இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அவளை சைகையால் அருகில் அழைத்தாள் லட்சுமி. அவள் தலையைத் தடவி ஆசீர்வாதம் செய்தாள். கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்டாள்.
கூப்பிய கைகளை பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் கல்பனா. விஜயா, சமையல்காரம்மாவுடன் சேர்ந்து அவளை அருகில் உள்ள சக்கர நாற்காலியில் அமர வைத்தாள்.
“அக்கா, நீங்கள் நர்ஸ் யாரையும் கூட இருந்து கவனிக்க ஏற்பாடு செய்யவில்லையா?” எனக் கல்பனா கேட்க
“பேப்பர் விளம்பரம் மூலம் கொஞ்சம் குறைவான சம்பளத்தில் ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்தோம் கல்பனா. அவள் அம்மா சாப்பிடும் வெள்ளித் தட்டோடு ஓடியவள் தான். அப்பா தான் அதன் பிறகு கோபம் வந்து ‘எந்த நர்ஸும் வேண்டாம், என் மனைவியை நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி விட்டார்” என்றாள் விஜயா.
“அங்கிளால் எப்படி முடியும் அக்கா? சார், உங்களைப் பார்த்தாலே ஏதோ ‘சிக்’ ஆனவர் மாதிரி இருக்கிறீர்கள். முதலில் ‘ப்ரஷ்-அப்’ செய்து விட்டு, வழக்கம் போல் டிப்டாப்பாக டிரஸ் செய்து கொண்டு அன்ட்டியின் அருகில் உட்காருங்கள்” எனக் கல்பனா கூறவும், என்ன நினைத்தாரோ வக்கீல் சந்துரு அவள் சொன்னத்தைச் செய்ய பாத்ரூமிற்குள் நுழைந்தார்.
லட்சுமியின் படுக்கையில், அவள் அருகில் உட்கார்ந்து கொண்டு, அவள் கைகளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டாள் கல்பனா.
“அக்கா, அம்மாவை கீழே உள்ள பெட்ரூமிற்கு, தோட்டத்தைப் பார்த்தாற் போல் உள்ள அறையில் மாற்றி விடலாமா? வீடு முழுவதும் ராணி மாதிரி சுற்றிக் கொண்டிருந்தவர்களை, இப்படித் தனிமையிலே ஒரு அறையில் ஒரு மூலையில், யார் முகத்தையும் பார்க்காமல் அடைத்து வைத்தால், யாராக இருந்தாலும் பைத்தியம் பிடித்தாற் போல் இருக்கும். நாலுபேர் நடமாடும் இடமாக இருந்தால் மற்றவர்கள் பேசும் போது பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றுமல்லவா?” எனக் கல்பனா கூற, உடனே அதை செயல்படுத்த சம்மதித்தாள் விஜயா.
கீழே உள்ள ஒரு விஜயாவின் படுக்கை அறையை லட்சுமியின் பெட்ரூமாக மாற்றினாள். கட்டிலில் படுத்துக் கொண்டே பார்த்தால் கூட, செடியில் ரோஜாப் பூக்கள் ஆடும். தோட்டத்தில் இருந்து பகல் நேரத்தில் ஜன்னல் வழியாக ஆக்ஸிஜன் உள்ளே வரும். ஜன்னல்களில் நெட்லான் போட்டிருப்பதால் எந்த பூச்சியும் உள்ளே வர முடியாது.
மேலும், அங்கிருந்து பார்த்தால் சமையல் அறையும் நன்றாகத் தெரியும். இதெல்லாம் லட்சுமிக்கு பேசவும், யோசனை செய்யவும் ஒரு தூண்டு கோலாக அமையும் என்று நினைத்தாள் கல்பனா.
தரை தளத்தில் இருந்த படுக்கை அறைக்கு மாற்றிய பிறகு, தினம் மாலையில் டீ குடித்த பிறகு, லட்சுமியை வீல் சேரில் வைத்து தினமும் தோட்டத்தில் ஒரு அரை மணி நேரம் சுற்றி வந்தாள் கல்பனா.
இந்த மாற்றங்களுக்கும் பிறகு லட்சுமியின் முகத்தில் முகத்தில் புதிய மலர்ச்சி தெரிந்தது. வக்கீல் சந்துருவின் அனுமதியோடு, தன் தங்கை காஞ்சனாவிற்கு தெரிந்த ஒரு முழு நேர நர்ஸை ஏற்பாடு செய்தாள் கல்பனா. அந்த நர்ஸைப் பார்த்தவுடனே விஜயாவிற்கும், அவள் அப்பாவிற்கும் மிகவும் பிடித்து விட்டது.
கல்பனாவின் விடுமுறை முடிய இன்னும் நான்கு நாட்களே இருந்தன. அவர்கள் வீட்டு சமையலிலும் நிறைய மாறுதல்கள் செய்தாள். லட்சுமி மிகவும் பலஹீனமாக இருப்பதால் தினம் காலை பதினோரு மணிக்கு ஏதாவது ஒரு சூப் கொடுக்க ஏற்பாடு செய்தாள். லட்சுமிக்கு மட்டுமல்லாமல் வக்கீல் சந்துருவிற்கும், விஜயாவிற்கும் கூட சத்தான ஆகாரம் வேண்டும் என்று வற்புறுத்தினாள் கல்பனா.
ஒரு நாள் சந்துரு தோட்டத்தில் தன் மனைவியின் வீல் சேரைத் தள்ளியபடியே செல்லும் கல்பனாவிடம் பேச்சுக் கொடுத்து ஆழம் பார்த்தார். வக்கீல் அல்லவா, அவர் தொழில் புத்தி அப்படி.
“நீ ஏனம்மா எங்களுக்காக இவ்வளவு சிரம்ப் பட வேண்டும்?” என்று மறைமுகமாகக் கேட்டார்.
அவரை நேருக்கு நேர் உறுத்துப் பார்த்த கல்பனா லேசாகச் சிரித்தாள். பின்னர், “அங்கிள் இதில் எந்த சுயநலமும் இல்லை. நீங்கள் பயப்படாதீர்கள், கௌதமைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் மனதில் இடம் பிடிக்க நான் இப்படியெல்லாம் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். என் படிப்பைத் தொடர அப்போது பண வசதியில்லாத சூழலில், விஜயா அக்காவிடம் வேலைக்கு ஏற்பாடு செய்தாள் என் உயிர்த்தோழி சத்யா. விஜயா அக்காவிடம் வேலை செய்யும் போது நான் கற்றுக் கொண்டது ஏராளம். அந்த அனுபவங்கள எல்லாம் ஐ.ஏ.எஸ். எழுத உதவின. அந்தக் காலத்தில் சத்யாவின் அம்மா என்னிடம் காட்டிய அன்பை மறக்க முடியாது” என்றவள் கண்களில் லேசாக கண்ணீர் திரையிட்டது.
சந்துரு இவள் இப்படி நேருக்கு நேர் பேசுவாள் என்று நினைக்கவில்லை. “ஐயாம் சாரி கல்பனா” என்றவர், “நீ மிகவும் சுயமரியாதை பார்ப்பவள் என்று தெரிந்தும் நான் உன்னிடம் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது” என்றார் தயக்கத்துடன்.
அப்போது லட்சுமி மெதுவாகக் கல்பனாவின் கையைப் பிடித்தாள். கல்பனா ஆச்சர்யப்பட்டு “அங்கிள்” என்று கூவினாள். சந்துரு ‘ஏன் இவள் திடீரென்று கத்துகிறாள்’ என்று கல்பனாவை திகைப்புடன் பார்த்தார்.
“அங்கிள், ஆன்ட்டி என் கையைப் பிடிக்கிறார்” என்றாள்.
“ஒரு கை தான் வேலை செய்கிறதே, ஏதாவது வேண்டுமென்று கேட்பதற்கு அழுத்தியிருப்பாள்” என்றார் சந்துரு விட்டேத்தியாக.
“அங்கிள், ஆன்ட்டியின் இடது கைதான் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே பாருங்கள், வலது கையால் என் கையைப் பிடித்திருக்கிறார்கள்” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“டாக்டருக்கு உடனே போன் செய்து வரச் சொல்லலாம் அங்கிள்” என்றவள் அவளே டாக்டருக்கும் போன் செய்து விவரம் தெரிவித்தாள். ஒரு மணி நேரத்திற்குள் டாக்டரும் வந்தார். லட்சுமியை அவள் அறையில் வீல் சேரிலிருந்து படுக்கையில் படுக்க வைத்தார்கள்.
டாக்டர் ஒரு சிறிய மெல்லிய ஊசியைக் கையில் எடுத்துக் கொண்டார். “நான் வலது கையிலும், அவரது வலது கால் பாதத்திலும் இந்த ஊசியால் மெதுவாகக் குத்துவேன். அவர்கள் முகத்தில் ஊசி குத்திய உணர்ச்சி தெரிந்தால் உடனே ‘எஸ்’ என்று மெதுவாகச் சொல்லுங்கள்” என்றார்.
முதலில் கையில் சில இடங்களில் குத்தியபோது எந்த உணர்ச்சியும் காட்டாதவள், கையில் மணிக்கட்டில் குத்தியபோது முகத்தைச் சுளித்தாள். அருகில் நின்று கொண்டிருந்த விஜயா “எஸ்” என்றாள்.
டாக்டர் முகம் பளிச்சிட்டது. அதைத் தன் பாக்கெட் டைரியில் குறித்துக் கொண்டார். வலது காலிலும் அவ்வாறே செய்ய, அங்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகத்தைச் சுளிக்கவும் அதையும் குறித்துக் கொண்டார்.
“இது நல்ல அறிகுறி” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவர், “பெரிய டாக்டரிடம் டிஸ்கஸ் செய்து விட்டு ட்ரீட்மென்ட் தொடங்கலாம்” என்று கிளம்பி விட்டார்.
லட்சுமி கல்பனாவை அருகில் உட்காரச் சொன்னாள். தன் கணவனையும் அருகில் அமரச் சொன்ன லட்சுமி, குழறிப் பேசலானாள்.
“நானே வாழ்க்கையில் ஒரு பாடம். என் வீட்டுப் பெரியவர்கள் ஜாதி என்று பார்த்துத்தான் திருமணம் செய்து வைத்தார்கள். நாம் நன்றாகத் தான் வாழ்ந்தோம், ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. விஜயாவின் வாழ்க்கையை ஜாதி என்னும் கொடிய தேவதைக்கு பலியாக்கி விட்டோம். அவள் வாழ்க்கை காய்ந்த மரமாகி விட்டது. அவள் படிப்பு, அழகு, திறமை அவள் வக்கீலாக சம்பாதிக்கும் பணம் எல்லாம் அவளுக்கா பயன்படப் போகிறது?
கௌஷக்கிற்கு ஜாதி அந்தஸ்து எல்லாம் பொருத்தம் பார்த்தோம், ஆனால் மனிதத்தன்மை இருக்கிறதா என்று பார்க்கவில்லை. கீதாவிடமோ, கௌஷிக்கிடமோ மனிதத் தன்மை இருந்தால் நம்மை இப்படித் தவிக்க விட்டுப் போயிருக்க மாட்டார்கள் இல்லையா? இதில் ஜாதி என்ன நன்மை தருகிறது?” என்று புரிந்தும் புரியாமலும் மேல் மூச்சு வாங்கப் பேசினாள்.
“நான் என்ன செய்யட்டும்?” என்று ஏதும் புரியாமல் கேட்டார் சந்துரு.
“ஆறு அதன் வழியிலேயே போகட்டும், இன்னொரு காதல் பலி நம் வீட்டில் வேண்டாம்” என்ற லட்சுமி, அசதியில் கண்களை மூடிக் கொண்டாள்.
அன்று மாலை திடீரென்று கௌதமிடமிருந்து விஜயாவிற்கு போன். அடுத்த நாள் காலை விமானத்தில் அவன் வருவதாகவும், பத்து மணிக்கு ஏர்-போர்ட்டிற்குக் கார் அனுப்பும்படியும் கேட்டிருந்தான். விஜயா உடனே உற்சாகத்துடன் கல்பனாவிற்கு விஷயத்தைத் தெரிவித்தாள்.
கல்பனா யோசனை செய்துவிட்டு, “அக்கா, எனக்கும் இன்னும் இரண்டு நாளில் விடுமுறை முடிகிறது. நானும் போய் ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு டியூட்டியில் சேர வேண்டும். அதனால் நானும் என் டிக்கெட்டை பிரிபோன் செய்துவிட்டு நாளை கிளம்புகின்றேன் அக்கா” என்றாள்.
“ஏன் கல்பனா, கௌதம் இங்கே வரும் போது நீ இங்கே இருக்கக் கூடாதென்று நினைக்கிறாயா?” என விஜயா கேட்க
“அதுவும் ஒரு காரணம் தான் அக்கா, தேவையே இல்லாமல் பேச்சு வார்த்தை வளரும். இப்போதைய சூழ்நிலையில் அதெல்லாம் வேண்டாமே, இல்லையா அக்கா? அதுவுமல்லாமல் நாளை காலை கிளம்பிப் போய் அம்மாவுடனும், தம்பியுடனும் ஒரு நாள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அக்கா” என்றாள் கல்பனா.
“உன் ஆசை நியாயமானது தான். வா அப்பாவிடம் இப்போதே போய் சொல்லிவிடலாம். நாளைக் காலையில் சீக்கிரமாக நீ கிளம்பினால் அப்பா அப்போது தூங்கிக் கொண்டிருப்பார்” என்றவள், கல்பனாவைத் தன் தந்தையிடம் அழைத்துச் சென்று விவரமாகக் கூறினாள்.
கௌதம் அங்கே வருவது அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதனால் அவன் வரும் முன்பே கல்பனா கிளம்புவது நல்லதே என்று சந்துரு நினைத்தார்.
“அம்மாவையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு போவாயா அம்மா?” என சந்துரு கேட்க
“இல்லை அங்கிள், அம்மா இப்போதெல்லாம் என்னை விட பிஸி. நிறைய சமையல் ஆர்டர் எடுத்து செய்கிறார்கள், அதனால் நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இவர்கள் என்னோடு வந்தால் அந்தப் பெண்களுக்கும் தான் கஷ்டம். அதனால் நான் மட்டும் போய் அம்மாவையும், தம்பியையும் பார்த்து விட்டு அங்கிருந்து அப்படியே ஏர்போர்ட் கிளம்புகிறேன்” என்றாள் கல்பனா.
அடுத்த நாள் காலை சந்துருவிடமும் லட்சுமியிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். விஜயா வாசல்வரை சென்று அவளை வழியனுப்பி வைத்தாள்.
அப்போது கல்பனா, “அக்கா நான் ஊருக்குப் போய் வேலையில் சேர்ந்த பிறகு போனில் உங்களிடம் ஒன்று கேட்பேன், நீங்கள் மறைக்காமல் என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும்” என்றாள்.
“நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். நீ ஜாக்கிரதையாக ஊருக்குப் போய் சேர்ந்தவுடன் போன் செய்” என்று கூறி வழியனுப்பி வைத்தாள் விஜயா.
கௌதம் வீம்பாக அவளைத் தேடிப் போகவில்லையே தவிர, அவன் வரும் வரை கல்பனா அம்மாவிடம் தான் இருப்பாள் என்று திடமாக நம்பினான்.
ஆனால் அவன் அங்கே வரும் போது அவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள் என்றதும் மிகவும் கோபம் வந்தது. சிறிது நேரம் பொறுத்தவன், அன்று மாலை வேண்டுமென்றே அவள் வீட்டு லேண்ட் லைனிற்குப் போன் செய்தான்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings