் கூறினான்.

அதோடு சுமதியிடம், அவரவர் மரியாதையை அவரவர் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தேவையில்லாத ஆசைகளையெல்லாம் வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினான்.

அப்பாவிடம், “அம்மாவும் சுமதியும் ஏன் ரேஷ்மா வீட்டில் போய் கண்டபடி பேச வேண்டும்?” என்று கேட்டான். “என் அம்மாவிற்காவது பேச உரிமை இருக்கிறது, என் வாழ்க்கையைப் பற்றிப் பேச இந்த சுமதி யார்?” என்று அவளை நேரிடையாகக் கேட்காமல் அவன் தந்தையைச் சாடினான்.

“எனக்கொன்றும் தெரியாது. உன் அம்மாவும் சுமதியும் ரேஷ்மாவின் நடனம் மிகவும் நன்றாக இருந்ததாகவும், எல்லோரும் அவளை மிகவும் புகழ்கிறார்கள் என்றும், அதனால் இவர்களும் நேரில் போய் வாழ்த்து தெரிவிக்கப் போவதாகவும் தான் சொல்லி விட்டுச் சென்றார்கள். அங்கே போய் இவ்வளவு கலகம் செய்து விட்டு வந்திருக்கிறார்களா?” என்று அவரும் கோபமாகக் கடிந்து கொண்டார்.

அதன் பிறகு ரிஷி  யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் சர்க்கரை ஆலையை கவனிக்கச் சென்று விட்டான். ரேஷ்மாவும் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு தன்னிடம் பேசுவாள் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்தான் ரிஷி. பத்து நாட்கள் காத்திருந்த பிறகும் அவளிடமிருந்து அழைப்பு ஏதும் வராததால், சதீஷின் எண்ணிற்கு அழைத்தான்.

“சதீஷ்… எங்கடா இருக்கிறீர்கள்? எத்தனை முறை போன் செய்தாலும் ஏன் ரேஷ்மா பேசவில்லை? பக்கத்தில் இருக்கிறாளா? நீயாவது பேசக் கூடாதா?” என்றான் அழாத குறையாக.

“டேய், நாங்கள் இப்போது லண்டனுக்கு அருகில் உள்ள ‘லிட்டில் வெனிஸ்’ என்னும் சிற்றூரில் ஷூட்டிங்கில் இருக்கிறோம். இங்கே இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருப்போம் என்று நினைக்கிறேன். ரிஷி, இப்போது ரேஷ்மா உன் மீது கொலைவெறியில் இருக்கிறாள். ஏன் இந்த கோபம் என்றாலும் சொல்ல மறுக்கிறாள்?  சாரு சொல்லித்தான் எனக்கே முழு விவரம் தெரியும். உன் அம்மாவிடம் கூட அவளுக்குக் கோபம் இல்லை, ஆனால் சுமதியின் மேலும் உன் மீதும் தான் கோபமாக இருக்கிறாள். நாங்கள் எங்கிருக்கிறோம் என்ற விவரம் கூட உனக்குத் தெரிவிக்கக் கூடாதென்று சொல்லியிருக்கிறாள்” என்று  மூச்சு விடாமல் பேசினான்.

“டேய் நண்பா, நான் என்னடா செய்தேன்? இப்போது என்ன செய்வதென்று சொல்லித் தொலை” என்றான் ரிஷி.

“உடனே கிளம்பி வா ரிஷி. நாங்கள் தங்கி இருக்கும் இடத்தின் விவரம் இத்துடன் அனுப்பியிருக்கிறேன். ரேஷ்மா என்னைக் கூப்பிடுகிறாள், நான் போனை வைத்து விடுகிறேன்” என்றான்.

கூகிளில்  ‘லிட்டில் வெனிஸ்’ என்னும் ஊரின் பெயரைப் போட்டுப் பார்த்துத் தேடி தெரிந்து கொண்டான். கொஞ்சம் இந்திய ரூபாயை பௌண்டாக மாற்றி பத்திரமாக வைத்துக் கொண்டான். முக்கியமான பேப்பர்களை எடுத்துக் கொண்டு, ‘மனநிம்மதிக்காக நண்பர்களோடு வெளிநாடு போய் சுற்றி விட்டு வரப் போகிறேன்’ என்று தன் பெற்றோரிடம் கூறிவிட்டுக் கிளம்பி விட்டான்.

லண்டனுக்கு அருகில் உள்ள சிறிய ஊர்தான் ‘லிட்டில் வெனிஸ்’. ரிஷி இட்டாலியின் வெனிஸ் நகரத்தைப் பார்த்திருக்கிறான், எல்லோரும் சொல்வதைப் போல் லண்டன் லிட்டில் வெனிஸ் மிக அழகாக இருந்தது.  இதன் பரப்பளவு ஒரு  நான்கு கிலோ மீட்டர்தான் இருக்கும்.

கிராண்ட் யூனியன் கனால், ரீஜன்ட்ஸ் கனால் என்னும் இரண்டு ஆறுகளின் இடையில் உள்ளது. சுமார் இருபதாயிரம் மக்கள் வசிப்பார்கள். வார்விக் அவென்யூ இந்த ஊரின் வழியாகவும் செல்கிறது. இங்கே ஒரு டியூப் ஸ்டேஷனும் இருக்கிறது. அந்த ஊரின் அழகைப் பார்த்து பிரமித்து விட்டான் ரிஷி.

சதீஷ் அங்கே தான் ரிஷிக்காகக் காத்திருந்தான். ரிஷியை அழைத்துக் கொண்டு அவர்கள் தங்குமிடத்திற்குச் சென்றான் சதீஷ். ரிஷியைப் பார்த்ததும் ரேஷ்மாவிற்குக் கண்கள் சந்தோஷத்தில் பளிச்சிட்டன, ஆனால் வாய் மட்டும் கோபத்தில் கொப்பளித்தது.

“நீங்கள் சொல்லாமல் எப்படி ரிஷி சாருக்கு இந்த இடம் தெரியும்? ஒற்றன் வேலை பார்க்கிறீர்களா?” என்று இன்னும் பலவாறு கத்தினாள் சதீஷ்.

“நாங்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்கள், நல்ல குடும்பப் பெண்கள் இல்லை… அதுதானே உங்கள் கருத்து. யாரும் என்னை தொடர்புகொள்ள வேண்டாமென்றுதானே என் மொபைலைக் கூட ‘ஆப்’ செய்து வைத்தேன். கடல் அலையில் நின்றால் அந்த நேரத்தில் கடல் தண்ணீர் படும்போது காலுக்கு இன்பமாக இருக்கும், ஆனால் காலுக்கு அடியில் இருக்கும் மண்ணை அரித்து நம்மைக் குப்புறக் கவிழ்த்து விடும், அது போலத்தான் உங்கள் நட்பும்” என்றாள் ரிஷியிடம் வெறுப்பாக.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீதும் நன்றும் பிறர் தர வாரா (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி