எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த ஹாலில் கிட்டத்தட்ட இருபது பேர் கூடியிருந்தனர். எல்லோரும் டிப்டாப்பான டிரெஷ்ஷில் இருந்தார்கள். சிலர் டை கட்டிக்கொண்டும் ஷூவும் போட்டுக் கொண்டுமிருந்தனர். புதியதான பேண்ட் சட்டையிலும் உட்கார்ந்திருந்தனர். ஆனால் எல்லோருமே இரண்டு விஷயங்களில் ஒருமித்து இருந்தனர். கையில் ஒரு ஃபைல்… கூடவே கொஞ்சம் பதட்டம்…
மேனேஜர் வேலைக்கு கூப்பிட்டிருந்தார்கள். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு வேண்டும், நிர்வாக படிப்பு இருந்தால் கூடுதல் கவனம் பெறுவார்கள். மேலும் கம்ப்யூட்டர் தெரிந்திருந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெறுவார்கள்… ஆனால் முன் அனுபவம் அவசியம் இல்லை என்றும் சொல்லியிருந்தார்கள்.
கணேஷும் அங்கே உட்கார்ந்திருந்தான். இது அவனுக்கு ஐந்தாவது படையெடுப்பு. ஏற்கனவே நான்கு கம்பெனிகளில் ஏறி இறங்கி வெறுத்தும் போயிருந்தான். ஒருவேளை இந்தத் தேர்விலும் வேலை கிடைக்கவில்லை என்றால், ஏற்கனவே அவனது நண்பர்கள் ஆரம்பிக்க உத்தேசித்திருக்கும் ரெஸ்டாரன்ட்டில் தானும் ஒரு பங்குதாராராக ஆகிவிடுவது என்றும் முடிவு செய்துகொண்டுதான் வந்திருந்தான். அவனது அப்பாவும் அதற்கு சம்மதித்து ஐந்து லட்சம் கொடுக்கவும் சம்மதித்திருந்தார்.
பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். ஒன்பது ஐம்பதுக்கே வந்துவிட்டான். பத்தரை மணிக்கு ஒரு ஜூஸ் வந்தது. குடித்தார்கள். பன்னிரண்டு மணிக்கு இரண்டு போண்டாவும் ஒரு காஃபியும் வந்தது, சாப்பிட்டார்கள்.
ஆளாளுக்கு குசுகுசுவென பேசிக்கொண்டே இருந்தனர். சொந்தக் கதை… சோகக் கதை… அரசியல்… சினிமா… ஓரிருவர் தாங்களுக்குள் பேசிக்கொள்ள, கணேஷ் எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தான்.
ஒரு மணிக்கு ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். கணேஷும் போனான். இரண்டே கேள்விகள் தான் கேட்டார்கள். அனுப்பி விட்டார்கள்.
எல்லோரும் அதே ஹாலில் மறுபடியும் வந்து குழுமினர். ஒவ்வொருவரும் தங்களுக்கு என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்று சொல்லிவிட்டு மற்றவர்களிடம் என்ன கேள்விகள் கேட்டார்கள் என்றும் சுவாரசியாமாக கேட்டுக்கொண்டிருந்தனர்… மண்டையைப் போட்டு குழம்பிக்கொண்டும் இருந்தனர். ஒன்னரைக்கேல்லாம் தேர்வு முடிந்து விட்டது. பத்து நிமிடம் ஒரே அமைதி.
கொஞ்ச நேரத்தில் ஒருவர் உள்ளே வந்தார்.
‘நண்பர்களே, மொத்தம் பத்தொன்பது பேர் வந்திருந்தீங்க. ஒரு வருத்தமான விஷயம்… நாங்க எதிர்பாக்கற தகுதி யாருக்கும் இல்லை… ஆனாலும் லெட்டர் வரும். நீங்க எல்லோரும் கிளம்பலாம்… ஆல்தி பெஸ்ட் ஆஃப் லக்… ‘ என்றுவிட்டு மடமடவென திரும்பி விட்டார்.
எல்லோரும் ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு புலம்ப ஆரம்பித்தனர். சலசலப்பு… ஆனாலும் அந்த சலசலப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. ஒவ்வொருவராக கிளம்பளாயினர். கொஞ்ச நேரத்தில் கணேஷ் மட்டுமே அங்கே மீதமிருந்தான்.
அவனுக்கும் குழப்பம். அந்த நபர் உள்ளே வந்து முடிவு சொன்னதில் இருந்து அவன் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளவுமில்லை. ஆனால் குழப்பம் மட்டும் உள்ளுக்குள் குடைந்தது.
‘ஒருவேளை, இது வெறும் கண்துடைப்பாக இருக்குமோ. அவர்களது சொந்தக்காரர்களுக்கே வேலையை போட்டுக்கொடுத்துவிட்டு, நேர்முகத் தேர்வு என்று பெயருக்கு ஒன்று நடத்தியது போல கணக்கு மட்டும் காட்டிக்கொள்வார்களோ… இப்படி தேர்வுக்குக்கு அழைத்துவிட்டு, ‘நீ எதற்கும் லாயக்கில்லை… ‘ என்று ஏன் சொல்ல வேண்டும். அதற்குப் பதிலாக நாம் கூரியரில் அனுப்பிய விவரங்களைப் படித்துப் பார்த்து விட்டு நமக்குத் தகுதியில்லை என்றால் கூப்பிடாமல் இருந்திருக்கலாமே… ‘
‘தேவையான தகுதி இல்லை என்றதற்கப்புறம் லெட்டர் வேறு போட்டு, வடிவேலு ஜோக்கில் வருவது போல, ‘ நீ அதற்கு லாயக்கில்லை… ‘ என்றும் சொல்ல வேண்டுமா… ‘
‘கடவுளே இதை யாரிடம் போய் கேட்பது. இண்டர்வியூ ரூமுக்கே போய் நேரடியாக அவரிடமே கேட்கலாமா… அவர் அந்த ரூமில் இருப்பாரா… அல்லது ஜி.எம். என்று ஒருவர் இருப்பாரே… அவர் எங்கேயிருப்பார் என்று கேட்டுப்போய் அவரிடம் கேட்கலாமா… ‘
எதேச்சையாக முன்பு வந்து முடிவு சொன்ன அதே ஆள் மறுபடியும் வந்து உள்ளே எட்டிப் பார்த்தார். இவன் மட்டும் இருப்பதைப் பார்த்து புன்னகைத்தார். இவன் சட்டென எழுந்து கொண்டான்.
‘ நல்லதாகப் போய்விட்டது, இவரிடமே கேட்டுவிடலாம்… ‘ என்ற யோசனை உதிக்க பட்டென, ‘ஸார்… நான் உங்க ஜி.எம்.மை பார்க்கனும்… ‘ என்றான்.
மெலிதாய் சிரித்தபடி, ‘ ஏன்… என்ன விஷயம்… ‘ என்றார் அவர்.
‘எங்கக்கிட்ட அப்படி என்ன தகுதியை எதிர்பார்த்தாங்கன்னு கேட்கணும்… ‘ என்றான்.
இப்போது பலமாக சிரித்தார் அவர். ‘எங்க ஜி.எம்.மும் உங்களை பார்க்கனும்னு கூப்பிடறார்… வாங்க, என்கூட … ‘ என்றார்.
‘உங்க ஜி.எம்.எங்கே இருப்பார்…. ‘
‘உங்களுக்கெல்லாம் இண்டர்வியூ எடுத்தாரே அவர்தான் எங்க ஜி.எம்… ‘
இவர்கள் உள்ளே போனதும் புன்னகைத்தபடி நாற்காலியைக் காட்டிகொண்டே, ‘ ப்ளீஸ்… ஸிட்… ‘ என்றார் ஜி.எம். கூட வந்தவர் அப்படியே நின்றுகொண்டார்.
இவன் உட்கார்ந்தான். பிறகு அவரை நேரடியாகப் பார்த்து கேட்டான்.
‘ஸார்… எங்களோட டீட்டெயில் எல்லாத்தையும் ஏற்கனவே கொடுத்திருந்தோம். நீங்க எதிர்பார்க்கற தகுதி எங்ககிட்டே இல்லேனா எங்களை நீங்க இண்டர்வியூக்கு கூப்பிட்டிருக்கவே வேண்டாமே ஸார்… எங்க டைமும் வேஸ்ட்… உங்க டைமும் வேஸ்ட்… ஸாரி… நான் தப்பா ஏதும் கேட்கலைன்னு நினைக்கறேன்… ‘
சிரித்தார் அவர். ‘கூப்பிட்டாத்தானே யார் எப்படிங்கற விவரம் தெரியும் ‘ என்றவர் பக்கத்திலிருந்த கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை காட்டியபடி, ‘பத்து மணிலேர்ந்து யார் யார் வந்திருக்காங்க… என்னென்ன பண்ணிட்டிருக்காங்கன்னு நாங்க இங்கே இருந்து வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருந்தோம். இதுல வாய்ஸ் ரிக்கார்டிங்கும் உண்டு. நல்லா கவனிச்சதுல நீங்க எல்லாரோடேயும் சரளமா பேசினீங்க. அரசியல், சினிமா, மார்க்கட் நிலவரம், விலைவாசின்னு உங்க டாப்பிக் விரிஞ்சுக்கிட்டே போச்சு. உங்க யாருக்கும் நாங்க எதிர்பார்த்த தகுதி இல்லைன்னதும், எல்லோரும் புலம்பிக்கிட்டே போனாங்க. ஆனா நீங்க மட்டும் ஏதோ காரணத்துக்காக காத்துக்கிட்டிருந்தீங்கங்கறதையும் கவனிச்சிட்டோம். மக்களோட மக்களா ஒன்றிப்போற உங்க தன்மை. உங்களோட ஆழ்ந்த சிந்தனை, வேலை இல்லைன்னதும் அத்தோட சரின்னு போயிடாம அதுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கற உங்க ஆர்வம் எல்லாமே எங்களை ஈர்த்துடுச்சு. அதான் உடனே ஹெச்.ஆரை விட்டு உங்களை கூப்பிட்டேன். இது ஹெச்.ஆர். மேனேஜ்மென்ட் கம்பெனி. மக்களோட ஒன்றி அவங்களை கண்ட்ரோல் பண்ணனும். கம்பெனிகளோட தொடர்பு ஏற்படுத்திக்கிட்டு நம்மகிட்ட பதிவு பண்ணினவங்களை வேலைக்கு எடுத்துக்க அவங்ககிட்ட பேசணும்… இப்படி மக்களுக்காக மக்களோட ஒன்றிப் போற ஒருத்தர்தான் எங்களுக்கு தேவை. ஆக, எங்களுக்கு தேவையான கேண்டிடேட் நீங்கதான்… ’ என்று நிறுத்தியவர், நின்று கொண்டிருந்தவரைக் காட்டி, ‘இவர் பெயர் ராமச்சந்திரன். எங்க ஹெச்.ஆர்…. இவரோட போங்க… உங்களுக்கான மேனேஜர் போஸ்ட்டுக்கான ஆர்டரை அவர் தருவார். போய் வாங்கிக்கங்க. சீக்கிரம் வேலைல சேருங்க… வாழ்த்துக்கள்…‘ என்றபடி கைகொடுத்தார்.
ஜி.எம்.க்கு கைகொடுத்து நன்றி சொல்லிவிட்டு வேலைக்கான ஆர்டரை வாங்க இதோ போய்க் கொண்டிருக்கிறான் கணேஷ்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings