தமிழகத்தின் தலைநகரான சிங்காரச் சென்னை. அழகான ஜூலை மாத மாலை நேரம். கதிரவன் மறைந்தாலும் வானில் வர்ண ஜாலங்கள் கருமேகங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. லேசான கடற்காற்று வெப்பத்தைத் தணிக்க முயன்று கொண்டிருந்தது.
சாலைகள் வாகனங்களின் நெரிசலில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தன. விதவிதமான ஹாரன் ஒலிகள் காதைப் பதம்பார்த்தன. வாகன விளக்குகளும் தெருவிளக்குகளும் போட்டி போட்டுக்கொண்டு, படர்ந்து கொண்டிருந்த இருளை விரட்டியடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தன.
சென்னை தீவுத் திடலில் விளக்குகளை ஒளிரவிட்டு மக்களை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது பொருட்காட்சி. வாரத்தின் வேலை நாள் என்பதால் பொருள்காட்சிக்கு வரும் கூட்டம் குறைவுதான். என்றாலும், கல்லூரி மாணவர்களும், இளம் ஜோடிகளுமாக சொற்பமான கூட்டம் ஏற்கனவே வர ஆரம்பித்திருந்தார்கள்.
விதவிதமான ராட்டினங்கள் மக்களை ஏற்றிக்கொண்டு சுற்றுவதற்குத் தயாராகக் காத்திருந்தன. வட்டமாகச் சுற்றிவரும் கப் அண்ட் சாஸர், குதிரை போன்றவைகள் பலவித வண்ணங்களில் கண்ணைப் பறித்தன.
பொருட்காட்சி என்றதும் முதலில் நினைவுக்கு வரும் உணவுப் பண்டம் பெரிய அப்பளங்கள்தான். அப்பளம் சாப்பிடுவதற்காகவே பொருட்காட்சி வருபவர்கள் உண்டு. அதனால் அப்பளக் கடையில் எண்ணெய் காய்ந்து கொண்டிருந்தது. பஜ்ஜி, வடை, சிப்ஸ், பக்கோடா என மக்களைக் கவர்ந்திழுக்கும் பண்டங்கள் எண்ணெய்க் குளியலை முடித்துத் தயாராக இருந்தன.
சோப்பு நுரைகளில் சின்னதும் பெரிதுமாகக் குமிழ்களை ஊதிவிட்டபடி சிறுவர்களைக் கவர்ந்திழுக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர் ஒன்றிரண்டு பேர். பலவித வடிவங்களில் காற்றைக் குடித்து கும்மென்று காத்திருந்த வண்ண வண்ண பலூன்களை ஒரு கழியில் கட்டி, அதைத் தோளோடு சாய்த்தபடி குழந்தைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஒருவர்.
பலவிதப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் ஒருபக்கம் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன.
இந்தப் பொருட்காட்சித் திடலுக்குள், பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் நண்பர்கள் நான்கு பேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் நுழைந்தார்கள். நான்கு பேரும் சத்தமாகப் பேசி, சிரித்து, கேலி செய்து என மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
“டேய் சந்தோஷ், ஏண்டா இப்படி விபரீத ஆசை? உலகத்துலயே பொருட்காட்சில பிறந்தநாளைக் கொண்டாட ஆசைப்பட்டவன் நீயாத்தான் இருப்பே.”
“அதானே எனக்கு வேணும். டேய் ப்ரேம், எதுலயும் வித்தியாசமா இருக்கணும் டா. எனக்கு அதுதான் பிடிக்கும். இப்போ நீ சொன்ன பார்த்தியா, அதேமாதிரி என் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு பத்து பேராவது ஆச்சரியமா பார்க்கணும். வழக்கமா நாம கொண்டாடற மாதிரி ஏதாவது ஹோட்டல்ல கேக் வெட்டிக் கொண்டாடினா, என் ஃப்ரெண்ட்ஸ் உங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியவராது. அதான் இந்த வித்தியாசமான யோசனை.”
“கரெக்ட் டா சந்தோஷ், நானும் இப்படித் தான் யோசிப்பேன். டேய் ப்ரேம், வழக்கமா எல்லாரும் கொண்டாடற மாதிரி நாமளும் கொண்டாடினா த்ரில்லே இருக்காது டா.”
“டேய் மனோ, பொறந்த நாள் கொண்டாடறதுல த்ரில் எதுக்குடா? சந்தோஷமா கொண்டாடணுமே தவிர த்ரில்லா கொண்டாடக் கூடாது. இந்த மாதிரி செய்யும் போது ஏதாவது சிக்கல்ல தான் போய் முடியும். இப்படி விபரீதமா யோசிச்சு சிரமப்படற நிறைய பேரைப் பார்த்தாச்சு.”
“ஏய் ஆதி, இந்த ப்ரேமைக் கொஞ்சம் சமாளி டா. மறுபடியும் தத்துவம் பேச ஆரம்பிக்கறான். நீ மொபைல்லயே இருக்காதே.”
“டேய் ப்ரேம், பொறந்த நாள் சந்தோஷூக்குத் தானே? அவன் விருப்பப்படி கொண்டாடட்டுமே. நீயும் அதுக்குத்தானே வந்திருக்கே? அப்புறம் ஏன்டா மூடைக் கெடுக்கறே? பேசாம வாடா.”
“ஆமா மச்சி, ப்ரேம் இதுக்கு மேல ஏதாவது பேசினா அவன் பிறந்த நாளைக் கூவத்துல கொண்டாட ஏற்பாடு பண்ணிடுவோம் டா.”
“டேய், நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு மூணு பேரும் இந்த வாங்கு வாங்குறீங்க? பொருள்காட்சில பிறந்தநாள் கொண்டாடறயேடான்னு கேட்டேன், இது தப்பா?”
“சரி மச்சான், விடு விடு. ஏய் மச்சி, கேக் எங்கே கட் பண்றது?”
“ஏன்டா மனோ, பொறந்த ள்னாநாலகேக்தான் கட் பண்ணணுமா? நாமதான் வித்தியாசமா பண்ணப் போறோமே. என் ஆசையை சொல்லட்டுமா? அந்த ராட்டினம் இருக்கில்ல, அதுல நாம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சீட் உட்கார்ந்துக்கணும். அது சுத்தி மேல போய் கொஞ்சம் நிக்கும் இல்ல, அப்போ கொண்டாடறோம்.”
“டேய் சந்தோஷ், ராட்டினம் நிக்காம சுத்திச்சுனா மொத்த ப்ளானும் வேஸ்ட் டா.”
“அதெப்படி, நாம சொல்லி நிக்காம சுத்திருமா? பார்த்துருவோம்.”
நான்கு பேரும் பெரிய ராட்டினம் அருகில் வந்து, அதற்கான டிக்கெட் வாங்கிக் கொண்டார்கள். ராட்டினம் சுற்றும் இடத்திற்கு அருகில் வந்ததும், அதை இயக்கிக் கொண்டிருந்தவரிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.
“ப்ரோ, கூட்டம் கம்மியாதான் இருக்கு. நாங்க நாலு பேர் மட்டும் ஒரு ரவுண்டு போகணும். அதுல மேல ஒரு அஞ்சு நிமிஷம்…. ம்ம்ம்…. அஞ்சு நிமிஷம்கூட வேண்டாம், ஒரு ரெண்டு மூணு நிமிஷம் அப்படியே நிக்க வச்சிருங்க.”
“அந்த மாதிரியெல்லாம் முடியாதுங்க. மத்தவங்களுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிரும். என் வேலைக்கே வேட்டு வைக்கறீங்க. முதல்ல உங்க நாலு பேருக்காக மட்டும் நான் ராட்டினத்தை இயக்க முடியாது. கொஞ்சம் பேராவது வரணும். நீங்க சொல்ற மாதிரி கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்க மத்தவங்க ஒத்துக்கணும். அதெல்லாம் சரி வராது ப்ரோ.”
“ஒரு பிரச்சனையும் ஆகாது. இந்தாங்க ப்ரோ,” என்று ஆதி அந்தப் பையன் கையில் நூறு ரூபாயைத் திணித்தான். அக்கம்பக்கம் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நூறு ரூபாயை சட்டைப் பையில் திணித்துக் கொண்டான் அந்த இளைஞன்.
உற்சாகமாக விசில் அடித்தவாறே நான்கு பேரும் ஏறிக் கொள்ள, ராட்டினம் சுற்றத் துவங்கியது. மனோ தன் சட்டைப் பையிலிருந்த சாக்லேட்டை எடுத்துக் காட்டினான்.
ராட்டினம் வேகம்பிடிக்கும் முன் மெதுவாகச் சுற்றி நான்கு பேரும் மேலே வந்தபோது, வேகம் குறைந்து அப்படியே அந்தரத்தில் நின்றது. ஆர்வம் அதிகமாகி நான்கு பேரும் உற்சாகக் கூக்குரலிட்டனர். பருவ வயதிற்கே உரிய துள்ளல், எதையோ சாதித்த கர்வம், தங்களால் முடியாதது எதுவுமில்லை என்ற இறுமாப்பு எல்லாம் அவர்களின் குரலில் இழையோடியது.
நான்கு பேரும் அந்த ராட்டின இருக்கையில் உட்காரந்தபடியே சுற்றிலும் பார்த்தார்கள். பொருட்காட்சித் திடலில் கூடியிருந்த சொற்ப கூட்டம், ராட்டினத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.
சுற்ற ஆரம்பித்த ராட்டினம், திடீரென நின்றதும், அதில் அந்தரத்தில் நான்கு இருக்கைகளில் இருப்பவர்கள் கத்துவதும் வந்திருந்த கூட்டத்தின் கவனத்தை இழுத்தது. இதைத்தானே சந்தோஷ் எதிர்பார்த்தான். உலகத்தையே வென்றுவிட்ட பேரானந்தம் அவன் முகத்தில் படர்ந்தது.
மனோ தன் கையிலிருந்த சாக்லேட்டைப் பிரிக்க, மற்ற இருவரும் அடுத்தடுத்த இருக்கைகளிலிருந்து கோரஸாகப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடினார்கள்.
பூரிப்பின் உச்சத்திலிருந்தான் சந்தோஷ்.
“சந்தோஷ், இங்கேயிருந்து சாக்லேட்டைப் போடறேன், பிடிச்சுக்கறியா?”
தலையாட்டியபடியே கையை நீட்டிய சந்தோஷ், திடீரென அசௌகரியமாக உணர்ந்தான். யாரோ அவன் அருகில் உட்கார்ந்து நெருக்குவது போல் ஒரு உணர்வு. தன் அருகில் கலவரத்தோடு பார்த்தான், யாருமில்லை.
“சந்நோஷ், ஹாப்பி பர்த்டே,” நண்பர்கள் மூவரும் கூவிக் கொண்டிருந்ததைக்கூட கவனிக்கவில்லை அவன். கண்களில் கலவரம் அதிகமானது. அவனை யாரோ அழுத்தினார்கள். எழுந்து கொள்ளக்கூட முடியாத அளவிற்கு ஒரு அழுத்தம். நெடுநெடுவென உயரமான யாரோ ஒருவர் அந்த இருக்கையில் அவனருகே உட்கார்ந்து அவனை நெருக்கினார்கள். அதற்குமேல் நகர்ந்தால் கீழே விழுந்துவிடுவான். திணறினான் சந்தோஷ்.
“ஒரு கொலை செய்யட்டுமா?” என அவன் காதருகே ஒரு அமானுஷ்ய குரல். சப்த நாடியும் ஒடுங்கிப் போனது சந்தோஷிற்கு.
(திக் திக் தொடரும்…)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings