in ,

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்         

வாசலில் வந்து நின்ற அந்த பென்ஸ் காரை வியப்புடன் பார்த்தபடி நின்றனர் விஜயாவும், அவள் மகன் துஷ்யந்த்தும்.

“நம் வீட்டிற்கே இந்த கார் பொருந்தாது, ஏன், நாம் இருக்கும் இந்த சந்திற்கே பொருந்தாது. இவ்வளவு பெரிய கார்  எப்படித் தான் இந்த சந்தில்  நுழைந்து வந்ததோ?” என்று அம்மாவிற்கும், பிள்ளைக்கும் ஒரே ஆச்சரியம். 

அதிலிருந்து இறங்கிய பெண்ணைப் பார்த்து விஜயாவிற்கு இன்னும் ஆச்சர்யம். பட்டுப்புடவையும், வைரத்தோடும், வைர அட்டிகையுமாக எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு வயதான ஒரு பாட்டி, சாட்சாத் அவளுடைய மாமியாரே தான்.

“துஷ்யந்த் உன் பாட்டிடா” என்று ஆச்சர்யத்துடன் கூவினாள்.

“ஓ… இவங்க தான் அந்த சந்திரமுகியா” என்றான் அவனும் ஆச்சர்யத்துடன்.                 

“உஷ்! என்ன இருந்தாலும் பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசக் கூடாது“ என்றவள், வெளியில் ஓடிப்போய், ”வாங்கம்மா“ என்று அழைத்தாள்.

காரிலிருந்து இறங்கிய சகுந்தலா ,மருமகளைப் பார்த்து ஒரு புன்னகை செய்தார். 

“நன்றாக இருக்கிறாயா விஜயா?“ என்று நலம் விசாரித்தாள்.

பதிலை எதிர்பார்க்காமல் துஷ்யந்தை உறுத்துப் பார்த்தாள். “இது யார்? துஷ்யந்தா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள். பிறந்ததிலிருந்து அவனை இதுவரை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை.

“ஆமாம் பாட்டி, நான் துஷ்யந்த் தான். என்னை இதுவரைப் பார்க்கா விட்டாலும் பேரை மட்டும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களே” என்றான் கிண்டலாக.

“அப்படியே ராகவ் மாதிரியே இருக்கிறாய். அந்த உயரம் ,நிறம் எல்லாம் அப்படியே என் மகன் ராகவனின் ஜெராக்ஸ் காப்பி மாதிரியே இருக்கிறாய்“ என்று கூறி விட்டுக் கண்கலங்கினாள்.

“அப்பா மாதிரி தானே பாட்டி பிள்ளை இருப்பேன், இதிலென்ன ஆச்சர்யம்?” என்றான் துஷ்யந்த்.

இதற்குள் சமையலறையிலிருந்து ஒரு பீங்கான் சாசரில் கொஞ்சம் பிஸ்கட்டும், ஒரு கப்பில் ஆவி பறக்க டீயும் எடுத்து வந்து தயங்கியபடியே அவள் எதரில் வைத்தாள் விஜயா. “எடுத்துக் கொள்ளுங்கள் அம்மா“ என்று உபசரித்தாள்.

பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு, “காலேஜில் படிக்கிறாயா துஷ்யந்த்?” என்று பேரனை விசாரித்தாள்.

“இல்லை பாட்டி. நான் ஒரு அரசுக் கல்லூரியில் அஸிஸ்டென்ட் புரபசராக வேலை செய்கிறேன்“ என்றான்.

உட்காரந்தபடியே கண்களால் வீட்டை அளவிட்டாள் சகுந்தலா. தரையெல்லாம் நன்றாக இருந்தது. மேலே கூரை தான் மங்களூர் ஓடு போட்டு, வெப்பம் அதிகமாக உள்ளே வருவதைத் தடுக்க அதன் மேல் மஞ்சு என்னும் வைக்கோல் போன்ற ஒன்றை பரப்பி விட்டிருந்தனர். ஆனால் வீட்டிற்குள் சோபா, டைனிங் டேபிள் என்று வசதியாகத்தான் இருந்தது.

“டீ குடியுங்கள் அம்மா“ என்றாள் மீண்டும் விஜயா.

சகுந்தலா டீயை மெதுவாகக் குடித்தபடி, அவள் கையில் இருந்த ஒரு பெட்டியை, விஜயாவிடம் கொடுத்தாள். விஜயா அந்தப் பெட்டியை வாங்கிக் கொள்ளவில்லை.

“இது என்ன அம்மா?“ என்றாள் விஜயா.

“நீ என் மகனை என்னிடமிருந்து பிரித்து விட்டாய். என் பங்காளிகள், இந்த சொத்துக்களை எடுத்துக் கொண்டு என் உயிரை எடுக்கப் பார்க்கிறார்கள். அதனால் என் மொத்த சொத்துக்களையும் ஒரு வக்கீலின் உதவியுடன் யாருக்கு உரிமையோ அவர் பெயருக்கு மாற்றி ரெஜிஸ்டரும் பண்ணி விட்டேன். அதற்குரிய டாக்குமெண்ட் தான் இது” என்று முடித்தாள் சகுந்தலா.

“அம்மா, தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். இது எங்களுக்கு வேண்டாம். நான் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் என்பதற்காக என் கணவரையும், என்னையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டீர்கள். என்னால் அவரையும் வெறுத்து விட்டீர்கள். குழந்தையின் முகத்தையும் பார்க்க மறுத்து விட்டீர்கள். பணத்திற்காக என் கணவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சௌகரியங்களையும் மறுத்தீர்கள். அவர் வறுமையில் வாடி, அவருடைய பரம்பரை செல்வத்தையே அனுபவிக்க முடியாமல் இறந்து விட்டார்.

அவர் வாழ்ந்து சந்தோஷமாக அனுபவிக்க வேண்டிய இந்த சௌகரியங்களை அனுபவிக்காமல், ஒரு ஆக்ஸிடென்டில் இறந்து விட்டார். அவர் அனுபவிக்காத எந்த சொத்துக்களும் எங்களுக்கு வேண்டாம்“ என்றாள் கண்களில் கண்ணீர் பெருக.

சகுந்தலா பேரனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“பாட்டி! அம்மா சொல்வது தான் எனக்கு வேதவாக்கு. உங்களைப் பிரிந்து இருக்க முடியாமல் அப்பா பட்ட துன்பத்தையும், இரவில் அவர் அழுவதையும் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு உங்கள் மேல் பலத்த கோபம் வரும். இப்போது உங்கள் மகனே இல்லை. இந்த பணத்தினால் உங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த பணத்தால் என் அப்பா அவருடைய அம்மாவை இழந்தார். இதெல்லாம் என் தந்தை வழியாகத்தான் எனக்கு வர வேண்டும். ஆனால் என் அப்பாவே பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அதனால் எனக்கு எதுவும் வேண்டாம் பாட்டி” என்றான் துஷ்யந்த்.

“துஷ்யந்த், வெளியில் நிற்கும் உன் பழைய டூ வீலர் பார்த்தேன். அதைத் தூக்கிப் போட்டு விட்டு ஒரு கார் வாங்கிக் கொள் கண்ணா. இந்த ஊர் டிராபிக்கிற்கு டூ வீலர் வேண்டாம். இந்த வீட்டின் மேல் கூறையை கான்கிரீட் தளமாக்கி மாடியிலும் இரண்டு ரூம்கள் கட்டலாம் இல்லையா?” என்றாள் சகுந்தலா.

“பாட்டி,  என் பெற்றோர், என்னை நன்றாகப் படிக்க வைத்து ஒரு அரசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஆக்கியிருக்கிறார்கள். இதில் எனக்கு நல்ல சம்பளமும் கிடைக்கின்றது. கோடியில் வருமானம் இல்லை. ஆடம்பரமாக செலவு செய்யமுடியாது. ஆனால் அவசியத்திற்கு தாராளமாக செலவு செய்ய முடியும். படுத்தால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. அதனால் எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் பாட்டி” என்றான் சமாதானமாக.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நம் வீட்டின் ஒரே வாரிசு, ஒரே பேரன் நீ தான். அதனால் இந்தப் பத்திரங்களைப் பெற்றுக் கொள். தானாகத் தேடிவரும் ஶ்ரீதேவியை நீ வேண்டாமென்று சொல்லக் கூடாது, உனக்கு சேர வேண்டியதை யாரோ கொள்ளையடித்துப் போவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது“ என்றாள்  சகுந்தலா விடாப் பிடியாக.

அதுவரையில் பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்த துஷ்யந்த் சட்டென உணர்ச்சி வசப்பட்டான்.

“பாட்டி, இந்தப் பணம் இதுவரை உங்களுக்கு என்ன செய்திருக்கிறது? அது உங்களைப் பாதுகாக்கவில்லை. நீங்கள் தான் அதை ‘செக்யூரிட்டி கார்டாக ‘பாதுகாத்து வருகிறீர்கள். யோசித்துப் பாருங்கள் பாட்டி, உங்கள் ஒரே மகனை உங்களிடமிருந்து பிரித்து இருக்கிறது. குழந்தையிலிருந்து, உங்கள் மடிமேல் தவழ்ந்து வளர வேண்டிய உங்கள் பேரனை, என் அம்மா அறிமுகப்படுத்தித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படிப் பாடாய் படுத்தும் பணம் எனக்கு வேண்டுமா? உண்மையான சுற்றமும் நட்பும் இருந்தால் தான், இந்தப் பணம் நம்மைக் காக்கும் ஶ்ரீதேவி. நமக்கு உண்மையான உறவினர் இல்லையென்றால் இந்தப் பணமே சர்க்கஸ் துப்பாக்கிதான், அதனால் என் உழைப்பில் கிடைக்கும் வருமானமே போதும் பாட்டி”

“உன் அம்மாவும் அப்பாவும் உன்னை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்கள் துஷ்யந்த். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று நிரூபித்து விட்டாய். நானும் உனக்குப் பாட்டியென்று நிரூபிக்கிறேன். என்னை இங்கு நான்கு நாட்கள் தங்க அனுமதிப்பீர்களா?” என்றார் சகுந்தலா.

“ஐயோ பாட்டி, இது உங்கள் பிள்ளை வீடு, அதனால் உங்கள் வீடு. அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷம் அடைவார் என்று எனக்குத் தெரியும். அதனால் நான்கு நாட்கள் இல்லை, எவ்வளவு நாட்கள் விரும்புகிறீர்களோ அவ்வளவு நாட்கள் தங்கலாம்” என்றான் துஷ்யந்த்.

விஜயா, அவளுடைய மாமியார் விரும்பிக் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்தாள். அடுத்த நாள் அவர்கள் குடும்ப வக்கீல் சகுந்தலாவைத் தேடி வந்தார். இருவரும் சிறிது நேரம் அவள் தங்கியிருந்த அறையில் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியில் வந்து ஹாலில் அமர்ந்து கொண்டனர்.

“துஷ்யந்த், பாட்டியின் சொத்தை நீங்கள் வேண்டாம் என்று சொல்வதாக பாட்டி கூறுகிறார்கள், காரணமும் சொன்னார்கள். நீங்கள் வேறு ஏதாவது சொல்ல ஆசைப்படுகிறீர்களா? இந்தப் பரம்பரை சொத்தை என்ன செய்வது?” எனக் கேட்டார் வக்கீல்.

“ஒரு நம்பகமான டிரஸ்ட் ஏற்படுத்தி அதன் மூலம் வசதியில்லாத குழந்தைகளைப் படிக்க வையுங்கள். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வதைவிட ஒரு ஏழைக் குழந்தைக்குக் கல்வி அளிப்பது சிறந்தது அல்லவா?” என்றான் துஷ்யந்த்.

வக்கீல் சிரித்தவாறு கைகளைத் தட்டி, ”அம்மாவிற்கேற்ற பிள்ளை, புலி பசித்தாலும்  புல்லைத் தின்னாது என்று நிரூபித்து விட்டாய்”

சகுந்தலா பெருமையில் கண்களை மூடி மேலே ஆகாயத்தை நோக்கித் தன் இரு கைகளையும் கூப்பினாள். விஜயா வாயில் சிரிப்புப் பொங்க, உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் கண்ணீர் மல்க நின்றாள்.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. “Oru nambagamaana ‘Trust’-ai oru chiRantha ‘Advocate’ uthaviyOdu eRpaduththi athan moolamaaga adimatta
    ezhaik kuzhanthaiGaLukku padippu vasathiGaLaich aLippathu migavum chiRanthathu (allathu ‘mElaanathu) vERu ethuvumE illai. Sari thaanE? ChollungO?” — “M.K. Subramanian.” LL.B.

வாய்மை எனப்படுவது யாதெனின்… (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை