இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“கவி நம்ம குழந்தைய பாரு.. கவி” என்னை யாரோ கூப்பிடும் குரல் கேட்டு மெல்ல தூக்கத்தில் இருந்து கண் விழிக்க முயன்றேன்.
“இங்க பாரு கவி நம்ம பாப்பா” கண்களில் மகிழ்ச்சி பொங்க ஆனந்த புன்னகையுடன் கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார் என் கணவர்.
நான் படுக்கையில் படுத்திருந்தேன், என்னருகே வந்து குழந்தையின் முகத்தை காண்பித்தார் ஆதி.
குழந்தையின் முகத்தை கண்டதும் பேரின்பம் அடைந்தேன்.
இவள் தான் என் வயிற்றில் இத்தனை நாள் என்னோடு வளர்ந்தவளா..
இந்த கைகள் தான் என்னை அவ்வப்போது தொட்டுப் பார்த்ததா.. இந்த கால்கள் தான் என்னை உதைத்ததா.. இந்த தலை தான் வெளியில் வராமல் அடம் பிடித்தது.
என் தங்கமே..
என் மூலம் ஒரு உயிர் இன்று இந்த மண்ணில் பிறந்திருக்கிறதா..
உண்மையிலேயே இவள் எங்கள் மூலம் வந்த அதிசயம் தான்.
குட்டி கண்களை கொஞ்சமாக திறந்து அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். நாங்கள் கொடுத்த கண் காது மூக்கு வாய்யா இது. எங்கள் பிம்பமாய் வளர போகும் செல்வமா இவள்.
இத்தனை நேரம் நான் அடைந்த துன்பம் யாவும் இவளை கண்ட இந்த நொடி கரைந்து போனது.
ஈன்ற பொழுதை விட முதன் முதலில் என் குழந்தையை கண்ட பொழுது பெரிதுவக்கிறது.
இன்னொரு ஆச்சர்யம் நான் குழந்தையை முதலில் பார்த்து என் கணவருக்கு காண்பிக்க வேண்டும். ஆனால் இங்கோ அவர் முதலில் பார்த்து என்னிடம் காட்டினார்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது என்ன குழந்தை வேண்டும் எந்த நாள் பிறக்க வேண்டும் எப்படி பிறக்க வேண்டும் என்றெல்லாம் பல ஆசை இருக்கும். அவை நடந்தாலும் சரி நடக்க வில்லையென்றாலும் சரி, தான் பெற்ற குழந்தையை பார்க்கும் பொழுது கையில் இருப்பதே பெரிய பொக்கிஷமாய் தோன்றும்.
என் அப்பா, அம்மா, மாமனார், மாமியார் எல்லோரும் அறைக்குள் உள்ளே வந்தனர்.
குழந்தையை ஒவ்வொருவராக தூக்கி பூரிப்படைந்தார்கள்.
“குழந்தை பொறந்ததும் கைல வாங்குறது எவ்ளோ பெரிய சந்தோசம்” என்றார் அத்தை.
“டாக்டர் கூப்டதும் நாங்கல்லாம் வாங்கலாம்ன்னு கிட்டப் போனோம்.. மாப்பிள்ளை போய் முதல்ல குழந்தைய வாங்குனார்.. அவ்ளோ சந்தோசம் அவருக்கு” என்றார் அம்மா.
“உன்னை மாதிரி இல்லை, பாப்பா ரொம்ப அழகா இருக்கா” கிண்டலடித்தாள் அமுதினி.
நான் எதுவும் பேசாமல் அவர்கள் பேசுவதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
என் குழந்தையை பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தேன்.
“ஆபரேஷன் இப்போதான் ஆயிற்கு எதுக்கு ரூம்குள்ள இவ்ளோ பேர்.. ரெண்டு பேர் மட்டும் இருங்க” என்றார் உள்ளே வந்த செவிலியர்.
ஆதியும் என் அம்மாவையும் தவிர மீதி இருந்தவர்கள் வெளியேறினார்கள்.
என் கையில் எதையோ மாட்டி பரிசோதித்தார்கள்.
எனக்கு மீண்டும் தூக்கம் வந்தது. மிதப்பது போல் மயக்க உணர்வு. என் குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டே கண்களை மூடினேன்.
நன்கு உறங்கினேன்.
வெகுநேரத்திற்கு பின் குழந்தை அழும் சத்தம் கேட்டது. கனவில் கேட்பது போல் இருந்தது. சத்தம் அதிகமானது என்னருகே கேட்பது போல் இருந்தது.
கண்களை திறந்து பார்த்தேன்.
என் மகள் தான் அழுது கொண்டிருந்தாள்.
“க்குவா க்குவா க்குவா” என் குழந்தையின் அழுகை சத்தத்தை மெய்மறந்து ரசித்தேன்.
“பால் குடுக்குறியா கவி.. நைட் நீ தூங்கிட்டன்னு தொந்தரவு பண்ண வேணாம்னு சொன்னாங்க, அப்போ பவுடர் பால் குடுத்துட்டோம். இனி நீயே குடுக்குறியா?” அம்மா என் மகளை கையில் தூக்கி அணைத்தபடி என்னிடம் கேட்டார்.
“விடிஞ்சிருச்சா?”
“ஆமா கவி.. நம்ம பாப்பா நைட் பொறந்தா.. நீ மயக்கமா இருந்த பாப்பாவ பாத்துட்டு தூங்கிட்ட.. இப்போ காலைல எட்டு மணி” என்றார் ஆதி.
இப்பொழுது தான் உடலில் இருந்த வலி தெரிந்தது. எழவே முடியவில்லை. அம்மாவும் ஆதியும் தூக்கி அமர வைத்து சாய வைத்தார்கள்.
குழந்தையை தொட்டுத் தூக்கினேன். அடி வயிற்றில் வலி இருந்தது. அம்மாவும் கை வைத்து பாப்பாவை தாங்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்.
“ம்மா ங்கா ங்கா”
“அம்மா பாப்பா அம்மா இங்கான்னு அழுவுற” வியந்து கூறினேன்.
“எல்லா குழந்தையும் அழுவும் போது அம்மா இங்கான்னு சொல்ற மாதிரி தான் இருக்கும்”
“எனக்கு நல்லா கேட்டுச்சு மா.. என்னதான் பாப்பா கூப்டா”
“உன் மவ உன்னை கூப்பிட்டதாவே இருக்கட்டும் பால் குடு.. பால் கொஞ்சம் கொஞ்சமா தான் வரும் குடுக்க குடுக்க ஊறிக்கும்”
உடல் வலி ஒருபுறம் மன நெகிழ்ச்சி ஒருபுறம். இரண்டும் சேர்ந்து என்னை ஆட்டுவித்தது.
“கவியினியாள்” என் மகப்பேறு மருத்துவர் அறைக்குள் வந்தார்.
“நல்லா தூங்குனியா?”
“எஸ் மேம்”
“தூங்காம வலில ரெண்டு நாளா இருந்திங்கல்ல அதான் ரொம்ப சோர்வா இருந்திருக்கும்.. இனிமே பெட்டர் ஆயிடும்..”
“தூங்கிட்டே இருக்கா கவி” என்றார் அம்மா.
“ஆமாங்கம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க.. அப்புறம் தான ஆபரேஷன் பண்ணோம்.. பால் குடிக்கிறாளா?”
“கொஞ்சதான் குடிச்சா”
“பொறுமையா தான் குழந்தைங்க பழகும்.. தலைலாம் ஏன் கலஞ்சி இருக்கு.. நல்லா தலை சீவி முகம் கழுவி நீட்டா இருங்க.. நீங்க பேஷண்ட் இல்லை, அம்மா”
“ஓகே மேம்”
“மெல்ல மெல்ல எழுந்து நடக்க ஆரம்பிக்கணும்.. அப்போ தான் டிஸ்சார்ஜ் பண்ணுவேன்”
“காலே கீழ வெக்க முடில மேம் ரொம்ப வலிக்குது”
“கீழ இறங்கி நடக்க ஆரம்பிங்க.. கொஞ்சம் கொஞ்சமா சரி ஆயிடும்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.
“நான் குழந்தை அழறது கூட தெரியாம இருந்துருக்கேன் மா.. ஆபரேஷன் தியேட்டர்ல குழந்தை அழுததே எனக்கு தெரில”
“நீ உள்ள போய் பத்து பதினஞ்சு நிமிஷத்துல குழந்தை சத்தம் எங்களுக்கு கேட்ருச்சு”
“அப்படியா.. எனக்கு தான் சுத்தமா தெரில”
“அவ்ளோ டையர்டு உனக்கு” உள்ளே வந்த சித்தி கூறினார்.
“வாங்க சித்தி”
“எனக்கும் சிசேரியன் தான்.. குழந்தை பொறந்ததும் அப்படியே ஏன் கைல குடுத்தாங்க”
“அப்படியா”
“ஆமா.. சிசேரியன் வேணாம்னு அழுதியாம்.. நான் பண்ணி பத்து பதினஞ்சு வருஷம் ஆகுது நல்லாத்தான் இருக்கேன்.. நம்ம உடம்பு பாத்துக்கிறதுல தான் இருக்கு”
“இல்லை நான் முன்னாடியே அதுக்கு தயாராகலை.. சிசேரியன்னும் நிறைய பேர் விரும்பி பண்ணிக்கிறாங்க.. அது அவங்க அவங்க இஷ்டம்.. நான் நார்மல்னு எதிர்பாத்துட்டேன்”
“குழந்தை நல்லா இருந்தா சரி.. உன் உடம்ப பொறுமையா தேத்திக்கலாம்”
“சரிங்க சித்தி.. குழந்தை வெளிய வந்ததும் அழுதது உங்களுக்கு கேட்டுச்சா?”
“கேட்டுச்சு.. எனக்கு கீழ மரத்து போச்சி.. ஆனா நினைவெல்லாம் இருந்துச்சு”
“நான் தான் ரொம்ப மயங்கிட்டேன் போல சித்தி எனக்கும் குழந்தை பொறந்ததும் பாத்துருக்கணும்னு தோணுது”
“அதனால என்ன அடுத்த புள்ளை பெக்கும் போது பாத்துக்கோ”
“இந்த கதையே இப்போதான் முடியுது அதுக்குள்ள அடுத்த கதையா..” நகைச்சுவையாய் கூறினார் ஆதி
“கடவுள் குடுக்கற வரம் சித்தி.. பின்னாடி எப்படி நடக்கும்னு இருக்கோ… அப்போ பாத்துக்கலாம்” என்றேன்.
ஒவ்வொருவராக என் குழந்தையை பார்க்க வந்தார்கள்.
இப்பொழுது நான் கவியினியாள் என்பதை விட என் மகளின் அம்மாவாக பார்க்கப் பட்டேன். இந்த புது அடையாளம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க.. உனக்கு பொண்ணு புதன்கிழமையே கிடைச்சிருக்கு” என்றார் குழந்தையை பார்க்க வந்த பெரியம்மா.
“நாங்க கூட இத யோசிக்கல பெரியம்மா.. எதிர்பாக்கவே இல்லை”
“கவி நீ எதிர்பாக்காத இன்னொன்னு கூட நடந்திருக்கு”
“என்ன ஆதி?”
“நீ ப்ரக்னன்சில எந்த புக் படிச்ச சொல்லு”
“நான் ரெண்டு மூணு புக் படிச்சேன்”
“இல்லை கவி ரொம்ப நாளா ஈடுபாடோட என்ன படிச்ச”
“உடையாரா?”
“ஆமா.. உடையார் எழுதுனது யார்னு தெரியுமா?”
“பாலகுமாரன்”
“அவரோட பிறந்தநாள் நேத்து.. ஜூலை 5. நேத்து தான் நம்ம பாப்பாவும் பொறந்துருக்கா”
நான் ஆச்சர்யத்தில் வியந்து பார்த்தேன்.
என்னுடைய அலைபேசியை எடுத்தேன்.
அதில் ஜூலை 5 பாலகுமாரனின் பிறந்தநாள் என்பதோடு அவர் எழுதிய வரிகள் என் முகப்பில் வந்தது.
ஆசைப்பட்ட பொருள், ஆசைப்பட்ட நேரத்தில், ஆசைப்பட்ட விதத்தில் கிடைக்காமல் போவதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்!
(முற்றும்)
*****
கதாசிரியர் உரை :
கர்ப்பகால இனிய பயணத்தை புதினமாக படைக்க வேண்டும் என்கிற ஆசையில் எழுத ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில் என்ன எழுதி விட போகிறோம் ஒரு இருபது முப்பது அத்தியாயங்கள் எழுத முடியுமா என்கிற கேள்வியோடு தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எழுத எழுத என்னை மீறிய உந்து சக்தி எனக்குள் பல எண்ணங்களை விதைத்தன. எடுத்த தலைப்பு அப்படி அல்லவா!
கர்ப்பகால அதிசயங்களை அவ்வளவு சீக்கிரம் வார்த்தையில் விவரித்து விட முடியுமா என்ன. இது என்னுடைய சொந்த கதையா என்றொரு கேள்வி என்னை நோக்கி வருகிறது.
கடந்த வருடம்(2023) தான் நான் என் மகளை பெற்றெடுத்தேன். நிச்சயம் என் கதையின் சாயம் இந்த நாவலில் ஒட்டி இருக்கிறது. ஆனால் அதற்கு வண்ணங்கள் பல பேரின் வாழ்வில் இருந்து நான் எடுத்திருக்கிறேன்.
தற்சமயம் கருவுற்ற பெண்ணிற்கு அவள் உடலை பார்த்துக் கொள்வதும் மனதை பார்த்துக் கொள்வதும் வேலைக்கு செல்லும் எத்தனை சவாலானதாக இருக்கின்றன என்பதை பகிர்ந்து இருக்கிறேன்.
இப்போதைய மருத்துவ சூழல் எப்படி உள்ளது என்பதை அலசி உள்ளேன். உணவு முறை பற்றியும் அதிகம் மெச்சி இருக்கிறேன். கர்ப்ப காலத்தில் உணவின் பங்கு பெரிதாயிற்றே.
இதெல்லாம் சரி ஏன் இந்த புத்தகம் படிக்க வேண்டும்?
இந்த கதையை படிக்கும் பொழுது ஆண் நண்பர்கள் எங்காவது தாய்மையை உணர நேர்ந்தால் பெண் தோழிகள் இதை படிக்கும் பொழுது அவர்களின் கர்ப்ப கால நல்ல நினைவுகளை நினைவு கூர்ந்தால் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடந்து விட்டது என்று நினைத்தவர்கள் இதை படித்து மனதை தேற்றிக் கொண்டால் இப்படியெல்லாம் இருக்கிறது என்பதை அறிந்து விழிப்புணர்வோடு இருந்தால் என் கதை வெற்றி பெற்றதாய் அர்த்தம்.
அதற்காக இது கனமான நாவலோ கருத்து நிறைந்த நாவலோ இல்லை. நல்ல நினைவுகளை ஆசைப்போடும் மெல்லிய நாவல்.
என்னை நாவல் எழுத ஊக்குவித்து இதற்கு மேடை அமைத்து கொடுத்த சஹானா இணைய இதழிற்கு என் மனமார்ந்த நன்றிகள்
அன்புடன்
ரேவதி பாலாஜி
This post was created with our nice and easy submission form. Create your post!
//அவர் எழுதிய வரிகள் என் என் முகப்பில் வந்தது// முகப்பில் வந்தன என்றிருக்கவேண்டும். நாவல் பூராவும் ஒருமை/பன்மை விகுதிகள் தப்பாக எழுதப்பட்டுள்ளன. அதிலே ஆசிரியர் திருந்திக்கொள்ளவேண்டும். பிரசவவலியும் அதன் அனுபவங்களும் ஒரு அல்புனைவாகவே எனக்குத்தோன்றுகின்றன. கடவுள் நம்பிக்கைபற்றி ஆசிரியர் அலட்டிக்கொள்கிறார், அவருக்கு அது இருந்துவிட்டுப்போகட்டும், படைப்புக்குள் அதை இறக்கிவைப்பதைப்பின் நவீனத்துவம் அனுமதிப்பதில்லை. ஆசிரியர் வேறு தளங்களிலும் தன் கற்பனைகளை விரிவுபண்ணலாம். வாழ்த்துகள்!
ஒருமை பன்மை பிழைகளுக்கு நிச்சயம் வருந்துகிறேன். என் துறை தமிழ் அல்ல. வேறு துறையில் பணிபுரிந்து வருகிறேன். அதனால் என்னால் ஒருமை பன்மை பிழைகளை சரிவர கவனிக்க முடியாமல் போயிருக்கலாம். தமிழ் ஆர்வத்தில் எழுத்துலகில் பயணித்துக் கொண்டிக்கிறேன். இந்த பயணத்தை தொடங்கி விட்டு காரணம் கூறுவதும் தவறு. நிச்சயம் என் தவறுகளுக்கு வருந்துகின்றேன். மேலும் பயின்று பிழைகளை திருத்திக் கொள்கிறேன்.
கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் நம்மைத் தாண்டி ஒரு சக்தி இருக்கிறது என்றொரு நல் உணர்வில் மட்டும் அதை எழுத நினைத்தேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
நவீனம் காலம் என்று உணர்வுகளை சொல்லாமல் விடுவதும் எனக்கு சரியெனத் தோன்றவில்லை. எனினும் கதையை படித்து உங்கள் பார்வையை கூறியதற்கு நன்றி
உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
பிரசவ வலியும் அதன் அனுபவங்களும் அல்புனைவாக தோன்றுவதாக கூறியிருக்கிறீர்கள்.
பெண்கள் திரைப்படங்களை பார்த்தும் கதைகளை படித்தும் பிரசவம் இப்படித்தான் இருக்கும் என பல கற்பனைகள் செய்து வருகின்றன. ஆனால் நிஜம் வேறு. இந்தக் கதையின் மையமே யதார்த்தமான கர்ப்ப கால சூழலை விவரிப்பது தான். இதில் பெரிதாக கற்பனைகளை சேர்க்க நான் விரும்பவில்லை.
நிச்சயம் வேறொரு தளத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளோடு இன்னும் சிறந்த கதைகளை எழுத முயற்சிக்கின்றேன்.
கதையை பொறுமையாகப் படித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.
நீங்கள் சுட்டிக் காட்டிய பிழைகளை நிச்சயம் மனதில் வைத்து அடுத்த நகர்விற்கு செல்வேன். நன்றிகள்!