in ,

கொஞ்சம் பெருந்தன்மையோட இருங்க பாஸ்! (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

                                               

வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், விரக்திகள் போன்றவைகள் எதுவுமின்றி, எப்போதும் இன்புற்று வாழ வேண்டும் என விரும்புவது மனித இயல்பு. அவ்வாறு, இன்பமாக வாழ்ந்து, இமயமாக உயர, மனிதனுக்கு மிக மிக அவசியமான ஒன்று பெருந்தன்மைக் குணம். 

அதென்ன பெருந்தன்மைக் குணம்? எனக் கேட்பவர்களுக்கு ஒரே பதில்!… 

பெருந்தன்மைக் குணம் என்பது மன முதிர்ச்சியின் வெளிப்பாடு. ஆம்!.. மன முதிர்ச்சிதான் ஒருவருக்கு தெளிவான லட்சியத்தையும், உயர்வான சிந்தனையையும், சரியான வழியையும், தீர்க்கமான உறுதியையும், அமைதியான உளப்பாங்கினையும், நாகரீகமான நடத்தையையும் உண்டாக்கும்.

 நிதானமும், பொறுமையும் இல்லாமல் ஆத்திரமாகவும், கோபமாகவும் பிரச்சினைகளை அணுகினால் என்னவாகும்?… பிரச்சினை இன்னும் வலுவாகி பெரும் பிரச்சினை என்றாகிவிடும். இங்குதான் பெருந்தன்மையின் அவசியமும் புரியவரும். இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் இன்னொருவரோடு பழகித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயச் சூழ்நிலையில்தான் வாழ்ந்து வருகின்றோம். அந்நிலையில் நம்முடைய பழகும் தன்மையைப் பொறுத்துத்தான் நம்மைச் சுற்றியுள்ளோர்களின் குணாதிசயங்களும், செயல்பாடுகளும், எண்ணிக்கையும் அமையும். உண்மையைச் சொல்லப் போனால், நம்முடன் பழகுபவர்களின் எண்ணிக்கை கூடுவதும்… குறைவதும் கூட நமது பழகுதன்மையைக் கொண்டுதான் அமைகின்றது. 

எனில், நமது பழகுதன்மை பெருந்தன்மைக் குணத்தின் அடிப்படையில் இருப்பதுதானே நன்மை பயக்கும்? தீமை செய்பவனுக்கு பதில் தீமை செய்வதை விட நன்மை செய்து காட்டினால் நலமே விளையும். பெருந்தன்மையே உயர்வின் ரகசியம்!- மனித வாழ்வில் உயர்வின் ரகசியம் பெருந்தன்மையில்தான் இருக்கின்றது. ஒருவன் சிறந்த அறிவாற்றலும், நல்ல உடல் வலிமையும் கொண்டவனாக இருந்து, தனது சிந்தனைத் திறத்தால், திட்டமிட்டு உழைத்து, பெரும் செல்வத்தைக் குவித்த போதிலும், அவனிடத்தில் பெருந்தன்மைக் குணம் சிறிதும் இல்லை என்கிற போது, அவன் பிறர் எண்ணங்களில் ஒரு நல்ல மதிப்பீட்டை ஏற்படுத்தத் தவறியவனாகிறான். எந்த சூழ்நிலையிலும் அவன் உயர்ந்தவனாகக் கருதப்பட மாட்டான். அவனை யாருமே உள்ளத்தால் விரும்ப மாட்டார்கள். அவன் மன அமைதியுடனும், இன்பமாகவும் வாழ்வதென்பது அரிதாகும். 

இங்கு, மிக முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்… வாழ்க்கையில் உயர்தல் என்பது செல்வச் செழிப்பில், வசதி வாய்ப்புக்களில், உயர்வதை மட்டும் குறிப்பதன்று. செல்வம் வாழ்க்கை உயர்வுக்கு ஒரு உதவியாக அமையுமேயன்றி, அது மட்டும் ஒருவனை வாழ்வில் உயர்ந்தவனாக்கி விடாது. செல்வ வசதியோடு, பெருந்தன்மைக் குணமும் கொண்டவனே உண்மையில் உயர்ந்தவனாவான். அவனே, தன்னைப் பலரும் விரும்பிப் போற்ற இன்புற்று வாழ்வான். பெருந்தன்மை இல்லாமல் வெறும் செல்வப் பெருக்கினை மட்டும் பெற்றிருப்பவன் அகந்தையில் மேலோங்கியிருப்பான்… ஆணவத்தில் ஆடுபவனாய் இருப்பான்… பிறர் வெறுக்கும்படியான பேச்சும், செயலும் கொண்டவனாயிருப்பான்… அவ்வாறான நிலையில் இருக்கும் அவன் எவ்வாறுதான் அமைதியாகவும், இன்பமாகவும் வாழ முடியும்?. 

தன்னைச் சுற்றியுள்ளோருடன் இணக்கமான உறவும்… ஒற்றுமையான உணர்வும் இல்லாத மனிதன் ஒரு விநாடி கூட இன்பத்தின் வாசனையை நுகரமுடியாது. 

பெருந்தன்மையே தலைமைப் பண்பு!-

 பெருந்தன்மையெனும் பெரும் பண்பினுள், பிற பண்புகளெல்லாம் அடக்கம் ஆகும். ஆகவேதான்… எல்லாப் பண்புகளுக்குமான தலைமைப் பண்பாய் பெருந்தன்மையைக் குறிப்பிடுகிறார்கள். பெருந்தன்மையுள்ள ஒரு மனிதன், நல்ல உள்ளம் படைத்தவனாக… அன்பு நிறைந்தவனாக… இரக்க குணம் மிகுந்தவனாக… எவரையும் மன்னிக்கும் மனப்பாங்குடையவனாக… பெரியோரை போற்றுபவனாக… சிறியோரையும் மதிப்பவனாக… சுயநலம் இல்லாது பொதுநலம் பேணுபவனாக… இருக்கிறான். ஆம்! பெருந்தன்மைக் குணம் மட்டும் ஒருவனிடத்தில் அமைந்து விட்டால் அதன் மூலம் மற்ற நற்குணங்கள் எல்லாம் தானாகவே அமைந்து விடும். 

பெருந்தன்மையே மன உறுதி!- 

மனச் சங்கடங்கள் தோன்றுவதென்பது மனித வாழ்க்கையில் இயற்கையின் நியதி. அச்சங்கடங்கள் நம்மை அழிக்கும் முன், அவற்றை நாம் அழித்து விட வேண்டுமென எண்ணும் பட்சத்தில் அங்கும் நமக்குத் தேவையாயிருப்பது பெருந்தன்மைக் குணமே. பெருந்தன்மையாளனுக்கு சங்கடங்கள் குறித்த பயம் நிச்சயம் தோன்றாது. ஒரு சங்கடம் தோன்றும் போது, இது எதனால்?… யாரால்?… ஏன்?… எப்படி? தோன்றுகிறது என்பது குறித்த தெளிவு எளிதாய்க் கிடைத்துவிடும். பிறகு, அதிலிருந்து மீள்வதற்கான வழிவகை குறித்து ஆராய்ந்து செயல் படும் திறனும் எளிதாய் அமைந்துவிடுகின்றது. குழப்பங்கள் எதுவுமே அவனை அசைக்க முடியாது, ஏனெனில் பெருந்தன்மைக் குணத்தால் பெற்ற மன உறுதி அவனைக் காத்து நிற்கும். 

பெருந்தன்மையாளனே பெருமைக்குரியவன்!- 

மனிதன் என்பவன் தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டியவன். அவனது வாழ்க்கை அன்பாக, இரக்கமாக, ஈகையாக மலர்தல் அவசியம். அந்த மாதிரியான ஒரு தியாக வாழ்வில் கனியும் பண்பே பெருந்தன்மைப் பண்பு. ஒரு பெருந்தன்மையாளனிடத்தில் தன்னலம் இருக்காது. பிறர் நலத்தைத்தான் அவன் பெரிதென எண்ணி வாழ்வான். பணிவுடையவனாகவும், விட்டுக் கொடுக்கும் மனோபாவம் கொண்டவனாகவும், பரந்த பாசமும், பரந்த மனப்பான்மையும் கொண்டவனாகவும்தான் இருப்பான். பிறருக்கு எந்தவிதமான தீங்கையும் செய்யாமல், பழிச்சொல் பேசாமல், பிறர் மனம் மகிழப் பேசும் நல்ல உள்ளம் கொண்டவனே பெருந்தன்மையாளன். பகைவரிடத்தும் வெறுப்போ, பொறாமையோ, காட்டாமல் அன்பு செலுத்தி, அவர்களின் துன்பத்தையும், துயரத்தையும், கண்டு இரக்கம் கொள்ளும் இயல்புடையவனாக இருப்பான் பெருந்தன்மையாளன். 

பிறரால் தனக்கே துயர் நேரிடினும் அதற்காகப் பழிக்குப் பழி மனோபாவத்தைக் கொள்ளாமல், அத்துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு மன்னிக்கும் மாண்புடையவனே பெருந்தன்மையாளன். கோபம் என்ற கோடாரிக் குணத்தை மறைத்து, எல்லாவித கருத்து வேறுபாடுகளையும் மோதல் மற்றும் அழிவுகள் இல்லாத வண்ணம் முடித்துக் கொள்ளும் முத்தான குணமே பெருந்தன்மைக் குணம். 

பிறர் குறையைப் பெரிதாக்கிப் பேசாமல், நிறையை மட்டும் கண்டு பேசும் நல்லியல்பை கொண்டிருந்தால் அதுவே பெருந்தன்மை. 

இதைத்தான் தவத்திரு.வேதாத்ரி மகரிஷி அவர்களும் “மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்தும், பிறர்க்கு துன்பம் அளிக்காமல் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று வாழ்த்தும் நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டும் வாழ்ந்தால்…கால மழை ஒத்த அளவில் உலகில் பெய்யும், போர்… வறுமை… பஞ்சம்… பசி… பட்டினி… போன்ற எதுவுமின்றி மக்கள் செழிப்போடு வாழ்வர்” என்று ஆணித்தரமாய்க் குறிப்பிடுகின்றார். 

ஆம்!.. நண்பர்களே, வாழ்க்கையில் செல்வம், புகழ், திறமை என எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும், பெருந்தன்மை என்பது இல்லாது போனால், சமூகத்திலிருந்தே விலக்கப்பட்டவர்களாய்த்தான் வாழ வேண்டியிருக்கும். அப்படியொரு வாழ்க்கை என்பது தனித்தீவில்… தனியாளாய்… தனி வாழ்க்கை வாழும் கொடுமை போலாகும். 

பெருந்தன்மைக் குணத்தை பெருமையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். பெரும் வெற்றிகள் சாத்தியம். 

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீண் பகட்டு… வேண்டாம் விரட்டு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    குறை சொல்லிப் புலவர்கள் காண் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்