in , ,

திருப்பொற்சுண்ணம் (நாவல் – அத்தியாயம் 1) – பாலாஜி ராம்

தாமரை மலர்களையும், அல்லி பூக்களையும் சுமந்து  கொண்டிருக்கும் அழகிய குளத்தின் அருகே பெரிய சிவன்கோவில் உள்ளது.  15 வயதுடைய  சிறுவன் ஒருவன் குளக்கரையின் அழகினை ரசித்தபடி, கையில் ஐந்து தாமரை மலர்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்.

அவனது முகத்தை பார்ப்பதற்கு மங்கலகரமாக தெய்வீக கடாட்சம் பொருந்தியுள்ளது. இந்த நேரத்தில் சிவன் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்யக்கூடிய பிராமணர் ஒருவர் குளக்கரைக்கு வருகிறார். 

“தம்பி.. யார் நீ? இங்க என்ன செய்ற? உன் பேரு என்ன? நீ எந்த ஊரு?” என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார். 

என் பேரு சுந்தர். சாமிக்கு பூ பறிப்பதற்காக இங்க வந்தேன் என்று சொல்லி அவ்விடம் விட்டு வேகமாக கோவிலை நோக்கி ஓடினான். கோவிலுக்குள் சென்றதும் சாமி கும்பிட்டு விட்டு, ஆலய மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான்.  அவ்வேளையில் பூஜைக்கு தேவையான பொருட்களுடன் அர்ச்சகர் கோவிலுக்குள்ளே வந்தார். 

“ஏன்டா குழந்தை இங்க வா! உன்னை தான் இங்க வா! இந்த பொருட்களை எடுத்துட்டு போய் உள்ளே வை” என்று சுந்தரை பார்த்து சொன்னார். 

பூஜை பொருட்களை வாங்கிக் கொண்டு  கருவறைக்குள் சென்றான் சுந்தர். 

“இது எந்த  ஆத்து குழந்தை கோவில் கருவறைக்குள் போகுதே” என்று கோவிலுக்கு வந்த மற்றவர்கள் அர்ச்சகரை பார்த்து கேட்டனர். 

“பார்க்க பிராமண குலத்து பிள்ளை போல தான் தெரியுது ” என்றார் அர்ச்சகர். 

இல்ல சாமி.. அவன் மூஞ்சியும் சரியில்ல, முழியும் சரியில்ல. அவனை பார்த்தா ஐயர் ஆத்து பிள்ளை போல தெரியல, அவன் வந்ததும்   எந்த ஆத்து பிள்ளை?  ஊரு என்ன? குலம் என்ன? கோத்திரம் என்ன? எல்லாத்தையும் விசாரிங்க. 

கருவறைக்குளிருந்து வெளியே வந்த சுந்தரை பார்த்து, “டேய் தம்பி இங்கே வா” என்றார் அர்ச்சகர். 

அர்ச்சகருக்கு அருகே வந்தான் சுந்தர்.  “எதுக்கு சாமி என்னை கூப்பிட்டீங்க”

உன் அப்பா பேரு என்ன? 

“என் அப்பா பேரு முருகசாமி”

முருகசாமியா…   அப்போ நீ இந்த ஊரு இல்லையா? 

“நான் இந்த ஊரு தான்”

நீ  இந்த ஊரா? உன் வீடு எங்க இருக்கு? 

எங்க வீடு இந்த ஊருக்கு கடைசியா இருக்கு. 

“அப்போ நீ சேரி பையனா?” என்று கோபமாக கேட்டார் அர்ச்சகர். 

இதை கேட்டதும், சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் ஐயய்யோ… ஐயய்யோ…. சேரி பையன் கோயிலுக்குள்ள நுழைஞ்சிட்டான்.. சேரி பையன் கோவிலுக்குள்ள நுழைஞ்சிட்டான்.. ஐயய்யோ… ஐயய்யோ…  என்று கத்தினர்.

ஈஸ்வரா.. சர்வேஸ்வரா.. சரபேஸ்வரா.. வைத்தீஸ்வரா.. உனக்கு இவ்வளவு நாளா எந்த குறையும் இல்லாம பூஜை செஞ்சி வந்தேனே, இன்னிக்கு இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேனே, கோவிலே தீட்டு அடைஞ்சிடுச்சே… 

“சாமி..  நீங்க கோவிலில் என்ன செய்யனுமோ அதை செய்யுங்க. நாங்க இவனுக்கு என்ன பண்ணனுமோ அதை பண்றோம், இவனுக்கு கொடுக்கிற தண்டனையை பார்த்து எந்த சேரி ஆளுங்களும் கோவிலுக்குள்ள கால் வைக்கவே பயப்படணும் அந்த அளவுக்கு இவனுக்கு தண்டனை கொடுக்கணும்” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர். 

உடனே நான்கு பேர் வேகமாக வந்து,  சுந்தரின் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போய் பெரிய தென்னை மரத்தில் கட்டி, கல்லையும் கட்டையும் கொண்டு அனைவரும் அவனை சரமாரியாக தாக்கினர். 

ஐயோ.. அம்மா… அப்பா… வலிக்குதே என்று கதறி கதறி அழுதான். ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் மயங்கி விழுந்தான். மயங்கிய அவனை ஒரு கோணிப்பையில் கட்டி ஊருக்கு வெளியே வீசினர். 

இந்த செய்தியைக் கேட்ட சுந்தரின் அம்மா அவ்விடம் ஓடி வந்தாள். அவள் பெயர்  கற்பகம். இவள் கணவன் போன வருடம் தான் இறந்தான். இவள்  சாதாரண குடிசையில் தான் வாழ்கிறாள். இவளுக்கு ஒரே மகன்,  அவன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடித்துவிட்டு, கோடை விடுமுறையில் இருந்தான். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த போதிலும், அவனால் உயர் கல்வியை தொடர முடியவில்லை ஏனென்றால், குடும்பத்தின் வறுமை. 

குடும்பத்தில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்த போதிலும், தினசரி கூலி வேலைக்கு சென்ற கற்பகம், சுந்தர் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தாள், அவனுக்காகவே தன் வாழ்வையும் அர்ப்பணித்தாள்.

இன்று சுந்தருக்கு பிறந்தநாள், எனவே அவனை விடியற்காலையில் எழுப்பி, தான் வாங்கி வைத்திருந்த புது ஆடைகளை  உடுத்த செய்து, அருகில் உள்ள “மாரியம்மன் கோவிலுக்கு அனுப்பிவிட்டு அவனுக்கு பிடிக்கும் என்று பால் பாயாசம் செய்து கொண்டிருக்கும் போது இடியை தூக்கி தலையில் போட்டது போல் ஒரு செய்தி. தன் மகனை யாரோ அடித்து போட்டார்கள் என்ற செய்தி கேட்டதும், செய்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, வேகமாக ஓடி வருகிறாள். 

இவள் வீட்டிலிருந்து சுந்தர் இருக்கும் இடத்திற்கு செல்ல பத்து நிமிடங்கள் ஆகும். ஆனால் இவளோ மூன்று நிமிடங்களில் வந்தடைந்தாள். தாய்மையின் வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. 

கோட்டை எல்லாம் சுற்றி வந்த தன் மகன், இப்போது கோணிப்பையில் மயங்கி இருப்பதைக் கண்டு கதறி அழுதாள். 

“ஐயோ.. என் சாமி உன்னை யாருடா அடிச்சு போட்டது. அடி மாரியாத்தா உனக்கு கூடவா கண்ணில்ல. என் புள்ளையை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக யாராவது வாங்களே.. என் புள்ளையை காப்பாத்துங்களே…” என்று கத்தி அழுகிறாள்.

இவள் கூக்குரலைக் கேட்ட  அக்கம் பக்கத்தினர்கள் வேகமாக ஓடி வந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். சுந்தரை  பரிசோதித்த மருத்துவர், இவன் உடலில் பலத்த காயங்கள் உள்ளன, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்

எனவே, நீங்கள் சீக்கிரம் பெரிய ஆஸ்பிட்டலுக்கு போகணும் என்று சொல்லி, அவர் ஒரு ஆம்புலன்ஸ்  ஒன்று ஏற்பாடு செய்து, சுந்தரையும்  அவன் அம்மாவையும் அரசு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

பத்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்தது. சுந்தரை பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும்படி எழுதிக் கொடுத்தார்.  எக்ஸ்ரே, எம்.ஆர்,ஐ  எடுத்த பின் ரிப்போர்ட்-ஐ பார்த்த மருத்துவர் உன் மகனுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுள்ளது. நாளை மறுநாள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இன்னைக்கு அட்மிஷன் போடுங்க, ஆண்கள்  எலும்பியல் சிகிச்சை வார்ட்  36க்கு செல்லுங்கள், அங்கு வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு மருத்துவர் சென்றார். 

மருத்துவமனையில் வேலை செய்யும் பணியாளர்கள் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து எலும்பியல் சிகிச்சை வார்ட்க்கு சுந்தரை மாற்றம் செய்தனர். கற்பகத்தை பார்த்த பணியாளர், ” இவன் உன் பையனா? “

‘ஆமா ஐயா’

“அங்கிருந்து உன் பையனை இங்க தள்ளிட்டு வந்ததற்கு நூறு ரூபாய் கொடு”

‘என்கிட்ட காசு இல்லையே ஐயா’

“காசு இல்லையா அப்ப எதுக்கு இங்க வந்த, ஆப்ரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு போறதுக்குள்ள காசை கொடு இது யாருக்கும் தெரிய கூடாது” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார்.

கற்பகம் வீட்டில், துணிமணி வைக்கவோ  காசு பணம், நகை நட்டு வைக்கவோ இடம் கிடையாது. அவளிடம் நகை என்று ஒன்று இருந்தால்தானே நகை வைக்க இடம் வைத்திருப்பாள், அவளோ ஒரு ஏழை அவள் இதற்கெல்லாம் ஆசைப்படலாமா? 

அவள் தினசரி கூலிக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தன் புடவையின் முந்தானையில் முடிந்து வைத்திருப்பாள். அவ்வாறு அவள் முடிந்து வைத்த பணம் 1500 ரூபாய் மட்டுமே இப்போது அவளிடம் உள்ளது.

“புள்ளைக்கு ஆப்ரேஷன் வேற சொல்லி இருக்காங்க. இங்கிருந்து வீட்டுக்கு போறதுக்கு ஒரு வாரம் ஆகுமோ இரண்டு வாரம் ஆகுமோ தெரியல, எதுக்கு எதுக்கு காசு கேப்பாங்கன்னு தெரியல அதனால காசு ரொம்ப செலவு பண்ண கூடாது என்று நினைத்தாள்”

அதனாலதான் அவள் ரெண்டு மணி ஆகியும் இன்னும் காலை சாப்பாடு கூட சாப்பிடல.  11 மணிக்கு  தன் பிள்ளைக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாள். ஆனால், அவள் சாப்பிடல, அந்த ஹாஸ்பிடல்ல இருக்க தண்ணிய குடிச்சி குடிச்சி தன் வயிற்றை நிரப்பிகிட்டாள்.

இந்த நேரத்துல செவிலியர் ஒருவர் வந்தார். வார்டில் உள்ள அனைவரையும் பார்த்து விட்டு இறுதியாக சுந்தரிடம் வந்தார்.

“அம்மா உன் பையனுக்கு இப்ப சாப்பாடு கொடுக்க வேண்டாம், ராத்திரி கொடுத்துக்கோ அவனுக்கு ஒரு பாட்டில் குளுக்கோஸ் போட்டு முடிஞ்சிடுச்சு இன்னும் ஒரு பாட்டில் குளுக்கோஸ் போடணும் அதுக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடு” என்றாள் செவிலியர். 

“என்கிட்ட காசு இல்லையே”

‘நாளைக்கு மறுநாள் உன் பையனுக்கு ஆப்ரேஷன்  குளுக்கோஸ் போட்டா தான் அவன் உடம்பு தாங்கும், ஐம்பது ரூபாய் கொடு நான் குளுக்கோஸ் போடுறேன்.’

தன் முந்தானையில்  முடிஞ்சு வைத்திருந்த பணத்தில் 50 ரூபாய் எடுத்துக் நீட்டினாள். 

“யாருக்கும் தெரியாம மறைச்சு கொடு” என்றாள் செவிலியர். 

கற்பகம் தன் முந்தானையில் மறைத்து 50 ரூபாயை கொடுத்தாள். பணத்தை வாங்கிக் கொண்ட செவிலியர் ஒரு குளுக்கோஸ் பாட்டிலை சுந்தருக்கு போட்டுவிட்டு சென்றாள். 

சிறிது நேரம் கழித்து சுந்தரை பார்ப்பதற்காக மருத்துவர் வந்தார். சுந்தரின் உடலில் 5 மிலி ரத்தத்தை சிரஞ்சியில் எடுத்தார். இதை 26வது நம்பர் பிளட் டெஸ்ட் லேபிள் கொடுங்க என்று சொல்லி கற்பகத்திடம் கொடுத்தார்.

கற்பகம் தன் மகன் ரத்தத்தை எடுத்துக்கொண்டு 26 ஆவது நம்பரை தேடி அலைந்து கொண்டிருந்தாள். போகும் வழியில் பலரை கேட்டுகேட்டு எப்படியோ 26வது நம்பருக்கு வந்தாள். அங்கிருந்த ஒரு அதிகாரியிடம் சென்று, “இந்த ரத்தத்தை எங்க கொடுக்கணும் சார்” என்று தயக்கத்துடன் கேட்டாள். 

“இங்கதான் குடுக்கணும், ஒரு 200 ரூபாய் கொடு”

‘எதுக்கு சார் 200 ரூபாய்’

“காசு இருந்தா குடுத்துட்டு போ, இல்லன்னா அந்த வரிசையில் போய் நில்லு” என்றார் அந்த அதிகாரி. 

அந்த வரிசையை பார்த்தால் 20க்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் 21 வது ஆளாக கற்பகம்  வரிசையில் நின்றாள். வரிசையில் நின்ற அவள் ஒரு மணி நேரமாக அதே இடத்தில் தான் நின்று கொண்டிருக்கிறாள்.  

ஏனென்றால் பின்னால் வருபவர்கள் எல்லோரும் பணத்தை கொடுத்து விட்டு டெஸ்ட்க்கு இரத்தத்தையும் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். இதைப் பார்த்த கற்பகம், புள்ளையை தனியா விட்டு வந்துட்டோமே அங்க அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே என்று மனசுக்குள்ளே புலம்பிக்கொண்டு, பணம் போனா போகட்டும்  சீக்கிரமா புள்ளையை போய் பாக்கணும் என்று நினைத்த அவள், தான் முடிஞ்சு வைத்திருந்த பணத்தில் 200 ரூபாய் எடுத்து அந்த அதிகாரியிடம் கொடுத்து ரத்தத்தையும் டாக்டர் எழுதி தந்த சீட்டையும் கொடுத்தாள்.

“நாளைக்கு காலையில எட்டு மணிக்கு வந்து ரிசல்ட் வாங்கிட்டு போ” என்றார் அதிகாரி. 

மாலை 5:00 மணி ஆனது,  மருத்துவர்  வார்டுக்கு வந்தார்.  மருத்துவரை பார்த்த கற்பகம் கண்கலங்கி பேச ‘என் புள்ளையை எப்படியாவது பழைய மாறி மாத்தி தந்திடுங்க ஐயா’

பிளட் டெஸ்ட்க்கு கொடுத்துட்டீங்களா? 

‘கொடுத்துட்டேன் சார்’

கற்பகம் தன் மகன் அருகே சென்று, உன்னை யாருடா அடிச்சது? நீ என்ன பண்ண? எப்படி நடந்தது? என்று கேட்டாள். 

சுந்தர் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னான்.

உன்னை யாருடா அங்க போக சொன்னது,  உன்னை மாரியம்மா கோவிலுக்கு தானே நான் போக சொன்னேன்  என்று அழுதாள் கற்பகம். 

இந்த நேரத்தில் கற்பகம் செல்போனுக்கு கால் வந்தது, கற்பகம் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரி தான் ஃபோன் செய்தாள். 

‘ஹலோ அக்கா’

“ம்ம்ம் சொல்லுடி”

‘நான் சொல்ற செய்தியை நீ எப்படி தாங்க போறீயோ’

“என்னாச்சி டி”

‘நீ ஆஸ்பத்திரிக்கு வந்ததும், கோவில் தீட்டு பட்டுச்சுனு, சிவன் கோவில் ஐயர் தன் ஆளுங்கள வச்சி உங்க வீட்டை கொளுத்திட்டாங்க’

“ஐயோ… மாரியாத்தா தாயே நீ குருடாயிட்டியா?  எங்கள கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்கறதுக்கு பதில் ஒரே அடியா சாவடிச்சிடுடி  பாவி..  ஐயா..  முனீஸ்வரா.. கருப்புசாமி.. உங்களுக்கு கூடவா கண்ணில்ல கஷ்டப்பட்டு கட்டிய குடிசை இன்னிக்கு தீயிக்கு இரை ஆயிடுச்சு. இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன புண்ணியம்,  எல்லாத்தையும் ஒரு நிமிஷத்துல அழிச்சிட்டானுங்களே பாவிங்க..” என்று தன் மனக்குமுறலை கொட்டி தீர்த்தாள் கற்பகம்.

இரவு ஏழு மணி ஆனது,  வார்டில் உள்ள  நோயாளிகளுக்கு மட்டும் உணவு வழங்கினர். கற்பகம் அந்த உணவை வாங்கிக் கொண்டு வந்து தன் மகனுக்கு கொடுத்தாள். சுந்தர் சாப்பாட்டில்  வைத்தான்.

அப்போதுதான் அவன் நினைக்கிறான், தன் அம்மா சாப்பிட்டுருக்க மாட்டாள் என்று, எனவே பாதி சாப்பாடு மட்டும் சாப்பிட்டுவிட்டு, எனக்கு போதும் என்று சொல்லி மீதி சாப்பாட்டை தன் அம்மாவிற்கு கொடுத்தான் சுந்தர். 

என்னாச்சுடா பாதி தான் சாப்பிட்டு இருக்க, வாந்தி வருதா? சாப்பாடு ஏத்துக்கலையா? என்று பதற்றத்துடன் கேட்டாள் கற்பகம். 

“எனக்கு ஒன்னும் இல்ல, வயிறு ரொம்பிடிச்சு, எனக்கு போதும் நீ சாப்பிடும்மா” என்றான்

தன் மகன் சாப்பிட்டு மீதி வைத்த உணவை சாப்பிட்டு தன் பசியை போக்கி கொண்டாள் கற்பகம். 

அன்று இரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை, ஒரு பக்கம் தன் வீட்டை நினைத்து அழுகிறாள், மறுபக்கம் தன் மகனை நினைத்து அழுகிறாள். வீடு கட்ட அவள் பட்ட கஷ்டங்களை நினைத்தும், தன் மகன் அடையும் வேதனையை நினைத்தும் மனதிற்குள்ளே குமுறுகிறாள். இவளுக்கு ஆறுதல் கூற ஒருவரும் இல்லாது நாதியற்று கிடக்கிறாள். 

மறுநாள் விடிந்தது. 

மருத்துவமனையில் கொடுத்த உணவை வாங்கி தன் மகனுக்கு கொடுத்துவிட்டு, ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் வாங்க சென்றாள் கற்பகம். இவள் போகும் நேரத்தில் அங்கு சரியான கூட்டம். அரை மணி நேரம் வரிசையில் நின்று,    நேற்று பார்த்த அதிகாரியை சந்தித்தாள். 

“ஐயா.. நேத்து என் பையனுடைய இரத்தம் கொடுத்தேன், இன்னைக்கு  ரிசல்ட் வாங்கிக்க சொன்னீங்க” என்றாள். 

“காலங்காத்தால உயிரை வாங்காதே இங்க இரத்தம் மட்டும் தான் கொடுக்கணும், பக்கத்துல தான் ரிசல்ட் வாங்கணும்  அங்க போய் வாங்கிக்கோ. எனக்குனே வருவாங்க போல” என்று திட்டி அனுப்பினார். 

“எங்க வாங்கணும் சார்?”

“எத்தனை தடவை சொல்லுவாங்க பக்கத்துல வாங்கிக்கோ” என்று கைகாட்டி விட்டார். 

“நாலு எழுத்து படிச்சிருந்தா நான் ஏன் இந்த பாடுபட போறேன், இவ்வளவு நேரம் கால் வலிக்க நின்னது எந்த புண்ணியமும் இல்லாம போச்சு” என்று புலம்பிக்கொண்டு பக்கத்து வரிசையில் போய் நின்று பிளட் ரிசல்ட் வாங்கி கொண்டு வார்டுக்கு சென்றாள். 

காலையில் தன் மகனுக்கு வாங்கி தந்த நான்கு இட்லியில் இரண்டு இட்லியை மீதம் வைத்திருந்தான். 

“ஏன்டா சாப்பிடல?”

“எனக்கு போதும்மா நீ சாப்பிடு”

ஒரு தாய்க்கு தெரியாதா மகனைப் பற்றி, மீதம் இருந்த இட்லியை பிசைந்து தன் மகனுக்கு ஊட்டினாள். இவள் தன் பசியை மறைத்து, தன் மகன் பசியை போக்கினாள். 

அங்கு வேலை செய்யும் பணியாளர்களின் உதவியுடன் தன் மகனை ஸ்ட்ரக்சரில் அழைத்துக் கொண்டு இருதய டாக்டரையும், மயக்கமருந்து டாக்டரையும் பார்க்க சென்றாள்.

இருதய டாக்டரை பார்த்து இசிஜி டெஸ்ட் எடுத்துக்கொண்டு மயக்க மருந்து டாக்டரை பார்க்க சென்றாள். சுந்தரை பரிசோதித்த மயக்க மருந்து டாக்டர் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று எழுதிக் கொடுத்தார். 

பிறகு, தன் மகனை அழைத்துக் கொண்டு வார்டுக்கு சென்றாள். அங்கு போனதும் உடன் வந்த பணியாளர்கள் “200 ரூபாய் பணத்த கொடு நாங்க கிளம்புறோம்” என்றனர். 

“அவ்வளவு பணமா?”

“உன் புள்ளைய கூட்டிகிட்டு இங்க அங்கனு அலைஞ்சோமே, இதுவே வேற யாராவது இருந்தா அதிகமா கேட்டிருப்போம், உனக்காக கம்மியா கேட்கிறோம்”

வேறு வழி இல்லாம முந்தானையில் முடிஞ்சு வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். 

மாலை 5 மணிக்கு வார்டுக்கு வந்த மருத்துவர்  சுந்தரின் ரிப்போர்ட் பார்த்துவிட்டு, “நாளைக்கு காலையில  9 மணிக்கு ஆப்ரேஷன்” என்று சொல்லி மருத்துவர் அங்கிருந்து சென்றார். 

மறுநாள் பொழுது புலர்ந்தது. பணியாளர்கள் உதவியுடன் தன் மகனை அழைத்துக் கொண்டு எழும்பியல் அறுவை சிகிச்சை பிரிவுக்கு சென்றாள். ஒன்பது மணி வரை தன் மகனின் கையைப் பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். 

மகனை உள்ளே அழைத்துப் போனதிலிருந்து தாயின் மனம் பதறுகிறது.

“அம்மா.. தாயே.. மாரியாத்தா…  என் புள்ளையை காப்பாத்து, நல்லபடியா ஆப்ரேஷன் முடியணும் அதுக்கு நீ தாம்மா துணை இருக்கணும்” என்று  தெய்வத்தை வேண்டி அழுகிறாள். 

சுந்தருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையை தொடங்கினார்கள். 

அறுவை சிகிச்சை அரங்கத்தில் வேலை செய்யும் பணியாளர்  ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே வந்து, 

“சுந்தர் கூட வந்தவங்க யாரு?” என்று கேட்டான். 

‘நான் தான்  வந்திருக்கேன்’ என்றாள் கற்பகம். 

“அவன் உன் புள்ளையா?”

‘ஆமா ஐயா’

“உன் புள்ளைக்கு ஆப்ரேஷன் பண்ற டாக்டருக்கு டீ வாங்கணும் 200 ரூபாய் கொடு” என்றான். 

உடனே தன் முந்தானையில் முடித்து வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். அவள் வைத்திருந்த பணமெல்லாம், அரசு மருத்துவமனைக்கு வரதட்சணை கொடுத்ததால்,  இப்போது அவளிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. 

உள்ளே சுந்தருக்கு  அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது, டீ குடிப்பதற்காக மயக்க மருந்து பெரிய டாக்டரும், அறுவை சிகிச்சை  செய்யும் பெரிய டாக்டரும் சென்றனர். 

முதுநிலை மருத்துவ மாணவர்கள் தான் அறுவை சிகிச்சையை செய்கிறார்கள். அவன் உடலில் அதிகபடியான இரத்த இழப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது அவன் உடலில் எந்த அளவு இரத்தம் வெளியேறியது என்பதை முதுநிலை படிக்கும் மயக்க மருந்து மருத்துவர்களும், அறுவை சிகிச்சை மருத்துவர்களும் கவனிக்க தவறினர். 

நேரம் ஆகஆக சுந்தரின் இரத்த அழுத்த அளவு குறைந்தது, இருதய துடிப்பும், நாடித் துடிப்பும் குறைந்தது. உடலின் ஆக்சிஜன் அளவும் குறைந்தது. இதை பார்த்து பயந்து போன மருத்துவர்கள், பெரிய டாக்டரை அழைத்தனர். பெரிய டாக்டர் காரணத்தைக் கண்டறிந்து இரத்தம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்வதற்குள் சுந்தரின் மூச்சுக்காற்று நின்றது. 

பெரிய டாக்டர் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு வெளியே சென்றார். 

“சுந்தர் கூட வந்தவங்க யாரு?” 

‘நான் தான் வந்தேன், அவன் இப்ப எப்படி இருக்கான்? நல்லா இருக்கானா? ஆப்ரேஷன் முடிஞ்சிடுச்சா?’ என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டாள் கற்பகம். 

“உங்க பையனுக்கு ஆப்ரேஷன் செய்யும் போது,  வலிப்பு  ஏற்பட்டு இறந்துட்டான். எங்களை மன்னிச்சிடுங்க, உங்க பையன எங்களால காப்பாத்த முடியல” 

அடுத்த நொடியே, அந்த ஆஸ்பத்திரி அதிரும்படி  அழுகுரல். 

“என் சாமி.. என் ராச… அந்த பாவி எமன் என்னை முதலில் கூட்டிட்டு போககூடாதா..  ஐயோ.. ஐயோ..” என்று கத்தி தலையிலும், வயிற்றிலும் அடித்து கொண்டு அழுதாள்.

‘என் புள்ள இல்லாத உலகத்துல நான் மட்டும் ஏன் இருக்கனும்’ என்று நினைத்த அவள், மருத்துவமனையின்  சுவற்றில் தலையை இடித்து கொண்டு, மயங்கி விழுந்தாள்.

மருத்துவர், கற்பகத்தை பரிசோதித்தார் அப்போதுதான் தெரிந்தது, தன் மகனை தேடி தாயும் புறப்பட்டுவிட்டாள் என்று… 

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏழை தாய் (சிறுகதை) – பாலாஜி ராம்

    பூங்குழலி (அத்தியாயம் 1) – பாலாஜி ராம்