in ,

சுமங்கலி மனசு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

                  விற்காமல் மீந்து விட்ட பூக்களைப் பார்க்கும் போதெல்லாம் வயிறு வாயெல்லாம் எரிந்தது விஜயாவிற்கு.  

“ச்சே… அப்படி என்னதான் இருக்குதோ அந்தக் கிழவிகிட்ட தெரியல… எல்லா பொம்பளைகளும் அவகிட்டேயே போய்ப் பூ வாங்கறாளுக!… நானுந்தான் அவளை விடப் பெரிய அளவுல.. நெறைய சரக்குப் போட்டுப் பூக்கடை வெச்சிருக்கேன்… என்ன பிரயோஜனம்…. ஒருத்தி கூட வர மாட்டேங்கறாளே என்கிட்டப் பூ வாங்க”

                 “என்ன விஜயாம்மா… மொகமெல்லாம் ஒரு மாதிரியிருக்கு… உடம்புக்கு சரியில்லையா?” முறுக்குக் கூடைக்காரி கூடையை இறக்கி வைத்தபடியே கேட்க,

                தன் ஆற்றாமையை யாரிடம் கொட்டுவது என்று காத்துக் கிடந்த விஜயா ஆலங்கட்டி மழையாய்ப் பொழிந்தாள்.

                “ஹூம்… எல்லாத்துக்கும் ஒரு முகராசி… வேணும்மா!” சொல்லி விட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு நடையைக் கட்டினாள்.

                கூடைக்காரி சென்றதும் அவள் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தாள் விஜயா, “முகராசி…! முகராசி!… இது போதும் இதை வெச்சே அந்தக் கிழவியை நான் துரத்தியடிக்கறேன்!”  தீவிரமானாள்.

                தன் கடையைத் தாண்டிச் சென்ற ஒரு பெண்ணைக் கை தட்டி அழைத்தாள். “இந்தாம்மா… இங்க வாம்மா!”

                முகத்தில் கேள்விக் குறியோடு வந்து நின்ற அவளிடம், “எங்கேம்மா போறே?” கேட்டாள் விஜயா.

                “தாயாரம்மா கடைக்கு…!” என்றாள் அவள்.

                தலையிலடித்துக் கொண்ட விஜயா, “சிலதுகளுக்கெல்லாம் சொன்னாலும் புரியாது… சுயமாவும் தெரியாது!” என்று முணுமுணுப்பாய்ச் சொல்ல,

                அப்பெண், “இதா… என்ன வேணும் உனக்கு?” என்று கடுப்பாகிக் கத்தினாள்.

                 “இரும்மா… இரும்மா!” என்று அவளைச் சாந்தப்படுத்திய விஜயா, மெல்ல ஆரம்பித்தாள், “ஏம்மா… நீ சுமங்கலிப் பொம்பளைதானே?…”

                 அவள் மேலும், கீழுமாய்த் தலையாட்ட,

                 “ம்… ஒரு நெறைஞ்ச சுமங்கலி… போயும் போயும் ஒரு விதவை கிட்டேவா பூ வாங்கித் தலைல வெப்பா?… வெளங்குமா”

                அப்பெண் யோசனையுடன் பார்க்க, விஜயா மனசுக்குள் சந்தோஷித்தாள்.

                “நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காதே… உன் புருஷன் உடல் நலம் எப்படியிருக்கு?”  சும்மாவிலும் கேட்டாள் விஜயா.

                 “ப்ச்… எப்பப் பார்த்தாலும் ஏதோவொரு பிரச்சினை!… ஒரு நாள் கைகாலு குடைச்சல்ம்பாரு!…. மறு நாள் மண்டையிடிம்பாரு!… சம்பாதிக்கறதுல பாதி மருந்து மாத்திரைக்குத்தான் போகுது!…” அப்பெண் புலம்பத் துவங்க, விஜயாவிற்கு மனசு குதியாட்டம் போட்டது.  தொடர்ந்து கதை விட ஆரம்பித்தாள்.

                 “இப்படித்தான் எங்க ஊர்ல ஒரு சமயத்துல திடீர்னு எல்லா ஆம்பளைங்களுக்கும் உடம்பு சரியில்லாமப் போச்சு… அதுல நாலஞ்சு பேரு செத்துக் கூடப் போயிட்டாங்க!… ஊரே பீதில கெடந்தப்பத்தான், ஒரு சாமியார்… வந்து சொன்னாரு, “இந்த ஊர்ப் பெண்களெல்லாம் ஒரு விதவை கைல பூ வாங்கித் தலைல சூடிக்கறாங்க!… அதான் காரணம்!… அதுதான் புருஷன்மார்களை அடிக்குது”ன்னு!..அதுக்கப்புறம் எந்தப் பொம்பளையும் அந்த விதவைகிட்டப் பூ வாங்கறதில்லை… வெக்கறதில்லை!… சொன்னா நம்ப மாட்டே தாயி… அதுக்குப்பிறகு எந்த ஆம்பளைக்கும் நோய் நொடியே வரல… ஏற்கனவே நோயாளியா இருந்தவங்க கூட குணமாயிட்டாங்கன்னா பார்த்துக்கோயேன்!”

                அப்பெண் யோசித்தபடி தலையை மேலும், கீழுமாய் ஆட்ட,

                 “ஒரு சோதனைக்காக… பத்து நாள்… சுமங்கலியான என்கிட்ட பூ வாங்கி வெச்சுப் பாரேன்!” விஜயாவிற்குக் கை மேல் பலன் கிடைத்தது.  அப்பெண் இருபது ரூபாய்க்கு பூ வாங்கிக் கொண்டு சென்றாள்.

                மூன்று தினங்களுக்குப் பிறகு, அதே பெண் திரும்பவும் வந்தாள்…. கூட நாலைந்து பெண்களுடன்.

                 “வாம்மா!… சௌக்கியமா?” விஜயா சிநேகிதமாய் அழைக்க,

                 “மகராசி… உன் கைராசில நானும்… எம்புருஷனும் ரொம்ப ரொம்ப சௌக்கியமா இருக்கோம்!…. தாயி.. நீ சொன்னது உண்மைதான் தாயி… இந்த ரெண்டு மூணு நாளுல எம்புருஷன் உடம்புக்கு எந்த நோவுமே வரலை தாயி!”

                விஜயாவுக்கே வியப்பாயிருந்தது. “ஆஹா…நம்ம பொய்யி… நெஜமாயிடுச்சு போலிருக்கே!”

                “இதா இவங்கெல்லாம் வாடிக்கையா அந்த தாயாரம்மாகிட்ட பூ வாங்குற சுமங்கலிக!… நாந்தான் இவங்க கிட்டயெல்லாம்  விஷயத்தைச் சொல்லி இங்க கூட்டியாந்தேன்!”

                 “அப்படியா…” என்ற விஜயா புது வாடிக்கையாளர்களுக்கு  குறைந்த விலையில் தாராளமாக பூக்களை வழங்கினாள்.

                தொடர்ந்து அந்தப் புது வாடிக்கையாளர்களும் தங்களுக்குத் தெரிந்த சுமங்கலிப் பெண்களிடமெல்லாம் விஷயத்தைச் சொல்ல,

                தாயாரம்மாள் தன் வாடிக்கையாளர்களை இழந்தாள்.  விஜயா தன் வியாபாரத்தில்  உயர்ந்து செல்வம் கொழித்தாள்.

                ஒரு கட்டத்தில் தன் பூக்கடைக்கு மூடுவிழா நடத்தி விட்டு, தள்ளாத வயதில் கட்டிட வேலைக்குப் போன தாயாரம்மாவைப் பார்த்துக் கெக்கலித்தாள் விஜயா.

                ஒரு மாதத்திற்குப் பின்,

                பூ மார்க்கெட் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த விஜயா, சற்றுத் தள்ளி தாயாரம்மாளும், உடன் ஒரு ஆஜானுபாகு மனிதரும் நிற்பதைக் கண்டு, திமிராகப் பார்த்தாள்.

                தாயாரம்மாளுடன் நின்றிருந்த அந்த ஆஜானுபாகு மனிதர், விஜயாவையே சிறிது நேரம் உற்றுப் பார்த்திருந்து விட்டு, அவளை நோக்கி வந்தார். அருகில் வந்தவுடன், “நீ… ஜெயில்ல இருக்கறா ஆறுமுகத்தோட சம்சாரம்தானே?” கேட்டார்.

                திடுக்கிட்டுப் போனாள் விஜயா. “அடப் பாவமே!… யாருக்கும் தெரியாம வெச்சிருந்த ரகசியத்தைப் போட்டு உடைக்கறதுக்குன்னு ஒருத்தன் வந்துட்டானே?”

                 “அது… வந்து… நீங்க…!” திக்கித் திணறினாள் விஜயா.

                 “நான் ஜெயிலர்… ஒரு தடவை நீ ஆறுமுகத்தைப் பார்க்க ஜெயிலுக்கு வந்திருந்தப்ப நான் உன்னைப் பார்த்திருக்கேன்!”

                  “இப்ப என்ன அதுக்கு?” “வெடுக்”கென்று கேட்டாள் விஜயா. தன் ரகசியம் தாயாரம்மாளுக்குத் தெரிந்து விட்டதே என்கிற ஆத்திரத்தில்,

                 “புருஷன் மேல கோபமிருக்கலாம்… ஆத்திரமிருக்கலாம்… அதுக்காக அவன் பொணத்தைக் கூடவா வந்து வாங்கிக்கக் கூடாது?” அந்த ஜெயிலரும் கோபமாய் கேட்க,

                அதிர்ந்தாள் விஜயா. “என்ன சொன்னீங்க?… பொணத்தையா?” விஜயாவின் குரல் கம்மியது.

                 “என்னம்மா இப்படி கேட்கறே?… ஜெயில்ல மாரடைப்பு வந்து உன் புருஷன் செத்தப்ப தகவல் அனுப்பியிருந்தோமே!… கிடைக்கலையா?”

                தன் கணவன் ஜெயிலுக்குப் போனதும் அதே ஊரில் குடியிருக்க கேவலப்பட்டு, யாருக்கும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக இடம் பெயர்ந்ததால் தனக்கு அந்தச் செய்தி எட்டாமல் போய்விட்ட உண்மையைப் புரிந்து, மனம் நொந்தாள் விஜயா.

                 “நீங்க வருவீங்க.. வந்து பாடிய வாங்கிட்டுப் போவீங்க..ன்னு ரொம்ப நாள் பாடிய வெச்சிருந்து பார்த்தோம்… யாருமே வரலை… கடைசில முறைப்படி நாங்களே அடக்கம் பண்ணிட்டோம்!”

                குபீரெனப் பொங்கி, உரத்த குரலில் அழத் தொடங்கினாள் விஜயா. “என் ராசா… என்னை விட்டுப் போயிட்டியா?… கடைசியா உன் மொகத்தைப் பார்க்கக் கூடக் குடுத்து வைக்காமப் போயிட்டுதே!!”

                தாயாரம்மாள் பாய்ந்து சென்று, அவள் தோளைத் தொட்டு, “அழாத தாயி!… அழாத தாயி!” என்று ஆறுதல் சொல்லி, தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். 

               தொடர்ந்து அழுததில் அவள் மயங்கி விழுந்து விடும் நிலைக்குப் போய் விட, ஒரு ஆட்டோ பிடித்து விஜயாவை அவள் வீட்டிற்குக் கொண்டு வந்தனர் தாயாரம்மாளும், அந்த ஜெயிலரும்.

              ஆட்டோவில் வரும் போது, “தாயாரம்மா… நீங்க விதவைங்கற காரணத்தைப் பெரிசாக்கி, உங்க வியாபாரத்தைக் கெடுத்து, இந்த வயசான காலத்துல உங்களை கட்டிட வேலைக்குப் போக வெச்சேன்!… அந்தப் பாவத்துக்குத்தான் ஆண்டவன் எனக்கு இந்தத் தண்டனையைக் குடுத்திருக்கான்!… உங்களை விதவைன்னு எல்லோரும் ஒதுக்கித் தள்ள நாந்தான் காரணாம்யிருந்தேன்!… இப்ப நானே விதவையாயிட்டேன்!… இனி.. நான்… நான்… எப்படி பூ வியாபாரம்?” கண்ணீரினூடே சொன்னாள் விஜயா.

              “ஏன்?… பண்ணலாமே!… இப்ப உன் புருஷன் செத்துப் போன விஷயம் இந்த ஊரில் எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரியும்!… ஊரைப் பொறுத்தவரை உன் புருஷன் வெளியூர்ல எங்கியோ இருக்கார்!… அவ்வளவுதான்!…அதனால நீ தொடர்ந்து பூ வியாபாரம் பண்ணு!… நீ ஒரு விதவைங்கறதை நானா யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன்!… போதுமா?”

               “விருட்”டென்று தாயாரம்மாளை இறுகக் கட்டி்க் கொண்ட விஜயா, “அம்மா உங்களுக்குப் போய் நான் துரோகம் செஞ்சிருக்கேனே?…சுமங்கலியாய் இருந்த எனக்குள்ளார அமங்கல மனசுதான் இருந்திருக்கு!… ஆனா உங்களுக்குள்ளார இருப்பது எப்பவுமே… சுமங்கலி மனசுதாம்மா!… நீங்க எப்படியிருந்தாலும் சுமங்கலிதாம்மா!” கதறினாள்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                                               

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈஸ்வர அல்லா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    நமக்கு நாமே நெம்புகோல் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை