எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அது ஒரு சமவெளிப் பிரதேசம்; தென்றல் வாடை மேலை மற்றும் கொண்டல் என காற்றின் நான்கு வகைகளும் அங்கு கூடியிருந்தன. அது ஒரு சந்திப்பு நிகழ்வு என்பதால் அவைகள் ஒன்றையொன்று கேலி பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது தென்றல் “நான் தென்பொதிகை மலைல இருந்து வர்றேன்! இளவேனிற் காலத்தை வசந்தகாலம்னு சொல்வாங்க! வசந்தபருவத்துல வீசுற இதமானத் தென்றலின் சுகத்தை அனுபவிக்காதவங்க யாரும் கிடையாது! நான்தான் காற்றில் சிறந்தவன்!” – என்றது;
இதைக் கேட்ட வாடைக் காற்றுக்குக் கோபம் வந்து விட்டது. “நான் வடக்குல விந்தியமலைல இருந்து வர்றேன்! பறவையோ மிருகமோ மனுஷனோ உயிர் வாழ உடற்சூடு அவசியம்! உடற்சூட்டைத் தக்க வைச்சுக்குற தகவமைப்பை நான்தான் தர்றேன்! நான்தான் சிறந்தவன்!” – என்றது.
இப்போது கொண்டல் அவசரமாகக் குறுக்கிட்டு பேசியது. “நான் பெருங்கடல் விரிகுடாப் பகுதில இருந்து வர்றேன்! கொண்டு வர்றதுனாலதான் எனக்குக் கொண்டல்னு பேரு! நான் மழையைக் கொண்டு வர்றேன்! உயிர்வாழ மழை அவசியம்! நான்தான் காற்றுகள்லயே சிறந்த காற்று!” என்றது.
அதுவரை அமைதியாக இருந்த மேலைக் காற்று குறுக்கிட்டு பேசியது. “நான் மேற்கு மலைல இருந்து வர்றேன்! மூலிகைகளின் நறுமணத்தையும் மலையின் கனிமவளச் சத்துகளையும் எடுத்துட்டு வர்றேன்! நிலப்பரப்புல நிறையத் தாவரங்கள் சூல்கொள்ள நான்தான் உதவுறேன்! நான்தான் காற்றில் சிறந்தவன்!” என்றது.
விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த காற்றின் அதிதேவதை சற்று தாமதமாக அங்கே வந்தது. “நீயே சொல்லு தேவதையே! எங்கள்ல்ல யார் சிறந்தவன்?” – என்று கேட்டன.
“ஓ… அதான் உங்களுக்குள்ள விவாதம் பண்ணிக்கிட்டிருக்கீங்களா?” – என்றபடி தேவதை பேச ஆரம்பித்தது.
”சூரியஒளினால மின்னூட்டம் பெறும் வளிமண்டலத்துல உள்ள ஆக்ஸிஜன் நைட்ரஜன் மாதிரியான வளிமங்கள் ஓரிடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்றதைத்தான் காற்றுனு சொல்றோம்! மழைகாலம் குளிர்காலம் கோடைகாலம் காற்றடிகாலம்னு நமக்கு நாலு பருவங்கள் இருக்கு! இந்த நாலு பருவத்துலயும் வளிமங்கள் மின்னூட்டம் பெறுறதுல இருக்குற மாற்றங்கள்னால காற்றோட நகர்வும் மாறுபடுது! எந்தத் திசைல இருந்து வர்றீங்களோ அந்தத் திசைல இருக்குற நிலப்பரப்பு நீர்பரப்பின் குணாதிசயத்தையும் நீங்க எடுத்துட்டு வர்றீங்க! மழைக்குக் கொண்டல்னா பல்லுயிர் பெருக்கத்துக்கு மேலைக்காற்று! உயிர்களின் தகவமைப்புக்கு வாடைனா இதமான சூழலுக்குத் தென்றல்;! அதுனால நீங்க நாலுபேருமே ஒவ்வொருவிதத்துல சிறந்தவர்கள்தான்!” – என்றது அதிதேவதை.
அதன் பேச்சில் சமாதானம் அடைந்த நான்கு காற்றுகளும் விருந்தை சுவைக்க ஆரம்பித்தன.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings