“உன் முகத்தை செலவே இல்லாமல் அழகுபடுத்தும் ஒரே ஆபரணம் புன்னகை” என்று யாரோ ஒருவர் முகநூலில் பதிவு செய்ய, அதனைப் பல பேர், பலருக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். ஆனால், அந்தப் பல பேரில் ஒரு சிலராவது அதன் யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டு புன்னகையால் தங்கள் அழகுபடுத்திக் கொள்கிறார்களா? என்று ஆராய்ந்தால் அது சோகமே. ஆம், பணத்தைக் கொட்டிப் படித்து, பணத்திற்காகவே பணி புரிந்து, பணம்… பணம்… என்று ஒவ்வொரு நிமிடமும் பணத்தைத் தேடியே ஓடும் நடப்பு மனிதனுக்கு புன்னகைக்க ஏது நேரம்?..அந்தப் புன்னகையின் மேன்மையைத்தான் புரிந்து கொள்ள ஏது அவகாசம்?.
பொதுவாகவே, புகைப்படம் எடுக்கும் போது போட்டோகிராபர் “ஸ்மைல் ப்ளீஸ்” என்பார். அவர் சொன்னதற்கிணங்கி நாமும் புன்னகைத்து வைப்போம். புகைப்படம் வந்த பின், அதிலுள்ள நம் புன்னகை முகம் முதலில் நமக்கு அலாதி சந்தோஷத்தை தரும். பின்னர் அதைக் காணும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் அப்புகைப்படத்தில் உள்ள நம் புன்னகை முகம் நமக்கு பிறரிடமிருந்து பாராட்டுகளைக் கூட கொண்டு வந்து குவிக்கும். எத்தனை வருடங்கள் கழித்து அப்புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாலும் நமக்குள் தோன்றும் மலரும் நினைவுகளால் நம் நெஞ்சம் குதூகலிக்கும். யோசித்துப் பாருங்கள், ஒரே ஒரு செகண்ட் நாம் புன்னகை செய்ததன் விளைவாய் எத்துனை சந்தோஷங்கள், எத்துனை பாராட்டுக்கள், எத்துனை இன்பங்கள். இதே புன்னகையை நாம் வாழ் நாள் முழுவதும் நம் முகத்தில் படர விட்டோமென்றால் எவ்வளவு இனிமைகளை காணலாம். சக மனிதர்களுடன் சுமுகமாய் இணையலாம், உற்றாருடன் உற்சாகமாய் உறவாடலாம், தோழமைகளுடன் தேனாய்ப் பழகலாம்.
ஒரு வியாபாரியானவர், புன்னகையைத் தன் முகத்தில் அணிந்து கொண்டு, வியாபாரத்தில் ஈடுபட்டால் மட்டுமே அவரது கல்லா கர்ப்பிணியாகும், வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். மாறாக, எப்போதும் “கடு…கடு” முகத்துடன் அவர் இருப்பாரேயானால் கல்லா காற்று வாங்கும், வாடிக்கையாளர்கள் தெறித்துப் போய்விடுவார்கள். ஆக, புன்னகை அங்கு மறைமுக முதலீடு என்பது தெளிவாகின்றதல்லவா?.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் போது, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் படிப்பு மற்றும் இதர சான்றிதழ்கள் மட்டுமே அவர்களுக்கு பணியைப் பெற்றுத் தந்து விடுமா?… சாத்தியமேயில்லை. அங்கு முதல் தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படுவது மலர்ந்த முகம், தெளிவான முகம், முக்கியமாக புன்னகை மாறாத முகம் மட்டுமே. நல்ல படிப்பும், அருமையான குரல் வளமும், தெளிவான ஆங்கில வெளிப்பாடும், இருக்கும் ஒரு நபர் முகத்தில் புன்னகையைச் சூட மறந்து விட்டு, அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டாரேயானால் அவரால் அங்கு வாகை சூட முடியுமா?. நிச்சயம் முடியாது. அதே நேரம், அவரை விடக் குறைந்த அளவிலான படிப்பும், போதுமான அளவிற்கே குரலும், ஆங்கில உச்சரிப்பும் உள்ள ஒரு நபர், தன் முகத்தில் மாறாத புன்னகையை மறக்காமல் சூடிக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கும் போதும், சிறிய புன்னகையை இதழோரம் தவழவிட்டுக் கொண்டே பேசினாரென்றால் நிச்சயம் அவர்தான் அங்கு தேர்ச்சியடைவார். ஏனென்றால், அந்தப் பணியின் முக்கியக் குறிக்கோளே வாடிக்கையாளர்களை நாசூக்காகக் கையாளவதுதான். அதற்கு அவசியம் புன்னகை முகம்தான் தேவை. ஆக… வாடிக்கையாளர்களை வசமாக்க இங்கும் புன்னகைதான் முதலீடாகின்றது.
அடுத்து, தொழில் நிமித்தமான புன்னகையைத் தாண்டி, சமூக வாழ்க்கையில் இயல்பான, நிரந்தரமான, போலித்தனமில்லாத புன்னகையை முகத்தில் ஏந்திக் கொண்டு வாழும் மனிதர்கள்தான் பல்வேறு நன்மைகளை எளிதில் பெற்றி இனபமான வாழ்க்கையை வாழுகின்றனர். உதாரணமாக, பேருந்துப் பயணத்தின் போது, தெரியாமல் அடுத்தவர் காலை மிதித்து விட்டு “ஸாரி” என்று சொல்லும் போது முகத்தில் ஒரு புன்னகையையும் தேக்கி வைத்துக் கொண்டு சொன்னால், மிதிபட்ட நபரால் நம்மைக் கோபித்துக் கொள்ளத்தான் முடியுமா?, “இட்ஸ் ஓ.கே!” என்று சாதாரணமாகச் சொல்லி விட்டு பதிலுக்கு அவரும் புன்னகைத்டு விடுவார். அவ்வாறில்லாமல், கர்ண கடூர இறுக்க முகத்தோடு, “ஸாரி” என்றால், “ஏன்?…இன்னும் நாலு மிதி மிதிச்சிட்டு ஸாரி சொல்ல வேண்டியதுதானே சாவு கிராக்கி?” என்று கடுப்படிப்பார் மிதிபட்டவர். ஆக, நம் புன்னகையானது, நம்மை அறியாமல் நாம் செய்து விடும் சின்னச் சின்னத் தவறுகளை ஆற வைக்கின்றது. அத்தவறுகளால் நமக்கு ஏற்பட இருக்கும் எதிர்மறை பாதிப்புக்களைக் கூட நேர்மறையாக்கி விடுகின்றது.
தன்னிடம் கடன் தொகையை வசூலிக்க வரும் மனிதரிடம் கூட, “மன்னித்துக் கொள்ளுங்கள் அய்யா… என்னுடைய பொருளாதார நிலைமை இப்போது மிகவும் மோசமாக உள்ளது!… ஒரே வாரம் டைம் கொடுங்கள்… நிச்சயம் திருப்பி விடுகிறேன்!” என்று கெஞ்சும் போது முக பாவத்தில் கெஞ்சலோடு கொஞ்சம் புன்னகையையும் சேர்த்துக் கொண்டால், கறாராய் வசூலிக்க வந்தவர் கூட கருணையானவராய் மாறுவார். தாராளமாய் டைம் தருவார். அவ்வாறில்லாமல், “இப்ப என்னால முடியாதுங்க…ஒரு வாரம் கழிச்சு வாங்க… பார்க்கலாம்!” என்று கோப முகத்தோடு சொன்னால் என்ன நடக்கும்?. தேவையில்லாத பிரச்சினைகள் தலை தூக்கும், அதன் விளைவாய் கடன் வாங்கியவர் தலை கவிழும்.
சமூகத்தில் எல்லா நிலைகளிலும், எல்லா மனிதர்களிடமும், புன்னகையைத் தெளித்துப் பாருங்கள், பிறகு மாற்றத்தை உணர்ந்து பாருங்கள். உணவு விடுதியில் சாப்பிடச் செல்லும் போது சர்வரைப் பார்த்துப் புன்னகையுங்கள், அவன் உங்களைக் கவனிக்கும் விதமே வேறாயிருக்கும். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகின்ற இளைஞனைப் பார்த்துப் புன்னகையுங்கள் அடுத்த முறை அவனே தோழமை உறவுடன் “விஷ்” பண்ணுவான். பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் போது சிநேகிதமாய்ப் புன்னகையுங்கள், மறு நாள் அவரே “வணக்கம் சார்” என்பார்.
குடும்பத்தில் கணவனும், மனைவியும் எல்லாச் சூழ்நிலையிலும் புன்னகையை மட்டும் மாறாமல் முகத்தில் தேக்கி வைத்திருப்பார்களேயானால் அங்கு குடும்பச் சண்டைகளுக்கே இடமிருக்காது. நெருப்பை நெருப்பு அணைக்குமா?… நீர்தான் அணைக்கும். வெறுப்பை வெறுப்பு மாற்றுமா? அன்புதான் மாற்றும். அதே போல், கோப முகத்தை இன்னொரு கோப முகம் சாந்தப்படுத்துமா?… புன்னகை முகமே சாந்தப்படுத்தும்.
வாழ்க்கையின் காலகட்டம் மிக மிகக் குறுகியதே. மரணம் என்னும் அரக்கன் நம் எல்லோரையும் கபளீகரம் செய்யக் காத்துக் கொண்டேயிருக்கின்றான். ஆக, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்தக் குறுகிய காலத்தை அன்போடும், மகிழ்ச்சியோடும், நிறைவோடும், ஒரு கொண்டாட்டமாக நாம் வாழ வேண்டும். அவ்வாறு வாழ நமக்குத் தேவை சக மனிதர்களுடனான சமத்துவ உறவும், சமரச நட்பும். அவற்றைக் கொண்டு வரவும், கொண்டு வந்ததைத் தக்க வைத்துக் கொள்ளவும் முக்கிய காரணி…புன்னகையே!.
ஆகையால், புன்னகையுங்கள். புன்னகையால் பண்படுங்கள். மேன்மையுறுங்கள். இன்பங்களையும், இனிமைகளையும் நிரந்தரச் சொத்தாக்கிக் கொள்ளுங்கள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings