in ,

நல்லதோர் வீணை செய்தே!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வீட்டுக்குள் நுழையும்போதே அலங்காரத்தோரணங்களும் பளிச்சிடும் வண்ண விளக்குகளும் வரவேற்க மிகவும் பெருமிதமாக உணர்ந்தாள் சுகந்தி.

“கங்கிராட்ஸ்! முதல் வருடத் திருமண நாள் கொண்டாடும் உங்கள் இருவருக்கும் !” என்று மகளையும் மருமகனையும் வாழ்த்தினார்கள் சுகந்தியும் விசுவநாதனும்.  

தேடித்  தேடிவாங்கி வந்த பரிசுப் பொருட்களை கைகளில் கொடுத்துவிட்டு வணங்கி எழுந்த இருவரையும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். சுற்றி நின்ற நண்பர்கள் கை தட்ட ஆரவாரமாக கேக் வெட்டினார்கள். பளிச்பளிச் என்று மின்னலிட்ட காமிராவில் எல்லோரும் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்கள்.

கண்களில் மின்னிய பரவசம் முகத்தில் சந்தோஷமாக விரிய அந்த நாளின் இனிமையை அனுபவிக்கத் தயாரானாள் சுகந்தி.  

இருவரது அலுவலக நண்பர்களும் உறவினர்களும் சேர்ந்து கொள்ள அன்றைய நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது .திவ்யா தன் தோழிகளிடம் சுகந்தியை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

இது எனக்கு அம்மா மட்டுமில்லை”.

“தோழி என்று சொல்லப் போகிறாயா?” இடையே புகுந்து பேசினாள் ஒருத்தி. 

“அதுவும்தான். அதோட மிக சிறந்த ஆலோசகர்”.

“அப்படியா !” என்று வியந்தனர் தோழிகள். 

“ஆமாம்! நாமெல்லாம் ப்ரொஜெக்ட் ஆரம்பிக்க கே.டி… அதான் நானெல்ட்ஜ் டிரான்ஸ்ஃபர் செய்வோமே! அதை அழகாக செய்தவர்”. சிரித்தபடியே சொல்லிவிட்டு சுகந்தியின் தோள்களில் சாய்ந்து கொண்ட திவ்யாவை அணைத்துக் கொண்டு கடந்து போன அந்த நாட்களின் நினைவுகளில் மூழ்கினாள் அவள்.

திருமணமானபின் இருவருக்கும் ஏற்பட்ட பல சச்சரவுகள் ஈகோ க்ளாஷ்  பிரிவுக்கு அடி போட்ட பல மோதல்கள் எல்லாம் சரியாகி இன்றைக்கு மனமொத்த தம்பதியாக மணநாள் கொண்டாடும் திவ்யாவும் சந்திரனும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு முன்னோடியாக திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை அடைவதற்கு அவர்கள் சந்தித்த அத்தனை பிரச்னைகளும் அவள் மனதில் நிழலாடின.

“என்ன ஒரு வழியா  உங்க ஆஃபீஸ் புரொஜெக்ட் வெற்றிகரமா முடிஞ்சுதா?” வீட்டுக்குள் சந்தோஷமாக நுழைந்த திவ்யாவை வரவேற்றாள் சுகந்தி.

“ஆமாம்மா ! நல்லபடியா ஃபினிஷ் பண்ணிட்டோம்.டீமில எல்லோருக்கும்‌பெரிய நிம்மதி” அவள் குரலில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது .சுகந்திக்கும் தெரியும் அவள் இரவு பகலாக வேலைபார்த்துக்கொண்டிருந்தது.

முன்பு போல‌ பத்து மணிக்கு  தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணியுடன் முடியும் வேலை இல்லையே இந்த கணிணி தொடர்பான வேலைகள். எப்போதும் ஒரு பரபரப்பு கண்களில் ஓடிக் கொண்டிருக்கும். பசி மறந்து தூக்கம் மறந்து பிசாசு போல் உழைக்கும் வர்க்கம். நேரக்கணக்கே கிடையாது. அதனால்தானோ என்னவோ மென்மையான, இயல்பான குணங்கள் எல்லாம் விடைபெற்றுவிடுகின்றனவோ!

“சாப்பிடறயா!” என்றபடி சமையலறைக்குள் சென்றாள் அவள்.

பத்து நாட்களாக பேச வேண்டும் என்று யோசித்து தயங்கிக் கொண்டிருந்த விஷயத்தை பேசத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள் சுகந்தி. வந்ததிலிருந்து எதுவும் சொல்லாமல் தன் விருப்பப்படி இயங்கிக் கொண்டிருந்த திவ்யாவைப் பார்த்து பெருமூச்சு விடத் தான் அவளால் முடிந்தது. 

திருமணம் முடிந்து ஆறே மாதங்களில் எவ்வளவு முறை இங்கு வந்து விட்டாள். எதற்கெடுத்தாலும் ஒரு அவசரம் ஆத்திரம். தான் நினைத்ததுதான் சரி என்னும் பிடிவாதம். இந்த முறை அலுவலக வேலையை சாக்காக வைத்துக் கொண்டு வந்து இருக்கிறாள். இந்த சாயம் எப்போது வெளுக்கப் போகிறதோ தெரியவில்லை.

இன்றைய பெண்கள் புத்திசாலிகள், ஆனால் சாமர்த்தியசாலிகளா! எப்போதும் அவள் தனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி.

“எதையாவது சொல்லப் போனால் உங்க காலம் மாதிரி இல்லை. உங்களை மாதிரி நாங்கள் அடிமைகளாக இருக்க தயாராக இல்லை”  என்று நெற்றியில் அடித்த மாதிரி பதில் வரும்.

அது என்னவோ நிஜம்தான். ஆணவம் பிடித்த மாமியாருடனும் அனுசரித்துப் போகாத நாத்தனார்களுடனும் தன்னுடைய தேவைகளை மட்டுமே பார்த்த கணவனுடனும் போராடி வாழ்ந்த வாழ்க்கை இன்றைக்கும் மனதில் தழும்பாக நிற்கும் ரணங்கள். ஆனால் அதற்காக தான் வாழ்ந்த வாழ்க்கை தவறு என்று அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

“சமுதாயத்துக்கு பயந்து நீங்கள் எல்லாம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருந்தீர்கள்!” என்று சீறுவாள் திவ்யா.

குடும்பம், உறவுகள், சொந்தம் பந்தம் என்று  அன்று இருந்த பற்றும் பாசமும் இப்போது சுத்தமாக இல்லை. எத்தனையோ பெண்கள் அன்றைக்கும் வெளியில் வந்து போராடி வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நியாயமான வலுவான காரணம்   கண்டிப்பாக ஏதாவது இருந்திருக்கும்.

இப்போது மாதிரி ஒன்றுமே இல்லாததற்கு எல்லாம் முறைத்துக் கொள்ளும் சண்டை போட்டுக் கொள்ளும் இளைஞர் கூட்டம் அன்றைக்கு கிடையவே கிடையாது. இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு கட்டிக் கொண்டவளாக உறங்க சென்றாள் சுகந்தி.

“இந்த முறை என்ன தகராறு?”

அப்பா கேட்டதும் திவ்யா சுதாரித்தாள்.

“ஒண்ணுமில்லையே! இங்கே இருந்து வேலை பண்ணினா கொஞ்சம் சௌகரியமா இருக்கும் அப்படின்னு தான் இங்கே வந்தேன்”.

“அப்படியா? அப்போ நாளைக்கு கிளம்பிடுவே இல்லையா?”

“ஏன் ! கூட இரண்டு நாள் நான் இங்கே இருக்கக்கூடாதா!”

“நல்லா இருக்கலாம். அவரையும் ஃபோன் போட்டு வரவழைக்கிறேன். எல்லோரும் சேர்ந்து இருக்கலாம்”.

அவள் முகம் மாறியது.

“என்ன விஷயம்! என்ன பிரச்சினை!”

“அது” என்று தடுமாறினாள் அவள்.

சின்ன சின்னதாக ஆரம்பித்த பிணக்குகள் விவாதங்களாக மாறி அவர்களுக்கிடையே ஒரு பெரிய மதில் சுவரையே எழுப்பிவிட்டது என்பதை எப்படி சொல்வது! சொன்னால் இவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொள்வார்கள்!. பெற்ற மகளை விட நேற்று வந்த மருமகன் தானே இவர்களுக்கு பெரிதாக தெரிகிறது.

அவள் மௌனம் சாதித்தாள்.

“நான் சொல்லலை ! மறுபடியும் ஏதோ சண்டைதான்” சுகந்தி  சொன்னதும் சட்டென்று திவ்யாவுக்கு கோபம் எகிறியது. 

“ஆமாம், அப்படித்தான் வைத்துக்கொள்” சீறி விட்டு வெளியேறினாள் அவள்.

“என்னங்க இது! ஒரு வார்த்தை பேச விடமாட்டேங்கிறா. எதுக்கெடுத்தாலும் படபடக்கிற இந்த குணம் நல்லதில்லையே!”

“பொறு, விட்டுப்பிடிப்போம்”

அவள் கவலையுடன் உள்ளே சென்றாள்.

பார்த்து பார்த்து கல்யாணம் செய்து வைத்த பெற்றவர்களுக்கு பெண்ணிடம் பேசவே முடியவில்லை. அலுவலக ப்ரொஜெக்ட்டுக்கு கொடுக்கும் மதிப்பை வாழ்க்கைக்கு கொடுப்பதில்லை.‌

ஆஃபீஸில் எத்தனையோ பேருடன் சேர்ந்து வேலை செய்யும் போது எவ்வளவு அனுசரித்துப் போகிறார்கள். வீட்டில் மட்டும் தன்னிச்சையாக தான்தோன்றித்தனமாக நடக்க எப்படி மனசு வருகிறது!.‌இதை தன்னம்பிக்கை என்று சொல்வதா! இல்லை திமிர் என்று சொல்வதா?

கணவனோ மனைவியோ தன் இஷ்டத்துக்கு மற்றவரை வளைக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லையே. வாழ்க்கை என்றால் எல்லாம் தான் இருக்கும்.

சுழல்கள்  நிறைந்த கடலில் செல்லும் கப்பல் பாதி வழியில் எப்படி திரும்பி வர முடியும்!எத்தனை விலை உயர்ந்த கார் என்றாலும் மெயின் ரோட்டில்  மட்டும் தான் போவேன் என்று சொல்ல முடியாதே!நடுநடுவில் மணல் பாதையிலும் கடந்து செல்ல தயாராக இருக்க வேண்டும் அல்லவா?

மேடு பள்ளத்துக்கு பழகாத கார் மாதிரி தன் சௌகரியம் மட்டுமே கவனத்தில் வைத்தால் என்ன செய்ய முடியும். ஏதாவது செய்தே ஆக வேண்டும். தீவிரமாக யோசித்து முடிவுக்கு வந்தாள் சுகந்தி.

மறுபடியும் ஒரு சாவகாசமான நேரத்தில் தனியாக அவர்கள் இருவர் மட்டுமே  இருக்கும் நேரத்தில் இந்தப் பேச்சை எடுத்தாள் அவள்.

“உங்களை மாதிரி எல்லாம் சுயமரியாதை நிம்மதி இல்லாமல் வாழ முடியாது”. எடுத்தவுடன் அலட்சியமாக பேசினாள் திவ்யா.

“என்னதான் நடந்தது?” அழுத்தமான குரலில் கேட்டாள் அவள். 

“எனக்கும் வேலை இருக்கிறது. மனசு இருக்குன்னே யோசிக்காம தான் நினைச்சது தான் சரிங்கற மனுஷனோட எப்படி சரிக்கட்டிப் போவது! எதற்கெடுத்தாலும் சண்டை விவாதம்”

“நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயிருக்கலாம் இல்லையா?”

“எதற்காக? என் மதிப்பு தெரியாத மனுஷனோட நான் வாழத் தயாரா இல்லை”

“என்னதான் உங்க பிரச்சினை?”

“இரண்டு மூன்று நாளாக சாப்பாடு சரியில்லை அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தார். நானும் வேலை பார்க்கிறேன். அன்னைக்கு  இராத்திரியும் நிறைய நேரம் வேலை பார்த்து ஒரே தலை வலி”

“சரி, அதுக்கு நீ என்ன  பதில் சொன்னே!”

தான் சொன்னதை காதில் வாங்காமல் அம்மா கேட்டதும்  எரிச்சல் பீரிட்டது. “பேசாமல் நீ ஒரு சமையல்காரியை கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு சொன்னேன்”

“சாதாரணமா பேசுறதுக்கு இப்படியா சொல்லுவே ! உப்பு சப்பு இல்லாத விஷயம்”

“அதைத்தான் அவர் இல்லை என்று சொன்னார்”. நக்கலாக அவள் பதில் சொல்ல சுகந்தி அதிர்ச்சியில் உறைந்தாள்.

“அதுக்காக இப்படியா பேசுவே!”

“அன்னிக்கு எனக்கும் மூடு சரியில்லை”

“சரி, அப்புறமாவது நீ ஸாரின்னு சொல்லியிருக்கலாம்”.

சுகந்தி மேலும் துருவினாள். திவ்யா தோள்களை குலுக்கினாள்.

“நான் ஏன் தணிஞ்சு போகணும் .அன்னிக்கு என் மூட் பார்த்து அவர் பேசியிருக்கலாம்”.

சுகந்தி மௌனமாக அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏஸியின் இதமான குளிரிலும் அவளுக்கு வேர்த்துக் கொட்டியது.

பட்டிணத்தில்  பூதம் படத்தில் ஜீ பூம்பா சொல்வது மாதிரி எத்தனை மாற்றங்கள்! விளக்குகளெல்லாம் தலைகீழாக தொங்குகின்றனவே! அதுவாவது ஆயிரம் ஆண்டுகள்.‌ இது வெறும் இருபத்து ஐந்து ஆண்டுகள். அதற்குள் அவளுக்கு தான் பட்ட கஷ்டங்களெல்லாம் நினைவு வந்தது.

ஒரு நாள் சரியாக சமைத்திருக்காவிட்டால் நான்கு நாட்களுக்கு அதையே சொல்லி சொல்லி வதைக்கும் கணவனுடன் நெருடல்களை எல்லாம் மறந்து வாழ்ந்த காலங்கள் நினைவு வந்தன.

அவள் அம்மா சொன்னாள் ஒருமுறை சரியாக வேகாத சேப்பங்கிழங்கை நீயே சாப்பிடு நீயே சாப்பிடு என்று வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்தாராம் .அந்த வேதனைகள் எல்லாம் மனதில் உலா வந்தன.

“நீ எத்தனை தடவை என் சமையலை குறை சொல்லியிருப்பே! சரி அதைவிடு, ஒருநாள் கூட உனக்கு அவர் எதுவும் செய்து தரவில்லையா”

“இப்போ எல்லா பசங்களும் பாதி வேலையை ஷேர் பண்ணிக்கிறாங்க ! அதெல்லாம் உனக்கு பெரிசா தெரியலையா!” அவள் ஆதங்கத்துடன் கேட்டாள். 

“அதுக்கு என்ன செய்யனும் அப்படீங்கற!”

“உங்க தலைமுறை மாதிரி ஒரேயடியாக பொறுத்துப் போக எங்களால் முடியாது”.

“உங்ககிட்டயே நாங்க அனுசரிச்சுத்தானே போறோம். எத்தனை முறை உன் ஃப்ரெண்ட்ஸ் நம்ம வீட்டில் சாப்பிட வந்திருப்பாங்க! நீ அப்ப என்னோட கஷ்டம் எதையாவது எப்பவாவது நீ யோசிச்சிருப்பியா? நீ மட்டும் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் உன்னிடம் பேசணும்னா உன் மூட் பார்த்து யோசிச்சு தான் பேசணுமா? உங்க மானேஜர்கிட்ட எல்லாம் இப்படி பட் பட் டுன்னு பேசுவியா! புருஷன்னா அவ்வளவு அலட்சியமா!” சீறினாள் சுகந்தி.

அம்மா இவ்வளவு கோபப்படுவாள் என்று எதிர்பார்க்காத திவ்யா திணறினாள்.

“எல்லாம் நாலு எழுத்து படித்த திமிர்  வேலை பார்க்கிற திமிர்” அவள் அடுக்கிக்கொண்டே போனாள். “வேற ஒண்ணுமில்லை ! வேலை என்கிற வேதாளம் உங்களை எல்லாம் ஆட்டிப் படைக்கிறது. எப்ப பார்த்தாலும் எங்களை மட்டம் தட்டறதே வேலையா வைச்சிருக்கீங்க.

நாங்க பயந்தது பாதுகாப்புக்காகவோ சமுதாயத்துக்காகவோ இல்லை. அன்றைக்கும் பெண்கள் சுயமாக  சம்பாதிக்கத் தான் செய்தார்கள். இந்த ஆணவம் திமிர் யாருக்கும் இருந்தது இல்ல. மாமியாருக்கோ புருஷனுக்கோ நாங்க பயப்பட்டது கோழைத்தனம்னு நீ சொல்றே ! 

அவங்களுக்கு நான் பயப்படலை. அந்த ஸ்தானத்துக்குத்தான்  மரியாதை கொடுத்தோம். குடும்பம் சமுதாயம் பண்பாடு என்று தான் பணிந்தோம். இத்தனை கஷ்டப்பட்டு நாங்கள் உருவாக்கி வைத்த ஒரு கட்டமைப்பை ஒரு நிமிஷத்தில் தூக்கி எறிய எப்படி மனசு வருகிறது?”  

படபடவென்று பேசிய சுகந்தி தொப்பென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். தண்ணீரை எடுத்து  வேகமாக குடித்துவிட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். மனதுக்குள் வந்த கோபத்தில் வார்த்தைகள் சரமாரியாக வெளிப்பட்டன.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டின்னு ஒரு பழைய பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது. கொண்டு வந்தான் ஒரு தோண்டி !அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி! அது மாதிரிதான் இருக்கு. உன்கிட்ட பேசவே பயப்படணும்னு நீ நினைக்கிறேன்னா நீ என்ன மாதிரி பொண்ணு! இதிலே நாங்களும் உனக்கு சப்போர்ட் பண்ணனும்னு நினைக்கிறே!கொஞ்சமாவது யோசிப்பேனு நினைச்சேன். உனக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லை.

எங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகும் போது பொண்ணா லட்சணமா நடந்துக்கோன்னு சொல்லி அனுப்புவாங்க.  உன்னை என்ன சொல்றதுன்னு தெரியலை . அட்லீஸ்ட் ஒரு மனுஷியாகவாவது  நடக்க முயற்சி பண்ணு”.

ஏதோ பேச வாயெடுத்த திவ்யாவை கையமர்த்திவிட்டு தொடர்ந்தாள்.  

“எப்பவும் எங்களை புழுதியில் கிடக்கிற வீணை அப்படின்னு சொல்லுவே. நாங்க எவ்வளவோ சங்கடங்களில் இருந்தபோது கூட எங்க தரத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. ஆனா நீங்க புழுதியை உங்க மேலயே வாரி இறைச்சுக்கறீங்க யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது மாதிரி”.

‘கிண்டலா?’ அவள் முறைத்தாள். 

“பின்னே வேறென்ன! சர்வ சாதாரணமாக தூக்கி எறியறது உன்னோட வாழ்க்கையை! ஃபைலா, ஃலைஃபா என்று ஒரு கேள்வி கேட்பாள் கதாநாயகி இருகோடுகள் படத்தில ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தமும் அவசியமும் வேறுபட்டுப் போய்விடும். வீடு, அலுவலகம் இரண்டையும் சமமாக பார்க்க சமாளிக்க தெரியவேண்டும்”

பொரிந்து தள்ளிய அம்மாவை  சமாளிக்கத் தெரியாமல் தவித்துப் போனாள் திவ்யா.

“இதோ பாரு ! இனிமே நான் பேசுறதுக்கு எதுவும் இல்லை. மரியாதையாக நாளைக்கு உன் வீட்டுக்கு கிளம்பிப்போ , இல்லையானால் !” ஒருநிமிடம் நிறுத்தி மூச்சு விட்டாள் அவள். “நானும் உன் அப்பாவும் உன் வீட்டில் போய் இருக்கப் போகிறோம்”.

“அம்மா” என்று அதிர்ந்தாள் அவள்.

“ஆமாம்! இங்கே நீ எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்கலாம். யாரும் கேட்க மாட்டார்கள்”. அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு வெளியேறினாள்  அந்த தாய்.

திவ்யா அயர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

பொறுமையின் சிகரம் என்று எண்ணியிருந்த அம்மா அடங்கிப் போகும் அடிமை என்று எண்ணியிருந்த அம்மா எரிமலையாக வெடித்து  சிதறி விட்டுப் போயிருக்கிறாள்.

அம்மாவைப் பற்றி அவள் வைத்திருந்த அபிப்ராயம் மாறியது.வாழ்க்கையைப் பற்றி முதன்முதலாக அவளுக்குள் ஒரு வெளிச்சம் தோன்றியது. அதைப் பின்பற்றி நடக்க முடிவு செய்தவளாக அம்மாவை நோக்கி சென்றாள் அவள்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனிதக்காட்சி சாலை (அத்தியாயம் 6 – குறுநாவல்) – முகில் தினகரன்

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை