இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
புகலூர் கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு வாழ்வாதாரத் தொழில் விவசாயம். அந்த ஊரில் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்பவர்களை விரல் காட்டி எண்ணிவிடலாம். மற்றவரெல்லாம் அவர்கள் நிலத்தில் கூலி வேலைக்கு சென்று தன் குடும்பத்தை பார்த்தனர்.
அந்த வகையில், தினமும் தன் அம்மாவுடன் கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன் வாழ்க்கையை ஓட்டினாள் செண்பகம்.
அன்று ஒருநாள் வழக்கம் போல் தன் அம்மாவுடன் கூலி வேலைக்கு செல்லும் போது தூரத்தில் தன் பால்ய சிநேகிதி வருவதை பார்த்ததும், அருகில் இருந்த கோவிலுக்கு பின் ஓடி சென்று மறைந்து கொண்டாள். இது ஒன்றும் அவளுக்கு புதியதல்ல, அவளுக்கு தெரிந்தவர்கள் யார் வந்தாலும் இப்படி ஓடிப்போய் மறைந்து கொள்வாள். அவள் போனதும் தன் அம்மாவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள் செண்பகம்.
“எத்தனை நாள் தான் இப்படி ஓடி ஓடி ஒளியனும், அந்த கடவுள் கூட கண்ணு திறக்கல்லையே” என்று வழக்கம் போல தன் புலம்பலை ஆரம்பித்தாள் செண்பகத்தின் அம்மா பூமாரி.
“என்னடி பூமாரி… காலையிலேயே புலம்பிட்டே வர” என்று எதிரே வந்த அதே ஊரை சேர்ந்த ஒருத்தி கேட்டாள்.
“இதோ நிக்கிறாளே இவள் தான் என் பொண்ணு, வயசு 27 ஆகுது. நானும் போகாத ஊரு இல்ல, பாக்காத மாப்பிளை இல்ல, பொண்ணு பார்க்க வர மாப்பிள்ளை எல்லாம் பணத்தை தான் பார்க்கிறாங்களே தவிர குணத்தை பார்க்கமாட்ராங்க. நாலு எழுத்து படிச்சிருந்தா கூட படிப்பை பார்த்தாவது எவனாவது கல்யாணம் பண்ணிருப்பான், இவள் வயசு பொண்ணுங்கெல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்துட்டாளுங்க. ஆனா இவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. இவளை பாக்குறவங்க எல்லாம், இன்னுமா கல்யாணம் ஆகலனு சொல்லி சொல்லி மனசு நோகடிக்கிறாங்க அதுக்கு பயந்து ஓடி ஓடி ஒளிவதா இருக்கு. எப்போ தான் நல்ல காலம் பொறக்குமோ!” என்று தன் வேதனை எல்லாம் கொட்டி தீர்த்தாள் பூமாரி.
அந்த நேரத்தில் தான் செண்பகத்தின் அப்பா அங்கு வந்தார்.
“பூமாரி… செண்பகத்தை பொண்ணு பார்க்க வந்திருக்காங்க” என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
‘மாரியாத்தா தாயே இந்த சம்பந்தமாவது கை கூடி வரணும்’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் பூமாரி.
பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளைக்கு 30 வயசு இருக்கும், அவன் பெயர் சுரேஷ். பக்கத்து ஊரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்கிறான்.
நெட்டையோ, குட்டையோ எந்த குறை இருந்தாலும் எப்படியாவது இந்த சம்பந்தத்தை முடிக்கணும்னு நினைச்சு கடனை வாங்கி, நகை நட்டு போட்டு, சீர்வரிசை கொடுத்து ஒரு வழியா செண்பகத்துக்கு கல்யாணத்தையும் பண்ணி வச்சிடாங்க பூமாரியும், இவள் வீட்டுக்காரனும்.
திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போனாள் செண்பகம். மகள் போல பார்க்கும் மாமியார் மாமனார், அன்பான கணவன் என இனிமையாக தொடங்கியது இவள் இல்லற வாழ்க்கை. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. சில மாதங்கள் கடந்தது,
அன்று இரவு 9 மணி ஆகியும் வேலைக்கு சென்ற கணவன் வீடு திரும்பாததால் வாசலில் விழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் செண்பகம். நேரம் ஆக ஆக இவள் மனம் பதைத்தது.
மணி 10 ஆனது செண்பகம் வேகமாக தன் மாமியாரிடம் சென்று, “அத்தை இன்னும் அவரு வரல என்னாச்சு ஏதாச்சு ஒண்ணுமே தெரியல, அவருக்கு போன் பண்ணி கேளுங்க”
“வேலை செய்கிற இடத்தில் முன்ன பின்ன நேரம் ஆகும், நீ பயப்படாதே போய் சாப்பிட்டு தூங்கு” என்றாள் இவள் மாமியார்.
இவளுக்கு மனம் பொறுக்கல தன் கணவனை தேடி போகுமாறு, தன் மாமனாரிடம் சொன்னாள். இவள் பேச்சை அவர் கேட்பதாக இல்லை. எனவே, இவளே தன் கணவன் வேலை செய்யும் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
இவள் வீட்டிற்கும் கடைக்கும் இடையே ஒரு கிலோமீட்டர் தூரம். இடையில் மதுபான கடையை கடந்து எப்படி செல்வது என்று பயந்து நடுங்கிக்கொண்டே நடந்தாள். ஐந்து நிமிடம் நடந்தவள், இருட்டில் இனியும் செல்வது சரிவராது என்று நினைத்தவள் மீண்டும் தன் வீட்டை அடைந்தாள்.
வீட்டின் வாசலில் தன் கணவனின் காலணியை பார்த்ததும் வாடிய முகத்தில் சிறு புன்னகை வந்தது, வீட்டிற்குள் நுழைந்தாள் செண்பகம். நாற்காலியில் சாய்ந்தபடி, கையில் வேப்பங்கொம்பை பிடித்தபடி உட்கார்ந்திருந்தான் சுரேஷ்.
அவன் அருகே அவன் அப்பாவும் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தான். வீட்டின் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த சுரேஷின் அம்மா செண்பகத்தைப் பார்த்ததும், “ஐயோ என் குடும்ப மானதை கப்பல் ஏத்திட்டாளே” என்று தலையில் அடித்து கொண்டு அழுதாள்.
“நான் என்ன பண்ணேன் அத்தை” என்று செண்பகம் ஒன்றும் புரியாமல் பதிலளித்தாள்.
‘போதும் உன் நடிப்பை நிறுத்து, இந்த நேரத்தில் எங்க போயிட்டு வர’ என்று கோபத்தில் கத்தினான் சுரேஷ்.
“உங்களை தேடி தான் போனாங்க”
“வெளியே போன ஆம்பளைக்கு வீட்டுக்கு வர தெரியாதா? வரதுக்கு நேரமானா என் அப்பா வரப்போறாரு நீ எதுக்கு வெளிய போன”
“மாமாவிடம் கேட்டு பாருங்க, உங்கள தேடி அவரை போக சொன்னேன், அவரு தான் போகல” என்று கண்களில் கண்ணீர் பெருக சொன்னாள் செண்பகம்.
“அப்பட்டமாக பொய் சொல்கிறளே, இவளை என் மகனுக்கு கட்டி வச்சி என் மகன் வாழ்க்கையை கெடுத்துட்டேனே” என்று சொல்லி அழுதார் சுரேக்ஷின் அப்பா.
இதை கேட்டதும் செண்பகத்தின் மனசு இரண்டாய் உடைந்தது. தன் முந்தானையை முகத்தில் வைத்த படி குலுங்கி குலுங்கி அழுதாள்.
“எங்கடி போன இந்த நேரத்துல?” என்று குரலை உயர்த்தி பேசிய சுரேஷ், தன் கையில் வைத்திருந்த கொம்பால் செண்பகத்தை சரமாரியாக தாக்கினான்.
வலி தாங்க முடியாமல் கத்தினாள் செண்பகம். சுரேஷை தடுத்து செண்பகத்திற்கு ஆறுதல் கூற அங்கு ஒருவரும் இல்லை. பாவம் அவளும் என்ன செய்வாள், அவனிடம் அடி உதை வாங்கிக் கொண்டு ஒரு மூலையில் முடங்கினாள்.
இனியும் இவனோடு வாழ கூடாது, நாளைக்கு தன் அம்மா வீட்டுக்கு போக வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால், தன் வீட்டு நிலைமையை யோசித்து பார்க்கிறாள் .
கஷ்டப்பட்டு, கடன் வாங்கி கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் கூட ஆகாமல், வாழாவெட்டியாய் போயி அவர்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. கணவனை எதிர்த்துப் பேசவும் தைரியம் இல்லை. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று அடங்கிப் போவதை தவிர வேறு வழி அவளிடம் இல்லை.
அன்பாக இருந்தவர்கள் இன்று விண் பழி சுமத்தி கொடுமை செய்த காரணத்தை அறியாமலே வலியும் வேதனையுமாக அன்றைய இரவை கழித்தாள் செண்பகம்.
மறுநாள் பொழுது விடிந்தது, சுரேஷ் அடித்த அடியில் அவள் உடம்பெல்லாம் வீக்கம் ஏற்பட்டு எழுந்து நிற்க கூட முடியாமல் படுக்கையிலே படுத்திருந்தாள்.
“அடிச்ச அடியில அம்மா வீட்டுக்கு போயிடுவானு நினைச்சா, இன்னும் இங்கேயே தான் இருக்காள்” என்று விடிந்ததும் விடியாமலும் மருமகளை கரித்துக் கொட்டினாள் மாமியாக்காரி.
“அக்கம் பக்கத்துல தீபாவளிக்கு ஒரு சீர்வரிசை, பொங்கலுக்கு ஒரு சீர்வரிசை வந்துட்டு இருக்கு, இங்க காஞ்சி போன கருவாடு கூட காணோம், என் கொடுப்பினை இதுதான்” என்று மாமியாக்காரி சொல்லிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் செண்பகத்தின் மனவேதனையை அதிகரித்தது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings