in ,

எண்ணங்களினால் ஓர் மாளிகை (நகைச்சுவை நாடகம்) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காட்சி: 1

இடம்: பேராசிரியர் அசோகன் வீட்டு முன்னறை.

பாத்திரங்கள்: அசோகன், பிரதாப், ஜீவிதா.

பிரதாப் அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டு, பயத்தின் கலக்கத்தோடு வரவேற்பு அறைக்குள் நுழைய…

அசோகன்:- யாரப்பா தம்பி நீ! என்ன வேணும்?

பிரதாப்:- வந்து… வந்து… ஹிந்தி… ஹிந்தி படிக்க..(பேச மூடியாமல் திணறுகிறான்.)

அசோகன் :- என்னது வந்து… போய்… ஹிந்தின்னுட்டு என்ன விஷயம்? முழியைப் பார்த்தா திருட்டு முழி மாதிரி இருக்கு.

பிரதாப் :- அய்யய்யோ என் பார்வையே அப்படித்தான் மாமா.

அசோகன்:- என்னடா மாமாங்கிறே… முன்னே பின்னே தெரியாத நீ எப்படி என்னை மாமா என்று கூப்பிடுகிறாய்?

பிரதாப்:- அது எப்படியும் வருங்காலத்திலே கூப்பிட்டு பழக வேண்டியது தானே, அதனால் தான் அப்படி கூப்பிட்டேன்.

அசோகன்:- எப்படி… எப்படி… அடி வாங்கப் போற, நீ ஏன் என்னை மாமா என்று அழைக்க வேண்டும்?

பிரதாப்:- (மனதுக்குள்) உங்கப் பெண்ணைக் கட்டிக்கிட்டா நீங்க எனக்கு மாமா தானே.

அசோகன்:- என்ன முணுமுணுக்கிறாய்?

பிரதாப்:- அது…. வந்து… உங்க வீட்டுக்குள்ளே வரும் போது உங்கள் பெயருக்குப் பின் இரண்டு தடவை எம்.ஏ பட்டம் வாங்கியிருந்ததைப் போட்டிருந்ததைப் பார்த்தேன். இரண்டு தடவை MA MA அப்படி சேர்த்து சொன்னால் இருக்கும் என்று யோசித்து அதை அப்படியே சொன்னேன் மாமா .

அசோகன்:- ஓ! அப்படியா… உட்கார்.

பிரதாப்:- நான் உட்கார்ந்து தான் இருக்கிறேன்.

அசோகன்: அதெப்படி நீ வீட்டுக்குள்ளே வந்து நான் சொல்லாமல் நீ உட்காரலாம். எழுந்திரு.

(பிரதாப் எழுந்திருக்க) அசோகன்! சரி இப்போ உட்கார். என்ன விஷயபாக வந்தாய்?

பிரதாப்:- (பிரதாப் நின்று கொண்டே) உங்களிடம் ஹிந்தி படிக்க வந்தேன்.

அசோகன்:- என்ன நான் சொன்ன பிறகும் உட்காராமல் நின்று கொண்டிருக்கிறாய்?

பிரதாப்:- திரும்ப எப்போது எழுந்து நிற்கச் சொல்வீர்களோ என்று பயமாக இருக்கிறது?

அசோகன்:- சரி… சரி.. பயப்படாதே உட்கார். நானே சரித்திர ஆசிரியன். நான் எப்படி உனக்கு ஹிந்தி சொல்லித் தர முடியும்.

பிரதாப்:- அது…. சரித்திர காலத்தில் வடநாட்டு மன்னர்களைப் பற்றிப் படிக்கும் போது அவர்கள் பேசிய ஹிந்தி மொழியையும் படித்திருப்பீர்கள் என்று நம்பினேன்.

அசோகன்:- சரித்திரத்தில் வரலாறு தான் தெரியுமே ஒழிய அந்த மன்னர்களின் மொழியை எப்படி படிக்க முடியும். என் மகள் ஜீவிதா தான் ஹிந்தி படித்து பட்டம் வாங்கிச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பிரதாப்:- அப்படியானால் அவளையே கட்டிக் கொள்கிறேன்.

அசோகன்: என்னது? (கோபத்துடன் எழும்புகிறார்)

பிரதாப்:- ஸாரி மாமா… அவளிடமே ஹிந்தி கற்றுக் கொள்கிறேன என்றேன்.

(ஜீவிதா உள்ளே வர, பிரதாப்பும். ஜீவிதாவும் கண்களாலும் கைகளாலும் சைகைகளைப் பறிமாறிக் கொள்ள)

அசோகன்:- என்னடா., நீ ஏதோ சைகை காட்டுறே! நீ ஏதோ தப்பான எண்ணத்திலே தான் வந்திருக்கே. எழுந்திரு.

பிரதாப்:- இதற்காகத் தான் நான் உட்கார மாட்டேன் என்று சொன்னேன்.

அசோகன்: இங்கே நீ நிற்க கூட வேண்டாம் கிளம்பு.

ஜீவிதா:- யாரப்பா இது?

அசோகன்:- உன்னைக் கட் டிக்கொள்ள… சே! இந்த பாவி சொன்ன டயலாக் இது. என்னை மாமா என்கிறான். கேட்டால் டபுள் எம்.ஏயை சேர்த்து சொன்னேன் என்கிறான். நீ வெளியே போ.

ஜீவிதா:- நான் எதற்கு வெளியே போகணும்.

அசோகன்- அய்யோ! அந்தக் கடன்காரனைச் சொன்னேன்.

ஜீவிதா:- நீங்கள் அப்பாவிடம் கடன் வாங்கியவரா?

அசோகன்:- அவன் ஒண்ணும் கடன் வாங்கவில்லை. அவனை வெளியே போகச் சொல்லு.

ஜீவிதா:- வெளியே போங்கள்.

பிரதாப் :- (சைகை காட்டியவாறு) நீங்கள் யார் ? இந்த வீட்டிற்கு உறவினரா? நீங்கள் யார் சொல்வது என்னை வெளியே போகச் சொல்ல… சார் சொன்னால் தான் வெளியே போவேன்.

ஜீவிதா:- என் அப்பா சொன்னால் என்ன… நான் சொன்னால் என்ன… வெளியே போங்களேன்.

பிரதாப்:- சார் தான்…. ஸாரி… மாமா தான் என்னை உட்கார் என்றார். எழுந்திரு என்றார். இப்போதும் என்னை அவர் வெளியே போகச் சொன்னால் தான் போவேன்.

ஜீவிதா: நீங்கள் எதற்காக வந்தீர்கள் ?

பிரதாப்:- நான் உன்னைக் கட்டிக் கொள்ள சீ… சீ… உன்னிடம் ஹிந்தி கற்றுக் கொள்ள வந்தேன்.

அசோகன்:- பாரு எப்படி பைத்தியம் மாதிரி பேசறான் நீ வெளியே போடா.

பிரதாப்:- உங்களிடம் ஹிந்தி படிக்க வந்த என்னை பைத்தியம் என்கிறார். நான் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போவேன்.

அசோகன்:- நீ சுப்ரீம் கோர்ட்டுக்கேப் போ. கிறுக்கன் மாதிரி உளறிக் கொண்டு.

பிரதாப்:- என்னைத் திரும்பக் கிறுக்கன் என்கிறீர்கள். நான் கண்டிப்பாக கன்ஸ்யூமர் கோர்ட் டுக்குப் போய் வழக்குப் போடுவேன்.

ஜீவிதா:- அப்பா, நான் டியூசன் எடுக்கிறதாக போர்டு போட்டிருக்கிறோம். ஹிந்தி படிக்க வந்த மாணவனை அவமதித்ததாக அவர் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் ஒரு ரூ.1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு போடப் போகிறார்.

அசோகன்:- நீயும் கோர்ட்டுக்குப் போகிறாயா போ!

ஜீவிதா:- அப்பா (கத்துகிறாள்)

பிரதாப்:- மாமா.. ஜீவிதாவையும் கூட்டிக் கொண்டு கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போக மாட்டேன். திருமண பதிவு அலுவலகத்திற்குத் தான் போவேன்.

அசோகன்:- அய்யோ! எனக்குத் தலை சுற்றுதே! இந்தத் தத்துப்பித்துவை வெளியே அனுப்பி வையேன் (முடியைப் பிடித்துக் கொள்கிறார்)

பிரதாப்- இப்போது தத்துத்து, இதற்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு போட வேண்டியது தான்.

ஜீவிதா:- வெளியே போங்களேன்.

பிரதாப்:- (கண்ணடித்து) நான் உன்னைக் கட்டிக்காம… அய்யோ… உன்னிடம் ஹிந்தி கத்துக்காம போகமாட்டேன்.

அசோகன்:- படுபாவி உன்னைச் சும்மா விடமாட்டேன் (அருகிலிருந்த குடையை எடுத்து அடிக்க வர, பிரதாப் பயந்தடித்து ஓடுகிறான்)

காட்சி: 2

இடம்: பேராசிரியர் அசோகன் வீட்டின் முன்னறை…

பாத்திரங்கள்: தபால்காரன், ஜீவிதா, அசோகன்

தபால்காரன்:- சார் போஸ்ட்.

அசோகன்:- என்னது ரெஜிஸ்டர் போஸ்ட்!

தபால்காரன்:- கோர்ட் நோட்டீஸ் சார்.

அசோகன்:- என்னது ? அய்யோ ஜீவிதா கோர்ட் நோட்டீஸ் வந்திருக்காமே! யார் நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க பாரு.

ஜீவிதா:- கொடுங்க பார்த்து வாசிக்கிறேன்.

தபால்காரன்:- சார் கையெழுத்துப் போடுங்க, நான் போகணும்.

அசோகன்:- ஒரு நிமிஷம் இருப்பா, வாசி நீ

தபால்காரன்:- எனக்கு நிறைய லட்டர் டெலிவரி பண்ணனும். கையெழுத்து போடுங்க.

அசோகன்:- என்னது… உன் மனைவி டெலிவிரிக்கு நான் எதுக்கு கையெழுத்துப் போடணும். நீ வாசிம்மா.

ஜீவிதா:- என் கட்சிகாரர் பிரதாப் உங்கள் மகள் ஜீவிதாவிடம் ஹிந்தி படிக்க வந்திருக்கிறார். அவருக்கு ஹிந்தி சொல்லித் தர முடியாது என்ற திருப்பி அனுப்பியதோடு அவரை கடன்காரன், பைத்தியக்காரன், கிறுக்கன், தத்துபித்து என்று திட்டி குடை வைத்து அடித்து விரட்டியிருக்கிறீர்கள். என் கட்சிகாரரை அவமானப்படுத்திப் பேசிய நான்கு தப்பான வார்த்தைகளுக்கு, நான்கு கோடி ரூபாய் தரவேண்டுமென்று மானநஷ்ட வழக்குப் போட்டுள்ளோம். மேலும் அவரைக் கொலை முயற்சித்து கையிலிருந்த குடையால் தாக்கியிருக்கிறீர்கள். அவருடைய உயிரைப் பணயம் வைத்து அவர் ஓடியிருக்கிறார். ஓடியிருக்கிறார் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஒடியிருக்கிறார் அதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளோம். ஆக மொத்தம் ரூபாய் ஐந்து கோடி ரூபாய் கட்டத் தவறினால் நீங்கள் கோர்ட் படியைத் தேடி வரவேண்டியதிற்கும்.

தபால்காரன்:- கட்சிக்காரன்னு போட்டிருக்கே எந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியா, தி.மு.க.வா, பாரதிய ஜனதாவா…

அசோகன்:- அய்யோ! என் மானம் இப்படி தபால்காரன் முன்னே போகுதே. நீ இன்னும் போகலியா?

தபால்காரன்:- மானம் கப்பலேறி பஸ்ஸிலேறி கோர்ட்டுக்கே போயாச்சு. கையெழுத்துப் போடுங்க சார், நான் போகணும்.

அசோகன்:- ‘பென்’ குடுய்யா.

தபால்காரன்:- உங்களுக்கு இந்த வயசிலே யார் சார் ‘பெண்’ குடுப்பாங்க. அதுவும் என் மகளை நான் ஏற்கனவே கல்யாணம் பண்ணிக் குடுத்தாச்சு.

ஜீவிதா:- அய்யோ, பேனா குடுங்க சார், கையெழுத்துப் போட.

தபால்காரன்:- அப்படியா ? (பேனா எடுத்து தர)

(வாங்கிய) அசோகன்:- என்னடா பேனா எழுத மாட்டேங்குது.

தபால்காரன்:- அய்யோ! இவ்வளவு நேரம் அழகா எழுதிச்சு. உங்க நேரம் சரியில்லாததாலே எழுதாம போச்சு. எனக்கு வேறு பேனா குடுங்க.

ஜீவிதா:- அய்யோ! இதென்ன எழவாய் போச்ச, நாங்க எதற்கு வேறே பேனா தரணும்.

தபால்காரன்:- நீங்கள் வேற பேனா தராவிட்டால் நானும் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போவேன்.

அசோகன்:- அய்யோ! எல்லோரும் கோர்ட்டுக்கு போகிறேன் என்கிறார்களே!

(அசோகன் முடியைப் பிடித்துக் கொண்டு கத்தியதில் தபால்காரர் அடித்து பிடித்துக் கொண்டு ஓடுகிறார்.)

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருமண மண்டபம் (சிறுகதை) – இரஜகை நிலவன்

    மனிதக்காட்சி சாலை (அத்தியாயம் 1 – குறுநாவல்) – முகில் தினகரன்