எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த மகப்பேறு லேபர் வார்டிலிருந்து மஹாலக்ஷ்மியை ஒரு தனி ரூமிற்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள். மஹாலக்ஷ்மியை ஒரு ஸ்ட்ரெச்சாரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தாள் ஒரு நர்ஸ். மகாலக்ஷ்மிக்கு இன்னும் லேசாய் மயக்கம் இருந்தது.
கூடவே வந்துகொண்டிருந்த அவளது அம்மா கல்யாணி, மகளின் கையை லேசாய் பற்றி, ‘மஹா… கொஞ்ச நேரம் மயக்கம் இருக்கும்னு டாக்டரம்மா சொன்னாங்கம்மா… நீ கண்ணு முழிச்சதும் குழந்தையை பார்ப்பே… சரியா … ‘ என்றாள். அவள் பாதி மயக்கத்திலும் முனகினாள்,
‘ அம்மா… அவருக்கு போன் பண்ணுனீயா… ‘
கல்யாணி மெல்லிய குரலில், ‘ ஃபோன் போட்டேன்மா… விஷயம் சொன்னேன்… ஆனா மீட்டிங்க்ல இருக்கேன்னுட்டு போனை கட்பண்ணிட்டார்ம்மா… ‘ என்றாள்.
கூட வந்த நர்ஸ் சொன்னாள், ‘ அக்கா… ஸ்ட்ரெயின் எடுத்து பேசாதீங்க… இன்னும் ரெண்டுமணி நேரமாவது ஆகும் ஃபுல்லா மயக்கம் தெளிய. அதுவரை நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும்… சரியா… ‘ என்றாள் கட்டளை இடும் தொனியில்..
அவர்களுக்கு ஒதுக்கிய அறை சுத்தம் செய்யப்பட்டு தயாராக இருந்தது. அது இரண்டு படுக்கைகள் கொண்ட அறை. இன்னொன்று அப்போது காலியாக இருந்தது. கூட வந்த நர்ஸ் இன்னொரு நர்ஸை உதவிக்கு அழைத்து மஹாலக்ஷ்மியை ஸ்ட்ரெச்சரிலிருந்து தூக்கி படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, ட்ரிப்பை போட்டுவிட்டு, கல்யாணியைப் பார்த்து, ‘ அம்மா… தேவையில்லாம பேச்சு குடுக்காதீங்க… அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்… ‘ என்றுவிட்டு ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு வெளியேறி விட்டாள்.
மகளைப் பார்ப்பதும், இறங்கிக் கொண்டிருக்கும் ட்ரிப்பை பார்ப்பதுமாக இருந்தாள் கல்யாணி.
பத்து நிமிடங்களில் கதவைத் தட்டியபடி ஒரு நர்ஸ் உள்ளே எட்டிப்பார்த்து, ‘ அம்மா அடுத்த பெட்டுக்கு ஆள் வருதுமா… நீங்க சேர்ல உட்கார்ந்துக்கங்க…‘ என்றாள்.
சற்று நேரத்தில் கதவுகளை திறந்துகொண்டு ஒரு ஸ்ட்ரெச்சரை இழுத்து வந்தார்கள். ஒரு இளவயது பெண்மணி படுத்திருந்தாள். இருபத்தைந்து இருபத்தாறு வயது இருக்கும். பின்னாலேயே ஒரு அம்மாவும், ஒரு அய்யாவும், குழந்தையை தூக்கியபடி ஒரு நர்ஸும் உள்ளே நுழைந்தார்கள்.
ஸ்ட்ரெச்சரிலிருந்து அந்தம்மாவை இறக்கி படுக்க வைத்துவிட்டு குழந்தையை அந்த பெரியம்மாவிடம் கொடுத்துவிட்டு அந்த நர்ஸ் போய்விட, மெல்ல பேச்சு கொடுத்தாள் கல்யாணி.
‘ குழந்தை ஆணா பொண்ணாம்மா… ‘
அந்த பெரியம்மா, ‘ பையன்மா… முதல் குழந்தை… ‘ என்றாள், வாயெல்லாம் பற்களாய்.
‘ எந்த ஊருமா… ‘ என்றாள் கல்யாணி.
‘புதுக்கோட்டை… இருபத்தெட்டு வருஷத்துக்கு முன்னே என் பையனும் இங்கேதான் பொறந்தான். அப்போ இது சின்ன ஆஸ்பத்திரியா இருஞ்சுச்சு… இதே டாக்டர்தான் அப்போவும் பிரசவம் பார்த்தார். கல்யாணமாகி இப்போ அவங்க ஒய்ஃபும் இங்கே பிரசவம் பார்க்கறாங்க… ‘ என்றுவிட்டு பக்கத்தில் இருந்தவரைக் காட்டி, ‘ இது என் வீட்டுக்காரருங்க…‘ என்றாள் அந்த பெரியம்மாள். கூடவே படுக்கையிலிருந்தவளைக் காட்டி, ‘ இது என் மருமக… ‘ என்றாள்.
ஆவல் பொங்க, ‘ நான் பையனை தூக்கிக்கட்டுமா… ‘ என்று எழுந்தாள், கல்யாணி.
‘ ஓ தாராளமா.. ‘ என்று அந்த பெரியம்மாவும் எழ, குழந்தை கைமாறியது.
‘ குழந்தை எப்போ பொறந்துச்சு… ‘
‘ நேத்து ராத்திரி… சுகப் பிரசவம்தான். பொது வார்டுலத்தான் இருந்தோம். அங்கே ஏக கும்பல்… கசகசன்னு இருக்கவும் தனி ரூம் கேட்டோம். இங்கே கொண்டு வந்து விட்டுட்டாங்க… ‘ அந்த பெரியம்மா பெருமை பொங்க சொன்னாள்.
குழந்தையை வாங்கி கொஞ்ச ஆரம்பித்தாள் கல்யாணி. குழந்தைக்கு பூப்போட்ட கவுன் போட்டிருந்தார்கள். பவுடர் அடித்து கமகமவென வாசனை அடித்தது. மஹாலக்ஷ்மியைக் காட்டி, ‘ இது உங்க மருமகளா ‘ என்றாள் அந்த பெரியம்மா.
‘ இல்லை… என் மகள்… ‘ என்றாள் கல்யாணி.
‘ குழந்தை… ? ‘ கேட்டாள் பெரியம்மா…
‘ சிஷேரியன்தான். இன்னும் கொண்டு வரலை… ‘ என்றாள் இவள்.
அப்போது பார்த்து, கதவு தட்டும் சத்தம். திரும்பினார்கள். கதவைத் திறந்துகொண்டு மணி எட்டிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் எழுந்து கொண்ட கல்யாணி, அந்த பெரியம்மாவைப் பார்த்து, ‘ எங்க மருமகன்… ‘ என்றாள்.
மெல்ல உள்ளே வந்தவன் மாமியார் கையில் இருக்கும் குழந்தையைப் பார்த்தான். உற்றுக் கவனித்தான். அவனது கண்கள் விரிந்தன. உடனே ஏதோ நினைத்துக்கொண்டது போல, ‘ அத்தை… இதோ வந்துடறேன்… ‘ என்றுவிட்டு விடுவிடுவென வெளியேறினான்.
கொஞ்ச நேரத்தில் ஒரு சாக்லேட் பாக்கெட், புதியதாய் பிறந்த குழந்தை என்று சொல்லி அவனுக்குப் பிடித்த ஸ்கைப்ளூ கலரில் ஒரு ஜோடி கவுனும் மஹாலக்ஷ்மிக்குப் பிடித்த பிங்க் கலரில் இரண்டு ஜோடி கவுனும் வாங்கிக்கொண்டு, ஒரு சோப்பும் பவுடரும் வாங்கிக் கொண்டு வேகமாய் ஓடி வந்தான்.
அவன் வந்து சேரும் முன்பே, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள் ஒரு நர்ஸ். குழந்தையுடன் சேர்த்து பவுடர் வாசனையும் உள்ளே நுழைந்தது.
மஹாலக்ஷ்மியை மெல்லத் தட்டி, ‘ அக்கா… உங்க குழந்தையை கொண்டு வந்திருக்கேன்… கண்ணு முழிச்சு பார்க்க முடியுமா… ‘ என்று அவளை எக்கிப் பார்த்தாள் நர்ஸ். அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஏதோ முனகினாள். முகத்தையும் திருப்பிக்கொண்டாள்.
‘பெரியம்மா நீங்க வாங்கிக்கங்க… ‘ என்றுவிட்டு மஹாலக்ஷ்மியின் கையிலிருந்த அடையாள அட்டையையும் குழந்தையின் கையிலிருந்த அடையாள அட்டையும் ஒப்பிட்டுக் காட்டி, ‘உங்க குழந்தைதாம்மா… நம்பர் சரியா இருக்கானு பார்த்துக்கங்க… ‘ என்றாள் நர்ஸ்.
அதற்குள் கல்யாணி தன் கையிலிருந்த குழந்தையை அடுத்த படுக்கை பெரியம்மாவிடம் கொடுத்துவிட்டு, தன் பேரக்குழந்தையை முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள். நம்பரையும் சரி பார்த்துக் கொண்டாள்.
நர்ஸ் வெளியேறவும் மணி உள்ளே வரவும் சரியாக இருந்தது. இருவரும் முட்டிக்கொள்ள இருந்தனர். சுதாரித்துக் கொண்ட கல்யாணி சட்டென, ‘ எங்க மருமகன் தாம்மா… ‘ என்றாள் நர்ஸிடம்.
கையிலிருந்த சாக்லேட் பாக்கெட்டையும் துணி கவரையும் நாற்காலியில் வைத்துவிட்டு, புன்னகையுடன் குழந்தையை வாங்கிகொண்டான்.
எதேச்சையாய் இடுப்புக்கு கீழே பார்த்துவிட்டான். திடுக்கிட்டான்.
பின்குறிப்பு: கதையின் தலைப்பை ஒருமுறை பாருங்களேன்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings