in ,

பாஞ்சாலிக்கு புதுப்புடவை…🌹(சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஆயிரம் அரசு அலுவலர்கள் குடியிருக்கும் குவாட்டர்ஸ் பகுதி அது. வடக்கு-தெற்கு அவென்யூ என்றும் கிழக்கு – மேற்கு தெரு என்றும் வகைப்படுத்தி வைத்திருந்தனர். ஒவ்வொரு அவென்யூ மற்றும் தெருவில் சுமார் 100 வீடுகள் . ஓர் அடுக்கில் மூன்று மூன்று என்று எதிர் எதிர் வீடுகள் கொண்ட அடுக்கு மாடிகள் .

ஐந்து தெருவுக்கு ஒருவர் வீதம் குப்பைகளை எடுத்துச் செல்ல வருபவர் குப்பைக்கார அம்மா …அப்படித்தான் கூப்பிடுகிறார்கள் .

நான் இருக்கும் தெருவிற்கு வருகிறவர் ‘பாஞ்சாலி’ அம்மா. அந்தத் தெருவில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு அவர் பெயர் எத்தனப் பேர்க்கு தெரியும் என்று எனக்குத் தெரியாது.

பாஞ்சாலி அம்மா தெருவில் கையால் தள்ளும் ஒரு வண்டியில் நான்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் பக்கெட் வைத்துக் கொண்டு, வாயில் விசில் ஒன்று வைத்துக் கொண்டு ஊதிய படியே வருவார் . விசில் சத்தம் கேட்டதும் சிலர் அவரச அவசரமாகத் தங்களின் வீட்டுக்கு வெளியே குப்பக் கூடைகளை வைத்துவிட்டு கதவை அடைத்து விடுவர் . அப்புறம் அப்படி இவரின் பெயர் அவர்களுக்குத் தெரியும் .

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போட இருவேறு குப்பைக்கூடைகள் கொடுத்து இருந்தாலும் பெரும்பாலும் ஒரே கூடையில் தான் கொட்டி வைப்பர் அனைத்தும் வழிந்து தொங்கும் .

பாஞ்சாலி அம்மா ஒவ்வொரு மாடியாக ஏறி இறங்கி பொறுமையுடன் அவர் எடுத்து வரும் பக்கெட்டில் கொட்டிக்கொண்டு கிழே இறங்கி தனித்தனியாகப் பிரித்து எடுப்பார் . அவர் ஓர் அடுக்கு மாடி ஏறி இறங்குவதற்குள் சில நேரம் நாய்கள் தள்ளுவண்டியில் இருக்கிற குப்பைகளை இழுத்துக் கிளறிக் கொண்டிருக்கும் . அவ்வப்பொழுது குரங்குகளின் தொல்லைகள் வேறு. தன் பங்குக்குக் காக்கைகள் கரைசல் கொடுக்கும்.

சுமார் 10 மணிக்குத்தான் அவர் விசில் சத்தத்துடன் வருவார் .நகரிய வாசிகள் பலர் விடுமுறை நாட்களில் அந்த நேரம் விழித்திருப்பது அபூர்வம் . அப்படிப்பட்ட வீடுகளில் காலிங் பெல் அழுத்தி அழுத்தி காத்திருந்து குப்பைகளை வாங்கிச் செல்ல வேண்டும் .அப்படி வாங்காமல் போய் விட்டால் அவர் மீது புகார் போய்விடும்.

சில வீடுகளில் காலிங் பெல் அழுத்தி விட்டு ஐந்து நிமிடமாவது காத்திருக்க வேண்டும் .தூக்க கலக்கத்தில் அந்த வீட்டில இருந்து ஒருவர் எழுந்து வந்து கதவைத் திறந்துப் பார்த்துவிட்டு மெதுவாகப் போய்க் குப்பையை எடுத்து வந்து வெளியே வைப்பார் . பாஞ்சாலி அம்மா பொறுத்துதான் வாங்கிப் போகணும் .

நான் விடுமுறை நாள்களில் ஊருக்குப் போகாமல் இருந்தால் பாஞ்சாலி அம்மாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் .

என்னைப் பார்த்தால் அவருக்கு ஒரு சிநேக புன்னகை வரும் .அதற்குக் காரணம் உண்டு . அவர் தெருவில் விசில் ஊதும் சத்தம் கேட்டதும் குப்பைகளை வெளியில் வைத்துவிட்டு கதைவடைத்துவிட மாட்டேன் .

மூன்றடுக்குத் தளத்தில் எனது வீடு நடுவில் இருக்கிறது .அவர் மேல் மாடி வீட்டுக்குச் சென்று குப்பைகளை எடுத்து வரும்வரை காத்திருப்பேன் .என் வீட்டுக்கு வரும் பொழுது நானே மக்கும் மற்றும் மக்காத  குப்பைகளை அதனதன் பக்கெட்களில் போடுவேன் . அவர் முகம் மலரும் ..

கூடவே, “சார் ..நீங்க ஒருத்தர்தான் இப்படித் தனித்தனியா கொடுக்குறீங்க” என்பார் .

அவருக்கு ஒரு புன்னகையைப் பதிலளித்துத் திரும்பிடுவேன் .

ஒரு சில நாட்களில் ஓரிரண்டு வார்த்தைகள் ஏதாவது பேசிவிட்டுப் போவார்

ஒரு நாள், “சார் …எங்க சார் அம்மா இருந்தாங்க …? காணோம்”

“ஊருக்கு போயிட்டாங்க”

“ஏன் சார்…ஒரு பத்து நாள் இருந்து போயிருக்கலாமே ?”

“அப்படித்தான் சொல்லி வந்தாங்க …10 நாள் இங்க இருப்பேன்னு …3 நாள் போச்சி …இந்த வாரம் என்ன ஊருல கொண்டுபோய் விட்டுடுடா அப்படின்னு சொல்லிட்டாங்க”

“ஏன் சார் ..இங்க இருக்கப் புடிக்கலயா ?”

“ஆமா மா …இங்க ஒருத்தரும் கதவும் ஜன்னலும் திறக்கிறது இல்ல …அவுங்க தோட்டத்தில் ஆடு.மாடு ,கோழி ,குருவின்னு சத்தத்துல இருக்கிறவங்க… இங்க மயானத்துல இருக்கிறது போல இருக்காம்”

“அது உண்மைதான் சார் …போனவாட்டி வந்தப்ப ஒரு சீப்பு பஜ்ஜி வாழைக்காய், சோளக்கதிரு 5, எலுமிச்சம் பழம் எல்லாம் கொடுந்தாங்க …ஊருக்குப் போனா கேட்டேன்னு சொல்லுங்க சார்”

“சொல்றேன் …அவுங்களும் கேப்பாங்க …பாஞ்சாலி அம்மா வரங்களா …இல்ல வேற யாராவது வரங்களா என்று”

“சந்தோசம் சார்”

“அப்புறம் பாஞ்சாலி அம்மா… தீபாவளி வருதே …உங்களுக்குப் போனஸ் உண்டா ?”

“எங்க சார் அதெல்லாம் எதுவும் இல்ல சார்”

“இங்க பிளாக்ல உள்ளவங்க எதுவும் கொடுக்க மாட்டாங்களா?”

“அட ஏங்க சார்… இப்படித்தான் ஒரு வருசத்துக்கு முன்னாடி என் உறவுக்கார பொண்ணுதான்… இந்தா இந்தத் தெருவுல மொத வீட்டுல இருக்கிற பெரிய ஆபீசர் ஐயா வூட்டுல ‘தீபாவளி வருது ஒரு 100 ,50 போனஸ் கொடுங்க’ அப்படின்னு கேட்டுச்சு…அவுரு …ஒரு வீட்டுக்கு 100ன்னா ….இந்தத் தெருவுல 100 வீடு இருக்கு ..அப்படின்னா 10,000/- சேருமே …அப்படின்னு கணக்கு போட்டு …கான்ட்ராக்ட்டர்கிட்ட கம்பளைண்ட் பண்ணிட்டார் …அந்த பொண்ண வேலையில இருந்து நிறுத்திட்டாங்க சார் ..பாவம் இப்போ கார்மெண்ட் கம்பெனிக்கு போகுது.”

“அடக்கொடுமையே …கொடுக்க விருப்பமில்லைன்னா கம்முன்னு இருந்திருக்கலாமே…ஏன் இப்படிப் பண்ணினார்”

“ஆனா பாருங்க சார்…பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க அவர்தான் ரேஷன் கடையில முன்னாடி மொத ஆளா நிப்பாரு”

“ம்ம் ..என்ன பண்றது”

“அந்த நாலாவது பிளாக்ல இருக்கிற அம்மா மட்டும் பண்டிக ஏதாவது வந்து போன பின்னாடி கேரிபேக்ல பலகாரம் போட்டு கொடுப்பாங்க …சரிங்க சார் நான் கிளம்புறேன்…அதோ பாருங்க குரங்குங்க வருது …வண்டியில இருக்கிறதெல்லாம் கொட்டிடும்”

“ஒரு நிமிஷம் இருங்க வரேன். இந்தாங்க ஊருக்கு போகும் போது அம்மா உங்ககிட்ட கொடுக்கச் சொல்லி ஒரு பை கொடுத்தாங்க”

“என்னது சார் ?”

“தெரியல…”

பிரித்துப் பார்த்த பாஞ்சாலி …. “சார் புதுப்பொடவ சார்” என்றார் கண்கள் விரிய

புன்னகையுடன் விடைகொடுத்தேன்

கண்ணீருடன் கீழிறங்கினர்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவசரமான உலகத்திலே! (ஒரு பக்க கதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 17) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை