இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இரவு பதினொரு மணி
சத்ரபதி சிவாஜி டெர்மினல் ரெயிவே ஸ்டேஷன்.
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பெருமூச்சு விட்டுக் கொண்டு நிற்க எல்லா பயணிகளுமே கல்யாண் ஸ்டேஷனிலும் தாதர் ஸ்டேஷனிலும் இறங்கி விட, தினேஷ் சி.எஸ்.டியில் இறங்கி தனியாளாக நடந்தான்.
இரவு பதினொரு மணியான பிறகும் லோக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வேகமாக மும்பாய் மக்கள் அவசரமாக ரயிலுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள்.
மூடப்போன பெப்ஸி கடைக்கரனிடம் ஒரு பெப்ஸி வாங்கிக் கொண்டு நூறு ரூபாய் கொடுத்தான் தினேஷ்.
“சுட்டா தேவ் பாய்” என்றான் கடைக்காரன்.
‘திட்டுகிறானா’? என்று யோசித்தவன் “வாட்”? என்று கேட்டான்.
“சேன்ச் மை டியர்”
“ஹௌ மச்”
“செவன்டி ருபீஸ்”
நூறு ரூபாயை திருப்பி வாங்கிக் கொண்டு பையைத் திறந்து சில்லறைகளை எண்ணி கொடுத்து விட்டு வெளியே வந்தான்.
வயிறு பசித்தது. மொபைல் பவர் தீர்ந்த்திருந்தது…
என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலே ஸ்டேஷனுக்கு வெளியே தென்பட்ட டெலிபோன் பூத்தை நோக்கி நடந்தான். பையிலிருந்த டெலிபோன் புத்தகத்தை எடுத்து புரட்டி ராஜன் லாலுக்கு எதிராக எழுதியிருந்த நம்பரை டயல் செய்தான்.
“ஹலோ ராஜன் லால் ஸ்பீக்கிங்” என்றது எதிர்முனை.
“நான் தினேஷ், கும்பகோணத்திலிருந்து வந்திருக்கிறேன். வந்திறங்கியதும் போன் பண்ணச் சொன்னீர்களே?” என்றான் அழகான ஆங்கிலத்தில்.
“தினேஷ். யாரு… எனக்கு தினேஷ் என்று யாருமே தெரியவில்லையே”
“சார், போன வாரத்தில் எனக்கு தகவல் கொடுத்தீர்கள். நான் போனில் பேசிய போது கூட உடனே புறப்பட்டு வரச் சொன்னீர்கள்… நான் மாடலிங் செய்வதற்காக வரவழைக்கப் பட்டவன்… டைகர் ஜீன்ஸ் விளம்பரத்தில் வந்த என் மாடலிங் மிகவும் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள்”
“ஓ… சாரி.. மும்பையிலே யாரையாவது தெரியுமா?”
“தூரத்துச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் சார். நான் யாருடைய அட்ரஸும் எடுத்து வரவில்லை”
“ஓ.கே. இப்போது எங்கிருந்து பேசுகிறாய்?’
“சத்ரபதி சிவாஜி டெர்மினஸிக்கு முன்னால் கேபிடல் சினிமா தியேட்டர் இருக்கிறது. அதன் அருகில் உள்ள எஸ்.டி.டி. டெலிபோன் பூத்திலிருந்து பேசுகிறேன்”
“வெரிகுட். பக்கத்திலிருக்கிற காமத் ஹோட்டலில் போய் முதலில் சாப்பிடு. மிகவும் பசியோடு இருப்பாய். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு டாக்ஸியில் ஏறி புவனேஸ்வர் முக்தா பிலிம்ஸ் என்று சொல். அலுவலகத்தில் கொண்டு விட்டு விடுவான்.”
“நான் டாக்ஸியில் வரப் பயப்படுகிறேன்”
“இது கும்பகோணமோ, கும்பிடிப்பூண்டியோ, சென்னையோ அல்ல. மிஸ்டர் தினேஷ். இங்குள்ள டாக்ஸி டிரைவர்கள் மிகவும் நல்லவர்கள். உங்களிடம் பத்து காசு கூட அதிகமாக வாங்க மாட்டார்கள். விலாசம் தெரியாவிட்டால் கூட பத்திரமாக விசாரித்துக் கொண்டு சேர்த்து விடுவார்கள். நான் அலுவலகத்துக்குப் போன் பண்ணி இங்கே பக்கத்தில் ஒரு லாட்ஜிலே உனக்கு ரூம் புக் பண்ணச் சொல்கிறேன். எங்கள் அலுவலக பியூன் அங்கேதான் படுத்திருப்பான்.”
“ஓ.கே. சார்”
மறுநாள் குளித்து விட்டு கிளம்பி அலுவலகத்திற்கு வந்த போது எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
பியூன் பேசிய இந்தி அவனுக்கு கொஞ்டம் கூட புரியவில்லை. அவன் தந்த சாயாவைக் குடித்து விட்டு அந்தப் பக்கமாகா காமிராவைத் தோளில் சுமந்து நின்று கொண்டிருந்த காமிரா மேனிடம் ஆங்கிலத்தில் “எப்போது ராஜன் லால் வருவார்?” என்று கேட்ட போது “கியா மாலும். தும் ரிஷப்ஷனிஸ்டுக்கு பூஜ்ஜோ” (எனக்குத் தெரியாது. வரவேற்பாளினியிடம் கேள்) என்று சொல்லி விட்டுப் போனான்.
தயக்கமாக ரிஷப்ஷனிஷ்டம் வந்த போது “ஹாய் மதராசி ஹாண்ட்ஸம் கம், யூ. ஆர். தினேஷ் நோ. ? வெயிட் இப்போது பாய் வந்து விடுவார்” என்று அவன் கன்னத்தில் தட்டிய கை விரல்களை முத்தமிட்டுக் கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் வந்த ராஜன் லால் “ஹலோ தினேஷ். எப்படியிருக்கிறீர்கள்?’’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
“ஓ.கே. சார்.” என்று தினேஷ் சொன்னதும் வெளியேயிருந்து உள்ளே ஒரு பெரிய மனிதரும் ஒரு தேவதையும் நுழைந்தனர்.
“அய் நாம் இருப்பது பூலோகமா. நான் சொர்க்கத்துக்கு வந்துவிடவில்லையே. என்ன ஆச்சரியம் சுரேஷ்தேவ் எப்படி இங்கே உயிரோடு வந்தான்.” என்று கண்கள் அகலமாக விரிய ஆச்சரியத்துடன் இந்தியில் வாசனை கலந்து கேட்டது சுத்தமாக தினேஷுக்கு புரியவில்லை.
“ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி விட்டுத் தானே இவனுடைய போட்டோவை காட்டி விட்டு இவன் எப்படியிருப்பான் என்று இவன் நடித்த விளம்பரபடம் எல்லாம் உங்களுக்குக் காட்டி விட்டுத் தானே இங்கே அழைத்தேன். இதிலே ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது ஷில்பா” என்றார் ராஜன் லால்.
அவனுக்கு அவர் பேசியதில் ஷில்பா அவள் பெயர் என்பது மட்டும் புரிந்தது.
“இவனுக்கு விஷயம் தெரியுமா?” என்றார் ஷில்பாவோடு வந்த மதன்லால்.
“இவனுக்கு இந்தியே தெரியாது கவலைப்படாதே” என்றார் ராஜன் லால்.
“அழகான முட்டையிடும் வாத்து” என்று அவனை வளைத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஷில்பா நடக்க, ”மயக்கமா கலக்கமா” நிலையில் கன்னத்தைக் கூட துடைக்க மறந்து நின்று கொண்டிருந்தான், இதுவரை பெண் ஸ்பரிசமே அறியாத தினேஷ்.
“டேக் இட் ஈஸி மைடியர்” என்று மதன்லாலுடன் கிளம்பினார் ராஜன்லால்.
“சார் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” என்று தினேஷ் ஆங்கிலத்தில் கேட்க மதன்லால், ராஜன்லாலை நோக்கி கண்களால் கேள்வி கேட்டார்.
“ம்… மிஸ்டர் தினேஷ். இன்றைக்கு உங்களோடு நடிக்கிற பெண் மாதுரிக்கு உடம்பு சரியில்லையாம். நீங்கள் மும்பையை சுற்றிப் பாருங்கள். நாளைக்கு ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம். ஓ.கே.”
“தேங்க்யூ சார்.” என்று சொல்லி விட்டு தன் லாட்ஜை நோக்கி நடந்தான் தினேஷ்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings