in ,

சிறை (சிறுகதை) – கோவை தீரா

எழுத்தாளர்  கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மேசை மீது ஒவ்வொரு வகையான உணவுகளையும் கொண்டுவந்து வைத்தாள் சஃபியா. அனைத்தும் அசைவம். கடைசியாக முட்டை மசாலாவையும் சப்பாத்திகளையும் வைத்துவிட்டு அழகு பார்த்தாள்.

எப்படியோ அவள் கணவன் ரஃபீக் சொல்லிவிட்டுப்போன அத்தனை வகைகளையும் சமைத்துவிட்டாள். மதிய உணவுக்கு சில முக்கியமான நண்பர்கள் வருவதாகவும் அவர்களுக்காக என்னென்ன சமைக்கவேண்டும் என்றும் நேற்றே சொல்லியிருந்தான்.

இது வழக்கமான ஒன்றுதான். இதுபோல வாரம் ஒருமுறையாவது மதிய உணவுக்கோ அல்லது இரவு உணவுக்கோ சிலபேரைக் கூட்டிக்கொண்டு வந்து உபசரிப்பது ரஃபீக்கிற்குப் பிடிக்கும்.

தன் வீட்டுச் சமையலை, வீட்டைப் பராமரிக்கும் அழகை எல்லாரும் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பான். அதில் அவனுக்குப் பெருமை. சஃபியாவிற்கு சமைக்கவும் பரிமாறவும் பிடிக்கும் என்றாலும் இந்த உபசரிப்பை அவள் மனதார வெறுத்தாள்.

அதிகாலை எழுந்து தியானம் செய்வதுபோல் ஒவ்வொரு வகையையும் பார்த்துப் பார்த்துச் சமைத்து வைப்பாள். ஆனால் துளிகூட பாராட்டோ நல்லவிதமாக சொல்வது கிடையாது. தன் வீட்டுச்சமையலை வருபவர்கள் பாராட்டலாம். ஆனால் அவளை பாராட்டிவிடக்கூடாது.

‘அதெல்லாம் வீட்டுப் பொம்பளங்களுக்கு சொல்லியா தரணும்? சமைக்கிறதவிட அவங்களுக்கு வேறவேலை என்ன இருக்கு?’ என்று கூறிவிடுவான்.  

அப்போது என்றில்லை, யாருமற்ற சாதாரண நாட்களிலும் கூட குடும்பத்திற்காக கவனமாக சமைப்பாள் சஃபியா. குடும்பம் என்றால், ரஃபீக், அவனது உம்மா, வாப்பா, அவனது அண்ணன் ரஸாக், மனைவி ஜலீலா, இரண்டு குழந்தைகள், கடைசித்தங்கை ரம்லத், தம்பி ரஹ்மத் அடங்கிய பெரிய குடும்பம்.

மூத்த மருமகள் ஜலீலா பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள். ஏதோ உதவுகிறேன் பேர்வழி என்று அதையும் இதையும் எடுத்து கொடுத்தவிட்டு தலைவலி என்று படுத்துக் கொள்வாள்.

ரம்லத்துககு மெடிசினுக்கு படிப்பதால் நேரமிருக்காது. உம்மாவுக்கு வயதானதால் முடியவில்லை. அந்த வீட்டு ஆண்கள் மேசை மேலிருக்கும் எச்சிலைக்கூட குப்பையில் போட மாட்டார்கள்.

வசதியற்ற குடும்பத்திலிருந்து வந்ததால் சஃபியா மட்டும்தான் எல்லா வேலைகளும் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி அந்தவீட்டில் இருந்துவந்தது. மனம் கோணாமல் வீட்டு வேலைகள் எல்லாம் செய்தாலும், அவள் பாராட்டை எதிர்பார்த்ததில்லை. ஒரு அன்பான வார்த்தையையோ, ஆறுதலையோ மட்டும்தான் எதிர்பார்த்தாள்.

‘நீ சாப்பிட்டியா?’ என்றோ ‘உனக்கு இது பிடிக்குமா?’ என்றோ விசாரிக்கக்கூட ஆளில்லாத வாழ்க்கையை எண்ணி இரவுகளில் மவுனமாக அழுவாள்.

அவளது அப்பா இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கொண்டு அவளை சித்தப்பாவிடம் விட்டுவிட்டு போன போது பத்து வயது அவளுக்கு. சித்தியின் வசவுகளுக்கும் சித்தப்பாவின் சலிப்புகளுக்கும் இடையில் எப்படியோ கல்லூரியைத் தொட்டுவிட்டாள்.

படித்துவிட்டு ஒரு வேலைக்குப்போய் சுயமாக சம்பாதிக்கவேண்டும் என்று கனவு இருநதது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கனவை கலைத்துக்கொண்டு கல்யாணம் நடந்தது.

ரஃபீக்கிற்கு வியாபாரம் நன்றாக வந்தது. அன்போ பரிவோ சுத்தமாக இல்லை. அவனுக்கு மட்டுமல்ல, அந்தவீட்டில் யாருக்கும் அது கிடையாது. இந்த மூன்றுவரூடங்களில் பழகிவிட்டது என்றாலும், பாழும் மனது எதையோ எதிர்பார்த்து ஏங்கும்போது தேற்ற வழியின்றி தனிமையில் அழுது தீர்ப்பாள். 

அன்றைய விருந்தாளிகள் மதியம் வந்துவிட்டுப் போன பிறகு, பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு, காய்ந்த துணிகளை எடுத்துக்கொண்டு வந்து மடக்கி வைத்துவிட்டு கொஞ்சநேரம் படுக்கலாம் என்று நினைத்தவளுக்கு தாங்கமுடியாத முதுகுவலி படுத்து எடுத்தியது.

வலியால் படுக்கவும் முடியவில்லை. மணி நான்கு ஆனால் போதும் உம்மாவுக்கும் உப்பாவுக்கும் தேநீர் வேண்டும். வலியால் புரண்டபடி இருந்தாள். நாலுமணிக்கு இன்னும் இருபது நிமிடம் இருந்தது. சட்டென்று காலண்டரில் அன்றைய தேதியில் வட்டம் இருப்பதை பார்த்து மனது துள்ளிக்குதித்தது. 

‘இன்று பவுர்ணமி’ நினைத்தபோதே சிலிர்த்தது. அவளுக்கு இந்தவீட்டின் ஒரே ஆறுதல் மாதம் ஒருமுறை வரும் பவுர்ணமி நாள் மட்டும்தான்.

சிறை பிடித்தது  போன்ற இந்த வீட்டுக்குள்ளான வாழ்வில், வேலைகளை முடித்துவிட்டு பால்கனியில் கொஞ்சநேரம் நின்று நிலாவை ரசிக்கிறபோது தன் அத்தனை வேதனைகளும் காணாமல் போவதாக உணர்வாள்.

ஏனோ சிறுவயது முதலே முழுநிலாவைப் பார்க்கையில் பரவசமாக இருந்தது. அந்த உணர்வு சிறு உற்சாகத்தை கொடுத்தது. கொஞ்சநேர விடுதலை.

அன்றும் பால்கனியில் நின்று நிலாவைப் பார்ப்பதற்காக வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு படியேறினவளுக்கு காலிடறி உருண்டு விழுந்து கட்டுப்போட வேண்டி வந்தது.

டாக்டர் இரண்டுமாதங்கள் அசையக்கூடாது என்றுவிட்டார். வேறுவழியின்றி ஜலீலா முனகிக் கொண்டே வீட்டையும் சஃபியாவையும் பார்த்துக்கொண்டாள்.

நிலாவைப் பார்க்கமுடியாத அந்த இரண்டு மாதங்கள் சஃபியாவிற்கு கவலையாக இருந்தது. சதா வேலை வேலை என்று அந்தவீட்டுச் சிறையிலிருந்து, ஓய்வு என்கிற இந்த இரண்டுமாதச் சிறை அவளுக்கு நிம்மதியளிக்கவில்லை.

எழுத்தாளர்  கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விடை (சிறுகதை) – கோவை தீரா

    பேத்தி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு