எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்த சரசு, நேரே அடுத்த தெருவுக்கு நடந்தாள். அவளுடன் வேலை செய்யும் வள்ளி பின் தெருவில்தான் குடியிருக்கிறாள். அவளது மொபெட்டில்தான் இருவரும் தினமும் ஆபீஸ் போய் வருவார்கள்.
வீட்டை அடைந்த சரசு குரல் கொடுக்க, வெளியே வந்த வள்ளியின் அம்மா, இவளைப் பார்த்ததும், ‘ ஓ… சரசா… வாம்மா… வள்ளி இன்னிக்கு பஸ்ல போய்ட்டாளேம்மா… ‘ என்றாள். திகைத்தாள் சரசு.
தினமும் ஒன்றாகத்தானே மொபெட்டில் போவோம், வருவோம். இன்றைக்குப் பார்த்து இவள் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் போனாள், அதுவும் பஸ்ஸில். என்ன ஆனது இவளுக்கு… இவளது மொபெட்டு ஏதும் ரிப்பேரா….
பார்வையை சுழற்றினாள் சரசு. அங்கே காம்பவுண்டு ஓரம் துணிக்கவர் போட்டு மூடிக் கிடந்தது மொபெட்.
இவளது பார்வை மொபெட் பக்கம் வீசியதைக் கவனித்துவிட்ட அவளது அம்மா, ‘ வண்டி பஞ்சர்னு சொன்னாம்மா… அதான்… தள்ளிக்கிட்டு போயி… கடையில கொடுத்து… சரி செஞ்சு… யோசிச்சிட்டே நினனவ… நேரமில்லைன்னு கிளம்பிட்டாம்மா… ‘ என்று நிறுத்தினாள் அவள்.
மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசாமல், மடமடவென தெருமுனைக்கு நடந்தாள். அங்கிருந்து கொஞ்ச தூரத்தில்தான் பஸ் ஸ்டாப். அங்கே பஸ் பிடித்தால் இருபது இருபத்தைந்து நிமிடத்தில் ஆபீஸ் போய்விடலாம்.
சட்டென பையைத் திறந்து பர்ஸைத் தேடினாள். தேவையான சில்லறை அதில் இருப்பதை உறுதி செய்துகொண்டாள். இவள் ஸ்டாப்புக்கு போய்ச் சேரவும் இவளுக்கான பஸ் வரவும் சரியாக இருந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது. படிக்கட்டில் ஆறேழு வாலிபர்கள் தொங்கிக் கொண்டே வந்தார்கள்.
பஸ் நின்றதும், அவர்கள் இறங்கி வழிவிட இவள் ஏறிக்கொண்டாள். உள்ளேயும் கூட்டம் முட்டித் தள்ளியது. உள்ளே நுழையவே தடுமாறினாள். மூச்சும் முட்டியது. வியர்க்க ஆரம்பித்தது. காலையிலேயே பஸ்ஸுக்குள் வியர்வை நாற்றம் வேறு.
டிக்கட் எடுத்துக் கொண்டாள். முப்பது நிமிடம் ஆனது அவளுக்கான நிறுத்தத்தில் போய் இறங்க. மேலும் அரைகிலோ மீட்டர் நடந்தாள். ஆபீஸ் வந்தது.
இவளைப் பார்த்துவிட்டாள் வள்ளி. இவளும் அவளை பார்த்துவிட்டு ஒரு புன்னகை மட்டும் பூத்துவிட்டு தனது இருக்கையில் போய் உட்கார்ந்து அன்றைய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டாள். மொபெட் விஷயம் இப்போதைக்கு முக்கியமில்லை என்று விட்டுவிட்டாள் சரசு.
கொஞ்ச நேரத்தில் ஃபோன் சிணுங்கியது. அம்மாத்தான் கூப்பிட்டார்கள்.
‘ ஆபீஸ் போய்ச் சேர்ந்துட்டியாம்மா… ‘ என்றாள் அம்மா.
‘ சேர்ந்துட்டேம்மா… ‘ என்ற இவள், கூடவே, ‘ செம கூட்டம்மா… ‘ என்றும் சொல்லிவிட்டு டக்கென பற்களை கடித்துக்கொண்டாள்.
‘ என்ன கூட்டமா… ‘ அம்மாவும் அதிர்ந்தாள்.
அம்மாவுக்குத் தெரியும், இவள் தினமும் வள்ளியுடன் மொபெட்டில்தான் போய்வருவாள் என்று. ‘ செம கூட்டம் ‘ என்று சொன்னபிறகுதான் இவள் பற்களைக் கடித்துக் கொண்டாள். ஏன் தேவையில்லாமல் சொல்லிவிட்டோமே என்று யோசித்தாள். உடனே சுதாரித்துக் கொண்டு மெல்ல விளக்கியும் சொன்னாள்.
ஒரு ஜாதகம் வந்திருப்பதாகச் சொல்லிவிட்டு, ‘ சரி சாயங்காலம் வா, பேசிக்கலாம்… ‘ என்று விட்டு ஃபோனை வைத்துவிட்டாள், அம்மா. சாயங்காலம் வீட்டுக்குப் போய்ச் சேரும்போது அங்கே புதிதாக ஒரு ஸ்கூட்டி நின்றிருந்தது.
‘ உங்கப்பா ஜாதகம் கொண்டு வந்து கொடுத்துட்டு உட்கார்ந்திருந்தார். ஏற்கனவே ஓசி வண்டி பிடிச்சி தினமும் போறியேன்னு அப்பாவுக்கு மனசுல உலப்பல்… இன்னிக்கு நீ சிரமப்பட்டு பஸ்ல போனதைச் சொன்னதும், உடனே போய் ஒரு மொபெட் புக் பண்ணி கொண்டு வந்துட்டார். சாதரணமா ரிஜிஸ்ட்ரேஷன்லாம் முடிச்சு மறுநாள்தான் தருவாங்களாம் வண்டியை. யார் யாரையோ பிடிச்சு இன்னிக்கே ரிஜிஸ்ட்ரேஷனை முடிச்சு வண்டியையும் கொண்டுவந்து டெலிவரி பண்ண வச்சிட்டார் உங்கப்பா… ‘ என்றவள், ‘ உன் மொபெட் நம்பரைப் பார்… உன்னோட பர்த்டே வரும்… ‘ என்றாள் அம்மா.
அப்போதுதான் கவனித்தாள், நம்பர் போர்டு 5699 என்றிருந்தது.
உடனே, மொபைலில் வள்ளியைக் கூப்பிட்டாள். ‘ யே… நாளைலேர்ந்து நான் மொபெட் கொண்டு வர்றேண்டி… அதுலேயே போய்க்கலாம்… சரியா… மற்றதை நாளைக்குப் பேசிக்கலாம்… ‘ என்றாள்.
காலையில் மொபெட்டைக் கொண்டுபோய் பக்கத்து பிள்ளையார் கோவிலில் அர்ச்சனை செய்து, மாலை மாட்டிவிட்டு, அப்படியே வள்ளி வீட்டு முன் போய் நிறுத்தி ஹாரன் அடித்தாள். வள்ளி தோளில் பையுடன் ஓடிவந்தாள். பின்னாலேயே அவளது அம்மாவும் ஓடி வந்தாள். வள்ளியின் முகத்தில் பரவசம். அவளது அம்மாவின் முகத்திலோ ஈயாடவில்லை.
இருவரும் வண்டியில் கிளம்பினார்கள். கொஞ்ச தூரத்தில் பெட்ரோல் பங்க் வந்தது. வண்டியை நிறுத்தினாள் சரசு.
‘ அஞ்சு லிட்டர் போடுங்க… ‘ என்றாள் சரசு. சொல்லிவிட்டு பர்ஸை எடுத்தாள்.
‘ யே… இருடி… ‘ என்றுவிட்டு தனது பையை திறக்க முற்பட்டாள் வள்ளி.
தடுத்தாள் சரசு. ‘அய்யே… நான் வண்டி வாங்கியிருக்கேன். நான் பெட்ரோல் போட மாட்டேனா… பேசாம பையை மூடிவை… ‘ என்று செல்லமாக கண்டித்தாள் சரசு.
பெட்ரோல் போட்டுக்கொண்டு மொபெட் ஓடவாரம்பித்தது.
‘ ஸாரிடி… ‘ என்றாள் வள்ளி.
‘ என்னடி… எதுக்கு ஸாரி… ‘ சிரித்தாள் சரசு.
‘ அது வந்து… ‘ என்று இழுத்தாள் வள்ளி. பிறகு சொன்னாள், ‘ நேத்திக்கு மொபெட் நல்லாத்தான் இருந்துச்சு… நாந்தான் பஸ்லே போனேன்… ‘ என்று நிறுத்தினாள்.
திகைத்த சரசு, தனது திகைப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘ சரி அதுக்கென்ன இப்போ… நான்தான் மொபெட் கொண்டு வந்துட்டேனே… டோண்ட் வொர்ரி… இனிமே இதுலேயே போய்க்கலாம்… ‘ என்று சிரித்தாள்.
‘ அதில்லே… எங்கம்மாதான்… ‘ மறுபடியும் இழுத்தாள் வள்ளி.
‘ அம்மாதான்… ‘ வினவினாள் சரசு.
‘தினமும் அவளை ஏற்றிக்கிட்டு போறியே… அப்பைக்கப்போ பெட்ரோலுக்கு காசு வாங்கிக்கோயேன், பஸ்ல போனா செலவு செஞ்சுதானே ஆகணும்னு முன்னே ஒரு நாளு சொன்னாங்க… நான் கூட சத்தம் போட்டேன்… நீ ஏன்மா இவ்ளோ அல்பமா இருக்கேன்னு கூட கேட்டேன்… நேத்திக்கு… வண்டியை மூடி வச்சிட்டு பஸ்லே போயேன்… அவளும் பஸ்லே வரட்டும்… வண்டி என்ன சும்மாவா ஓடுது… அவ வந்தாள்னா வண்டி பஞ்சர்னு சொல்லிக்கறேன்னுட்டாங்க… நான் எவ்வளவோ மறுத்தேன்… சாவியை பிடுங்கி வச்சுக்கிட்டாங்க… அதான்… இதையெல்லாம் எப்படி உன்கிட்டே சொல்றதுன்னுதான்… நேத்துலேர்ந்து மண்டையைப் போட்டு உலப்பிக்கிட்டே இருந்தேன்… ‘
‘அடச்சே… இவ்ளோதானே… இப்போ ஃப்ரீயாயிடுச்சில்லே… எல்லாத்தையும் மறந்திடு… கம்முனு வா… ‘ என்று சிரித்தாள்.
அதற்குள் ஆபீஸ் வந்துவிட்டது.
‘நீ எல்லாத்தையும் இப்போவே மறந்திடு… இனிமே என் மொபெட்டுலேயே போய்க்கலாம்… இன்னொரு தடவை பெட்ரோலுக்கு காசு குடுக்கறேன்னு சொன்னியோ… நடக்கறதே வேற… ‘ என்று சிரித்தபடி படிகளில் ஏறினாள் சரசு
வள்ளிக்குத்தான் நாம் அல்பமாக நடந்துகொண்டோமே என்று ரொம்ப நேரம் உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. அப்போதே வீட்டுக்குப் போனதும் அம்மாவை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்றும் உறுதி எடுத்துக்கொண்டாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings