இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏய்! சும்மா ஔறாத. யாருண்ணு நெனச்சி இவள தூக்கினீங்க? இவ அப்பா பேரு மாதேஷ். பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்“ என்றாள் பவித்ரா.
“நல்லா தெரிஞ்சி, ப்ளான் போட்டுத்தான் தூக்கிருக்கோம். நீ யாரு? மொதல்ல அதச் சொல்லு“
“மாதேஷ் என் கம்பெனிலயும் இன்வெஸ்ட் பண்ணிருக்கார்“
“அவ்ளதான உனக்குத் தெரியும்? நான் பத்து வருஷமா அவன் கூடயே இருந்திருக்கேன். எதோ ஒரு தடவ தெரியாம பண்ணுன தப்புக்கு என்ன ஜெயிலுக்கு அனுப்பி எம் பச்ச மண்ணு துடிதுடிச்சி சாவ காரணமாய்ட்டான்“ என்றவன் வெறித்த பார்வையோடு சொல்ல ஆரம்பித்தான்.
ராமும், ராணியும் காதல் திருமணம் புரிந்து கொண்டு ஊரை விட்டு ஓடி வந்ததால் அவர்களுக்கென்று சொந்தங்கள் ஏதுமில்லை. தேவதை போன்ற அவர்களது பத்து வயது மகள் ரம்யா தான் அவர்கள் உலகம். ராணி இந்த பங்களாவில் வீட்டு வேலை பார்த்ததால், இந்த அவுட்-ஹவுஸில் தான் தங்கியிருந்தனர்.
ராணி சிறிது நாட்களாகவே அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். மருத்துவமனைக்கு போகலாம் என்றாலோ, “சும்மா சூடா இருக்கும். இதுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போயிட்டிருப்பாங்களா“ என்று கை வைத்தியம் செய்து கொள்வாள்.
ஒரு நாள் இரவு வலி தாங்கமுடியாமல் துடிக்க ஆரம்பித்தாள். வாந்தியெடுக்கவும் ஆரம்பித்தாள். ராம் பயந்துபோய் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல, குடல்வால் அழற்சி (அப்பென்டிக்ஸ்) ஏற்பட்டு, கவனிக்கப்படாததால் மிகத் தீவிரமாகி விட்டதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்யாவிடில் இரவுக்குள் வெடித்து, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவர் கூறினார்.
எனவே, ராணியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, “பட்டுக்குட்டி, அம்மாவ பத்ரமா பாத்துக்கோங்க. அப்பா மாதேஷ் ஸார்கிட்ட போய் காசு வாங்கிட்டு வந்திட்றேன்“ என்று ரம்யாவிடமும், “தைரியமா இரு ராணி. நான் இப்போ வந்திட்றேன்“ என்று ராணியிடமும் கூறிவிட்டு மாதேஷின் வீட்டிற்குச் சென்றான்.
அழைப்பு மணியை அழுத்தவும், கதவைத் திறந்தவள் சமையலாள் தேவி.
“அய்யாவ நீ பாக்கலையா? இப்பத்தானய்யா வெளியப் போனாரு. அம்மாவும் அவங்க தம்பி கல்யாணத்துக்கு போனவங்க வரல. பாப்பாக்கு நாளைக்கு எதோ முக்கியமான காம்பெட்டிஷன்னு பாப்பாவ மட்டுந்தான் அய்யா கூட்டிட்டு வந்தாரு. இப்போ பாப்பா மட்டுந்தான் மேல இருக்கு. காம்பெட்டிஷனுக்கு தேவையான பொருள் எதோ வாங்கணும்னு அய்யா கடைக்குப் போனாரு. நீ வேணா கொஞ்ச நேரம் இரு. பாப்பா பசிக்குதுன்னுச்சு. நான் சமைக்கப் போறேன்“ என்றவாறே சமையலறைக்குள் புகுந்தாள் தேவி.
தனியாக என்ன செய்வதென்று தெரியாததால், இவனும் அவள் பின்னே போனான். தேவி பொட்டலத்திலிருந்த எண்ணெயை வெட்டி பாட்டிலில் ஊற்றப்போன போது, “ஏந் தேவி ஒம் புருஷன்…“ என்று ராம் ஆரம்பிக்கவும்…
“அந்தாள ஏன்யா ஞாபகப்…“ கவனம் சிதற, இவனைத் திரும்பிப் பார்க்கிறேன் என்று கை பாட்டிலைத் தட்ட… எண்ணெய் கீழே கொட்ட… ஐயோ என அதைப் பிடிக்கப் போக… கையிலிருந்த பொட்டலத்தையும் சேர்த்துக் கீழே விட்டு இவளும் கீழே சரிய… தாங்கிப் பிடிக்கிறேன் என இவன் ஓடி வர… எண்ணெய் வழிந்து ஓட… அதிலே இவனும் காலை வைத்து வழுக்க… அவளைத் தாங்கிப் பிடித்தபடி இவனும் கீழே சரிய… அப்போது அங்கே வந்த ராம் அவளை இவன் பலவந்தப்படுத்துவதாக நினைத்து போலீஸில் பிடித்துக் கொடுக்க…
“ஏய்ய்ய்…. நிறுத்து… உண்மையச் சொல்லு… நேர்ல பார்த்த நான் இங்கதான் இருக்கேன்“ என்று கத்தினாள் ப்ரியா.
ராணி விழிக்க… ராம் குற்ற உணர்வுடன் அவளைப் பார்க்க… “உண்மையச் சொல்லு“ என்றாள் ராணி.
சமையலறைக்குள் புகுந்தாள் தேவி.
தனியாக என்ன செய்வதென்று தெரியாததால், இவனும் அவள் பின்னே போனான். அவள் பின்னழகும், வழவழ இடை வளைவும் இவனுக்குள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியது. எதார்த்தமாக முகநூல் தளத்தை திறந்து பார்த்தவனுக்கு அதில் கண்ட காட்சி போதை ஏற்றியது.
அவன் நிமிர்ந்து பார்க்கும் போது தானா தேவி அலமாரியின் மேலிருந்து எண்ணெய்ப் பொட்டலத்தை எட்டி எடுக்க வேண்டும்? முந்தானை விலகலில் தெரிந்த செழுமை போதையூட்டியது. அவள் பொட்டலத்திலிருந்த எண்ணெயை வெட்டி பாட்டிலில் ஊற்றப்போன போது, “ஏந் தேவி ஒம் புருஷன்…“ என்று ராம் ஆரம்பிக்கவும்…
“அந்தாள ஏன்யா ஞாபகப்…“ கவனம் சிதற, இவனைத் திரும்பிப் பார்க்கிறேன் என்று கை பாட்டிலைத் தட்ட… எண்ணெய் கீழே கொட்ட… ஐயோ என அதைப் பிடிக்கப் போக… கையிலிருந்த பொட்டலத்தையும் சேர்த்துக் கீழே விட்டு இவளும் கீழே சரிய… தாங்கிப் பிடிக்கிறேன் என இவன் ஓடி வர… எண்ணெய் வழிந்து ஓட… அதிலே இவனும் காலை வைத்து வழுக்க… அவளைத் தாங்கிப் பிடித்தபடி இவனும் கீழே சரிய… கனன்று கொண்டிருந்த உணர்வுகள் பற்றிக் கொண்டன. இதுதான் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல…
எற்கெனவே, ராணிக்கு உடல்நிலை சரியில்லாததால் அடக்கி வைத்திருந்த உணர்வுகள்… சமூக வலைத்தளத்தில் பார்த்த காட்சி ஊட்டிய போதை உணர்வுகள்… தேவியின் அங்கங்களைப் பார்த்து சிலிர்க்கத் தொடங்கிய உணர்வுகள்… அந்த அங்கங்களோடு ஒட்டி உரசவும் வெறிபிடிக்கச் செய்தது.
தேவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த ப்ரியா, “அவங்கள விடு“ என்று பிடித்திழுக்க… அவன் பின்னங் கையால் அவளை இழுத்துக் கீழே தள்ள… சமையல் மேடை விளிம்பில் இடித்துக் கொண்டு நெற்றியில் இரத்தம் வந்தது.
ஓடிப் போய் அவள் தந்தையின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்து, விவரம் தெரிவித்தாள். பின்னர் திரும்பவும் ஓடி வந்து, ஆயுதத்தைத் தேடியவள், இஞ்சி, பூண்டு நசுக்க வைத்திருக்கும் சிறிய இரும்பு உலக்கையால் தேவி மீது படர்ந்திருந்த ராமின் பின் மண்டையில் ஓங்கி அடித்தாள்.
தேவியை விட்டு எழுந்த ராம், ப்ரியாவை ஓங்கி அறைய, “அப்பா…“ என அலறியவாறே கீழே விழப் போனவளை, சரியாக எதிரே ஓடி வந்த மாதேஷ் பிடித்துக் கொண்டான்.
“என்ன தைரியம் இருந்தா எம் பொண்ண அடிப்ப?“ என்றவாறே திகைத்து நின்ற ராமின் மூக்கின் மேலேயே ஓங்கி ஒரு குத்து விட்டான்.
உதடுகளில் இரத்தம் வழிய, கலைந்து போய் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த தேவியையும், அடிவாங்கிய தன்னுயிர் செல்ல மகளையும் பார்க்கவும் உச்சக்கட்ட கோபத்தில், “உன்னப் போலீஸ்ல பிடிச்சி குடுக்காம விட மாட்டேன்“ என்றான்.
உடனே மாதேஷின் காலில் விழுந்த ராம், “ஸார்! ஸார்! தெரியாம பண்ணிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க. எம் பொண்டாட்டி ரொம்ப ஆபத்தான நெலைமையில இருக்கா. நான் காசு வாங்கத்தான் உங்ககிட்ட வந்தேன்“
“பொண்டாட்டி ஆபத்தான நெலையில இருக்றப்பதான் ஒனக்கு இன்னொரு பொண்ண ஃபோர்ஸ் பண்ணத் தோணுச்சா?“
“ஸார்! ஸார்! என்னையறியாம, எதோ தெரியாம உணர்ச்சி வசப்பட்டுட்டேன். சத்தியமா இனிமே எப்பவுமே இப்டி பண்ண மாட்டேன். விட்டுடுங்க ஸார்!“
“நான் வர்ற வழியிலயே போலீஸூக்கு கால் பண்ணி சொல்லிட்டுத்தான் வந்தேன். இப்ப வந்துடுவாங்க“
“ஸார் ராத்திரி நேரத்ல எங்கொழந்த வேற ஆஸ்பத்திரில தனியா நின்னுட்டிருக்கு ஸார். தயவுசெஞ்சு விட்டுடுங்க“ என்று காலில் விழுந்தான்.
“எங்கொழந்தய அடிக்கிறதுக்கு முன்னாடி நீ இத யோசிச்சிருக்கணும்“
அவனைத் தள்ளிவிட்டு ராம் ஓட முயலவும், காவலர் உள்ளே நுழையவும் சரியாக இருக்க, ராம் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப் பட்டான்.
“நீ தப்பு பண்ணதால தான ஜெயிலுக்குப் போன? எங்கப்பா என்ன பண்ணாரு?“ என்றாள் ப்ரியா.
“ஏ குட்டிப் பிசாசே! நீ தான ஒங்கப்பனுக்கு ஃபோன் பண்ணி சொன்ன? உங்க ரெண்டு பேரால தான் எம் பட்டுக் குட்டிக்கு அப்டி நடந்துச்சு ஒங்கப்பனுக்கு நீன்னா உசிராச்சே அந்த உசிர இப்ப எடுக்கிறேன்“ என்று ப்ரியாவிடம் பாய்ந்தான் ராம்.
“ஏய்! சீ…! நிறுத்து! பொண்டாட்டியையும் கொழந்தையையும் ஆஸ்பத்திரில விட்டுட்டுப் போன நீ சபலப்பட்டு, ஒரு பொண்ண கெடுக்க ட்ரை பண்ணது தப்பில்ல, போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணது தப்பா? ஒம் பொண்ணுக்கு எதோ நடந்துச்சிங்கற. அதுக்காக இன்னொரு கொழந்தைக்கு அதையே பண்ணுவியா?“ என்றாள் பவித்ரா.
“எங்கொழந்தைக்கு ஏ…தோ… நடந்துச்சா?“ என்று வெறித்தாள் ராணி.
இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings