எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மொபெட் பறந்துகொண்டிருந்தது. முரளியின் மூளை கொதித்துக் கொண்டிருந்தது.
‘இவளென்ன எப்போ பார்த்தாலும் புடவை வாங்கிட்டே இருக்கா… மொபைல் வாங்கிக் கொடுத்து எப்படி ஆப்பரேட் பண்றதுன்னு சொல்லிக் கொடுத்தாலும் கொடுத்தோம்… ஆன்லைன்ல புடவையா வாங்கிக் குவிக்கறா… எருமை… எருமை… ‘
மாலை மூன்று மணி இருக்கும். ஒரு போன் வந்தது.
‘ ஸார்… ஒரு பார்சல் வந்திருக்கு… ‘
இவனுக்கு திகைப்பு. ‘ நாம் ஒரு ஆர்டரும் போடவில்லையே… நமக்கு என்ன பார்ஸல்… ‘ என்று.
‘ யார் பேருக்கு வந்திருக்கு… எங்கேயிருந்து வந்திருக்கு… ‘
‘ ஸார்… புனிதாங்கறவங்க பேருக்கு வந்திருக்கு. கோவைல இருந்து வந்திருக்கு. ராசாத்தி சாரீஸ்ங்கறவங்க அனுப்பிச்சிருக்காங்க… இதுல ரெண்டு நம்பர் கொடுத்திருக்காங்க. முதல் நம்பர் போகமாட்டேங்குது. அதான் ரெண்டாவது நம்பருக்கு அடிச்சேன்… ‘
இப்போது புரிந்தது. புனிதாதான் ஆன்லைனில் சேலை ஆர்டர் போட்டிருக்கிறாள். தனது நம்பர் மட்டுமில்லாமல் நமது நம்பரையும் ஒரு அவசரத்திற்காக சேர்த்துக் கொடுத்திருக்கிறாள். அவளது நம்பர் போகாததால் நமது நம்பருக்கு அடித்துவிட்டார்.
கூரியர்காரனுக்கு பதில் சொல்ல வாய் திறந்தான். அதற்குள் அவரே பேசினார். ‘ ஸார்… கதவு திறக்கறாங்க… மேடம் வந்திட்டாங்க… நான் அவங்ககிட்ட கொடுத்திடறேன்… ‘
போன் கட்டானது. ஆனால் இவனுக்கு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது.
நிறைய தடவை அவள் இப்படி ஆர்டர் போட்டு துணிகள் வாங்கியிருக்கிறாள். இவன் ஆபிஸ் விட்டு வீட்டுக்குப் போகும்போதெல்லாம் குப்பைக்கூடையில் பார்ஸல் வந்த கவர் கிழிபட்டுக் கிடக்கும்.
மாதா மாதம் ஐந்தாயிரம் கொடுக்கிறான். அதை அவளது கணக்கிற்கு ஜீபே செய்து விடுவான். சம்பளம் வந்த அன்றே போட்டுவிடுவான். ஒருநாள் இரண்டு நாள் தவறினால் கூட, உடனே கேட்டுவிடுவாள்.
‘ எங்கேங்க… ஒரு மெசேஜூம் வரலை… இன்னும் பணம் போடலையா நீங்க… ‘
இப்படி மாதாமாதம் பணத்தை வாங்கிக்கொள்வாள். ஆனால் ஆன்லைனில் ஆர்டர் போட்டு போட்டு ஆளைக் கொள்ளுவாள்.
இன்றைக்கு வீட்டுக்குப் போனதும் ஒரு பிடி பிடிக்காமல் விடுவதில்லை என்று அப்போதே முடிவு செய்து கொண்டுவிட்டான்.
மனதுக்குள் புழுங்கிக்கொண்டே மொபெட்டை பறக்கவிட்டவன் வீடுவந்து சேர்ந்ததும், அதே வேகத்துடன், ‘ புனிதா… ‘ என்று கத்தினான்.
கிச்சனில் இருந்தபடியே, ‘ ஓ… வந்துட்டீங்களா… டீ கலந்துட்டிருக்கேங்க… ஒரு ரெண்டு நிமிஷம்… ‘ என்று குரல் மட்டும் கொடுத்தாள் அவள்.
ஷோபாவுக்கு பின்னால் இருந்த அந்த பிளாஸ்டிக் கூடையில் பார்ஸல் பிரித்த கவர் கிடந்தது. என்ன வந்தது என்று தெரியவில்லை. மெல்ல போய் எடுத்தான். இரண்டு சேலைகள் என்று புரிந்தது. மூவாயிரத்துக்கு வாங்கியிருந்தாள்.
கோபம் ஜிவ்வென்று தலைக்கேறியது. அப்படியே வந்து சோபாவில் சரிந்தான்.
டீ கொண்டுவந்துகொண்டிருந்தாள் புனிதா.
‘ என்ன பார்ஸல் வந்திச்சு… ‘
‘ பார்ஸலா… ‘
ஹூம் ஒன்றும் தெரியாதது போல எப்படி கேட்கிறாள்.
‘ பார்ஸல் ஏதும் வரலை…? ‘
‘ ஓ ஆன்லைன்ல நான் ஆர்டர் போட்டு வந்த பார்ஸலை சொல்றீங்களா… ஆமா… சேலை ஆர்டர் போட்டிருந்தேன்… இந்தாங்க கப்பை பிடிங்க… ‘
‘ கப்பை டேபிள்ல வை… நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு… பேச்சை திசை திருப்பாதே… ‘
‘ சரி… கப்பை வச்சாச்சு… நான் பேச்சை திருப்பலை… இப்போ என்ன சொல்லணும்… ‘
‘ நான் எவ்ளோ பணக் கஷ்டத்துலே இருக்கேன்னு உனக்குத் தெரியாது… ஆனா உனக்கு சுளையா அஞ்சாயிரம் தவறாம சிறுவாட்டு பணம் கொடுக்கறேன்… ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஆகும்னு சேர்த்து வைக்காம இப்படி ஆன்லைன் ஆர்டர் போட்டு காசை வீனடிச்சிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்… ‘
‘ ஏங்க… ஆபீஸ்ல ஏதும் டென்ஷனா… இப்போ என்மேல எரிஞ்சு விழறீங்க… ‘
‘ திசை திருப்பதே… உன் இஷ்டத்துக்கு பார்ஸல் பார்ஸலா வாங்கிட்டிருந்தா என்ன அர்த்தம்… ‘
எதிர் சோபாவில் உட்கார்ந்தாள்.
‘ ரெண்டு புடவை ஆர்டர் போட்டேன்… உங்கம்மாவுக்கு ஒன்னு… உங்க மாமியாருக்கு ஒன்னு… நான் ஒன்னும் எனக்கு வாங்கிக்கலை… நான் இப்போ என்ன பண்ணனும்ங்கறீங்க… ‘
சுருக் என்றது இவனுக்கு. அவளது அம்மாவுக்கும் நமது அம்மாவுக்கும் சேர்த்து என்றல்லவா சொல்லுகிறாள். நாம்தான் அவசரக் குடுக்கையாக சத்தம் போட்டு விட்டோமோ…
‘ சரி… அதுக்காக இப்படி அடிக்கடி ஆர்டர் போட்டு வாங்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்… போன மாசம் கூட ஒரு பார்ஸல் வந்தது… அதுக்கு முன்னேயும் கூட பல தடவை… நீ உன் பேர்ல பணம் போடணும்னு சொன்னப்போ நான் கோபப்பட்டது உண்மைதான். ஆனாலும் நம்ம கைதான் ஓட்டைக்கை. இவளாவது சேர்க்கட்டுமேனு கொடுக்க ஆரம்பிச்சேன்… நீ ஆன்லைன்ல ஆரடர் போட்டுக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்… பணத்தை விரயம் செய்யறது நல்லாவா இருக்கு…. சரி சரி… அந்த புடவைகளை கொண்டு வா பார்க்கலாம்… ‘
இவள் சொல்வது உண்மையா… நம் அம்மா மேல் என்ன திடீர் கரிசனம்… ஒருவேளை உண்மையாகத்தான் சொல்லுகிறாளோ… நாம்தான் அவளை சரியாக புரிந்துகொள்ள வில்லையோ…
‘இந்தாங்க… ‘ என்றபடி அவள் நீட்டிய இரண்டு புடவைகளும் பார்க்க நன்றாகத்தான் இருந்தன.
‘இருபது பர்ஸன்ட் டிஸ்கவுன்ட் எப்பவும் கிடைக்கும். ரெகுலர் கஸ்டமருக்கு முப்பது பர்ஸன்ட். நான் ரெகுலர் கஸ்டமர்ங்கறதால முப்பது பர்ஸன்ட் தள்ளுபடில வாங்கினேன். லைட் பச்சை எங்கம்மாவுக்கு. லைட் மெரூன் உங்கம்மாவுக்கு. உங்கம்மாவுக்கு லைட் மெரூன் எடுப்பா இருக்கும்… ‘
அவளை பார்த்தபடியே டீயை குடிக்க ஆரம்பித்தான்.
ச்சே… இனிமேல் இப்படி சுடுதண்ணியை காலில் கொட்டிக்கொண்டது போல நாம் குதிக்கக் கூடாது… ஆற அமர யோசித்து பிறகுதான் பேச வேண்டும்…
அவளது மொபைல் திடீரென்று சிணுங்கியது.
‘ஸாரிங்க… ராஜியத்தை கூப்பிடறாங்க… எப்படியும் இருபது முப்பது நிமிஷமாவது பேசுவாங்க… நீங்க டீ குடிச்சிட்டிருங்க… நான் மாடிக்கு போய் பேசிட்டு வந்துடறேன்… ‘
மடமடவென படிகளில் ஏறினாள். கடைசி படி ஏறும்போது திரும்பிப் பார்த்தாள். டீயைக் குடித்துவிட்டு சட்டைகளை களைந்து கொண்டிருந்தான் அவன்.
‘சொல்லு சுதா… ‘ என்றவள் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘ மாமா வந்துட்டார்… நான் வேறொரு கால் வருதுன்னு பொய் சொல்லிட்டு மாடிக்கு வந்திட்டேன்… ஏன்டி… அம்மாவுக்கும் உனக்கும்னு சேர்த்து ரெண்டு புடவை வாட்ஸப்புல அனுப்பிச்சிருந்தேனே… அதுல உனக்கு வாங்கின லைட் மெரூன் புடவைல டேமேஜ் இருக்கு… திருப்பி அனுப்பிட்டேன்…. உனக்கு வேற புடவை வாங்கித் தர்றேன், சரியா… புடவை வேண்ணா என்கிட்டே கேளு… அம்மாவ தொந்திரவு பண்ணாத… புரிஞ்சதா… ‘
அவள் ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings